வியாழன், 26 பிப்ரவரி, 2026

ஜீதே ரஹோ pபுத்தர் – வெங்கட் நாகராஜ்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


இதற்கு முன்னர் வெளியிட்ட மாசி வெள்ளி கருட சேவை பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



*******



படம்:  இணையத்திலிருந்து....  
(Just for the sake of representation)

இந்த வாரத்தில் ஒரே தினத்தில் சில அலைபேசி அழைப்புகள் - எதிர்பாரா அழைப்புகள் - அதற்குப் பிறகான நினைவலைகள் என நாள் முழுவதும் அந்த சிந்தனைகள் மனதில் ஓடிக்கொண்டிருந்தன.  மாலை வீடு திரும்பியதும் வீட்டிலும் அந்த நினைவுகளை பகிர்ந்து கொண்டேன்.  இதோ இங்கேயும் ஒரு பதிவாக.  முதலாம் அழைப்பு நான் தில்லி அலுவலகத்தில் சேர்ந்த முதல் நாளிலிருந்து அறிந்த ஒரு சர்தார்ஜி இடமிருந்து வந்த அழைப்பு.  நான் பணியில் சேர்ந்த போது எனக்கு பத்தொன்பது வயது.  அவருக்கு நாற்பது இருக்கலாம்.  உடன் பணியில் இருந்த அனைவருமே என்னை விட பெரியவர்கள் தான்.  அவர் ஓய்வு பெற்றே பதினைந்து வருடங்கள் ஆகிவிட்டது! எனில் அவருக்கு தற்போதைய வயது 75! அவ்வப்போது அழைத்து பழைய கதைகளை பேசுவது வழக்கம்.  நான் பேசவில்லை எனிலும் அவர் அழைத்துவிடுவார்.  இந்த முறையும் அவராகவே அழைத்தார்.  


எங்கே பணி புரிகிறாய்? பதவி உயர்வெல்லாம் கிடைத்ததா? வீட்டில் எல்லாம் சுகம் தானே என அன்புடன் விசாரணைகள்.  நானும் பதிலுக்கு உங்கள் உடல் நிலை எப்படி இருக்கிறது? வீட்டினர் சுகம் தானே? குருத்வாரா பங்க்ளா சாஹேப் சென்று வருகிறீர்களா?  தனியாகச் சென்றால் கவனமாக இருங்கள், மகன் மகள் அனைவரும் நலமா என்று விசாரித்தபிறகு மற்ற விஷயங்களை பேசத் தொடங்கினோம்.  பணிபுரிந்த காலத்தில் உடன் பணியிலிருந்த மற்ற அலுவலர்கள் எல்லாம் ஒவ்வொருவராய் மரணிப்பது பற்றி பேசும்போது அவர் குரலில் ஒரு நடுக்கம்.  மரணம் என்பது தவிர்க்க முடியாதது தான் என்றாலும் ஒவ்வொரு மனிதருக்கும் தனது மரணம் பற்றிய சிந்தனை வந்தாலே துவண்டு விடுகிறார்கள் என்பதை அவரது குரலிலிருந்து உணர முடிந்தது. சில வருடங்கள் முன்னர் அவரது துணைவியார் மரணித்ததால் அவரைத் தனிமை வாட்டுகிறது என்பதையும் சொல்லிக் கொண்டிருந்தார்.  


