அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
இதற்கு முன்னர் வெளியிட்ட அழகிய படங்களும் சில வரிகளும் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
*******
தில்லி வாழ்க்கையில் சீதோஷ்ண நிலை, மாசுத் தொல்லை என சில குறைகள் பெரிதாகச் சொல்லப்பட்டாலும் ஏனோ நிறைகள் மட்டுமே எனக்குத் தெரிகிறது. ஒவ்வொரு பகுதியிலும் குறைகளும் நிறைகளும் இருக்கத்தான் செய்கிறது - வேறு வழியில்லை - எங்கே நமக்கு போட்டிருக்கிறதோ அங்கே தான் வாழ வேண்டும் என்பது நியதி என்று சொன்னாலும் தில்லி வாழ்க்கை குறித்த சிந்தனைகள், இங்கைக்கும் அங்கைக்கும் இருக்கும் வேறுபாடுகள் மனதில் தோன்றாமல் இருப்பதே இல்லை. பார்க்கும், கேட்கும் ஒவ்வொரு விஷயத்திலும் தில்லியுடன் ஒப்பீடு செய்யாமல் இருக்க முடிவதில்லை. அட இங்கே இப்படி இருக்கிறதே, அங்கே நல்லா இருக்குமே என்ற சிந்தனைகள் வருவதைத் தவிர்க்க முடிவதில்லை. அதிக வருடங்கள் அங்கே இருந்து விட்டதால் இப்படி இருக்கும் என்பதை நினைவு கூர்ந்தாலும் சிந்தனைகள் மாறுவதில்லை.
இந்த மாதம் அலுவலகத்தில் பணிபுரிந்த இரண்டு அலுவலர்கள் பணி ஓய்வு பெற்றார்கள். அவர்களுக்கென ஒரு பிரிவு உபசார விழா ஏற்பாடு செய்திருந்தார்கள். உடனேயே இங்கே நடக்கும் விழாவிற்கும் அங்கே நடக்கும் விழாவிற்கும் உண்டான வித்தியாசங்களைக் குறித்து யோசனைகள் வர ஆரம்பித்து விட்டது. தலைநகரிலிருந்து திருச்சிக்கு வந்த இரண்டு மாதங்களில் நான்கு பேர் பணி ஓய்வு பெற்று இருக்கிறார்கள்..... வேறு எவரும் அவர்களுக்கு பதிலாக வரும் வரை, மீதி இருப்பவர்களுக்கு அதிக வேலைப்பளு இருக்கும்...... Nobody is indispensable என்றொரு வாக்கியம் உண்டு..... யார் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அரசு இயந்திரம் இயங்கிக் கொண்டேதான் இருக்கும். இந்த உழைப்பாளி இல்லை எனில் வேறு ஒருவர் என்பது தான் நிதர்சனம்......
பணி ஓய்வு என்றால் பலருக்கும் ஒரு வித மன அழுத்தம் ஏற்படும்...... சிலரோ மிகவும் சாதாரணமாக எடுத்துக் கொள்வார்கள்..... மத்திய அரசுப் பணியில் கடந்த 35 ஆண்டுகளாக இருக்கிறேன். எத்தனையோ மனிதர்கள் ஓய்வு பெற்று செல்லும் நாட்களில் அவர்களுக்குத் தரும் சிறப்பு பிரிவு உபசார நிகழ்வுகளில் கலந்து கொண்டிருக்கிறேன். தில்லிக்கும் திருச்சிக்கும் இதிலும் நிறைய வித்தியாசங்கள்..... இங்கே யார் ஓய்வு பெறுகிறார்கள், அவர்களது நடவடிக்கைகள் என்ன, அவர் எந்த நிலையில் இருந்தார் என எதை எதையோ யோசிக்கிறார்கள். சக அலுவலர்களை விட, விழாவிற்கு அவரவர் வீட்டினர், உறவினர் தான் அதிகம் வருகிறார்கள். அப்படி வருபவர்களும் பணி ஓய்வு பெற்றவர்களுக்கு எத்தனை பணம் வரும் என்பதைத் தெரிந்து கொள்வதில் தான் அதீத ஆர்வம் காண்பிக்கிறார்கள். Materialistic கண்ணோட்டம் அதிகமாக இருக்கிறது என்பதே வேதனையான உண்மை.
