வியாழன், 31 டிசம்பர், 2009

என்றும் இருபத்தி எட்டு



தில்லி வந்த முதல் நாள் என்னை அலுவலகத்திலிருந்து கரோல் பாக் அழைத்துச் சென்றவர் பத்மா. பத்தொன்பது வருடங்கள் கழிந்திருந்தாலும், அன்று எப்படி இருந்தாரோ அப்படியே இன்றளவும் இருக்கிறார். என் மேல் அபரிமிதமான அன்பை பொழிந்து பாசத்தைக் கொட்டும் ஒரு நல்ல உள்ளம்.

பக்த மார்க்கண்டேயனுக்கு வயது எப்படி என்றும் பதினாறோ, அது போலவே பத்மாவிற்கு இடுப்பளவு என்றும் இருபத்தி எட்டு. அவரது உடலில் எந்த மாற்றமும் இல்லை. அவர் கல்லூரியில் படித்த காலத்தில் தைத்த உடைகள் இன்றும் அவருக்கு கச்சிதமாக பொருந்துகிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்! எங்கள் அலுவலகத்தில் அவரைப் பார்த்தால் பொறாமைப் படாதவர்களே கிடையாது!.

நான் அவரை விட சிறியவனாக இருந்தும், அன்று பென்சில் போல இருந்தவன், இன்று தொப்பையும் தொந்தியுமாக காணப்படுகிறேன். அவரோ "அன்று பார்த்த கண்ணுக்கு அழிவில்லாமல் அப்படியே இருக்கிறார்". இத்தனைக்கும் இந்த கால கட்டத்தில் பத்மாவிற்கு திருமணம் முடிந்து ஒரு குழந்தையும் பிறந்து, அக்குழந்தையே இன்று எட்டாம் வகுப்பில் படிக்கிறது! . பொதுவாக கல்யாணம் ஆனவர்கள் சந்தோஷத்தில் குண்டாகி விடுவார்கள் என்று சொல்வது போல் இல்லாமல், இப்போதும் அப்படியே இருக்கிறார்.

மற்றவர்கள் பொறாமைப்படும்படியாக இருப்பவர் "உடம்பெல்லாம் அப்படியே இருந்து என்ன பண்றது? தலயிலே இருந்த முடியெல்லாம் கொட்டி 'சொட்டையாகி' விட்டதே!" என்று ஒரேயடியாக கவலைப்படும் பத்மா என்று எங்களால் செல்லமாக அழைக்கப்படும் பத்மநாபன் அண்ணாச்சியை என்னத்தைச் சொல்லி தேற்றுவது?

அதனால் தான் என்னுடைய முந்தைய பதிவான மஞ்சள் மகிமை-க்கு அவர் பின்னூட்டம் இப்படி போட்டுள்ளார்!

"அண்ணாச்சி! இந்த Fevicol - ஐ தலையில் தேய்க்க முடியுமான்னு ஒண்ணு கேட்டு சொல்லுதேளா! நமக்கும் தலையில முடி முளைச்ச மாதிரி ஆச்சுல்லா!"

புதன், 30 டிசம்பர், 2009

கர்நாடகா மெஸ்

வேலை கிடைத்து தில்லி வந்து மூன்று வருடங்களுக்குப் பிறகு கரோல் பாக் பகுதியியிலிருந்து தில்ஷாத் கார்டன் பகுதிக்கு நாங்கள் நான்கு நண்பர்களாக சேர்ந்து குடி பெயர்ந்தோம். நிறைய எண்ணிக்கையில் மலையாளிகள் இருந்தாலும் தமிழர்கள் அவ்வளவாக இல்லாத பகுதி இது. வெளியே சாப்பிட வேண்டும் என்றால் தாபா மட்டும் தான். அங்கு தந்தூரி ரொட்டி மற்றும் சப்ஜிதான் கிடைக்கும்.

