[பட உதவி: கூகுள்]
Non-Detailed Story என்ற ஆங்கில பாடத்தை சின்ன வயதில் நாமெல்லோரும் படித்திருப்போம். நிறைய கதைகள் அதில் இருக்கும். அப்ப தெரிந்ததை
எதற்கு திருப்பிச் சொல்லணும்…. காரணம் இருக்கு நண்பர்களே!
அந்தக் கதைகளில் “The Pied Piper” என்று ஒரு ஆங்கிலக் கதை நம்மில் பலரும்
படித்திருப்போம். அந்த “The Pied Piper” இப்ப தில்லி ரயில் நிலையத்திற்குத் தேவை என்று ஒரு
விளம்பரம் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்க்கில்லை!
தில்லியில் நடந்த காமன்வெல்த் போட்டிகளின் போது தில்லி முழுவதும் விதவிதமான
ஏற்பாடுகள் நடந்தது, பலகோடிகள் செலவு [செலவு தான்!] செய்யப்பட்டது, அதற்காக
“உள்ளே” சென்றது என நிறைய செய்திகளை படித்திருப்பீர்கள். அவற்றில் ஒன்றாக புதுதில்லி ரயில் நிலையத்திலிருந்த எலிகளை விரட்டி
அடித்தார்கள். இப்போது
அவையெல்லாம் திரும்பி வந்து விட்டன.
இரயில்வே அதிகாரி ஒருவர் 10 முதல் 12 அங்குல நீளமும் 4-5 அங்குல அகலமும்
உள்ள எலிகள் தான் புது தில்லி ரயில் நிலையத்தில் இருக்கும் பெரிய பிரச்னை என்று சொல்லியிருக்கிறார். இந்த எலிகளின் தொல்லையை நீக்க தொழில்நுட்பமெல்லாம் பயன்படுத்த
நினைத்திருக்கிறார்களாம்! நிலையத்திற்கு வரும் எலிகளில் சிலவற்றைப் பிடித்து அவற்றுக்கு ”Chip”
பொருத்தி, அவை தனது வீட்டிற்கு [அதான்பா எலிப்பொந்து!] செல்லும்போது அதன் பின்னால்
போய் மொத்த எலிகளையும் அழிக்க முடிவு செய்திருக்கிறார்கள்.
நிலையத்தின் பார்சல் ஏற்றும் பகுதி, நடைமேடைகள், ரயில் பெட்டிகள் என ஒரு
இடம் விடாமல் எல்லா இடங்களிலும் நீக்கமற நிறைந்திருக்கும் இவைகள் நிலையத்தின்
அருகிலிருக்கும் ”சதார் பஜார்” [ஒரு கிலோ மீட்டர்], என்ற இடத்திலிருந்து
வருகிறது என்று சொல்கிறார்.
அதை மட்டுமே சொல்லியிருந்தால் இந்தப் பதிவு எழுதவேண்டிய அவசியமும்
இருந்திருக்காது. அவர் சொன்ன இன்னொரு விஷயம், “இவைகள் எல்லாம் எங்கள் ஊர் எலிகள் அல்ல! தென்னிந்தியாவில் இருந்து வரும் ரயில்களில் அவைகள்
பயணித்து தில்லி ரயில் நிலையத்திற்கு வந்து விடுகிறது" என்றும் சொல்லியிருக்கிறார்! என்னே அவரது விளக்கம்! விட்டால் அவைகளிடம் பயணச்சீட்டு கூட கேட்பார்
போலிருக்கு!
முப்பது மணி நேரத்துக்கு மேலாக வண்டியில் பயணித்து வர அந்த எலிகளுக்கு
தலையெழுத்தா என்ன? அவைகளுக்கு நம் ஊரில் கிடைக்காத உணவா? இங்கே வந்து தான் பிழைக்க வேண்டுமா? பிரச்னைக்கு தீர்வு காண்பதை விட்டுவிட்டு எலிகள் தென்னிந்தியாவில் இருந்து
தான் வருகிறது என்று சொல்வதில் என்ன நியாயம் இருக்க முடியும்! புரியவில்லை.
ஒரு பெரிய பெட்டி நிறைய எலிகளை நிரப்பி அவர் வீட்டிற்கு பார்சலில் அனுப்பலாம் என நான் நினைக்கிறேன் :)
நீங்களும் சொல்லுங்களேன் – வேறு என்ன செய்யலாம் என்று.
மீண்டும் சந்திக்கும் வரை…
நட்புடன்
வெங்கட்,
புது தில்லி.