நேற்று நடந்த பிரிவு உபசார நிகழ்வில் கலந்து கொண்ட போது என்னையும் பேச அழைத்தார்கள் - நன்றி நவிலல்...... ஓய்வு பெற்ற இருவருக்கும் வாழ்த்துக்களைச் சொல்லி, நன்றி தெரிவித்து விழாவினை முடித்து வைத்தேன். தில்லி அலுவலகத்தில் இது போன்ற விழாக்களில் சக ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் அதிக அளவில் கலந்து கொள்வது வழக்கம். சிறப்பான ஏற்பாடுகள் செய்வோம். அதற்கென்றே Welfare Officer மற்றும் அலுவலர்கள் இருப்பார்கள். ஓய்வு பெற்ற அலுவலரை அவரது பணியின் முடிவு நாளில் வீடு வரை அலுவலக வாகனத்தில் கொண்டு சென்று விட்டு வருவது வழக்கம். வீட்டில் அவர்கள் ஏற்பாடு செய்திருக்கும் விழாவில் கலந்து கொண்டு திரும்புவோம். மேள தாளம், உணவு, உற்சாகம் என அமர்க்களமாக இருக்கும். அலுவலகத்திலும் நிறைய நாட்களுக்கு தொடர்ந்து Party இருக்கும். ஓய்வு பெறும் நபர்கள்செலவு செய்ய அஞ்சுவதே இல்லை - சக பணியாளர்கள் என 100--150 பேருக்கேனும் மதிய உணவு வழங்குவார்கள். சிலருக்கு பட்டியல் மிகப் பெரியதாக இருக்க, நான்கு ஐந்து நாட்களுக்கு மதிய உணவு வழங்குவது தொடரும்.
அதே போல, சக பணியாளர்கள் அனைவரும் சேர்ந்து பணி ஓய்வு பெரும் நபருக்கு பெரிய அளவில் நினைவுப் பரிசு வழங்குவதுண்டு. அதற்காக அனைவருமாகச் சேர்ந்து ஆயிரக் கணக்கில் செலவு செய்வதும் உண்டு. ஒரு நண்பர் பணி ஓய்வு பெற்று தில்லியிலிருந்து சென்னை சென்றபோது அவர் வீட்டுக்குத் தேவையான இரண்டு டன் AC வாங்கிக் கொடுத்தோம் - 40 பேர் சேர்ந்து! நான்கே பேர் சேர்ந்து விருப்பப் பணி ஓய்வு பெற்ற நண்பர் ஒருவருக்கு எட்டாயிரத்தில் Coat-Suit வாங்கிக் கொடுத்திருக்கிறோம். இங்கே நபர்கள் குறைவு என்ற காரணம் இருந்தாலும் Association, Club போன்றவற்றிலிருந்து சால்வை, Shield எனக் கொடுத்து நிறைய பேசி வழியனுப்புகிறார்கள். Simple ஆக, ஒரு தேநீர், சமோசாவில் முடிந்து விடுகிறது பார்ட்டி. அலுவலகம் சார்பாக நடக்கும் பிரிவு உபசார விழாவில் கலந்து கொள்ளும் அனைவருக்குமே High Tea எனச் சொல்லப்படும் உணவுகளை காகிதப் பெட்டிகளில் வைத்து தருவார்கள் அங்கே. அந்த உணவுப் பெட்டியின் விலையே நூறு ரூபாய்க்கு குறையாமல் இருக்கும்.