எங்களுக்கு ஏற்கனவே சமைத்து பழக்கம் இருந்ததால் ஒரு சிலிண்டரும் காஸ் அடுப்பும் வைத்து சமைத்து அனைவரும் சாப்பிட்டு வந்தோம். சிலிண்டர் தீர்ந்து விட்டால் மீண்டும் வரும் வரை "கோவிந்த்" தாபா ஜிந்தாபாத் தான்.

ஓரிரண்டு நாட்களில் சிலிண்டர் வந்த பிறகு திரும்பவும் நள பாகம் ஆரம்பம். வாழ்க்கை இப்படியே ஓடிக்கொண்டிருந்திருந்தால்தான் நன்றாக இருந்திருக்குமே! ஒரு நாள் நண்பர் ஒருவர் எங்களது வீடு இருந்த பகுதியில் ஒரு கர்நாடகா குடும்பம் இருப்பதாகவும் அவர்கள் தேவைப்படுவர்களுக்கு முன்கூட்டியே தெரிவித்தால் சமைத்துக்கொடுப்பார்கள் எனவும் தெரிவித்தார். இந்த விஷயம் தெரிந்த பத்து நாட்களுக்குள் சொல்லி வைத்த மாதிரி எங்கள் வீட்டில் காஸ் சிலிண்டர் தீர்ந்து விடவே அந்தக் கன்னட பெண்மணியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு நான்கு பேருக்கு சாப்பாடு தேவை என்று சொன்னோம். அவரும் எங்களை அவர்கள் வீட்டிற்கு வந்து சாப்பிட அழைத்தார்.

இரவு எட்டுமணிக்கு மேல் அவரது வீட்டிற்கு சென்று கதவைத் தட்டிவிட்டுக் காத்திருந்தோம். கதவைத் திறந்து உள்ளே அழைத்த வீட்டின் தலைவர் எங்களை சோபாவில் உட்கார வைத்து சிறிது காத்திருக்கச் சொன்னார். பிறகு அந்த பெண் வந்து எங்களுக்கு சுடச்சுட சாதம், பொரியல், சாம்பார் என ஒவ்வொன்றாக பரிமாற நாங்கள் நால்வரும் குஷியாக சாப்பிட ஆரம்பித்தோம்.

குனிந்த தலை நிமிராமல் புதிய மணப்பெண் போல நாங்கள் சாப்பிட்டுக் கொண்டிருக்க திடீரென "உர் உர்" என்ற உறுமல் சத்தம். நிமிர்ந்து பார்த்தால், மேஜை மீது தன் முன்னிரண்டு கால்களையும் வைத்து, எங்கள் முகத்தின் அருகே நாக்கைத் தொங்க போட்டபடி ஒரு பெரிய நாய் எங்களை முறைத்துக் கொண்டு இருந்தது. பயத்தில் எங்கள் நால்வருக்கும் நாக்கு வெளியே தள்ளியது.

உள்ளிருந்து வந்த பெண்மணியிடம் " இந்த நாயை கட்டி போடுங்கள்!" என நாங்கள் கோரஸாகச் சொல்ல, அவரோ " இந்த டைகர் ஒன்னும் பண்ண மாட்டான் பயப்படாதீங்க!" என்று எங்களிடம் சொல்லிவிட்டு, நாயைப் பார்த்து " டைகர் உட்காரு," என்று சொல்ல, அது எங்கள் அருகிலேயே சோபாவில் உட்கார்ந்து கொண்டது. அதன் பிறகு எங்களுக்கு சாப்பாடு எங்கே இறங்கும்?. சாம்பார் சாதத்துடன் சாப்பாட்டை முடித்துக்கொண்டு தப்பித்தோம் பிழைத்தோம் என்று எடுத்தோம் ஓட்டம்.

அதன் பிறகு அந்த கன்னட குடும்பம் இருக்கும் தெருப் பக்கம் கூட நாங்கள் தலை வைத்துப் படுத்ததில்லை. சிலிண்டர் தீர்ந்தால் தந்தூரி ரொட்டி தான். இதற்குத்தான் ஆங்கிலத்தில் "BE A ROMAN WHEN YOU ARE IN ROME" என்று சொன்னார்களோ?

