வெள்ளி, 21 நவம்பர், 2025

கோவை தன்வந்திரி கோவில் தரிசனம் - விஜி வெங்கடேஷ்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


இதற்கு முன்னர் வெளியிட்ட குறும்பயண அனுபவங்கள் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



*******


விஜி வெங்கடேஷ் சமீபத்தில் சென்று வந்த ஒரு ஆலயம் குறித்தும் அங்கே கிடைத்த தனது அனுபவங்களையும் நம்முடன் இன்று பகிர்ந்து கொள்கிறார் - வெங்கட், திருவரங்கம். ஓவர் டு விஜி வெங்கடேஷ். 


******


கோவை தன்வந்திரி கோவில்  தரிசனம் - 29 அக்டோபர் 2025


தன்வந்திரி கோவில் போகலாமென்று முடிவெடுத்து நாங்கள் ஒரு பத்து பேர் சேர்ந்தோம். 29th அக்டோபர் மூன்று டாக்சியில் காலை 09.30 க்கு கிளம்பி 10 க்குள் போய் சேர்ந்தாயிற்று.



மிக அமைதியான சூழலில் கோவில். உள்ளே நுழைந்தவுடன் “என்ன கேரளாவுக்கே வந்துட்டமோ?” என்று நினைக்கும் அளவிற்கு typical கேரள அமைப்பில் கோவில்,  சுற்றுப்புறம் எல்லாம்.


அர்ச்சனை செய்வதற்கான சீட்டு வாங்கிக் கொண்டு உள்ளே நுழைந்தவுடன் முதலில் எதிரேயே தன்வந்திரி சன்னதி. அசல்  குருவாயூரப்பன் போல் சிறிய மிக அழகான புன்சிரிப்புடன் கூடிய அற்புத மூர்த்தம்.



ஓம் நமோ பகவதே வாசுதேவாய; தன்வந்தரயே அம்ருத கலச ஹஸ்தாய; சர்வாமய விநாசநாய; திரைலோக்ய நாதாய; ஶ்ரீ மகாவிஷ்ணவே தன்வந்த்ரயே நமஹ;


என்று விடாமல் நம் இதழ்கள் முணுமுணுக்க மங்கிய இருண்ட கர்பக்ருஹத்திற்கு உள்ளே லேசாக அசையும் விளக்கு வெளிச்சத்தில்  அருமையான தரிசனம்.


அவர் சன்னதி எதிரே துர்க்கை சந்நிதி. அங்கே வணங்கிவிட்டு சுற்றி வந்தால் அதன் வலது பக்கம் மூன்று படிகள் ஏறினால் இடது பக்கம் முதலில் ஐயப்பன் சன்னதி அவரை வழிபட்ட பின்னர் அடுத்தது ஆஞ்சநேயர் சன்னதி. ஆஞ்சநேயர் சற்று பெரிய உருவத்துடன் வெள்ளிக் கவசத்தோடு ஜொலிக்கிறார். அற்புதக் காட்சி..🙏🏻


அந்த சன்னதிகளுக்கு எதிரில் கேரள பகவதி சன்னதி. அவளைத் தொழுதுவிட்டு பின்னர் அதே படிகள் வழியே வெளியே வந்தால் துர்க்கை சந்நிதி எதிரே உமாமகேஸ்வரன் சன்னதி.


