வெள்ளி, 22 ஆகஸ்ட், 2014

ஃப்ரூட் சாலட் – 103 – சூரிய ஒளியிலிருந்து மின்சாரம் – வாழ்க்கை – கவிதைப் போட்டி



இந்த வார செய்தி:

பீஹார் மாநிலம் – மிகவும் பின்தங்கிய இந்திய மாநிலங்களில் ஒன்று. பெரும்பாலான நகரங்களிலேயே மின்சாரப் பற்றாக்குறை இருக்கையில், கிராமங்களின் நிலை பற்றி சொல்லித் தெரியவேண்டியதில்லை. நாளின் 24 மணி நேரத்தில் நான்கு மணி நேரம் மின்சாரம் இருந்தாலே பெரிய விஷயம். அதிலும் பல வீடுகள் மின்சார இணைப்புகளே கிடையாது. வீதியிலும் விளக்குகள் கிடையாது.

இப்படி மின்சாரம் இல்லாத ஓர் கிராமம் தான் [Dh]தர்ணாய்.  சில மாதங்களுக்கு முன்னர் Greenpeace எனும் NGO இந்த கிராமத்தின் மின்சாரப் பற்றாக்குறையைப் போக்க முன்வந்தது. கிராமம் முழுவதும் சூரிய சக்தியைப் பயன்படுத்தி அனைத்து வீடுகளுக்கும், பள்ளி, சுகாதார விடுதி என எல்லா இடங்களுக்கும் மின்சாரம் தரும் பணியைத் துவக்கியது.


இரண்டு மாதங்களுக்குள் சூரிய ஒளி மூலம் கிடைக்கும் மின்சாரத்தினை பயன்படுத்தி, வீதி எங்கும் விளக்குகள், சூரிய சக்தி மூலம் இயங்கும் தண்ணீர் பம்புகள், அனைத்து வீடுகளுக்கும் மின்சார இணைப்பு என கிராமத்தினை முழுவதும் மாற்றி இருக்கிறார்கள். கிட்டத்தட்ட முப்பது வருடங்களாக மின்சாரப் பற்றாக்குறையால் தடுமாறிய இக்கிராமம் மிகவும் சந்தோஷம் தரும் ஒரு இடமாக இப்போது மாறியிருக்கிறது.



100 கிலோ வாட் Micro-Grid மூலம் இக்கிராமத்தில் இருக்கும் 450 வீடுகள், 50 கடைகள், 2 பள்ளிகள், 60 தெரு விளக்குகள், 1 சுகாதார விடுதி மற்றும் 1 விவசாயிகளுக்கான பயிற்சி மையம் என அனைத்திற்கும் மின்சாரம் வழங்கியதன் மூலம் கிராமத்திலுள்ள சுமார் 2400 மக்கள் பயனடைந்துள்ளார்கள்.

இதன் மூலம் கிராமத்து மக்களுக்கு சில வேலை வாய்ப்புகளும் கிடைத்திருப்பதாகச் சொல்கிறார்கள்.  ஒரு கிராமத்தில் இந்த மாற்றம் ஏற்படுத்த முடிகிறது என்றால், இந்தியாவின் பல்லாயிரம் கிராமங்களிலும் மாற்றம் கொண்டு வர முடியும் – முயன்றால் முடியாத விஷயம் ஒன்றுமே இல்லை.

இந்தச் செய்தியைப் படிக்கும்போதே மின்சாரம் இல்லாத பல கிராமங்கள் கண் முன்னே வந்து போனது.  ஒவ்வொரு கிராமத்திலும் மின்சார இணைப்பும் வசதிகளும் வரும் நாள் விரைவில் வரட்டும்!

நன்றி:      WWW.THEBETTERINDIA.COM

இந்த வார முகப்புத்தக இற்றை:



இந்த வார குறுஞ்செய்தி:



ரசித்த காணொளி:

சென்ற வார ஃப்ரூட் சாலட்-ல் வந்திருக்க வேண்டிய விளம்பரம்! இப்போது பார்த்தாலும் தவறில்லை!