வியாழன், 24 டிசம்பர், 2009

அணு அளவும் பயமில்லை?

விஜய் டிவியில் அணு அளவும் பயமில்லை சீசன்-2 வந்து கொண்டிருக்கிறது. முதல் சீசனில் அனுஹாசன் ஹோஸ்ட் செய்த இந்த நிகழ்ச்சி இப்பொழுது லக்ஷ்மி ராயினால் [தமிழ் அங்கங்கே எட்டிப்பார்க்கும் ஆங்கிலத்தில்] ஹோஸ்ட் செய்யப்படுகிறது. இது போன்ற நிகழ்ச்சி தமிழுக்குப் புதிது என்றாலும், இதற்கு இந்தியாவில் முன்னோடி "கலர்ஸ்" ஹிந்தி சேனலில் வரும் "கத்ரோன் கே கிலாடி" [ஆபத்துகளுடன் விளையாடுபவர்]. இந்த ஹிந்தி நிகழ்ச்சி பிரபல ஹிந்தி நடிகர் அக்ஷய் குமாரினால் நடத்தப்படுகிறது.

டி.வி.யில் வரும் பெரும்பாலான சீரியல்கள் வெறும் அழுகாச்சி ரகம் தான் . இல்லையெனில் யாரை எப்படி கவுக்கலாம், எப்படி மத்தவங்களை ஒழிக்கலாம் என்பதையெல்லாம் காட்டும்படியாகத்தான் இருக்கு. என்னதான் இந்த "அணு அளவும் பயமில்லை" நிகழ்ச்சி மற்ற சீரியல்களில் இருந்து மாறுபட்டு இருந்தாலும் "ரியாலிட்டி ஷோ" என்று சொல்லும் அளவுக்கு இதில் ரியாலிட்டி இருப்பதாக தோன்றவில்லை.

தமிழ்நாட்டிலும் சரி இந்தியாவின் மற்ற மாநிலங்களிலும் சரி எவ்வளவோ மக்கள் தினம் தினம் தங்களது வாழ்க்கையில் பல ஆபத்தான பணிகளில் சர்வ சாதாரணமாக ஈடுபடுகின்றனர். பலருக்கு தங்களது வயிற்று பிழைப்புக்காக என்றால் வேறு சிலருக்கோ அப்போதைய சந்தர்ப்பங்களினால்.

தமிழகத்தில் இருப்பவர்களில் பலர் கழைக்கூத்தாடிகளை பார்த்திருக்கலாம். இரண்டு பக்கத்திலும் குச்சி நடப்பட்டு, குறுக்கே கட்டப்பட்ட ஒரு மெல்லிய கயிற்றின் மேல் கையில் ஒரு நீண்ட குச்சியை பிடித்துக்கொண்டு சர்வ சாதாரணமாக நடப்பார் ஒரு சிறிய சிறுமி. டி.வி நிகழ்ச்சியில் காட்டப்படுவது போல கீழே எந்த விதமான பாதுகாப்பு வலையோ/ மெத்தையோ கிடையாது. கயிற்றின் மேலே நடக்கும் சிறுமியின் கண்களில் பயமோ, தடுமாற்றமோ இருப்பதில்லை. வயிற்று பிழைப்பு அவர்களை இப்படி நடக்க வைக்கிறது.

