செவ்வாய், 28 ஏப்ரல், 2026

தூக்கம் கண்களை தழுவட்டுமே - பகுதி ஒன்று - பத்மநாபன்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


இதற்கு முன்னர் வெளியிட்ட மூன்று நாட்கள் மூன்று சிகரங்கள் - அனுசுயா தேவி ஆலயமும் மதிய உணவும் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



*******


இன்றைக்கு மீண்டும் பத்மநாபன் அண்ணாச்சியின் பதிவு ஒன்று.  பூனைகளுடனான தனது விளையாட்டுகளுக்கு நடுவே நமக்காக பதிவொன்றினை எழுதி அனுப்பித் தந்த அவருக்கு மனம் நிறைந்த நன்றி. ஓவர் டு பத்மநாபன் அண்ணாச்சி - வெங்கட் நாகராஜ். 


தூக்கம் கண்களை தழுவட்டுமே - பத்மநாபன் 



படம்: நன்றி AI....



சமீபத்துல வெங்கட் ஒரு பதிவுல சில சயனர்கள் அதாவது தூங்கிகள் அதாவது உறங்கிகள் படங்களை போட்டுருந்தாரு. 


போர்வையை இழுத்துப் போர்த்திக் கொண்டு கோயில் சுற்றுச் சுவர் நடைபாதையிலும் ஆற்றுப் பாலத்தின் நடைபாதையிலும் ஆனந்த சயனத்திலோ, இல்லை அனாதரவு சயனத்திலோ இருந்தவர்களைப் பார்த்தால் ஆத்தாமையா இருந்தது. என்ன செய்ய, சில பேருக்கு அப்படி எழுதியிருக்கு. இப்படி தனக்குன்னு ஒரு இடம் இல்லாம கிடைச்ச இடத்துல உறங்குறவங்கள பாத்து ரொம்ப நாள் முன்னாடி நான் எழுதுன ஒரு கவிதை (?) அரைகுறையாய் ஓர்மைக்கு வந்தது. 




படம்: நன்றி AI....

திறந்த வானே குளிர்பதனம்!

பாறைக்கல்லே பஞ்சு மெத்தை!

வெயிலின் மழையின் விளையாட்டு!

இயற்கை அளிக்கும் இசைப்பாட்டு!


கவிதை கொள்ளாமா? கவிதை கிடக்கட்டும். நாம விஷயத்துக்கு வருவோம். 


சில பேரு, நல்ல வசதியா இருப்பான். ஏசியப் போட்டுட்டு குப்புறக் கிடந்தாத்தான் உறக்கம் வரும். ஆனா அவன் சாதகத்தில சந்திராஷ்டமோ, சூரியாஷ்டமோ சில சமயம் உச்சத்தில வந்து கும்மியடிக்கும். அப்போ அவன் வீட்டுக்குள்ளயே கிடந்தாலும் காட்டுக்குள்ளயே கிடக்க மாதிரியிருக்கும். ஏசி யை போட்டா கரண்ட் இருக்காது. சன்னலத் தொறந்தா காத்துக்கு பதிலா காதில ஒலுங்கு ஒச்ச வச்சி தெம்மாங்கு  பாடும். 


ஆனா எனக்கு அப்படி இல்ல. ஏசி யும் வேண்டாம், பிசி யும் வேண்டாம். ஒத்த பெஞ்சு கிடைச்சாலும் போறும். கொஞ்சம் போல காத்து கிடைச்சாலும் போறும், அஞ்சே நிமிஷத்துல கண் அயந்துருவேன். கூடவே திலோத்தமா கூட தில்லானாவும் ஆடிக்கிட்டு வந்துருவேன். அப்படிப்பட்ட எனக்கும் சில சமயம் சூர்யாஷ்டமும் ஜோதிகாஷ்டமும் சேர்ந்து வந்து டான்ஸ் ஆடியிருக்கு. அந்தக் கதய கொஞ்சம் எடுத்து விடட்டுமா. படிச்சுகிட்டு உங்களுக்கு உறக்கம் வந்தா சரி. 