ஒவ்வொரு விஷயத்திலும் இப்படியான வித்தியாசங்களை பார்க்கவும் நினைக்கவும் முடிகிறது. விசாலமான பார்வை இங்கே இருப்பதில்லை என்று அவ்வப்போது தோன்றிக்கொண்டே இருக்கிறது. அதனை நிரூபிக்கும் விதத்தில் அவ்வப்போது மனிதர்கள் நடந்து கொள்கிறார்கள். முகத்தின் முன் பேசும் பேச்சுக்கள் சர்க்கரை தூவியதாக இருக்க, முதுகுக்குப் பின் கோடரியைப் பாய்ச்சும் விதமாக இருக்கிறது. பல சமயங்களில், அடுத்தவர்கள் வாழ்ந்து விடக்கூடாது என்பதில் அதீத அக்கறையுடன் இருப்பதாகவே படுகிறது. தில்லி போல வராது என்று ஒவ்வொரு விஷயத்திலும் நினைக்கத் தோன்றும் விதமாகவே நிகழ்வுகள் இருக்கின்றன. திருச்சியில் வந்து குடும்பத்தினருடன் இருப்பது மட்டுமே மகிழ்ச்சி என்பதில் மாற்றுக் கருத்தில்லை என்றாலும் தில்லியுடனான ஒப்பீடு செய்யாமல் இருக்க முடிவதில்லை.
தில்லி போல வராது என்ற தலைப்பில் தொடர்ந்து தில்லி நினைவுகள், அனுபவங்கள் என பலவற்றை எழுதும் எண்ணம் உண்டு. பார்க்கலாம், நேரமும் மனதும் ஒத்துழைத்தால், படிக்கும் உங்களுக்குப் பிடித்திருந்தால், இதே தலைப்பில் தொடர்ந்து சில பதிவுகள் வரலாம் என்ற எச்சரிக்கையுடன் இந்தப் பதிவினை நிறைவு செய்கிறேன்.
*******
இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…
நட்புடன்
வெங்கட் நாகராஜ்
திருவரங்கம்
30 நவம்பர் 2025


வாழ்க்கையில் மறு ஒத்திகைகள் கிடையாது. மனது வலித்தாலும் இதுதான் உண்மை
பதிலளிநீக்குபொதுவா, மனவிலாசம் இந்திய மேப் போல, கீழே வரவர குறுகிவிடுகிறது என்பார்கள். இதுதான் தமிழகத்துக்கும் தில்லிக்குமான வித்தியாசம் என நினைக்கிறேன். பொதுவா நாம் குறுகிய மனம் படைத்தவர்கள்.
பதிலளிநீக்குஒய்வு பெற்று செல்பவர்களுக்கு பிரிவுபசாரவிழா பற்றி வித்தியாசங்களை எழுதியுள்ளீர்கள். அதே போன்று ஒரே இடத்தில் நிரந்தரமாக பல வருடங்கள் வேலை செய்த பின் அந்த இடம் மிகவும் பிடித்துபோகிறது. இவ்விரண்டையும் அனுபவித்தவன் நான். 1970இல் வேலையில் சேர திருவனந்தபுரம் வந்தேன். 55 வருடங்கள். தற்போது வேறு எந்த ஊரிலும் வசிக்க விருப்பமில்லாமல் --அது மகன் குடும்பத்துடன் என்றாலும் - கடைசி காலத்தையும் இங்கேயே கழிக்க விரும்புகிறேன்- மனைவி துணையுடன்.
பதிலளிநீக்குJayakumar
சரியான மதிப்பீடு என்று நினைக்கிறேன். எனக்கும் இதேதான் தோன்றியது.
நீக்குஅப்படி அல்ல. நாம் நம் வீடு என்று எதில் இருந்தாலும், அதைச்சுற்றியுள்ள இடத்திற்குப் பழக்கப்பட்டுவிடுவோம். மற்ற வீடுகளுக்குச் சென்றாலும், நம் வீட்டிற்கு (அதில் எத்தனை குறைகள் இருந்தாலும்) வந்தபிறகு நமக்கு நிம்மதி வந்துவிடும்.
நீக்குஸ்ரீராம் இதனைச் 'சரியான மதிப்பீடு' என்று சொல்லுவது வியப்பு. அவருக்கு இப்போது இருக்கும் வீடு அதனைச் சுற்றியுள்ள இடங்கள் மிகவும் பழகியிருக்கும். பத்து வருடங்களுக்கு முன்பு கேட்டிருந்தால் அப்போதிருந்த இடம்தான் சொர்கமாக இருந்திருக்கும்.
