திங்கள், 29 ஜூலை, 2013

பார்த்த முதல் நாளே....... - தொடர்பதிவு

[முதல் கணினி அனுபவம்]




1986 – ஜூன் மாதம். பத்தாவது முடித்து பதினொன்றாம் வகுப்பு – நமக்கு பயாலஜி, ஜூவாலஜின்னா ஒரு அலர்ஜி......  கணக்குன்னா ஓகே அப்படின்னு நினைச்சு சயன்ஸ் க்ரூப் வேண்டாம், MPC [Maths, Physics, Chemistry] எடுக்கலாம்னா நாலாவது பயாலஜி தான் இருக்கும் – பேசாம காமர்ஸ் எடுத்துடலாமான்னு எனக்கு பலவித யோசனைகள். எங்கப்பா என்னடான்னா, எப்படியாவது நம்ம புள்ளைய ஒரு எஞ்சினீயர் ஆக்கிடணும்னு ஆசைப்பட்டு நீ முதல் க்ரூப்தான் எடுக்கணும்னு ஒத்தைக்கால்ல நிக்க, ”சரி பாக்க பாவமா இருக்கு, முதல் க்ருப்பே எடுத்துடுவோம்னு முடிவு பண்ணேன். ஆனா விதி வேறமாதிரி இருந்தது! நான் இஞ்சீனியர் ஆகல! சுக்குனீயர் தான் ஆனேன்.....





எனக்கு பயாலஜி மேல இருந்த அலர்ஜி NLC நிர்வாகத்துக்கு யார் சொன்னாங்களோ தெரியல, அந்த வருஷத்துல இருந்து முதல் க்ரூப்ல பயலாஜிக்கு பதில் Computer Science பாடம் தான்னு சொல்லிட்டாங்க! ”ஆஹா தப்பிச்சுட்டேடா கோவாலு!”ன்னு சந்தோஷப்பட்டா அந்த சந்தோஷம் கொஞ்சம் நாளைக்குதான் நிலைச்சுது!





கம்ப்யூட்டர் சயன்ஸ் அந்த வருஷம் தான் முதல்ல ஆரம்பிக்கறாங்க ஸ்கூல்ல, புதுசா டீச்சர் வேலைக்கு வைக்கணும், அதுக்குண்டான எல்லா விஷயங்களும் முடிய கொஞ்சம் மாதங்கள் ஆகும், அதுனால ஒரு ஷார்ட்கட் கண்டுபிடிச்சாங்க! என்ன ஷார்ட்கட்....  ஸ்கூல்ல வேலை செய்யற டீச்சர்கள கூப்பிட்டு ”யாருக்காவது இந்த கம்ப்யூட்டர் பத்தி ஏதாவது தெரியுமா? ஏதாவது ஷார்ட் டெர்ம் கோர்ஸ் யாராவது முடிச்சு இருக்கீங்களா?”ன்னு கேட்க, ஒரெ ஒரு கை தான் உசந்துச்சு! அது யாரு கைன்னு கேட்கறீங்களா?





இதுவரைக்கும் பயாலஜி சொல்லிக்கொடுத்த டீச்சர் கை தான்! அவர் ஒரு வருஷம் டிப்ளமா படிச்சு இருக்கேன்னு தம்பட்டம் அடிக்க, அவரையே எங்களுக்கு கம்பூட்டர் டீச்சரா நியமிச்சாங்க! அவர் என்னடான்னா, இத்தனை நாள் வரைக்கும், ”இலைகள் எப்படி பச்சை நிறமா இருக்கு?, மரங்கள் ஏன் ஆக்சிஜன் உறிஞ்சாம, கார்பன் டை ஆக்சைட் உறிஞ்சுது, ஒரு செடியின் படம் வரைந்து பாகங்கள் குறிக்கவும்” அப்படின்னு பயாலஜி எடுத்த நினைவிலேயே எங்களுக்கு கம்ப்யூட்டரையும் பயாலஜி மாதிரியே சொல்லிக் கொடுத்தார்!





பேசிக், ஃபோர்ட்ரான் IV, ஃபோர்ட்ரான் 77, ஃப்ளோ சார்ட், அப்படின்னு அவர் எல்லாத்தையும் படம் வரைஞ்சு பாகம் குறிச்சு தான் எங்களுக்கு பாடம் எடுத்தார். ஃபோர்ட்ரான் அப்படின்னு முதல்ல சொல்லும்போது எனக்கு “ஓட்டுறா”ன்னு சொன்ன மாதிரி கேட்டுது [நம்ம இருக்கற உயரத்துக்கு எப்பவும் கடைசி பென்ச் தான் – புரியாத வார்த்தை சொன்னா, புரிஞ்ச வார்த்தையா கேட்டுது!] – நானும் அப்பாவியா எதை சார் ஓட்டணும்னு கேட்டேன்!