ஒரு நாப்பது அம்பது வருஷம் முன்னால எங்க ஊரு பக்கம் கோயில் கொடை சமயத்துல சினிமா போடுவாங்க. வீட்டுல பர்மிஷன் வாங்கிகிட்டு பக்கத்து வீட்டு நண்பர்கள் மாதவன், அய்யப்பன், மணிகண்டன் எல்லாம் ஒரு செட்டா போய் மண்ணுல உக்காந்து அரட்டை அடிச்சுகிட்டு ப்ரொஜெக்டர் ஆபரேட்டருக்கு எடுபிடி வேலை செஞ்சுகிட்டு நேரம் போக்குவோம். எத்தன சினிமா. பார்த்தால் பசி தீரும், மதுரை வீரன், உரிமைக்குரல், மலையூர் மம்பட்டியான் அப்படின்னு லிஸ்ட் பெருசு. ஆனா வீட்டுல பர்மிஷன் வாங்குகது ஒரு பெரிய டாஸ்க். என் கூட உள்ள நண்பர்கள் எல்லோரும் ஓரளவு நல்ல பேர் எடுத்தவங்க. அதனால பர்மிஷன் பெரும்பாலும் கிடச்சுரும். ஆனா என்ன, அடுத்த நாள் காலேஜ் இருக்கக் கூடாது. எக்ஸாம் இருக்கக் கூடாது. அப்படித்தான் ஒருதடவை மதுரை வீரன் படம் ஊர் அம்மன் கோயில் திடலில் போட்டாங்க. படம் ஆரம்பிக்கும் போதே மணி ராத்திரி பதினொன்னு தாண்டியாச்சு. கருப்பு வெள்ளை படம். ‘நாடகமெல்லாம் கண்டேன் உந்தன் ஆடும் விழியிலே’ன்னு எம்ஜிஆர் பத்மினி கூட ஆடிக்கிட்டு இருக்காரு. இங்க எனக்கு கண்ணு சொக்குது. அப்படியே தரையிலேயே கட்டயப் போட்டதுதான் தெரியும், அப்படி ஒரு உறக்கம். வீட்டுல அமைதியான சூழ்நிலையில கூட அப்படி உறங்கியிருக்க மாட்டேன். அப்படி ஒரு உறக்கம். ஒரு ரெண்டு மணி போல படம் முடிஞ்சிருக்கும் போல. கூட வந்தவங்கல்லாம் பேச்சு சுவாரசியத்துல என்ன எழுப்பாம, ஏதோ நான் பாதியிலேயே வீட்டுக்கு போய்ட்டேன்னு நினைச்சுகிட்டு கிளம்பிட்டாங்க. 


திடீர்னு முழிப்பு வந்து பாத்தா ஒரு நாலு பேரு என்ன மாதிரியே சாரத்தை இழுத்து தலையோட மூடிக்கிட்டு கிடக்காங்க. பெரும்பாலும் போட்ட சரக்கு வேலை செஞ்சிருக்கும் போல. அரைகுறை இருட்டுல நானும் தலையோட மூடிக்கிட்டு கிடந்ததுனால என்னையும் யாரோ சரக்கு போட்டுகிட்டு கிடக்காங்கன்னு நினைச்சுருக்காங்க போல. நானும் சத்தம் போடாம எந்திச்சு வீட்டுக்கு வந்து வராண்டாவில படுத்துகிட்டேன். என்ன செய்ய, அன்னைக்கு நடுத்தெருவுல அம்போன்னு உறங்கணும்னு எழுதியிருந்திருக்கு. 