பூஜை நடந்து கொண்டிருந்தது. சரியாக நாங்கள் போகும்போது அது முடிந்து அங்கிருந்தே எல்லோர் மீதும் புனித நீர் தெளிக்கப்பட்டது. சிலிர்ப்பு🙏🏻


அந்த சன்னதியைச் சுற்றிக்கொண்டு வந்தால் ஈஸ்வரன் சன்னதி, லிங்க வடிவத்தில். உள்ளே பார்க்கும்போது லிங்கம் கண்ணுக்குத் தெரியவில்லை, சற்று (ரொம்பவே) பெரிய உருவத்துடன் அர்ச்சகர் பூஜை செய்து கொண்டு அதன் முன்னே அமர்ந்திருந்தது காரணம்😟. சற்றே தள்ளியிரும் பிள்ளாய் என்று நாம் சொல்லுமுன்னர் அவரே மனமிரங்கி (சிரமப்பட்டு) தன் உருவத்தை பின்னுக்கு சற்று சாய்த்து ஈஸ்வரனை தரிசிக்க வழி வகுத்தார்🙏🏻. தவறு அவரிடம் இல்லை. சன்னதி சிறியது அவ்வளவுதான்🙂.


கண்ணார அப்பனை தரிசித்து விட்டு வந்தால் அவர் எதிரே ஒரு மரத்தடியில் அமைக்கப் பெற்ற சன்னதியில் சமத்தாக அமைதியாக சாந்தமாக ( அப்பா எதிரிலிருந்து பார்த்துக் கொண்டிருக்கிறாரே!) அண்ணாவும் தம்பியும், அதான் பிள்ளையாரும் முருகனும் அருகருகே.


நெற்றியில் குட்டிக் கொண்டு கன்னத்தில் போட்டுக்கொண்டு வலம் வந்தால் அங்கு சதுரமாக ஒரு இடம் நடுவில் ஹோம குண்டம். அங்கு தினமும் பல விதமான ஹோமங்கள் (ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு சார்ஜ். அதன் விவரங்கள் எழுதிய board அர்ச்சனை ticket counter அருகில் வைத்திருக்கிறார்கள்) நடத்தப் படுகின்றன. ஒரு மாதம் முன்பே தேதி book செய்ய வேண்டுமாம். அதுவும் நேரில் போய்த்தான்பணம் கட்டி சொல்லவேண்டுமாம். சொன்னார்கள்.


ஒவ்வொரு நாளும் பலரும் அதற்காக பணம் கட்டி  ஹோமத்தில் வந்து கலந்து கொள்கிறார்கள். கேரளப் பண்டிதர்கள் சிறப்பாக செய்து வைக்கின்றனர்.


அங்கிருந்து வெளிப் பிராகாரம் தாண்டினால் நவக்கிரகம். அதைச் சுற்றி விட்டு நிமிர்ந்தால் அருகே ஒரு மரத்தைச் சுற்றி வேலி போட்டிருந்தது. மரத்தில் பிரம்ம ராக்ஷஸ் 😳 என்று ஒரு பலகையில் எழுதப்பட்டிருந்தது. பயந்து கொஞ்சம் பின்னே நகர்ந்து மெதுவாக வேலிக்கு உள்ளே பார்த்தால் மரத்தடியில் லிங்கம் பிரதிஷ்டை ஆகியிருக்கிறது. ஈஸ்வரன் அதற்கு (BR க்கு) மோக்ஷம் குடுத்த இடம் போலிருக்கிறது. இன்னும் கொஞ்ச நேரம் மரத்தினருகிலிருந்தால் நம்மைப் பிடித்துக் கொண்டு விடுமோவெனும் பயத்தில்😨 அவசரமாக நகர்ந்தோம்.


எல்லா சன்னதியிலும் தரிசனம் செய்துவிட்டு, அர்ச்சனை சீட்டு வாங்கி உள்ளே குடுத்திருந்ததால் (தன்வந்தரி பகவானுக்கு 11 மணிக்குத்தான் பூஜை, நைவேத்யம்) என்பதால் சிறிது நேரம் பிராகாரத்தில் காத்திருந்தோம். அங்கு நிறைய தூண்கள். ஒவ்வொரு தூணின் மேற்புறமும் நம் புனித பாரதத்தில் உதித்த மகான்கள் (ஆதிசங்கரர், நாராயண தீர்த்தர், ஷீரடி சாய்பாபா, ராகவேந்திரர் போன்ற) உருவத்தை செதுக்கி இருந்தார்கள். திருவள்ளுவரும் அதில் ஒருவர்! அரட்டை அடித்துக் கொண்டே அதையெல்லாம் வேடிக்கைப் பார்த்து முடித்தோம். பூஜை நேரம் வந்தது. வரிசையில் நின்று சற்று காத்திருந்தோம். சன்னதி மூடியிருந்தது, உள்ளே நைவேத்யம் செய்து கொண்டிருந்தனர்.