இப்படி கொஞ்ச நாள் வெறும் தியரியா சொல்லிக்கொடுத்துட்டு இருந்தார் அந்த வாத்யார். ”சார் என்னிக்காவது கம்ப்யூட்டர்னு சொல்றீங்களே அதைக் காமிப்பீங்களா?” அப்படின்னு கேட்கவே கேட்டுட்டேன். கம்ப்யூட்டருக்கான தனி அறை தயாராகிடுச்சு. அடுத்த வாரம் உங்களுக்கு ப்ராக்டிகல் க்ளாஸ் அப்படின்னு சொல்லி எங்களுக்கு உற்சாகம் தந்தார்.





அடுத்த வாரமும் வந்தது. சரி நம்ம கிளாஸ்ல இருந்து கம்ப்யூட்டர் ரூமுக்கு கூட்டிட்டு போவாருன்னு பார்த்தா, போகலை. அங்க போறதுக்கு முன்னாடி சில நியதிகள் இங்கேயே சொல்றேன்னுட்டு ஒரேடியா பயமுறுத்துனார்.



கம்பூட்டருக்கு தூசின்னா கொஞ்சம் அலர்ஜி. அதுனால யாரும் செருப்பு போட்டுட்டு உள்ள வரக்கூடாது. நமக்கு தூசி அலர்ஜி இருந்தா தும்மல் வரும் – அது மாதிரி கம்ப்யூட்டருக்கு உடம்புக்கு வந்துடும் – கடகடபுடபுடன்னு சத்தம் போடும்.



கம்ப்யூட்டர் கடவுள் மாதிரி – அதுக்கு தெரியாத, அதால முடியாத விஷயமே கிடையாது – அதுனால, அது இருக்கற ரூம் கோவில் கர்ப்பக்கிரகம் மாதிரி – பேச்சு மூச்சு இருக்கக்கூடாது. மரியாதையா இருக்கணும். கோவில்ல எப்படி பவ்யமா நடந்துப்போமோ அதே மாதிரி இருக்கணும்.



கம்யூட்டர் கீ போர்ட் பொண்ணுங்க மாதிரி ரொம்ப மிருதுவானது. அதனால தாறுமாறா உபயோகிக்கக் கூடாது. 




இந்த மாதிரி நிறைய உபதேசங்கள். இதை வைச்சே அந்த வாரம் முச்சூடும் ஓட்டிட்டாரு. அடுத்த வாரம் தான் கம்ப்யூட்டர் கண்ணால பார்த்தேன். “பார்த்த முதல் நாளே” பாட்டு அப்ப வரலையா, அதுனால கணினியைப் பார்த்து இந்த பாட்டு பாடல! அவரு கணினி முன்னால உட்கார்ந்து, ஒவ்வொரு ”பாகமா படம் வரைந்து பாகங்களைக் குறி” ஸ்டைல்ல சொல்லிட்டு இருந்தார். நாங்க கேட்டுட்டு இருந்தோம்.  அப்படி இப்படின்னு எல்லாம் முடிஞ்சு கணினி முன்னாடி நாங்க அமர்ந்தது கிட்டத்தட்ட அந்த வருட பரீட்சை அப்பதான்!





கணினி முன்னாடி முதன் முதலா உட்கார்ந்தப்போ “எனக்கு கையும் ஓடல, காலும் ஓடல...... மனசு தான் மாரத்தான் ரேஞ்ல தலைதெறிக்க ஓடிச்சு....  அடங்குடா டேய்னு ஒரு குரல். அப்புறமா மனதை திடப்படுத்திக்கிட்டு  ஃபோர்ட்ரான் – ல பாடப்புத்தகத்தில் இருக்க ப்ரோக்ராம அப்படியே கணினில தட்டச்சு செஞ்சு அது சொன்ன வேலையை செஞ்சு முடிச்சப்ப, என்னமோ சாதனை செஞ்சா மாதிரி, ஆகாயத்துல மிதக்கற மாதிரி ஒரு ஃபீலிங்!



இது தான் முதல் அனுபவம்! அதுக்கப்புறம் கல்லூரியில், பிறகு அலுவலகத்தில் என நிறைய கணினி அனுபவங்கள்.....  அதெல்லாம் சொன்னா ஒரு பத்து பதிவு தேறும்! ஆனா உங்களை எல்லாம் சொல்லி கஷ்டப்படுத்த விரும்பல! ஒரே விஷயம் மட்டும் சொல்றேன்!