இதுவும் ஒரு நாப்பது வருஷம் பின்னால உள்ள கதை தான். அப்போ நான் கன்யாகுமரி விவேகானந்தா கேந்திராவில ஒரு சமூக சேவகரா இருந்தேன். மாசம் நானூறு ரூபாய் கௌரவ ஊதியம். வள்ளியூர் கிளையில முகாம் அமைப்பாளரா இருந்தேன். கிராமப் புறங்களில நான்கு நாட்கள் இளைஞர் முகாம் நடத்தி சோசியல் ஒர்க் பண்ணுவோம். பெரும்பாலும் ஊருக்கு ஒதுக்குப்புறமா ஏதாவது கோவிலில்தான் முகாம் போடுவோம். அந்த கோவிலிலேயே கிடைச்ச இடத்திலேயே உள்ளூர் இளைஞர்கள் கூடவே ராத்திரில உறங்க வேண்டியிருக்கும். அப்படி ஒரு முகாம் செங்கோட்டை பக்கம் நடந்தது. 


அங்கேயும் ஏதோ ஒரு கோயில்லதான் முகாம். நல்ல காடு பிடிச்சு கிடந்த கோயில். நாங்க அதையெல்லாம் வெட்டி உழவாரப் பணி செய்து சரி செஞ்சோம். தூங்கும்போது எப்பவும் என்கிட்ட இருக்கும் ஜோல்னா பைய தலைக்கு அடியில வச்சு உறங்குவேன். முகாமின் கடைசி நாள் ராத்திரி அப்படியே உறங்கினேன். அடுத்த நாள் காலையில வேற ஊருக்கு இன்னொரு நிகழ்வுக்கு போணும். அடுத்தநாள் காலையில எந்திச்சு பஸ்ஸை பிடிச்சு அந்த ஊருக்கு போயாச்சு. அந்த ஊருல போய் பைக்குள்ள கைய விட்டா வள வளன்னு ஒரு குட்டி பாம்பு கிடைச்சுது. முந்தின நாள் அந்த கோவிலில வச்சுதான் இவரு ஜோல்னாப் பைக்குள்ள புகுந்திருப்பாரு. இதைப் பத்தி நான் ஏற்கனவே விரிவா எழுதினதா ஞாபகம். அந்த அனந்த பத்மநாபன் பாம்பணை மேல் பள்ளி கொண்டாருன்னா, இந்த பத்மநாபனுக்கு பாம்பு குட்டி கூட பள்ளி கொள்ளனும்னு இருந்திருக்கு, என்ன செய்ய.


இதுவும் விவேகானந்தா கேந்திரா சமயத்துல நடந்ததுதான். கேந்திரம் சார்புல மதுரை அரவிந்த் கண் மருத்துவமனையோடு சேர்ந்து கண் முகாம் நடத்துவோம். அதுக்குன்னு ஒவ்வொரு ஒன்றியத்துலேயும் கேந்திரா சார்பில கண் முகாம் அமைப்பாளர்னு ஒருவர் இருப்பாரு. அவருதான் இந்த முகாமை ஏற்பாடு செய்வாரு. மாசத்துக்கு ஒரு முகாம் அவரோட டார்கெட். காசிராஜன்னு ஒரு கண் முகாம் அமைப்பாளர் இருந்தாரு. ரொம்ப அமைதியானவர். என்னை விட நாலஞ்சு வயசு பெரியவரு. அரசாங்க வேலைக்கு முயற்சி பண்ணி கிடைக்காம இந்த வேலைக்கு வந்தவரு. மனுஷனுக்கு இந்த குறைஞ்ச சம்பளத்தில மிச்சம் பிடிச்சு வீட்டுக்கு காசு அனுப்பணும். அதனால ஒரு ரொம்ப சின்ன அறை எடுத்து தங்கி இருந்தாரு. ஒரு ஆளு உள்ள போனா ரெண்டு ஆளு வெளியில வரணும். அப்படி ஒரு அறை.


