அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
இதற்கு முன்னர் வெளியிட்ட Indoor Games at CGV - விஜி வெங்கடேஷ் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
*******
இந்தப் பயணத் தொடரின் முந்தைய பகுதிகளுக்கு நீங்கள் அனைவரும் தந்த வரவேற்பிற்கும், கருத்துரைகளுக்கும் மனம் நிறைந்த நன்றி.
சென்ற பகுதியில் குஃப்ரி, நார்க்கண்டா பகுதிகளைக் கடந்து மதிய உணவு உட்கொண்டது பற்றி சொல்லி இருந்தேன். அதனைத் தொடர்ந்து நாங்கள் மேலும் பயணித்தோம். நார்க்கண்டாவை அடுத்த பெரிய நகரம் என்று பார்த்தால் அது ராம்பூர் அல்லது ராம்பூர் புஷஹர் என்று அழைக்கப்படும் ஊர். தில்லியிலிருந்து இந்த ஊர் வரை நானும் நண்பர் பிரமோதும் இரவு நேரப் பேருந்தில் பயணம் செய்து, அங்கிருந்து சித்குல், கல்பா, சாங்க்ளா என்றெல்லாம் பயணித்திருக்கிறோம். அந்தப் பயண அனுபவங்களை எனது வலைப்பூவில் கடைசி கிராமம் என்ற தலைப்பில் 19 பகுதிகளாக எழுதியதோடு, அதே பெயரில் - கடைசி கிராமம் - மின்புத்தகமாகவும் வெளியிட்டு இருக்கிறேன். இதுவரை அந்தப் பதிவுகளை, மின்புத்தகத்தை படித்திருக்காவிட்டால், படித்துப் பார்க்கலாம். அதன் மூலம் உங்களுக்கு நிறைய தகவல்கள் கிடைக்கலாம்! இந்த ராம்பூர் புஷஹர் வரை அல்லது அந்தப் பகுதியில் இருக்கும் அழகான ஊரில் அன்றைய இரவு தங்க ஏற்பாடு செய்து கொள்ளலாம் என்று இலக்கை மாற்றி அமைத்துக் கொண்டு தொடர்ந்து பயணித்துக் கொண்டிருந்தோம்.
எப்போதுமே கார் ஓட்டுனரின் அருகே இருக்கும் இருக்கையில் அமர்ந்து பயணிப்பதையே நான் விரும்புவேன். இந்தப் பயணத்திலும் அப்படியே முன் இருக்கையிலேயே தான் அமர்ந்திருந்தேன். நண்பர்கள் இருவரும் பின் இருக்கைகளில் அமர்ந்திருக்க, நான் முன் இருக்கையில் நன்கு கால்களை நீட்டி அமர்ந்திருந்தேன். முன் இருக்கையில் அமர்ந்திருப்பதில் சில வசதிகள் உண்டு - பயணிக்கும் பாதையில் இருக்கும், பார்க்கும் காட்சிகளை அவ்வப்போது படமாகவோ, காணொளியாகவோ எடுத்துக் கொள்ள முடியும். அதனால் எப்போதும் அலைபேசியை கைகளில் வைத்துக் கொண்டிருப்பேன். பயணிக்கும் பாதை அழகாக இருந்தாலோ, அல்லது ஏதேனும் படம் எடுக்கும் படியான விஷயம் இருந்தாலோ உடனடியாக கொஞ்சம் க்ளிக்ஸ் - இப்படி பயணித்தபடியே எடுக்கும் படங்கள், காணொளிகள் சில சமயங்களில் நன்றாக வந்து விடும். சில சமயங்களில் சொதப்பி விடும். ஆனால் அவசர கதியில் எடுக்கும் சில படங்கள் மிகவும் சிறப்பாகவே அமைந்துவிடுவதும் உண்டு. இந்தப் பயணத்திலும் இப்படியான காட்சிகளை, படமாகவும், காணொளியாகவும் எடுத்திருந்தேன். அந்தப் படங்கள், காணொளிகள் அவ்வப்போது, பதிவிற்குப் பொருத்தமாக இருந்தால் பகிர்ந்து கொள்கிறேன்.