மிகவும் நல்ல மனிதர்.  ஆரம்பகால கட்டங்களில் இருந்தே தனியாக இருந்த எனக்கு எந்த உதவி செய்யவும் தயாராக இருந்தவர்.  அவ்வப்போது வீட்டிலிருந்து உணவு எடுத்து வருவதிலிருந்து, பண உதவி தேவை எனில் கேள் என்றும், வரும் சம்பாத்தியத்தை நல்ல முறையில் செலவழி, முடிந்த அளவு சேமிப்பதை வழக்கமாக வைத்துக்கொள் என்றெல்லாம் சொல்லித் தந்தவர்களில் அவரும் ஒருவர்.  இந்த முறை பேசும்போதும் எங்கே இருக்கிறாய்? என்று கேட்க, தமிழகத்தில் பணிபுரிவதைச் சொன்ன போது, “pபுத்தர், சந்தோஷமாக இரு…  வாஹே குரு உங்களை மகிழ்ச்சியாக வைத்திருக்க உதவட்டும்” என்று வாழ்த்தியதோடு, “இத்தனை வருடங்கள், தில்லி - திருச்சி பயணங்களிலேயே நிறைய செலவு ஆகியிருக்கும், முடிந்த வரை சேமிப்பை அதிகப்படுத்து” என்றும் சொன்னார்.  இத்தனை வருடங்களில் உடன் பணிபுரிந்த பலரைப் பற்றியும் சொல்லி, தொடர்பில் இருக்கிறார்களா என்றும் கேட்டுக் கொண்டிருந்தார். 


உடன் பணிபுரிந்த ஒரு பெங்காலி - சென் (dh)தா(dh)தா குறித்து பேசும்போது அவர் குரலில் அப்படி ஒரு நடுக்கம்.  அவர் தொடர்பில் இல்லை என்றும் அவருக்கு என்ன ஆனதோ என்றும் உண்மையான வருத்தத்துடன் பேசினார்.  ஏனெனில் அந்த மனிதரின் மகளுக்கு நடந்த கொடூரம் இன்னமும் நினைத்தால் வருத்தத்தை தரக்கூடியது.  இரவு பணியிலிருந்து வீடு திரும்பிய போது வீட்டின் மிக அருகே சில மனிதப் போர்வையில் இருக்கும் மிருகங்கள் அவரது மகளை தடுத்து கையில் இருக்கும் பணத்தினை பிடுங்கிக் கொண்டதுடன் சில ATMகளுக்கு அழைத்துச் சென்று மேலும் பணம் எடுத்ததுடன், அப்பெண்ணைச் சிதைத்துக் கொன்றும் போட்டார்கள்.  காவல் துறைக்கு பெரிதாக இந்த வழக்கில் ஈடுபாடு இல்லாமல் போனது.  சென் (dh)தா(dh)தா பல இடங்களில் அலைந்து திரிந்து CCTV காட்சிகளை வாங்கிக் கொடுத்து குற்றவாளிகளை பிடிக்க வைத்து, அவர்களுக்கு தண்டனையும் வாங்கிக் கொடுத்தார்.  


மகளை இழந்த சோகத்தில் அவரது மனைவி Depression-க்கு உள்ளாக சென் (dh)தா(dh)தா அவரது குணத்தில் பெரும் மாற்றம் உண்டாகி சிடுசிடுவென மாறினார்.  அந்தக் காலகட்டங்களில் சென் (dh)தா(dh)தாவிற்கு ஆறுதலாக இருந்தது சர்தார்ஜி மட்டுமே.  சென் (dh)தா(dh)தா அவரிடம் மட்டுமே மனம் விட்டுப் பேச முடிந்தது. இப்படியான ஒரு துயரத்தில் இருக்கும் மனிதரையும் பலர் விட்டு வைக்கவில்லை. மகள் இரவில் ஏன் வேலைக்குப் போக வேண்டும் என ஏதேதோ சொல்லி மேலும் துயரத்தில் ஆழ்த்தினார்கள். ஒரு மனிதர் சொல்லொணா துயரத்தில் இருக்கும்போது அவரிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்கிற அறிவு இல்லாதவர்களாகவே பலரும் இருக்கிறார்கள்.  சமீபத்தில் “பேசும் ஒவ்வொரு வார்த்தையும் அமிலமாக இருக்கும்” என்று ஒரு பெண்மணி சொன்னதைக் கேட்டேன்.  அப்படித்தான் (dh)தா(dh)தாவிடம் சிலர் பேசினார்கள்.  அந்த மனிதரின் நிலையில் அவர்கள் இருந்தால் எப்படி நடந்து கொள்வார்கள் என்று சிந்திக்காத ஜடங்கள். 