அவரு தூத்துக்குடி பக்கம் ‘எப்போதும் வென்றான்’ ன்னு ஒரு ஊருல ஒரு கண் முகாம் ஏற்பாடு பண்ணி இருந்தாரு. அப்போ எனக்கு வேற கேம்ப் எதுவும் இல்லாததால அவருக்கு உதவி செய்ய என்ன அனுப்பி இருந்தாங்க. கண் முகாம் முடிய ராத்திரி ஏழு மணி ஆகி போச்சு. அடுத்த நாள் காலையில கண் ஆப்பிரேஷனுக்கு தேர்வான ஆட்களையெல்லாம் ஒண்ணு சேர்த்து அரவிந்த் ஆசுபத்திரிக்கு அனுப்பி வைக்கணும். எல்லாரும் அவங்க அவங்க வீட்டுக்கு போயாச்சு. கேம்ப் நடந்த பள்ளிக்கூடத்த அடைச்சுகிட்டு போய்ட்டாங்க. நானும் காசிராஜனும் மட்டும் அப்படியே நடந்தோம். பக்கத்துல ஒரு சின்ன ஹோட்டல்ல ஏதோ சாப்பிட்டு முடிச்சுகிட்டு நடந்தோம். 


மணியும் ஒரு ஒன்பது கிட்ட ஆச்சு. அவரு அறைக்கு போக முடியாது. ஏன்னா, ஒண்ணு சின்ன அறை. ரெண்டாவது, வீட்டு ஓனர் மூணாவது ஆளை விரும்ப மாட்டார். அப்படியே நடந்தோம். பக்கத்துல லாட்ஜ் ஒன்னும் கிடையாது. இருந்துட்டாலும் ரூம் போடுற அளவு காசு கிடையாதுங்கறது வேற விஷயம். காசிராஜன் அப்படியே ஒரு கோயிலுக்கு கூட்டிப் போனாரு. கோயிலிலே ஒரு பெரிய கல்மண்டபம். அங்கங்க ரெண்டு மூணு பேரு இழுத்துப் போத்திக்கிட்டு படுத்து கிடந்தாங்க. எல்லாரும் வீடில்லாதவங்கதான். ஆனா மண்டபத்துல நிறைய இடம் கிடந்தது. இப்போ எங்களுக்கும்தான் வீடில்லையே. எங்க ஜோல்னாப் பையிலிருந்து கூடவே இருக்கும் துவர்த்தை எடுத்து விரிச்சு படுத்துட்டோம்.  ராத்திரி நல்ல குளிரு. சத்தி முத்தி புலவர் சொல்லித் தந்த மாதிரி “கையது கொண்டு மெய்யது பொத்தி, காலது கொண்டு மேலது தழீ” ஒரு உறக்கம் போட்டோம். அப்போ கல்யாணம் ஆகல்ல. ஆகியிருந்தால் நானும் நாரை விடு தூது விட்டுருப்பனோ என்னவோ. என்ன செய்ய, அன்னைக்கு எனக்கும் அன்னக்காவடியோடு அன்னக்காவடியா கோயில் மண்டபத்துல ஆனந்த சயனம் கொள்ளனும்னு இருந்திருக்கு.


அட. அதுக்குள்ள ஓட்டம் புடிச்சா எப்படி. இன்னும் ஒண்ணு இருக்குல்லா! எங்க போறீங்க. இன்னும் இருக்குல்லா. கொஞ்சம் நீட்டி முழக்கி சொல்ல வேண்டியிருக்கு… அடுத்த பகுதியில தொடருதேன்….


வேறொரு பதிவுடன் உங்களைச் சந்திக்கும் வரை….


நட்புடன் 


பத்மநாபன்


*******


இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


வெங்கட் நாகராஜ்

திருவரங்கம்

28 ஏப்ரல் 2026


27 கருத்துகள்:

  1. ஒலுங்கு ஒச்ச வச்சி... அர்த்தம் புரியலை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒலுங்கு - கொசு. ஒச்சை வைத்தல் - கூப்பாடு போடுதல்.