ராஜா காது கழுதை காது:

திருச்சியிலிருந்து சென்னை வந்து கொண்டிருந்தேன். எனது இருக்கைக்கு எதிரே ஒரு சிறிய குடும்பம் – அப்பா, அம்மா, 7-வது மற்றும் 2-வது படிக்கும் இரு பெண்கள்.  அம்மாவும் இரண்டு பெண்களும் பயணத்தினை மிகவும் ரசித்தபடி விளையாடிக் கொண்டிருக்க, அப்பா ரொம்பவும் கர்மசிரத்தையாக இந்த வார ஆனந்த விகடனை படித்துக் கொண்டிருந்தார். இரண்டொருமுறை பெண்கள் அவரையும் விளையாட்டிற்கு அழைக்க, பதிலேதும் சொல்லாது ஆனந்த விகடனில் மூழ்கி இருந்தார்.  சிறிது நேரம் கழித்து பெரிய பெண் அப்பாவிடம்  சொன்னார்

“வீட்டுக்குப் போனவுடனே உனக்கு பரீட்சை – ஆனந்த விகடன்லே வந்திருக்கும் விஷயங்கள் தான் கேள்வியாக இருக்கும்! – நீ மட்டும் ஒழுங்கா பதில் எழுதலையோ, முட்டி போடச் சொல்லிடுவேன்!”

இந்த வார புகைப்படம்:




படித்ததில் பிடித்தது:

வாழ்க்கை என்பது....

புத்தர் பிரான் ஒரு மரத்தடியில் அமர்ந்திருந்தார். அவருடைய அருள்மொழி கேட்க சீடர்கள் காத்திருந்தனர். அவர்களிடம், “ஒரு மனிதனின் ஆயுட்காலம் எவ்வளவு?” என்று கேட்டார் புத்தர் பிரான்.

”எழுபது ஆண்டுகள்” என சீடர் ஒருவர் சொன்னதும், “தவறு” என்று சொன்னார் புத்தர். 

“அறுபது ஆண்டுகள்” என மற்றொரு சீடர் சொல்ல, அதையும் மறுத்தார் புத்தர்.

”ஐம்பது ஆண்டுகள்” என்று இன்னொருவர் கூற, அதையும் “இல்லை” என்றார் புத்தர் பிரான்.

“ஐம்பது ஆண்டுகள் கூடவா ஒரு மனிதனால் வாழ முடியாது? என்ற சந்தேகத்தில் சீடர்கள் அமைதி காத்தனர். சிறிய மௌனத்திற்குப் பிறகு வாய் திறந்த புத்தர் பிரான், ”மனித வாழ்க்கை ஒரு நொடி தான்!” என்றாராம்.

”என்ன, ஒரே ஒரு நொடி தானா?” என்று ஆச்சரியத்துடன் சீடர்கள் கேட்க, அதற்கு புத்தர் பிரான் சொன்ன விளக்கம் –

”ஆம்.... வாழ்வு ஒரே ஒரு நொடியல்ல, ஒவ்வொரு நொடியிலும் முழுமையாக வாழ்வது தான் வாழ்க்கை”

இந்த வார அறிவிப்பு:

தீபாவளித் திருநாளை முன்னிட்டு
ரூபன் & யாழ்பாவாணன் இணைந்து நடத்தும்
உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டி-2014


போட்டிக்கான விதிமுறைகள் மற்றும் படம் இங்கே.....
 
மீண்டும் அடுத்த வெள்ளியன்று வேறொரு ஃப்ரூட் சாலட்-ல் சந்திக்கும் வரை…..

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.


புதன், 20 ஆகஸ்ட், 2014

ஹிந்தியும் தேங்காய் ஓடும்!