“(dh)தா(dh)தாவிடம் தொடர்பே இல்லை, தில்லியை விட்டு விலகி சொந்த ஊருக்கே சென்று விட்டாரா எனத் தெரியவில்லை. எனது அலைபேசி கெட்டுப் போனதால் அவரது தொடர்பு எண்ணும் என்னிடம் இல்லை, உனது எண் கூட கம்லாஜியிடமிருந்து தான் வாங்கினேன்.  (dh)தா(dh)தாவின் தொடர்பு எண் உன்னிடம் இருக்கிறதா?” என்று விசாரித்தார்.  என்னிடமும் இல்லை என்று சொன்னதும் அவருக்கு இன்னமும் வருத்தம்.    மகளைக் கொலை செய்தவர்களுக்கு தண்டனை வாங்கிக் கொடுத்ததால் அவர்களிடமிருந்து இவருக்கும் தொல்லை வரலாம் என்பதால் சொந்த ஊருக்கேச் சென்றிருக்கலாம் என்று சொல்லிக் கொண்டார்.  தொடர்பு எண் கிடைத்தால் நிச்சயம் தா என்றும் சொல்லி, வேறு நண்பர்களின் தொடர்பு எண் கிடைத்தாலும் தரச் சொன்னார். 


அரை மணிநேரத்திற்கும் மேலாக அவரிடம் பேசிக் கொண்டிருந்த பிறகு, இன்னும் எத்தனை காலம் இருக்கப் போகிறேனோ, இருக்கும் வரை தொடர்பில் இருப்போம் என்று சொன்னபடி மீண்டும் “ஜீத்தே ரஹோ pபுத்தர்” என்ற வாழ்த்துடன் இணைப்பைத் துண்டித்தார்.  சில மனிதர்கள் எங்கிருந்தாலும், எப்படியிருந்தாலும் இப்படித்தான் - அடுத்தவர்கள் நலனில் அக்கறை கொண்டவர்களாகவே இருக்கிறார்கள்.  அவர்கள் இயல்பு நிலையிலிருந்து மாறுவதே இல்லை.  அந்த அழைப்பு தந்த தாக்கம் நீங்குவதற்கு முன்னர் இன்னும் ஒரு அழைப்பு - அந்த அழைப்பு குறித்து வேறு ஒரு சமயத்தில் பார்க்கலாம்.  இன்னுமொரு விஷயம்….  இந்த சர்தார்ஜி குறித்து முன்னரும் ஒரு அலுவலக அனுபவம் பதிவில் எழுதியிருக்கிறேன்…  அந்தப் பதிவுக்கான சுட்டி கீழே….


சந்தித்ததும் சிந்தித்ததும்: அலுவலக அனுபவங்கள் – பரம்ஜீத் – தொட்டால் உடையும் காகிதங்கள்…



*******


இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


வெங்கட் நாகராஜ்

திருவரங்கம்

26 ஃபிப்ரவரி 2026


8 கருத்துகள்:

  1. சிங் அவர்களின் ஒவ்வொரு வார்த்தையும் அட்சர லட்சம் அன்பு தோய்ந்தவை....நெகிழ்ச்சியாக இருக்கின்றது.

    கீதா

    பதிலளிநீக்கு
  2. பெங்காலி - மகளுக்கு நடந்தது கொடூரம்....நிஜமாகவே நம்மை கடைசி வரை படுத்தி எடுக்கும் நினைவு.....போலீஸ் ஆர்வம் காட்டாதது கொடுமை...ஏன் இப்படிய்? பாவம் அவர் எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பார் தண்டனை வாங்கிக் கொடுக்க...

    கீதா

    பதிலளிநீக்கு
  3. // “(dh)தா(dh)தாவிடம் //

    ஒவ்வொரு முறையும் இப்படிப் போட்டு படுத்துவதற்கு dhadha என்றே எழுதி விடலாம்!