      நீக்கு
    2. நெல்லை, ஒலுங்கு னா கொசு (கொஞ்சம் பெரிய சைஸ் இதுக்கும் சொல்வாங்க) - அது காதுல வந்து பாடுமே அதைச் சொல்லியிருக்கிறார்.

      கீதா

      நீக்கு
    3. உங்கள் சந்தேகத்திற்கு ஒருவருக்கு இருவராக ஊர்க்காரர்கள் பதில் தந்திருக்கிறார்கள்! :) எனக்கும் சேர்த்து! ஹாஹா...

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் நன்றி நெல்லைத் தமிழன், பத்மநாபன் அண்ணாச்சி மற்றும் கீதா ஜி.

      நீக்கு
  2. பத்னாபன் அண்ணாச்சி ஆயுசு பூரா சந்தோஷமா அசைபோட்டிருக்கும்படியாக பெரிய பாம்பு ஏதேனும் ஜோல்னாப் பைக்குள் புகுந்திரிந்திருக்கலாம்.. குறைந்தபட்சம் மலைப்பாம்பு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹா... என்னவொரு ஆசை உங்களுக்கு! பாம்புக் கதை ஏற்கனவே இந்தப் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறேன். சுட்டி கொடுக்க மறந்து போயிற்று! :(

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
  3. கையது கொண்டு மெய்யது பொத்தி காலது கொண்டு மேலது தழீஈ .... எதை எதிர்பார்த்தேனோ இல்லையோ இலக்கியத்தை அண்ணாச்சியிடம் எதிர்பார்க்கலை. பள்ளிக் காலத்தில் ரொம்பவே நெட்டுருப் போட்டிருப்பார்்போலிருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நெல்லை, அண்ணாச்சி இடையிடையே இப்படி இலக்கியம், பதிகம் எல்லாம் எடுத்தாள்வாரே!

      கீதா

      நீக்கு
    2. அவருக்கு இலக்கியத்திலும் ஆர்வம் உண்டு நெல்லை. பல விஷயங்கள் இது குறித்து நாங்கள் பேசியிருக்கிறோம் - தில்லி வாழ்க்கையில்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி நெல்லைத் தமிழன் மற்றும் கீதா ஜி.

      நீக்கு
  4. படுத்ததும் உறக்கம் வர கொடுத்துனா வச்சிருக்கணும். மதுரை வீரன் படத்தை முழுதும் பார்க்காத்தற்கு, அந்தக் காலத்துல 'வீரன்'லாம் இருந்திருக்காதே

    எனக்கு தூங்குனா நல்லா தூங்கணும். பத்து நிமிஷத் தூக்கம்லாம்்சரிப்படாது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படுத்ததும் உறக்கம் வரக் கொடுத்து வைத்திருக்க வேண்டும் - உண்மை. எல்லோருக்கும் அந்த சுகம் கிடைப்பதில்லை.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
  5. கட்டாந்தரையில் ஒரு துண்டை விரித்தேன் தூக்கம் கண்ணை சொக்குமே அது அந்தக் காலமே!

    மெத்தை விரித்தும் சுத்த பன்னீர் தெளித்தும் கண்ணில் தூக்கம் இல்லையே! அது இந்தக் காலமே!

    நம்ம சூப்பர் ஸ்டார் அண்ணாமலை படத்துல பாடுவாரே! அது தான் நினைவுக்கு வந்தது.

    பதிலளிநீக்கு
  6. சிறுவயதில் இரவு உணவு சாப்பிட்டு முடித்ததும் அப்படியே ஒரு ஓரமா தூங்கிப் போனது ஒரு காலம்! அம்மாவும் சாப்பிட்ட பிறகு அந்த இடத்தை துடைத்து அந்த ஈரம் காய்ந்ததும், படுக்கையை விரித்து அப்பா என்னை எழுப்பி படுக்க வைப்பார்! நடுரோட்டில் வேஷ்டியில் சினிமா பார்க்கும் போதும் அம்மா மடியில் அப்படியே தூங்கிப் போயிருக்கேன்!