சன்னதி வாசலில் அப்போது கேரள வாத்தியம் இடக்கா வை ஒருவர் வாசித்துக் கொண்டே நன்றாக பாடிக் கொண்டிருந்தார் (மலையாளத்தில்தான்). mike தேவைப் படாத நல்ல கணீரென்ற சாரீரம். எந்த மொழியாயிருந்தாலென்ன? பகவானைப் பற்றியதாயிற்றே! கேட்க இனிமையாகவே இருந்தது.


சிறிது நேரத்தில் மணிக்கதவம் தாள் திறந்து ஜகஜ்ஜோதியாய் ஆரத்தி ஒளியில் தன்வந்திரி பகவான் அற்புத தரிசனம். பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் என்று தோன்றியது. பின்னர் அவரைப் பிரிய மனமில்லாமல் பிரிந்து வரிசையில் நின்று வாழை இலைக் கீற்றில் சிறிது சந்தனம், பூவோடு பிரசாதம் பெற்றுக் கொண்டோம். கொடிமரத்தின் முன்னே விழுந்து வணங்கிவிட்டு மீண்டும் பிராகாரத்திற்கு வந்தோம்.


அங்கே ஒருவர் மதிய (இலவச) உணவு token அனைவருக்கும் வழங்கிக் கொண்டு வந்தார். ஒருவரிடம் ஒரு token மட்டுமே வழங்கப் படுகிறது. நம்முடன் வந்தவர்கள் யாராவது வேறு இடத்தில், சன்னதியில் இருந்தாலும் அவர்களுக்காக நம்மிடம் கொடுக்கப் படுவதில்லை. அவர்களே வந்துதான் பெற்றுக் கொள்ளவேண்டும். Descipline!👌🏻👌🏻🫡


அதை வாங்கிக் கொண்டு உணவு வழங்கும் இடத்திற்கு வந்து வரிசையில் நின்று சரியாக 12  மணிக்கு நம்மை சீட்டைப் பெற்றுக் கொண்டு அனுமதிக்கிறார்கள். மாடி ஏறி சாப்பாட்டு ஹாலுக்குள் நுழைந்தோம்.


நாமாகவே அங்கு அடுக்கி வைக்கப் பட்டிருக்கும் தட்டை எடுத்துக் கொண்டு நீட்டினால் (நம் ego, அந்தஸ்து அனைத்தையும் ஒதுக்கி விட்டு கடவுள் பிரசாதத்தைப் புசிக்கும் பாவத்தோடு) ஒரு நீள மேஜை பின்னால் நின்று கொண்டு 2, 3 பேர் சாதம், சாம்பார், ரசம், காய், மோர், உப்பு ஊறுகாய் போன்றவற்றை நம் தட்டில் வைக்கிறார்கள்.


அந்த ஹாலில் போடப் பட்டிருக்கும்  நீள மேஜைகள் பின்னால் சேரில் போய் நாம் அமரவேண்டும். 25-30 பேர் ஒரே சமயத்தில் அமரலாம். சாப்பிட்டுவிட்டு மேலும் எது வேண்டுமானாலும் போய் பெற்றுக் கொள்ளலாம். நம் இடத்தில் வந்து எதுவும் பரிமாறப் பட மாட்டாது. எளிமையான உணவாக இருந்தாலும் சூடாகவும் மிக ருசியாகவும் இருந்தது. பிரசாதமாயிற்றே! நாம் யாராக இருந்தாலும் சாப்பிட்டு விட்டு நாம்தான் தட்டை எடுத்துக்கொண்டு போய் கழுவி வைக்கவேண்டும். சோப்பு நீர், scrubber முதற்கொண்டு அங்கு hand wash இடத்தில்  வைக்கப் பட்டிருக்கின்றன. என்னே கச்சிதமான ஒழுங்குமுறை! 