குற்றாலம் மலைப் பகுதிகளில் பலர் தேன் எடுப்பதற்காகவும் தங்களின் தினசரி உணவினை சேகரிக்கவும் மலைச்சரிவுகளில் எந்த விதமான பிடிமானமும் இன்றி ஏறி இறங்குகின்றனர். குற்றாலம்/பாபநாசம் அருவிகளில் குளிக்க வந்து, பொங்குமாங்கடலில் தடுமாறியோ அல்லது தற்கொலைக்கு முயன்றோ விழுந்துவிடும் பயணிகளை காப்பாற்ற அல்லது உடலை மீட்க மலை உச்சியில் இருந்து அனாயாசமாக தண்ணீருக்குள் குதிப்பவரை பார்க்கிறோம் . குதிக்கும் போது அவர்களுக்கு பயமாக இருக்காதா? "பயமா? அப்படின்னா...?" என்று நம்மிடமே திருப்பிக் கேட்கிறார்கள் அவரைப் போன்றவர்கள்.



மேலே உள்ளது ஒரு பெண் இரண்டு ரயில் பெட்டிகளின் நடுவில் உள்ள connector -இல் உட்கார்ந்து பயணம் செய்பவரின் படம். அவரது முகத்தில் பயக் களை கொஞ்சமாவது இருக்கிறதா? இல்லையே!. அவரை பொறுத்தவரை இது ஒரு சாதாரணமான, தினமும் நடக்கும் ஒரு நிகழ்வு.

சீரியல் எடுத்து லட்சங்களில் பணத்தை அள்ள இவர்களுக்கு இப்படியெல்லாம் ஒரு வழி. தங்களுக்கு கிடைக்கும் வருமானத்தில் ஒரு சிறிய பகுதியையாவது இவர்களைப் போன்ற ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்ய பயன்படுத்தினால் தாங்கள் போகிற வழிக்கு புண்ணியம் தேடிக்கொண்டவர்களாக இருப்பார்கள். செய்வார்களா?

திங்கள், 21 டிசம்பர், 2009

மஞ்சள் மகிமை




Pedilite நிறுவனம் தனது Fevicol Adhesives - களுக்கு பல நல்ல விளம்பரங்களைத் தருகின்றனர். சில நாட்களாக வந்து கொண்டு இருக்கும் ஒரு விளம்பரம்... நாடகத்தில் ஆண் வேடம் தரித்து நடிக்கும் ஒரு சிறிய பெண் மீசை வைத்துக்கொள்ள Fevicol-ஐ பயன்படுத்தி விடுகிறார். நாடகம் முடிந்த பின்னர் மீசையை எடுக்க முடியாமல் வாழ் நாள் முழுவதும் மீசையுடன் இருப்பது போல காட்டி இருப்பார்கள். இது வரை பார்க்காமல் இருந்தால் மேலே உள்ள சுட்டியை கிளிக்கினால் பார்க்கலாம். இந்த விளம்பரம் பார்த்த பிறகு எனக்கு தோன்றிய எண்ணங்களை பகிர்ந்து கொள்ளவே இந்த பதிவு.

இது ஏதோ விளம்பரத்திற்க்காக எடுத்த படம் என்றாலும் வட இந்தியாவில் நிறைய பெண்கள் அரும்பு மீசையுடன் திரிவதை பார்க்கலாம். திங்கள் கிழமை காலை பார்த்தால் மீசை இருக்காது. வெள்ளிக்கிழமை வரை கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து மீண்டும் மீசையுடன் இருக்கிறார்கள். பெரும்பாலான வட இந்திய ஆண்கள் தினமும் தாடியை மழிக்கும்போது மீசையையும் சேர்த்தே எடுத்துவிடுவதால் எப்போதுமே பளிச்சென இருக்கிறார்கள்.

தமிழ் நாட்டில் சில பெண்கள் மஞ்சள் பூசிய முகத்தோடு பளிச்சென இருக்கிறார்கள். மஞ்சள் பூசி குளிப்பதன் மகிமைகளை எனது தாய் கூற கேட்டிருக்கிறேன். என்னுடைய சிறிய வயது சகோதரிகளுக்கு சொல்வார்கள், "நீ குளிக்கும் போது மஞ்சள் பூசி குளித்தால் உனக்கு முகத்தில் முடி வளராது, அழகா இருப்பே!" என்று. எனக்கு தெரிந்து பல பெண்கள் மஞ்சள் பூசி குளித்து முகத்தில் முடியில்லாமல் நன்றாக இருந்திருக்கிறார்கள். இப்போதெல்லாம் பெண்கள் மஞ்சள் பூசிக்கொள்கிறார்களா என்பதே தெரியவில்லை.