நார்க்கண்டா பகுதியில் மலைச்சரிவுகள் முழுக்க ஆப்பிள் மரங்கள். ஒவ்வொரு பகுதியிலும் ஆப்பிள் மரங்கள் பார்க்க முடிந்தாலும், இந்த மரங்களில் சீசனைப் பொறுத்து, பனிப்பொழ்வு காலத்தைப் பொறுத்து ஆப்பிள் வரும் நாட்கள் மாறுபடுகின்றன. இந்தப் பயணத்தில் சில இடங்களில் ஆப்பிள் பூக்களைப் பார்க்க முடிந்ததென்றால், சில இடங்களில் அப்போது தான் காய் வர ஆரம்பித்திருந்தது. ஒரு சில மரங்களில் பூவும் இல்லை காயும் இல்லை. ஆப்பிள் மரங்களைத் தவிர வேறு சில பழம் தரும் மரங்களும் உண்டு - அவையும் இடத்தினைப் பொறுத்தே வளர்கின்றன. இவற்றை எல்லாம் பார்த்தபடியே நாங்கள் பயணித்துக் கொண்டிருந்தோம். எங்கே பார்த்தாலும் மலைகள், மலைகள் என்றிருந்தாலும் ஆங்காங்கே நீர்நிலைகளும் காண முடிந்தது. மலைச்சிகரங்களில் இருக்கும் பனி, வெப்பம் காரணமாக உருகி மேலிருந்து கீழ் நோக்கி தனக்கான பாதையை வகுத்துக் கொண்டு கீழே இருக்கும் நதியை நோக்கி பயணித்துக் கொண்டிருந்தது. அந்தக் காட்சிகள் தூரத்திலிருந்து பார்க்கும்போது சிற்றருவி போலத் தோன்றினாலும் ஆபத்துகளை விளைவிக்கக் கூடிய வேகத்துடன் வரும் அருவி என்பதை நாங்கள் உணர்ந்தே இருந்தோம்.
தவிர இங்கே நதிகளில் ஓடி வரும் தண்ணீரை தேக்கி வைத்து, அதனை வேகமாக மலைப்பகுதிகளிலிருந்து வெளியேற்றி மின்சாரம் எடுக்கும் பல நிறுவனங்கள் உண்டு. அதனால் சாலையோரத்தில் பல இடங்களில் பதாகைகளில் எச்சரிக்கை வாசகங்கள் எழுதி வைத்திருப்பதை பார்க்க முடியும். நதியில் இறங்குவது ஆபத்தை விளைவிக்கக் கூடும். தண்ணீரை வெளியேற்றும் முன்னர் அதிக ஒலியுடன் அபாயச் சங்கு ஒலிக்கும் என்றாலும், உள்ளூர்வாசிகளுக்கு மட்டுமே அதன் அர்த்தம் தெரிகிறது. தெரியாத சுற்றுலாப் பயணிகள் ஆர்வக் கோளாறில் நதிப் பக்கம் இறங்கிச் சென்று தங்களது உயிருக்கு ஆபத்தினை தாங்களாகவே தேடிக் கொள்கிறார்கள். பலமுறை விபத்து ஏற்பட்டு சுற்றுலாப் பயணிகள் தங்களது உயிரை இழந்திருக்கிறார்கள். அதனால் இந்த மாதிரி எச்சரிக்கை பதாகைகளை எழுதி வைத்திருக்கிறார்கள். ஆனாலும், நம் மக்கள் எப்போது சொல்வதைக் கேட்டிருக்கிறார்கள் - இந்தப் பயணத்தில் கூட பலர் நதியின் படுகையில் இறங்கி பாறைகள் மீது அமர்ந்து கொண்டு நிழற்படங்கள் எடுப்பதும், காணொளிகள் எடுப்பதும் என இருந்தார்கள். “மதுரைக்காரங்க என்னிக்கு சொல்பேச்சு கேட்டு இருக்கீங்க?” என்று மூக்கில் குத்து வாங்கி உட்கார்ந்து கொண்டு வடிவேலுவிடம் சொல்வாரே ஒரு நபர் அந்தக் காட்சி நினைவுக்கு வந்தது எனக்கு.
ஐந்து மணி சுமாருக்கு தேநீர் அருந்தினால் கொஞ்சம் சுகமாக இருக்கும் என்று தோன்ற, ஒரு சாலையோர உணவகத்தில் வண்டியை நிறுத்தச் சொன்னோம். அங்கே குல்ஃபி ஐஸ் பார்த்ததும் அதனைச் சுவைத்தோம். கூடவே பக்கோடா போட்டுக்கொண்டிருந்ததைப் பார்த்ததால் எங்களுக்கும் வேண்டுமெனக் கேட்க, நேரம் ஆகும் என்று சொல்லிவிட்டார்கள். அதனால் தேநீர் மட்டுமே சொன்னோம். ஐஸ்க்ரீம், தேநீர் என இரண்டும் சிறிது நேர இடைவெளியில் சாப்பிடக் கூடாது, பல்லு போயிடும் என்று ஓட்டுநர் ஷிம்பு எங்களிடம் சொல்லிக் கொண்டிருந்தார். சுவையான குல்ஃபி கேரளத்தில் கிடைக்காது என்பதால் இங்கே கிடைக்கும்போது சாப்பிட வேண்டும் என்று நண்பர் கிரிஷ் அதற்கு மறுமொழி சொல்லிக் கொண்டிருந்தார். அந்த உணவகத்தில் ஏற்கனவே நிறைய பேர் இருந்தார்கள். பெங்காலிகள் குடும்பத்தினருடன் ஒரு Tempo Traveller-இல் வந்திருக்க வேறு சில குடும்ப உறுப்பினர்களும் இருந்தார்கள். பெங்காலி பெண்மணிகளும் குழந்தைகளும் உணவகத்தின் உள்ளே பிஸ்கெட், தேநீர் என்று பிசியாக இருக்க, ஆண்களைக் காணவில்லை.