    அன்று வந்த ஆழ்ந்த தூக்கம் போல் எல்லாம் இப்போது வருவதற்கு வாய்ப்பில்லை!

    பதிலளிநீக்கு
  7. திறந்தவெளி திரையில் படம் பார்த்த அனுபவம் எனக்கும் நிறையவே உண்டு.  ஆனால் அங்கேயே படுத்து எல்லாம் உறங்கியதில்லை!  பாம்புக்குட்டி அனுபவம் பகீர் அனுபவம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கட்டாந்தரையில் படுத்து உறங்கியதுண்டு. பாம்புக்குட்டி அனுபவம் - இங்கே எழுதி இருக்கிறார். சுட்டி கொடுக்க மறந்து விட்டேன்! :(

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  8. பப்பு அண்ணாச்சியின் பதிவா இன்று...அட!!!!!

    ஆஹா!!! கவிதையும் எழுதுவியளோ அண்ணாச்சி! கவிதை கொள்ளாம்!

    ஒலுங்கு ஒச்ச வச்சி தெம்மாங்கு பாடும். //

    ஹாஹாஹா

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவரது கவிதைகள் சில நான் படித்து ரசித்திருக்கிறேன். தில்லியில் ஒரு நிகழ்வில் கவிதை சொல்லி ஏதோ பரிசு கூட பெற்றதாக நினைவு.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி கீதா ஜி.

      நீக்கு
  9. ஏசி யும் வேண்டாம், பிசி யும் வேண்டாம். ஒத்த பெஞ்சு கிடைச்சாலும் போறும். கொஞ்சம் போல காத்து கிடைச்சாலும் போறும், அஞ்சே நிமிஷத்துல கண் அயந்துருவேன்//

    ஆஹா!!! அண்ணாச்சி நானும் அப்படித்தான்.

    திலோத்தமா கூட தில்லானாவும் ஆடிக்கிட்டு வந்துருவேன். //

    ஹாஹாஹா வெளிய டான்ஸ் பாட்டுச் சத்தம் கேக்காதுல்லா? கேட்டிச்சுனா....

    எத்தன சினிமா. பார்த்தால் பசி தீரும், மதுரை வீரன், உரிமைக்குரல், மலையூர் மம்பட்டியான் அப்படின்னு //

    ஆஹா பரவால்லையே அண்ணாச்சி. நம்ம ஊர்ல திரும்பத் திரும்ப திருவிளையாடல், திருவருட்செல்வர், எப்பவோ ஒருவாட்டி தில்லானா மோகனாம்பாள்னு நினைவு. சின்ன வயசுல விட்டதில்லை வீட்டுல. 11, 12, காலேஜ் வந்தபிறகுதான்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அண்ணாச்சியின் பதிவு உங்களை மகிழச் செய்ததில் எங்களுக்கும் மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி கீதா ஜி.

      நீக்கு
  10. எங்க வீட்டுலயும் காலேஜ் பரீட்சை, காலேஜ் இருந்துச்சுனா விட மாட்டாங்க. ஆனா கோடைலதானே நம்ம ஊர்த்திருவிழா...இந்த வருஷமும் நடக்குதே. திருவிழா நாளைக்குத் தேர்னு சொன்னாங்க. சரியா தெரியலை. சுசீந்திரத்துலருந்து மருங்கூர்...மருங்கூர்லருந்து எங்க ஊருக்குப் போய்டலாம். ரிட்டர்னும் அப்படியே.