இரயில் பயணங்களில் – 3

தில்லியிலிருந்து சென்னை ராஜதானி விரைவு வண்டியில் வந்த போது கிடைத்த ஒரு அனுபவத்தினை சென்ற இரயில் பயணங்களில் பகுதியில் எழுதி இருந்தேன். அதனைப் படித்து ரசித்த அனைவருக்கும் நன்றி.  அதே பயணத்தில் கிடைத்த வேறொரு அனுபவம் இங்கே, இப்பகுதியில்!

தமிழகத்திலிருந்து தில்லி/வட இந்தியா வரும் அனைவரும் தடுமாறுவது மொழிப் பிரச்சனையில் தான். ஹிந்தி தெரியாத, ஆங்கிலத்திலும் அத்தனை சரளமாக பேச முடியாத, தமிழ் மட்டுமே பேசத் தெரியும் தமிழர்கள் படும் அவஸ்தை சொல்ல முடியாத அளவிற்கு இருக்கும்.  வண்டியில் இருந்து தில்லி ரயில் நிலையத்தில் இறங்கிய உடனேயே தொல்லைகள் ஆரம்பித்து விடும்.


நன்றி: கூகிள்

பயணத்தில் என்னுடன் வந்த ஒரு நபர் தான் அடைந்த துயரங்களை சொல்லிக் கொண்டு வந்தார். தாய் மொழி தவிர இன்னும் சில மொழிகளைக் கற்றுக் கொள்வதின் அவசியம் வெளி மாநிலங்களுக்கு/நாடுகளுக்குச் செல்லும்போது தான் நாம் அதிகம் உணர்கிறோம்.  இந்த மனிதரும் அப்படித் தான்!  வந்து இறங்கியவுடனே அவருக்கு கிடைத்த பாடம் அப்படி!

புது தில்லி ரயில் நிலையத்தில் ரயிலிலிருந்து இறங்கி வெளியே வந்து மால்வியா நகர் எனும் இடத்தில் இருக்கும் அவரது நிறுவனத்தின் தங்குமிடத்திற்குச் செல்ல ஆட்டோ ஓட்டுனரிடம் கேட்டு இருக்கிறார்.  அவர் மால்வியா நகர் என்று இடத்தினைச் சொல்லவும், “[dh]தோ சோ” என்று அவர் சொல்ல, இவர் தோசை இல்ல, மால்வியா நகர் என்று சொல்ல அவர் திரும்பவும் “[dh]தோ சோ” என்று சொல்ல, இவருக்கு ”என்ன வாழ்க்கைடா இது” Moment அது! பிறகு ஆட்டோ ஓட்டுனர் ஆங்கிலத்தில் Two hundred என்று சொல்ல, இவர் one hundred என்று சொல்லி, அந்த இடத்திற்குச் சென்றாராம்!

இனிமேல் ஒன்றிரண்டு மாதங்களுக்கு ஒரு முறை தில்லி வர வேண்டியிருக்கும் என்று சொன்ன அவரிடம் ஹிந்தி மொழி கற்றுக் கொள்ள வேண்டிய அவசியத்தினைச் சொல்லிக் கொண்டு வந்தேன்.

இன்னும் சில அனுபவங்கள் மிக ஸ்வாரசியமானவை! அங்கே இருந்த சில தினங்களும் வெளியே சாப்பிட பிடிக்காமல், தங்குமிடத்திலேயே சமைத்துச் சாப்பிட்டு இருக்கிறார் [வசதிகள் அங்கே இருந்ததால்]. காய்கறி வாங்க செல்லும் போது வேண்டியவற்றை எடுத்துக் கொண்டு 100 ரூபாயை கொடுத்து அவர் தரும் சில்லறையை வாங்கிக் கொண்டு வருவாராம்! மற்ற மளிகை சாமான்களை பக்கத்தில் இருக்கும் Big Apple கடையில் தானாகவே எடுத்து, Bill போட்டு வாங்கி விட, தாளிக்க கடுகு அங்கே கிடைக்காததால், கடைக்குச் சென்று அதைக் கேட்க அவர் ரொம்பவே பிரயத்தனப்பட்டிருக்கிறார்! அவர் மொழியிலேயே அதைக் கேட்போமா!