ஒரு திங்கள் கிழமை – ஒரு வார விடுமுறைக்குப் பிறகு அலுவலகம் சென்ற போது – ”நீ வந்தவுடனே உன்னை மேடம் [என்னோட பாஸ்] ரூமுக்கு வரச் சொன்னாங்க” அப்படின்னு சொல்லவே அவங்க ரூமுக்கு போனேன். அவங்க ஒரே கோபமா இருந்தாங்க! என்ன விஷயம்னு பார்த்தா, அவங்க கணினியோட திரை இப்படி இருந்தது!





”என்ன மேடம் என்ன ஆச்சு” ந்னு கேட்டா, ”தெரியல வெங்கட், இரண்டு நாளா இப்படி தான் இருக்கு. யாருக்கும் என்ன பண்ணறதுன்னு தெரியல! தலையை ஒரு பக்கமா திருப்பி படிச்சு படிச்சு தலை சுளுக்கிக்கிச்சு! 



அதனால மானிட்டரையே திருப்பி வைச்சுட்டேன்.  எதாவது பண்ணுப்பா”ன்னு தலையை சாய்ச்சுக்கிட்டே சொல்ல, “எனக்கு சுளுக்கு எல்லாம் எடுக்கத் தெரியாதே”ன்னு நான் சொல்ல.....  ஒரே ரகளை.



அப்புறம் கணினில அவங்க Display-ல போய், சரி பண்ணிக் கொடுத்தேன்! விண்டோஸ் சில வெர்சன்களில் Destop Properties - Diplay ல Rotate னு ஒரு Option கொடுத்து அதுல 90, 180, 270, 360 அப்படின்னு இருக்கும். அதை எப்படியோ க்ளிக் பண்ணி இப்படி ஆக்கிட்டாங்க! இந்த Rotate Option எதுக்கு வைச்சான் விண்டோஸ் காரன்? இன்னிக்கு வரைக்கும் புரியாத விஷயம்.





கிட்டத்தட்ட நாளொன்றுக்கு 12 மணி நேரத்திற்கு மேல் கணினியுடனே காலம் செல்கிறது என்பதால் இது போல நிறைய அனுபவங்கள் இன்னும் உண்டு! இருந்தாலும் இந்த தொடர்பதிவு பெரிய தொடர் பதிவா என்னோட பக்கத்துலேயே வந்தா நல்லா இருக்காது. அதுனால இதைத் தொடர்ந்து எழுத கீழ்க்கண்ட வலைப்பதிவாளர்களை அழைக்கிறேன்......



  
என்னை இத்தொடர் பதிவு எழுத அழைத்த ஸ்ரீராம் அவர்களுக்கும் தமிழ் இளங்கோ அவர்களுக்கும் மனமார்ந்த நன்றி.  அவங்க இந்த தொடர் பதிவு எழுத அழைத்து கொஞ்ச நாளாயிடுச்சு..... அதுக்குள்ள நிறைய பேர் தொடர் பதிவு எழுதிட்டாங்க! அதனால யாரு எழுதலைன்னு தெரியல! அதுனால ஒரு சிம்பிள் வழி கண்டுபிடிச்சுட்டேன்!



     ஹலோ யாருங்க..... எச்சூஸ்மி! யாரெல்லாம் இந்த தொடர் பதிவ இன்னும் எழுதலையோ அவங்க எல்லோருக்கும் பொதுவா சொல்லிடறேன். நீங்களும் எழுதலாமே!.....



மீண்டும் சந்திப்போம்!



நட்புடன்



வெங்கட்.

புது தில்லி.

ஞாயிறு, 28 ஜூலை, 2013

ப்ளீஸ் பாக்காதீங்க......

இந்த ஞாயிறன்று இரண்டே புகைப்படங்கள் தான். எதுக்கு புகைப்படத்திற்கு இப்படி ஒரு டைட்டில்...... எடுத்த புகைப்படம் பாருங்க புரியும்!






முதல் புகைப்படம்...... 



எங்கே திரும்பினாலும் கெட்ட விஷயங்கள் பார்க்கக் கிடைக்கின்றது. அதனால தான் பார்க்கவே வேண்டாம்னு இப்படி முகத்தினை மூடிக்கொண்டார்களோ?......

இந்த முகமூடிக்குள் இருக்கும் குழந்தைகள் யார்? எப்படி இருப்பார்கள்? தெரிந்து கொள்ள ஆவலில்லையா உங்களுக்கு......













இரண்டாம் படம்.....



என்ன தான் கெட்டது நம்மைச் சுற்றி நிறைய நடந்தாலும் நல்ல விஷயங்களும் இருக்கின்றனவே. அதை மட்டும் எடுத்துக் கொள்வோமே!