    நீங்க சினிமான்னதும் எனக்கும் பழைய நினைவுகளுக்குப் போய்டிச்சு மனசு.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சினிமாவுக்கெல்லாம் எங்களுக்கு அனுமதி இருந்ததில்லை - அதிலும் தனியாகப் போக! அவர்களாக அழைத்துச் செல்லும் படங்களுக்கு மட்டுமே போக முடியும். எனக்கு நினைவு தெரிந்து நானும் அப்பாவும் மட்டும் ஒரு படத்திற்குப் போனோம் - அந்தப் படம் - “பட்டினத்தார்”....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி கீதா ஜி.

      நீக்கு
  11. எங்க ஊர்லயும் சினிமா படம் ராத்திரி 11 மணிக்கு மேலதான் போடுவாங்க. அப்புறம் இடைல ஃபில்ம் அறுந்து போகும். எல்லாரும் கூவுவாங்க ஒட்டி அப்புறம் திரும்பவும் ஓட விட்டு ஒட்டினா அது அந்த சீன் ஒரு மாதிரி ஆகும்.திரும்ப விசில் ஊளை எல்லாம் பறக்கும். அப்படி முடிய காலைல 3, 4 கூட ஆகிடும்.

    //வள்ளியூர் கிளையில முகாம் அமைப்பாளரா இருந்தேன். //

    அட!!!! நான் 5, 6 ஆவது அங்கதான் படிச்சேன்.

    //அப்படி ஒரு முகாம் செங்கோட்டை பக்கம் நடந்தது. // ஆஹா!!!!

    அந்த ஊருல போய் பைக்குள்ள கைய விட்டா வள வளன்னு ஒரு குட்டி பாம்பு கிடைச்சுது. //

    யம்மாடி. என்ன பாம்பு? "நல்ல"பாம்புன்னு நினைக்கேன் அதான் உங்களை ஒன்னும் செய்யாம உள்ளாற போய் படுத்துக் கிடந்திருக்கு. நீங்கதானே புதர் எல்லாம் வெட்டினீங்க...அப்ப நாங்க எங்க போய் படுப்போம் உங்க பைக்குள்ளயே தான்ன்னு படுத்துவிட்டது போல.

    ஊர்ல எங்க மாமா வீட்டு போஸ்ட் பாக்ஸுக்குள்ள நல்ல பாம்பு சுருண்டு படுத்துக் கிடக்கும்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாம்பு கதைகள் - நெய்வேலியிலும் இப்படியான அனுபவங்கள் உண்டு. சிலவற்றை இந்தப் பக்கத்திலும் வெளியிட்டு இருக்கிறேன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி கீதா ஜி.

      நீக்கு
  12. அண்ணாச்சி கட்டாந்தரைல தூக்கம் வராப்ல இப்ப சொகுசா படுத்தாலும் தூக்கம் வருவதில்லை. உங்க அனுபவங்கள் ரொம்ப நல்ல அனுபவங்கள் வாழ்க்கையில் நல்ல பாடங்கள் கிடைத்திருக்கும் உங்களுக்கு.

    ரசித்து வாசித்தேன். எழுதுங்க எழுதுங்க...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பல அனுபவங்கள் வாழ்க்கைப் பாடங்கள் - உண்மை தான் கீதா ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  13. வாசகம் அருமை.
    பத்மநாபன் அவர்கள் எழுத்து அருமை.

    இயற்கை அளிக்கும் இசைப்பாட்டு!//

    கவிதை கொள்ளாம்
    படுத்தவுடன் தூங்கி போவது வரம்.

    ஒலுங்கு ஒச்ச வச்சி தெம்மாங்கு பாடும். //

    தெம்மாங்கை ரசித்தேன்.

    //அனந்த பத்மநாபன் பாம்பணை மேல் பள்ளி கொண்டாருன்னா, இந்த பத்மநாபனுக்கு பாம்பு குட்டி கூட பள்ளி கொள்ளனும்னு இருந்திருக்கு, என்ன செய்ய.//

    அருமை.
    நேரம் கிடைக்கும் போது எழுதுங்கள். படிக்க ஆவலாக இருக்கிறோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகம், பதிவு இரண்டும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....