“நான் கடைக்குப் போய், தாளிப்பதற்கு கடுகு என்று தமிழில் கேட்க, அவர் முழியோ முழி என முழிக்க, பிறகு சைகை மூலம் காண்பித்தும், ஆங்கிலத்தில் தெரிந்த அளவிற்குச் சொல்லியும் பார்த்தேன் – Big vessel – put oil, then put kadugu, பட் படா, படா பட் sound”  எனக்கு அதான் வேண்டும்!” என்று கேட்க, அவனுக்கு தலை கால் புரியாது முழித்தான்! போய்யா, நான் கடுகு போடாமலேயே தாளிச்சுக்கறேன்” என்று வந்து விட்டாராம்! அவரிடம் நான் கடுகுக்கு ஹிந்தியில் ராய் [அ] சர்சோன் என்று சொல்லி, சரசுவை நினைவில் வைத்துக் கொள்ளச் சொன்னேன்!

 நன்றி: கூகிள்

தில்லியில் தேங்காய் கிடைக்குமோ கிடைக்காதோ என செங்கல்பட்டிலிருந்தே தேங்காய் கொண்டு வந்திருக்கிறார் போலும். அது தீர்ந்துவிட, துருவியபின் தேங்காய் ஓட்டினை எடுத்துச் சென்றிருக்கிறார். கடைக்காரரிடம் அதை திருவோடு போல காண்பித்து தமிழில் தேங்காய் தேங்காய் என்று கேட்க, அவர் சைகையாலேயே போ போ என்று அனுப்பி இருக்கிறார்! நல்ல வேளை, காசு போடாமல் போனாரே! [ஹிந்தியில் தேங்காய்க்கு நாரியல் என்று சொல்லி, Mother Dairy கடைகளில் கிடைக்கும் என்றும் சொன்னேன்.

ரயிலில் ஏறிய உடனேயே ஒரு தட்டில் சமோசா, Sauce, ஒரு சின்ன பாக்கெட் கடலை கூடவே ஒரு பாக்கெட்டில், Milk Powder, Sugar, tea bag ஆகிய மூன்றும் கொடுப்பார்கள். அந்த மூன்றையும் பார்த்த அவர், ”என்ன உலகமடா இது?” இப்படி குடுத்தா என்ன பண்ணனும்னு தெரியலையே? இதை எப்படி டீயா மாத்தறது? என்று வாய்விட்டே புலம்பினார்.

”கொஞ்சம் இருங்க! சூடா தண்ணீரும், கப்பும் தருவாங்க, சக்கரை, பால் பவுடர் போட்டு, கலக்கி தண்ணீர் விடுங்க, என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே Tea Bag-ஐ கிழிக்கப்போக, நான் அலற, ஒரே ரகளை தான்! பிறகு அவருக்கு எப்படி தேநீர் தயாரிக்க வேண்டும் என்பதை செயல்முறை விளக்கத்தோடு சொல்லிக் கொடுத்தேன்.

முதல் முறையாக தில்லி வரும்போதே தெரியாத மொழி, பழக்கம் இல்லாத மனிதர்கள், புதிது புதிதாய் விஷயங்கள் என்று பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கிறது என்று புலம்பினார். ”அடிக்கடி வர வேண்டியிருக்கும், ஹிந்தி தெரியாம எவ்வளவு கஷ்டம்!”  என்று சொன்ன போது அவருக்கு நான் சொன்னது, ”கொஞ்சம் கொஞ்சமா ஹிந்தி கத்துக்கோங்க! நிச்சயம் பயன்படும்!” 

மீண்டும் வேறொரு பதிவில் சந்திக்கும் வரை…..

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.