படங்கள் எடுக்கப்பட்டது திருவரங்கத்தில்...... 

என்ன நண்பர்களே... இந்த ஞாயிறின் புகைப்படங்களை ரசித்தீர்களா?

மீண்டும் நாளை சந்திப்போம்....  நாளைய பதிவு என்ன? காத்திருங்கள்!

நட்புடன் 

வெங்கட்.
புது தில்லி.

வியாழன், 25 ஜூலை, 2013

ஃப்ரூட் சாலட் – 55 – ரத்தம் - வெற்றியை நோக்கி – நம்பிக்கை


இந்த வார செய்தி:

நம் உடலில் ஓடும் ரத்தம் A, B, AB மற்றும் O என நான்கு வகைகளாக பிரிக்க முடியும். அதில் ஒவ்வொன்றிலும் + மற்றும் – என இரு வகைகள் – அதாவது எட்டு விதமான ரத்த வகைகள் தான் பெரும்பாலானவர்களுக்குத் தெரியும்.  இதில் சேராத இன்னும் இரண்டு வகைகள் உண்டு. மிகவும் குறைவான எண்ணிக்கையான மக்களுக்கே இவ்வகை ரத்தம் உண்டு. அதை Bombay Rh +ve மற்றும் Bombay Rh –ve என அழைக்கிறார்கள். 

முதன் முதலாய் பம்பாய் நகரில் உள்ள பரிசோதனைக் கூடத்தில் இந்த வகை ரத்தம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதால், இந்த ரத்த வகைக்கு “Bombay Rh” என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.


நன்றி: http://www.therishikesh.com/donate_blood.php

கேரளத்தின் கொச்சியிலுள்ள ஒரு நோயாளிக்கு இந்த Bombay Rh –ve வகை ரத்தம் தேவைப்பட மருத்துவமனை நிர்வாகம் இதற்கான வேண்டுகோளை இந்தியா முழுவதுமுள்ள மருத்துவமனைகளுக்கும், ரத்த வங்கிகளுக்கும் அனுப்பி இருக்கிறது. மற்றும் சமூக வலைத்தளங்களிலும் பகிரப்பட, இது பற்றி கேள்விப்பட்ட மும்பையைச் சேர்ந்த 21 வயது இளைஞர் ஆதேஷ் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது ஒரு ஞாயிற்றுக் கிழமை மாலை, மும்பையின் மஹாத்மா காந்தி சேவா மந்திர் ரத்த வங்கிக்கு வந்து தனது அரிய வகை ரத்தத்தினை தானம் செய்திருக்கிறார். 

இது அரிய வகை ரத்தம் என்பதை, இந்தியா முழுவதிலுமுள்ள ரத்த தானம் செய்பவர்களில் வெறும் 70 பேருக்கு மட்டுமே இந்த வகை ரத்தம் இருக்கிறது என்பதிலிருந்து கணிக்க முடியும்.  இந்த இளைஞர் தானம் செய்த ரத்தம் கேரளத்தினைச் சேர்ந்த ரெஞ்சீவ் எனும் 26 வயது இளைஞரை காப்பாற்றியிருக்கிறது.  ஆதேஷ் போல ரத்த தானம் செய்ய மனமுள்ளவர்கள் இருந்துவிட்டால்... 

சமயத்தில் அரிய வகை ரத்தம் தானம் செய்த இளைஞர் ஆதேஷினை பாராட்டுவோம்.....

இந்த வார முகப்புத்தக இற்றை:

நீங்கள் எடுத்து வைக்கும் சிறிய அடி கூட உங்கள் வாழ்க்கைப் பாதையில் ஒரு மிகப் பெரிய திருப்பத்தினை தரக்கூடியதாக அமையலாம். வெற்றியை நோக்கி சின்னச் சின்னதாய் அடி எடுத்து வையுங்கள் பரவாயில்லை; ஆனால் நின்ற இடத்திலேயே நின்று கொண்டு வெற்றி கிட்டவில்லை எனச் சொல்லுதல் மூடத்தனம்.

இந்த வார குறுஞ்செய்தி: 

யாருக்காவது பரிசு தரும் எண்ணம் இருக்கிறதா? நீங்கள் கொடுக்கக் கூடிய சிறப்பான பரிசு என்ன தெரியுமா? நீங்கள் அவருடன் செலவழிக்கும் உங்களின் பொன்னான நேரம் தான்....  ஏனெனில் உங்களால் அதை திரும்பப் பெற முடியாது.