நான் ஓய்வு பெறும்போது நான் பணிபுரிந்த இடங்களில் உடன் வேலை செய்தவர்களையும் அழைத்து, அப்போது வேலை செய்து கொண்டிருந்தவர்களையும் அழைத்து ஒரு விருந்து கொடுத்தேன். என் அலுவலகத்தில் ஒரு டீ பார்ட்டி கூட கிடையாது!!
பதிலளிநீக்குஎப்படி கோபுரத்தை கொண்டுபோய் தில்லியில் இந்தியா கேட் பக்கம் ஸ்தாபித்தீர்கள்? AI ? கொலாஜ், ஆல்பம் தெரியும், போட்டோவில் போட்டோ பதிப்பது எப்படி?
பதிலளிநீக்குJayakumar
வாசகம் அருமை.
பதிலளிநீக்குமிகச் சரியாகச் சொல்லியிருக்கிறீர்கள்.நாம் பல வருடங்கள் இருந்த இடம் நம் மனதுக்கு மிகவும் நெருக்கமாக இருப்பது சகஜம்தான்.நானும் மும்பையில் 34 வருஷங்கள் இருந்துவிட்டு கோவை வந்திருக்கிறேன். ஆனால் மனம் மட்டும் மும்பையில்.விசாலமான, உதவி மனப் பான்மையுடன் இருக்கும் மனிதர்கள் அங்கேதான் நிறைய.என்ன செய்வது வாழ்க்கையே நிறைய சமரசங்கள் நிறைந்ததுதான்..
விஜி.
தில்லியின் நினைவலைகள் என்றென்றும் நீங்காது. அரசியல் போலவே வடக்கு தெற்கு வாழ்வியல் வேறுபாடுகள் மிக ஏராளம். இது சமன் செய்யமுடியாத நிலையாகவே தொடரரும். சகிப்புத்தன்மை ஒன்றே ஓரளவு தீர்வு என்பது என் தாழ்மையான அபிப்பிராயம்
பதிலளிநீக்குடெல்லியின் நினைவுகள் எப்போதும் இருக்கும்ஏன் என்றால் அதிக நாள் அங்கு இருந்ததால் சமரசங்களுடன் வாழ்ந்துதானே ஆகவேண்டும்
பதிலளிநீக்குபொதுவாகவே வடக்கில் வாழ்ந்து விட்டு தெற்கே வரும்பொழுது பழகிக் கொள்வது சற்று கடினம்தான். அங்கெல்லாம் பிரிவுபசாரங்கள் க்ராண்டாகத்தான் இருக்கும்.
பதிலளிநீக்குவெங்கட்ஜி, பொதுவாகவே வடக்கில் அவர்களின் மனப்பான்மைக்கும் இங்கு இருக்கும் மனப்பான்மைக்கும் வித்தியாசம் மிகவும் அதிகம். எனக்கு என் உறவினரின் மனப்பாங்கு ரொம்பப் பிடித்திருக்கிறது. அது போல என் தங்கை அவள் கணவர் அங்குதானே இருக்காங்க. இங்கு தெற்கில் செட்டில் ஆவதற்கு ரொம்ப யோசிக்கிறார்கள். எனவே அங்கேயே இருந்து கொண்டு இங்கும் அங்குமாக இருந்துவிடலாம் என்றும் யோசனையில். அதுவும் அவர்கள் இருக்கும் குடியிருப்பு அருமையான குடியிருப்பு. டக் டக்கென்று உதவிக்கு ஓடி வந்துவிடுகிறார்கள். தெற்கில் இருக்கும் எனக்கே அங்கு பிடித்திருக்கிறது என்றால் அவங்களைச் சொல்ல வேண்டுமா? உங்கள் ஒப்பீட்டைப் புரிந்து கொள்ள முடிகிறது.
பதிலளிநீக்குகீதா
இந்தியா கேட்டும், ஸ்ரீரங்கம் கோவிலும் சேர்த்து வைத்திருப்பது சூப்பராக இருக்கிறது. ரசித்தேன்
பதிலளிநீக்குகீதா