பின்பக்கம் Washroom தேடிப் போனால் அங்கே அந்தக் குடும்பத்து ஆண்கள் நம்கீன், Cold Drink, ஆளுக்கு ஒரு Quarter சரக்கு சகிதம் இயற்கையை ரசித்துக் கொண்டே கச்சேரியைத் தொடங்கி இருந்தார்கள். சரி சரி, நடத்துங்கடே… நல்லா வருவீங்க!” என்று நினைத்துக் கொண்டு எங்கள் வேலைகளை முடித்துக் கொண்டு திரும்பினோம். அந்த உணவகத்தினை கணவன், மனைவி என இருவருமாகச் சேர்ந்து நிர்வகிக்கிறார்கள். பண விஷயத்தில் பெண்மணி கறாராக இருக்கிறார். கணவன் பொருட்களுக்கான பணத்தைக் கணக்கு செய்தாலும், பெண்மணியும் ஒரு முறை கணக்கு சரிபார்த்து சொல்கிறார். தேநீர், குல்ஃபி ஆகியவற்றுக்கான பணத்தினை QR Code Scan செய்து கொடுத்து விட்டு தொடர்ந்து பயணித்தோம். ராம்பூர் புஷஹர் சற்றே பெரிய ஊர், மக்கள் நடமாட்டம் அதிகம் இருக்கும் ஊர், தங்குமிடங்களும் உண்டு என்றாலும் நாங்கள் மக்கள் தொகை, சுற்றுலாப் பயணிகள் குறைவாக இருக்கும் இடத்தில் தங்குவதையே விரும்பினோம். அதனால் நாங்கள் அன்றைய தினம் தங்குவதற்கு தேர்ந்தெடுத்த ஊர் சராஹன் எனும் ஊர்.
சராஹன் - 2011 Census கணக்குப் படி மொத்தமே 359 குடும்பகளைக் கொண்ட (மக்கள் தொகை - 1690 - 1028 ஆண்கள், 652 பெண்கள்) ஒரு சிற்றூர். அழகான ஊர் என்பதோடு அங்கிருந்து மலைச்சிகரங்களையும், ஆப்பிள் தோட்டங்களையும், இயற்கைக் காட்சிகளையும் பார்த்து ரசிக்க முடியும். அதனால் அங்கே தங்க முடிவெடுத்ததும், இணைய வழி அங்கே இருந்த தங்குமிடங்கள் குறித்து தேடினோம். எங்களுக்கு ஒத்துப் போகும் என்று நினைத்த தங்குமிடத்திற்கான வழியை Google Map மூலம் தேர்ந்தெடுத்து, அதனைத் தொடர்ந்து மலைப்பாதையில் பயணித்தோம். நாங்கள் தேர்ந்தெடுத்த தங்குமிடத்திற்கான வழியைக் காண்பிப்பதற்கு பதில் ஒரு அரசு பங்களாவைக் காண்பித்தது Google Map. அதனால் மேலும் தேட வேண்டாம் என்று முடிவு செய்து அங்கே அருகில் இருந்த வேறொரு தங்குமிடத்திற்குச் சென்று உரிமையாளரிடம் பேசினோம். அவர் யார்? அவர் சொன்ன தங்குமிடத்திற்கான கட்டணம் எங்களுக்கு ஒத்துப் போனதா, வசதிகள் என்ன போன்ற விஷயங்களையும், மற்ற நிகழ்வுகளையும் அடுத்த பகுதியில் எழுதுகிறேன் நண்பர்களே. அதுவரை பயணத்தில் இணைந்திருங்கள் நண்பர்களே.
*******
இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…
நட்புடன்
வெங்கட் நாகராஜ்
திருவரங்கம்
17 ஜூன் 2026


.jpeg)
.jpeg)



அங்கு வசிப்பவர்கள் வளர்க்கும் மாடுகளோ, வழிதவறி மேலேறி வந்த மாடுகளோ.. அவையும் கண்ணில் பட்டன. ஓய்வாக உட்கார்ந்து அசைபோட்டுக்கொண்டு..!
