நண்பர் பால கணேஷ் அவர்கள் சில மாதங்கள் முன்னர் தனது மேய்ச்சல் மைதானம் பக்கத்தில் “காலச் சக்கரம்” திரு நரசிம்மா அவர்கள் எழுதிய இரண்டாவது புத்தகமான “ரங்கராட்டினம்” பற்றி ஒரு பதிவு எழுதியிருந்தார். அதைப் படித்தபோதே இப்புத்தகத்தினைப் படிக்கும் ஆர்வம் வந்தது. சென்ற சென்னைப் பயணத்தின் போது என்னை திரு
நரசிம்மா அவர்களின் இல்லத்திற்கு அழைத்துச் சென்றார். சந்திப்பின் போது திரு நரசிம்மா அவரது “ரங்கராட்டினம்” புத்தகத்தினை கையொப்பமிட்டு கொடுத்தார். நண்பர்
பால கணேஷுக்கும் திரு நரசிம்மா அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி.
ஏற்கனவே படித்திருந்த அவரது புத்தகங்களான “சங்கதாரா” மற்றும் ”குபேரவனக் காவல்” பற்றி சற்று நேரம் உரையாடிவிட்டு வந்தோம். அலுவகலத்திற்குச் செல்ல வேண்டிய அவசரத்திலிருந்தாலும் எங்களுடன் நீண்ட நேரம் அளவளாவி எங்களை உபசரித்த அவருக்கும் அவரது துணைவியாருக்கும் எனது மனமார்ந்த நன்றி.
திருவரங்கத்திற்கும் எனக்கும் சற்றே தொடர்பு இருப்பதால், ரங்கராட்டினம் புத்தகம் படிக்கும்போது என்னால் அதிகமான ஈடுபாடுடன் படிக்க முடிந்தது. அதிலும் கதையில் வரும் பல இடங்களை கோவில் செல்லும்போது பார்க்க முடிவதால் கதையை ஒன்றி படித்தேன். அரங்கனின் சன்னதியிலிருந்து தாயார் சன்னதிக்கு வரும் வழியில் ”ஐந்து குழி மூணு வாசல்” என ஒன்று உண்டு. ரங்கன் வருகிறானா என தனது ஐந்து விரல்களை தரையில் ஊன்றி ரங்கநாயகி தாயார் பார்த்த இடம் இது எனச் சொன்னாலும் இதற்கு உண்மையான அர்த்தம் வேறு.
“பஞ்ச இந்திரியங்கள் என்ற படுகுழிகளை அடக்கி, ‘சித், அசித், ஈஸ்வரன்’ என்கிற மூன்று தத்துவங்களைப் புரிந்து கொண்டால், பரமனடி அடையலாம்” என்பதைக் குறிப்பது தான் இந்த ‘ஐந்து குழி மூணு வாசல்! இந்த இடத்தின் வழியே கதாசிரியர், திருவரங்கம் கோவில் வரலாற்றில் பின்னடைவான, இருண்ட காலம் வந்ததை விவரமாகச் சொல்கிறார்.
ஹொய்சாள மன்னர்கள் ஆண்டு கொண்டிருந்த காலம். ஒரு சூரியகிரகணத்தின் போது சோமளாகிரி மலைத் தொடர் பிளந்தது. அடுத்த நாள் பார்த்தால் மலையில் பிளவுகளுக்கிடையே பாளம் பாளமாய் பொற்படிமங்கள் கதிரவனின் ஒளியில் தகதகவென மின்னிக்கொண்டிருந்தன. அத்தனையும் அபரஞ்சிப் பொன். இந்த அபரஞ்சிப் பொன்னால் நாட்டுக்கு நல்லது நடக்கப் போகிறதா இல்லை கெடுதல் நடக்குமா….. மேலும் படியுங்களேன்.
அபரஞ்சி பொன் கொண்டு ஹொய்சாள மன்னனான வீரசோமேசன் தான் கட்டிக்கொண்டிருக்கும் “போசலேஷ்வரம்” சிவன் கோவில் முழுவதையுமே பொன்னால் கட்டி திருவரங்கம் கோவிலை விட அதிக புகழ் பெற வேண்டுமென ஆசைப்படுகிறார். அபரஞ்சி பொன் கிடைத்த விஷயம் பாண்டிய மன்னரான சடையவர்மன் சுந்தர பாண்டியனுக்குத் தெரிந்தால் ஆபத்து என மறைக்கப் பார்க்கிறார்கள் ஹொய்சாள மன்னர். ஆனாலும் பாண்டிய மன்னனுக்கு விஷயம் தெரிந்து அபரஞ்சி பொன்னை அடைய போர் மூள்கிறது. ஹொய்சாள மன்னன் வீரசோமேசன் மாண்டு போகிறான். இது முதலாம் குழி.