இறங்கி கீழே வந்தால் பலர் வரிசையில் அமர்த்தப் பட்டு காத்திருக்கிறார்கள், சாப்பிட. ஒரு சிலர் அங்கே துண்டு விரித்து படுத்தும் காத்திருந்தனர்!


அந்த complex உள்ளே எங்கே பார்த்தாலும் பசுமை, மரம்,செடி கொடிகள். பாக்கு, மூங்கில் மரங்கள் உட்பட! Gods own (mini) country!


அந்த வளாகத்திலேயே ஆயுர்வேத ஆஸ்பத்திரி இருக்கிறது. Kottakkal இல் என்னென்ன சிகிச்சைமுறைகள் இருக்கின்றனவோ அவை அனைத்தும் இங்கும் உண்டு. தங்கி சிகிச்சை பெறலாம். outpatients ம் வருகிறார்கள். அருகிலேயே ஆயுர்வேத மருந்தகமும் இருக்கிறது. 


அதன் எதிரே ஷீரடி சாய்பாபா சன்னதி.அதற்கு வெளியே பிஸ்கெட் பாக்கெட்டுகள் (milk bikis) விற்கிறார்கள். பக்தர்கள் அதை வாங்கிக் கொண்டு பாபா சிலையின் முன்னால் சமர்பித்துவிட்டு பிரார்த்தனை செய்கிறார்கள். அதை ஏழைகளுக்கு விநியோகிப்பார்களாம். புதுமையாக இருந்தது. இனி samosa, bajji, briyani போன்றவையும் வைக்கப் படலாம். பாவம் பாபா. பொறுமையுடன் அருள் பொழிகிறார். அவர் கண்களில் ஒரு சோகம் இழையோடியது போல் எனக்குத் தோன்றியது..😒.


மொத்தத்தில் மிக ரம்மியமான அழகான சூழல்.கேரளா கோவில்களுக்கே உரித்தான சான்னித்யம், சுத்தம், சமரசம் செய்து கொள்ளாத strict discipline👌🏻👏🏻👏🏻👏🏻. நாம் கற்றுக்கொள்ள நிறைய இருக்கின்றன இவர்களிடம்.



கோவிலுக்கு முன் மறக்காமல் செல்ஃபி மற்றும் அவசரமாக சென்ற ஒருவரை நிறுத்தி அவர் கையில் மொபைலைக் கொடுத்து எங்களை குரூப் photo எடுக்கச் சொன்னோம். அவசரத்தில் எடுத்தாலும் photo நன்றாகவே வந்திருந்தது (அது இயற்கையின் கொடை என்று சொல்ல வேண்டிய அவசியமில்லை.. 😊)


இம்முறையும் திட்டமிட்டு, initiative எடுத்து அழகாக இந்த ஆலய தரிசனம் எங்களுக்கு செய்துவித்த Smt. ஜெயஶ்ரீக்கு நன்றிகளும் வாழ்த்துக்களும், ஆசிகளும்!🙏🏻💐🙌🏻


பின் மீண்டும் taxi book பண்ணிக் கொண்டு வீடு வந்து சேர்ந்தோம்.


தன்வந்திரி பகவானின் புன்சிரிப்புடன் கூடிய அழகிய அருள் சொரியும் முகம் மனம் முழுவதும்...🙏🏻🙏🏻🙏🏻


நட்புடன்


விஜி வெங்கடேஷ்


*******


இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


வெங்கட் நாகராஜ்

திருவரங்கம்

21 நவம்பர் 2025


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....