    சர்தார்ஜி நண்பரின் அக்கறையும், நண்பரை நாடும் குணமும் நெகிழ வைத்தன.  மரணபயம் சிலரால் தவிர்க்க முடிவதில்லை.  சர்தார்ஜி கதையை விட அந்த dhadha கதை மனதை இன்னும் பாதித்து விட்டது.  உண்மையில் சர்தார்ஜி நண்பர் அவரைப்பற்றி விசாரிக்கவே உங்களுக்கு பேசி இருப்பார் என்றும் தோன்றுகிறது.

    பதிலளிநீக்கு
  4. வணக்கம் சகோதரரே

    இன்றைய வாசகம் அருமை. ஆனால், இயலாததோ எனத் தோன்றுகிறது. தங்கள் நண்பரின் கைப்பேசி அழைப்பு விஷயங்கள் நெகிழ்ச்சியை தருகிறது. அவருடன் பணிபுரிந்த பெங்காலி நண்பரின் சோகம் மனதை மிகவும் வருத்தியது. எவ்வளவு பெரிய சோகம்...! அவரின் சோகத்தைப் படிக்கும் போது யாராலும் கடந்து செல்ல முடியாதோ என எண்ண வைக்கிறது...! அவர் எப்படி கடந்தாரோ ..! பாவம். அவர் காலம் உள்ளவரை இது அவருக்கு ஒரு சுமைதான்.ஒவ்வொரு மனிதர்களின் வாழ்விலும் ஏதேதோ சோதனைகள் இப்படி உண்டாகி விடுகின்றன.

    நீங்கள் சுட்டி தந்த பதிவிலும் சென்று சர்தார்ஜி அவர்களைப்பற்றி படித்து வந்தேன். அந்தப்பதிவில் என் கருத்துரையையும் கண்டேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  5. பரம்ஜீத் சிங் அவர்கள் நினைவுக்கு வந்துவிட்டார். அங்கும் சென்று பார்த்துக் கொண்டேன். கூடவே காத்தாடி ராமமூர்த்தி, மாலா....எல்லாம்

    கீதா

    பதிலளிநீக்கு
  6. சர்தார்ஜி அவர் சொல்வது போல், பெங்காலி அவர் ஊருக்குப் போயிருக்கலாம் தண்டனை வாங்கிக் கொடுத்ததால் பிரச்சனைகள் வரும் என்று.

    கீதா

    பதிலளிநீக்கு
  7. வாசகம் அருமை.

    //சில மனிதர்கள் எங்கிருந்தாலும், எப்படியிருந்தாலும் இப்படித்தான் - அடுத்தவர்கள் நலனில் அக்கறை கொண்டவர்களாகவே இருக்கிறார்கள். அவர்கள் இயல்பு நிலையிலிருந்து மாறுவதே இல்லை//

    நல்ல மனிதருடன் போனில் உரையாடியது மகிழ்ச்சியாக இருந்து இருக்கும்.
    அக்கறையுடன் அன்பாய் நாலு வார்த்தை பேசினால் போதும் .
    பெங்காலி நண்பரின் மகளுக்கு ஏற்பட்ட கொடுமை படிக்கவே நெஞ்சம் பதறுகிறது
    பெற்றவர்கள் துன்பம் நினைத்து பார்க்கவே கஷ்டமாக இருக்கிரது அவர்களை வார்த்தைகளால் படுத்து மனிதர்கலை என்ன வென்று சொல்வது?

    பதிலளிநீக்கு
  8. பரம்ஜீத்ஜியை ஒரு ஐந்தாறு வருடங்களுக்கு முன்பு JNU வின் முன்புள்ள பேருந்து நிலையத்தில் வைத்து பார்த்தேன். என்னை நினைவில்லை. வெங்கட்டின் நண்பர் என்றதும் நினைவுக்கு கொண்டு வந்து விட்டார். காத்தாடி ராமமூர்த்தி பற்றியெல்லாம் பேசிக் கொண்டு இருந்தோம். உண்மையாகவே குரு காட்டிய வழியில் வாழ்பவர்கள் சீக்கியர்கள் என்பதற்கு பரம்ஜீத்ஜி ஒரு எடுத்துக்காட்டு.

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....