டெல்லியிலோ அது போன்ற பழக்கமே இல்லை. பெரும்பாலான பெண்கள் மீசையுடன் இருப்பதால், வாரத்தில் ஒரு முறையாவது Beauty Parlour சென்று ப்ளீச்சிங், த்ரடிங் என்று பல விதத்தில் முகத்தில் உள்ள தேவையற்ற முடியை அகற்றுகிறார்கள். வீணாக அம்பது, நூறு என்று செலவழித்து மீண்டும் ஒரே வாரத்தில் தாடி, மீசை என வந்து அவர்களைப் பார்த்து பல் இளிக்கிறது. மருத்துவ ரீதியாக இது harmone problem என்று மனதை சமாதானம் செய்து கொள்கிறார்கள்.

என்னுடைய நாலு வயது பெண்ணை குளிப்பாட்டும்போது அவளிடம் மஞ்சள் பூசி குளித்தால் முகத்தில் முடி வளராது என்று சொன்னேன். உடனே தாடியுடன் இருந்த என்னை பார்த்து கேட்கிறாள், "ஏம்பா, உங்கம்மா உனக்கு மஞ்சள் தேச்சி குளிப்பாட்டலையா? உன் மூஞ்சி எல்லாம் முடியா இருக்கே!" என்று. என்னத்த சொல்ல?

வெள்ளி, 18 டிசம்பர், 2009

அடிக்குது குளிரு...


தலை நகர் தில்லியில் குளிர் ஆரம்பித்து விட்டது. இரவு நேரத்தில் எட்டு டிகிரியும் பகலில் இருபது முதல் இருபத்து நான்கு டிகிரியும் உள்ளது. மாத கடைசியிலும் ஜனவரி மாதத்திலும் இன்னும் அதிகமாகி விடும். ஆனாலும் இங்கு ஒன்றும் பனி மழையோ நடுக்கும் குளிரோ இப்போது இல்லை. பத்து பதினைந்து வருடங்களுக்கு முன்பெல்லாம் கூட தில்லியில் இரண்டு மூன்று டிகிரி வரை இரவு நேரங்களில் இருந்தது உண்டு. பகலிலேயே கூட ஒன்பது டிகிரி குளிரில் இருந்திருக்கிறோம்.

இங்கே குளிர் வந்து விட்டதை தெரிந்து கொள்ள சிரமப்படத் தேவையில்லை. குளிர் வந்தாலும் வராவிட்டாலும் இங்குள்ளவர்கள் தீபாவளி முடிந்த அடுத்த நாளில் இருந்து ஸ்வெட்டர் அணிய ஆரம்பித்து விடுகிறார்கள் - அதிலிருந்தே குளிர் வரப்போவதை/ வந்து விட்டதை நீங்கள் தெரிந்து கொள்ளலாம். குளிருதோ இல்லையோ ஸ்வெட்டரை கழற்றுவதே இல்லை. தீபாவளிக்கு அடுத்த நாள் ஸ்வெட்டரை போட்டுக்கிட்டா February/March மாசம் வர ஹோலி பண்டிகைக்கு அடுத்த நாள் தான் கழட்டுவேன்னு அடம் பிடிக்கிறார்கள். ஏதோ அண்டார்டிகா-ல இருக்கற மாதிரி ஒரு நினைப்பு அவர்களுக்கு. அவங்க நம்ம பக்கத்தில் வந்தாலே நமக்கு வேர்க்குது.

