சனி, 22 நவம்பர், 2025

காலை நேரக் காற்றே - நடை நல்லது - வெங்கட் நாகராஜ்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


இதற்கு முன்னர் வெளியிட்ட கோவை தன்வந்திரி கோவில்  தரிசனம் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



*******


காலை நேர நடை அனுபவங்கள் - முகநூலில் எழுதிய சில இற்றைகள் இன்றைக்கு ஒரு தொகுப்பாக இங்கே - எனக்கான சேமிப்பாகவும் முகநூலில் என்னை தொடராத நண்பர்களின் வசதிக்காகவும்!


காலை நேரக் காற்றே - 11 நவம்பர் 2025:


காலை நேர நடை எப்போதும் ஸ்வாரஸ்யங்களைத் தரக் கூடியதாகவே இருக்கிறது..... இன்றைக்கும் அப்படியே.   வழியில் பார்க்கும் மனிதர்கள், அவர்கள் பேசும் பேச்சு செவியில் தானாக விழ, அதனைப் பற்றி இல்லாளிடம் சொன்னபோது, அவள் சொன்னது - "நான் சொல்ற எதுவும் உங்க காதுல விழாது...... ஆனா, ரோட்ல யார் பேசினாலும் கேட்கும்...." சரி சரி இதெல்லாம் எல்லா வீட்டிலும் நடப்பது தானே என்று எனக்கு நானே சொல்லிக் கொண்டு கண்களையும் காதுகளையும் தீட்டி வைத்துக் கொண்டு நடையைத் தொடர்ந்தேன் 😊. 


ஒரு பெரியவர் அவர் வீட்டில் இருக்கும் ஒரு 95 வயது முதியவர் குறித்து அலைபேசி வழி யாருக்கோ சொல்லிக்கொண்டு சென்றது..... "95 வயசுல தூக்கம் எப்படி வரும்? ஒரு மணி நேரம் தான் தூங்க முடிஞ்சதுன்னு காலைல அஞ்சு மணிக்கு, தூங்கிண்டு இருந்த என்ன எழுப்பி சொல்றா..... இதெல்லாம் பெரிய விஷயமா? பெரிய பெரிய, கேன்சர் மாதிரி வியாதியா இது?" அவர் அருகில் நடந்து சென்ற 500 மீட்டர் தூரத்தில் இப்படி நிறைய புலம்பல்கள்...... இதன் வழி அவருக்கு ஒரு அமைதி கிடைத்தால் நல்லது தானே என்று நான் நினைத்துக் கொண்டேன்..... 


ஒரு ரிக்ஷா ஓட்டுநர், நகைகள் அணிந்து சென்ற கூன் பாட்டியிடம் (அவருக்குத் தெரிந்தவர் போலும்), "காலம் கெட்டுக் கெடக்கு..... இப்படி நகையெல்லாம் போட்டு வெளியே வராத...... நீ போட்டு இருக்கறது கவரிங் (பாட்டி அப்படிச் சொன்னபிறகு) அப்படின்னு திருடனுக்குத் தெரியுமா என்ன...... நீ தான் பத்திரமா இருக்கணும்....." என்றார்..... நல்ல மனம் வாழ்க...... 


சில்லென்று வீசும் குளிர் காற்றில் குளித்து முடித்து வேலைக்குப் போகும் மூதாட்டி, சாலையோரத்தில், தன் வீட்டின் வெளியே போர்த்திக்கொண்டு படுத்திருக்கும் இளைஞர்.....  நடை பயிலும் சக மனிதர்கள், இல்லாளிடம் பேசும் பேச்சு என இனிதாக அமைந்தது இன்றைய காலை...... இன்றைக்கு எடுத்த சில நிழற்படங்கள் உங்கள் பார்வைக்கு இணைத்திருக்கிறேன்.... 







அதிகாலை சுப வேளை - 12 நவம்பர் 2025:


இன்றைக்கு நடையும் இனிதே முடிந்தது. நடைக்கு நடை..... பேசுவதற்கான நேரமும் கூட..... அலுவலகம், வீடு, பொது விஷயங்கள் என பலவற்றை பேசியபடி நடக்க, நடக்கும் தூரமும், அதில் இருக்கும் சிரமமும் தெரியாது என்பதும் ஒரு பிளஸ்...... காலை வேளையில் சுறுசுறுப்பாக எழுந்து அன்றைய பணிகளைத் துவக்கும் பெண்கள், விற்பனைக்குத் தேவையானவற்றை ஆட்டோவில் ஏற்றி புறப்படும் வியாபாரி, சாலையோரத்தில் தனது நாலு முழ காவி வேட்டியை போர்த்திக்கொண்டு படுத்திருந்த ஒரு இளைஞர், மேய்ச்சலுக்கு செல்லும் பசுக்கள் ...... ஒவ்வொன்றும் ஒவ்வொரு வித எண்ணங்களைத் தருவதோடு பேச்சுப் பொருளாகவும் அமைந்து விடுகிறது.