ரசித்த காணொளி: 

சமீபமாக கிட்கேட் விளம்பரம் பார்த்தீர்களா? பார்க்கவில்லையெனில் நிச்சயம் பாருங்கள். வரும் குழந்தைகளைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம்! அவர்களது சிரிப்பினை ரசிக்கலாம்! ஏற்கனவே ரசித்தவர்கள் இன்னுமொரு முறையும், பார்க்காதவர்கள் முதல் முறையும் ரசிக்க இதோ அந்த காணொளி...




ரசித்த புகைப்படம்:

WWW.TPOTY.COM – Travel Photographer of the Year என்று ஒரு தளத்தில் ஒவ்வொரு வருடமும் பயணங்கள் சம்பந்தமான சிறந்த புகைப்படத்திற்கு பரிசுகள் வழங்குகிறார்கள்.  இந்த வருடமும் இந்த போட்டியில் பங்குபெற அழைத்திருக்கிறார்கள்.  விருப்பமிருப்பவர்கள் தளத்தின் சுட்டியில் க்ளிக்கினால் விவரங்கள் தெரிந்து கொள்ளலாம். பங்குபெற கட்டணம் உண்டு.

சென்ற வருடத்தின் போட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு புகைப்படம் இங்கே ரசித்த படமாக!


நன்றி WWW.TPOTY.COM இணைய தளம்.

ரசித்த பாடல்:

வரப் பிரசாதம் படத்திலிருந்து ரவிச்சந்திரன், ஜெயசித்ரா நடிப்பில் “கங்கை நதியோரம் ராமன்” ஆர் கோவர்த்தனம் அவர்களது இசையில் கே.ஜே. யேசுதாஸ் மற்றும் வாணி ஜெயராம் குரலில் நான் ரசித்த பாடல் இதோ உங்கள் ரசனைக்கு! படத்தில் இந்தப் பாடலுக்கு இசையமைத்தது திரு கோவர்த்தனம் அவர்களுடன் பணிபுரிந்த இளையராஜா என்றும் சொல்கிறார் இந்த காணொளியை தரவேற்றம் செய்திருப்பவர்..... 

 

படித்ததில் பிடித்தது!:

ஒரு கிராமத்தில் மழை பெய்து பல நாட்கள் ஆகிவிட்டது. ஊர் கூடி முடிவு செய்தார்கள் – ”குறிப்பிட்ட நாளில் மழை வேண்டி பிரார்த்தனை நடத்தப்படும். அனைவரும் கண்டிப்பாக பிரார்த்தனையில் பங்கு பெற வேண்டும்” என உத்தரவு வந்தது.  அனைத்து மக்களும் வந்தார்கள் கூட்டத்திற்கு. வந்திருந்த கூட்டத்தில் ஒரே ஒரு சிறுவன் மட்டும் குடையோடு வந்திருந்தான் – அது தான் செய்யும் பிரார்த்தனையில் அவனுக்கு உள்ள அசைக்க முடியா நம்பிக்கை!

ஒரு வயதுக் குழந்தையை தகப்பன் மேலே தூக்கிப் போட்டு பிடிப்பதைப் பார்த்திருக்கிறீர்களா – அப்படி போடும்போது குழந்தை மகிழ்ச்சியாக சிரித்துக் கொண்டிருக்கும் – அது தகப்பன் மேல் இருக்கும் நம்பிக்கை – “நிச்சயம் நம்மைப் பிடித்து விடுவார் அப்பா!”

ஒவ்வொரு இரவும் படுக்கப் போகும்போது அடுத்த நாள் காலையில் எழுந்திருப்போமா என்று தெரியாது – ஆனாலும் தினம் தினம் காலையில் விழிக்க அலாரம் வைத்து விடுகிறோம் – நிச்சயம் நாம் நாளையும் உயிரோடு இருப்போம் என்ற நம்பிக்கை!

குறிப்பு: ஆங்கிலத்தில் மேலே சொன்ன மூன்று ”நம்பிக்கை” எனும் வார்த்தைக்கு மூன்று விதமாய் வார்த்தைகளைப் பயன்படுத்துவார்கள் – FAITH, TRUST & HOPE! – தமிழில் மூன்றிற்கும் நாம் ”நம்பிக்கை” எனும் வார்த்தையை மட்டுமே பயன்படுத்துகிறோம். வேறு தமிழ் வார்த்தைகள் இருந்தால் பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்!  

என்ன நண்பர்களே இந்த ஃப்ரூட் சாலட்-ஐ ரசித்தீர்களா? மீண்டும் ஃப்ரூட் சாலட்-உடன் அடுத்த வெள்ளியன்று சந்திக்கும் வரை…

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.