பதிலளிநீக்குபனி உருகி ஓடிவரும் சிற்றருவியில் இப்படி ஒரு ஆபத்தா... அவர்கள் அப்போது எச்சரிக்கை பதாகைகளை அனைத்து மொழிகளிலும் பெரிதாக எழுதி வைக்க வேண்டாமோ..
பதிலளிநீக்குபோட்டுக் கொண்டிருக்கும் பகோடா கொடுக்க ஏன் நேரமாக வேண்டும்? முன்னரே ஆர்டர் செய்தவர்கள் இருக்கிறார்களோ!
பதிலளிநீக்குகடையில் அந்தப் பெண் தன் கணவரை திறமை இல்லாதவர் என்று நினைக்கிறார் போலும். அல்லது அவர் மூலம் எவ்வளவு இழந்தாரோ...
பதிலளிநீக்குஅருகிலிருந்த தங்குமிடம் உரிமையாளர் யார் என்பதில் ஏதோ வியப்பு கலந்த சமாச்சாரம் இருக்கும் போலவே....
பதிலளிநீக்குதில்லியிலிருந்து இந்த ஊர் வரை நானும் நண்பர் பிரமோதும் இரவு நேரப் பேருந்தில் பயணம் செய்து, அங்கிருந்து சித்குல், கல்பா, சாங்க்ளா என்றெல்லாம் பயணித்திருக்கிறோம்.//
பதிலளிநீக்குநல்ல நினைவு இருக்கிறது ஜி. எனக்கு உங்களின் அந்தப் பயணம் அதாவது கிராமங்களில் தங்கி நிதானமாகப் பார்த்த அந்தப் பயணம் ரொம்பப் பிடித்திருந்தது. எனக்கு ஏற்கனவே பிடித்த பகுதியா குறித்தும் வைத்திருக்கிறேன்.
கீதா
எனக்கும் முன் இருக்கையில் இருக்க ரொம்பப் பிடிக்கும் நீங்கள் சொல்லும் காரணங்களில் நான் விரும்பும் ஒன்றான காட்சிகளைப் பார்த்துப் படம் பிடிக்க முடியும் என்பதுதான். நான் குட்டையாக இருந்தாலும் கூட கால்களை நன்றாக நீட்டிக் கொள்ள முடியும் ...நீங்கள் உயரம் வேறு எனவே உங்களுக்கு இது ரொம்ப வசதி.
பதிலளிநீக்குகீதா
இப்படி பயணித்தபடியே எடுக்கும் படங்கள், காணொளிகள் சில சமயங்களில் நன்றாக வந்து விடும். சில சமயங்களில் சொதப்பி விடும். ஆனால் அவசர கதியில் எடுக்கும் சில படங்கள் மிகவும் சிறப்பாகவே அமைந்துவிடுவதும் உண்டு//
பதிலளிநீக்குடிட்டோ.
காணொளி நல்லாருக்கு ஜி.
பனிச் சிகப்படம் வாவ்! அடுத்த படமும் பிரமாதம்.
கோயா குல்ஃபி!! ஆஹா செமையா இருக்குமே...ஹூம் இப்ப சாப்பிட முடியாதே!
பெங்காலி பெண்மணிகளும் குழந்தைகளும் உணவகத்தின் உள்ளே பிஸ்கெட், தேநீர் என்று பிசியாக இருக்க, ஆண்களைக் காணவில்லை. //
சமாச்சாரம் புரிகிறது!!! என்று இங்கு அடித்துவிட்டு அடுத்த வரி வந்தால் அதே அதே!!!!
கீதா
ராம்பூர் புஷஹர் சற்றே பெரிய ஊர், மக்கள் நடமாட்டம் அதிகம் இருக்கும் ஊர், தங்குமிடங்களும் உண்டு //
பதிலளிநீக்குஆமாம். ஆனால் நாங்களும் அங்கு தங்கவில்லை. ஜஸ்ட் சும்மா பார்த்ததோடு சரி.
//நாங்கள் மக்கள் தொகை, சுற்றுலாப் பயணிகள் குறைவாக இருக்கும் இடத்தில் தங்குவதையே விரும்பினோம்.//
டிட்டோ.
ஆனால் சாரஹன் போகவில்லை. படம் மனதைக் கவர்கிறது.
உரிமையாளரிடம் பேசினோம். அவர் யார்? அவர் சொன்ன தங்குமிடத்திற்கான கட்டணம் எங்களுக்கு ஒத்துப் போனதா, வசதிகள் என்ன போன்ற விஷயங்களையும், //
அப்ப ஏதோ விஷயம் இருக்கோ?!!!
கீதா
உரிமையாளர் யார்//
பதிலளிநீக்குஇதில் சம்திங் சம்திங்!!!!
கீதா