இன்றைக்கு நாய், குரங்கு, யானை, மாடு என வரிசையாய் விலங்குகள் பார்த்ததோடு சில இரண்டு கால் விலங்குகளையும் பார்க்கக் கிடைத்தது 🙂 செய்யும் செயல்கள் அப்படியானவை..... யானைகளைப் பார்த்தால் மனதுக்குள் ஒரு மகிழ்ச்சி தொற்றிக் கொள்கிறது எனக்கு..... எத்தனை பெரிய உருவம் அதற்கு...... எவ்வளவு வலிமை அதற்கு.....  அத்தனை வலிமை இருந்தும் ஏனோ ஒரு வித அமைதி அதனிடம்.....  (யானைக்கு மதம் பிடித்தால் வேறு கதை!) வலிமையானவனாக இருந்தாலும் அமைதியாக இரு என்று சொல்வது போல எனக்குத் தோன்றும். ஆனால் எப்படியெல்லாம் ஆடுகிறார்கள் இந்த மனிதர்கள்.......


கிழக்கு உத்திர வீதி பகுதியில் கன்னட மொழி பேசும் பெரியவர், ஆட்டோ ஓட்டுநர் இடம், அவர் வந்ததற்கான கட்டணம் தர, கன்னடதில் தமிழ் பேசினார்..... 😀 "Paytm இருக்கா? UPI?" எங்கெங்கும் UPI..... நல்லது தானே...... சில்லறை தொந்தரவு இல்லை! சுடச் சுட, நல்ல காபி எங்கே கிடைக்கும் என்று கேட்டுக் கொண்டிருந்தார் அவருடன் வந்த பெண்மணி.... அவரவருக்கு அவரவர் கவலை! 😃


இன்றைக்கு எடுத்த நிழற்படங்கள் உங்கள் பார்வைக்கு.....







காலை நேரப் பூங்குயில் - 15 நவம்பர் 2025:


இன்றைக்கு காலையிலேயே பேருந்துப் பயணம் - மகளுடன்....... 


பேருந்து முழுவதும் கல்லூரிக்குச் செல்லும் இளைஞிகள் மற்றும் இளைஞர்கள் கூட்டம்.  குதூகலமாக இருக்கிறார்கள்..    அவர்கள் மகிழ்ச்சி இப்படியே என்றென்றும் இருக்கட்டும். வாழ்க்கை முழுக்க எத்தனையோ இன்ப துன்பங்களை சந்திக்க நேரிடும் என்பதால் இப்பொழுதே வாழ்க்கையை முடிந்தவரை அனுபவிக்கட்டும்.


மகள் அவளது தேர்வுக்குச் சென்றுவிட தற்போது நான் கல்லூரி வளாகத்தில் அமர்ந்து அங்கே நடப்பவற்றை கவனித்துக் கொண்டிருக்கிறேன். எனக்கருகே ஒரு இளைஞன் தனது அலைபேசியில் கார்டூன் பார்த்து தனக்குத் தானே சிரித்துக் கொண்டிருக்க, நேர் எதிரே ஒரு யுவனும் யுவதியும் கடலை போட்டுக் கொண்டு இருக்கிறார்கள்... வந்து பக்கத்தில் அமரும்போது ஒரு சிறு பொட்டலம் கொண்டு கொடுக்கிறான் அந்த யுவன்..... யுவதி என்ன என்று கேட்க, "காலங்காத்தால சாப்பிட்டு இருக்க மாட்ட, அதான் சமோசா வாங்கிட்டு வந்தேன்" என்று சொல்லி சாப்பிடச் சொல்கிறான்.   எத்தனை பேர் இருந்தாலும் என்ன, என்று sweet nothings பேசிக்கொண்டு இருக்கிறார்கள்.... நல்லா இருந்தா சரி.....