ஆளாளுக்கு ஒரு ஸ்வெட்டர், அதுக்கு மேல ஒரு கோட், டை கட்டிக்கிட்டு இருக்காங்க. கோட்-சூட் போட்டுக்கிட்டு சைக்கிளிலோ, நடந்தோ போறாங்க! இங்கே வந்த புதுசுல இது தெரியாததால, கோட்-சூட்டோட யாரை பார்த்தாலும் ஏதோ பெரிய ஆள் போலன்னு நினைப்பேன். ஒரு நாள் பஸ்சுக்கு லேட்-ஆச்சுன்னு ஆட்டோவில் போகலாம்னு என் நண்பர் ஆட்டோ பக்கத்தில் நின்றிருந்த கோட் ஆசாமியிடம் ஆட்டோ வருமா என கேட்க, எனக்கு ஒரே பயம் - என்னடா இது ஒரு பெரிய ஆள்கிட்ட போய் ஆட்டோ வருமான்னு கேட்கிறாரே என்று. பிறகு பார்த்தால், அதே ஆள் பேரம் பேசி ஐம்பது ரூபாய்க்கு சவாரி வந்தார்!.

நடந்து போகும்போது கையும் வாயும் சும்மா இருக்காது. கோட் பாக்கெட்டில் இருந்து வேர்க்கடலையை எடுத்து வாய்ல போட்டுக்கிட்டு தோலை ரோட்டில் போட்டு விட்டு செல்கிறார்கள். வேர்க்கடலை தோல்/குப்பை இல்லாத ஒரு பஸ் கூட, இந்த நாட்களில் நீங்க பார்க்க முடியாது.

இது இல்லாம, குளிர் கால ஸ்பெஷல் ஆக நிறைய கிடைக்கிறது - சிக்கி [கடலை கேக் ], ரேவ்டி [எள்ளும் வெல்லமும் கலந்த ஒரு தின்பண்டம் - சிறிய தட்டையான வடிவத்தில்]. தமிழ் நாட்டில அவிச்ச வேர்க்கடலை கிடைக்கும். ஆனா இங்க அதுக்கு பதிலா அவிச்ச சக்கரை வள்ளி கிழங்கு!, முட்டை, கேரட் ஹல்வா -இப்படி வகை வகையான குளிர் கால தின்பண்டங்களை சொல்லலாம்.

குளிர் காலம் தான் இங்கே கல்யாண காலம். நம்ம ஊர் மாதிரி எல்லா மாசங்களிலும் கல்யாணம் செய்வதில்லை. பெரும்பாலான கல்யாணங்கள் குளிர் மாதங்களில் தான் நடக்கிறது. மாப்பிள்ளை ரூபாய் நோட்டு மாலை போட்டு குதிரை மேல் உட்கார்ந்து, பெண் வீட்டார் ஏற்பாடு செய்துள்ள கல்யாண மண்டபத்திற்கு செல்கிறார். பெண்கள் ஜிகுஜிகுன்னு உடை அணிந்து, குளிரை பயமுறுத்துவது போல, ஒரு ஷால்-ஐ மடித்து கையில் போட்டுக்கொண்டு குதிரை பின்னால் டான்ஸ் ஆடியபடி செல்கிறார்கள்! குதிரை பயந்து நடுங்கியபடி செல்கிறது. நம்ம ஊர் மாதிரி காலை நேர கல்யாணம் கிடையாது, இரவில் நடக்கிறது. நிறைய சம்பிரதாயங்கள் - அதை பற்றி தனியே ஒரு பதிவே போடலாம்.

குளிர் வந்த உடனே கம்பளி, ஸ்வெட்டர், மற்ற குளிர் கால உடைகளை எடுத்து தூசி தட்டி, வெய்யிலில் காய வைத்து வைக்கணும். குளிர் காலம் முடிந்து திரும்ப எல்லாத்தையும் Dry கிளீனிங் கொடுத்து திவான் [பாக்ஸ் டைப் கட்டில்] உள்ள பத்திர படுத்தணும். இப்படி நிறைய வேலை எல்லோருக்கும். மூணு மாச குளிர் கால கூத்துக்கு எத்தனை வேலை! தாங்க முடியலடா சாமி.