நடுவிலே சுந்தரபாஹு – மதுரவேணி – சமந்தகமணி என்கிற மூவரின் முக்கோணக் காதலும் உண்டு. அபரஞ்சி பொன் பெற்றுக்கொண்டு மதுரவேணியின் தாத்தா அப்ரமேயர் சில தீய செயல்களைச் செய்யப் போக அப்ரமேயரும் மதுரவேணியும் மாண்டு போவது இரண்டாம் குழி.
அபரஞ்சி பொன் கொண்டு ”பொன்
வேய்ந்த பெருமாள்” என்று தனது விக்ரகத்தினையே
திருவரங்க கோவிலுள் வைக்க ஆசைப் படுகிறான் பாண்டிய மன்னன். திருவரங்க
வாசிகள் அதனை ஏற்க மறுக்க, பிரச்சனை வெடிக்கிறது. கோவிலுக்குள்
தனக்கிருக்கும் மரியாதைகளைப் பார்த்த மன்னன் மனது மாறி அபரஞ்சிப் பொன்னால்
செய்யப்பட்ட தனது உருவத்தை அழித்து அந்த பொன்னால் ஒரு விஷ்ணு சிலையை வடிவமைத்து
அதை “ஹேமச்சந்தன ராஜா’ என்கிற
பெயரோடு சந்தன மண்டபத்தில் வைக்கிறார். பின்னர் அங்கே பாதுகாப்பு
குறைவென்பதால் கருவூல மண்டபத்திற்கு போகிறது சிலை! பாண்டிய
மன்னர் துறவியாக, அவரது வாரிசுகள் சண்டை போட்டு
பாண்டிய மன்னர்களின் ஆட்சியும் போகிறது. இது மூன்றாம் குழி!
சுல்தான்கள் படையெடுப்பினால் ரங்கநாதர் கிட்டத்தட்ட 48 ஆண்டுகள்
மறைந்துறைய வேண்டிய அவசியம் நேரிட்டதும், பொன் வேய்ந்த பெருமாளின் பின்னைய நிலையும், சுல்தான்களின்
அழிவும் நான்காவது குழியாக சொல்லியிருக்கிறார் ஆசிரியர். படிக்கப்
படிக்க அத்தனை ஒரு விறுவிறுப்பு. படித்துதான் தெரிந்து
கொள்ளுங்களேன்.
சுல்தான் படையெடுப்பின் போது தனது உயிரைப் பணயம் வைத்து
போரிட்ட 12000 திருவரங்க வாசிகள், அபரஞ்சி
பொன் சிலையை எடுத்துச் செல்ல வந்த படைத்தளபதியை தந்திரமாக கோபுரத்தின் மேல்
அழைத்துச் சென்று கீழே தள்ளிவிட நினைத்து அழைத்துச் சென்ற வெள்ளாயி, அவரது
தியாகம் என அனைத்தும் சொல்லியிருக்கிறார். இன்றும்
வெள்ளாயி பெயராலேயே ஒரு கோபுரம் - வெள்ளை கோபுரம் இருக்கிறது
திருவரங்கத்தில்.
நான்கு குழிகளைப் பற்றிச் சொல்லி விட்டு, ஐந்தாவது
குழியாகச் சொல்லி இருக்கும் விஷயம் மிக நன்று. பல
வருடங்கள் முன்பு நிகழ்ந்த சூரிய கிரகணம் போலவே நிலநடுக்கத்தினை உண்டு பண்ணக்கூடிய
ஒரு முழு சூரிய கிரகணம் வரும் 2081-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 3-ஆம்
தேதி புதன் கிழமை நிகழப் போகிறது. அப்போதும் அபரஞ்சிப் பொன்
வரலாம். ஆனாலும் இதனால் இத்தனை
ஆபத்துகளும் பிரச்சனைகளும் ஏற்பட்டதைப் படித்த பிறகு அதன் மேல் ஆசை கொள்வீர்களா
என்ன!
நாவலில் வரும் கதாபாத்திரங்களின் பெயர்கள் அனைத்தும் அருமை!
அந்தக் காலத்திற்கே நம்மை அழைத்துச் செல்வதை உணர முடிகிறது. நான் இங்கே சொல்லி இருப்பது
நாவலின் ஒரு பகுதி தான். முழுதும் படித்து ரசிக்க
புத்தகத்தினை வாங்கி படியுங்களேன். கிடைக்குமிடம்: வானதி
பதிப்பகம், 23, தீனதயாளு தெரு, தியாகராய
நகர், சென்னை – 17.
மீண்டும் வேறொரு புத்தகம்
பற்றிய விவரங்களோடு உங்களைச் சந்திக்கும் வரை….
நட்புடன்
வெங்கட்
புது தில்லி.