*******


இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


வெங்கட் நாகராஜ்

திருவரங்கம்

22 நவம்பர் 2025


18 கருத்துகள்:

  1. திருவங்கத்தில் பார்த்த இடங்களை நினைவுபடுத்துகிறது புகைப்படங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. திருவரங்க நினைவுகளை இந்தப் பதிவில் வெளியிட்ட படங்கள் தந்ததில் மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
  2. கூன்பாட்டி நகைகளோடு சாலையில் செல்வதாகக் கற்பனை செய்தால் வேடிக்கையாக இருக்கிறது.  அதுவும் காலங்காலையில் பார்ப்பதால் பாட்டியை ஒரு கீரை விற்கும் பாட்டியாக  கூடையுடன் கீரை வாங்க மார்க்கெட் போவதுபோல கற்பனை செய்தால் நகைக்காட்சி புன்னகைக்க வைக்கிறது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது சிந்தனைகளை இப்பதிவு தூண்டியதில் மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  3. பேஸ்புக்குக்கு சரி, இன்று என்று சொல்லலாம்!  மேலே தலைப்பில் 11 நவம்பர் என்று சொல்லி இருந்தாலும் பதிவில் இன்றைக்கு எடுத்த புகைப்படங்கள் என்று சொல்லி சுடச்சுட இன்று எடுத்து இன்றே அப்லோடிட்டாரா என்று எண்ணி,  11 என்று தேதி என்று பார்க்கும்போது  புன்னகை வருகிறது.  

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படியே காப்பி பேஸ்ட் செய்வதால் வரும் குழப்பம். தவிர்க்க முயற்சிக்கிறேன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  4. 12 ம் தேதி எடுத்த ஒரு சாலையின் புகைப்படத்தைப் பார்த்துவிட்டு வல்லிம்மா, 'கீதா அக்கா வீடு நினைவுக்கு வருகிறது' என்று பேஸ்புக்கில் சொல்லி இருந்தது நினைவுக்கு வருகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம். முகநூலில் சொல்லியிருந்தார் வல்லிம்மா.. சமீபத்தில் கீதாம்மாவை அவர்களது இல்லத்தில் சந்தித்து வந்தோம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  5. காலை நேரம் நடைப்பயிற்சி நிஜமாகவே ரொம்பவே புத்துணர்ச்சிதரும். ஆனால் எனக்கு காலையில் போவது சிரமம். மாலைதான்.

    படங்கள் எல்லாம் நன்றாக இருக்கின்றன.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சில நாட்களாக காலை நேரத்தில் நடைப்பயிற்சி செய்ய முடிவதில்லை. மாலை அலுவலகத்திலிருந்து வந்த பின்னர் கொஞ்சம் சோம்பல் - அதனால் சில நாட்களாக நடைக்குத் தடை.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி கீதா ஜி.

      நீக்கு
  6. கூன் பாட்டி நகைகளோடா!!! கவரிங்க் என்றாலும் கூட. யோசித்துப் பார்க்கையில் கொஞ்சம் அட! என்று புன்சிரிக்க வைத்தது.

    கோவிலை ஒட்டிய சாலை சுத்தமாக இருக்கிறதே பார்க்கவே அழகாக இருக்கு

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நகைகளுடன் கூன் பாட்டி - அவருக்கும் ஆசை... ஆசைப்படுவதில் எந்தத் தவறும் இல்லையென்று அவருக்குத் தோன்றியிருக்கலாம்.

      சுத்தமாக இருக்கிறதே - இன்னமும் சுத்தமாக வைத்துக் கொள்ளலாம் - மக்கள் ஒத்துழைத்தால்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி கீதா ஜி.

      நீக்கு
  7. தூண்களோடு இருக்கும் அந்த மாடி வீடு செமை...பழைய ஸ்டைல் வீடு பார்க்கவே ரம்மியமாக இருக்கிறது. அழகு!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பழைய ஸ்டைல் வீடு - அழகான வீடு தான். அந்த வீடு குறித்த சில தகவல்கள் உண்டு. எழுத வேண்டும்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி கீதா ஜி.

      நீக்கு
  8. 12 ஆம் தேதி அந்த முதல் படத்தில் உள்ள சாலை உங்கள் குடியிருப்பு போகும்/இருக்கும் சாலை?

    பழையகாலத்து மாட மண்டபத்தோடு என்று சொல்வது போன்ற அந்த வீடு? அதுவும் பார்க்க அழகு.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. 12-ஆம் தேதியின் முதல் படம் - ஆமாம் எங்கள் குடியிருப்பு செல்லும் சாலை தான்.

      பழைய கால வீடு - பார்க்கவே அழகு தான்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி கீதா ஜி.

      நீக்கு
  9. வாசகம் அருமை.
    படங்கள் எல்லாம் அருமை. விற்பனைக்கு அழகாய் வைத்து இருக்கும் மலர்கள் கவர்ந்தன.
    கோபுர தரிசனம் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு, படங்கள், வாசகம் என அனைத்தும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....