புதன், 25 பிப்ரவரி, 2026

திருவரங்கம் - மாசி வெள்ளி கருட சேவை - இருவரின் பார்வையில்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


இதற்கு முன்னர் வெளியிட்ட பணம் என்னடா பணம் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



*******


மாசி கருடன் - ஆதி வெங்கட்:


திருவரங்கத்தில் இப்போது மாசி தெப்போற்சவம் எனப்படும் திருப்பள்ளியோட நிகழ்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது! அதில் நான்காம் நாளான இன்று வெள்ளி கருட வாகனத்தில் பெருமாள் புறப்பாடாகி வீதியுலா வருவார்! அதிலும் மாசி கருட சேவை என்பது மிகவும் சிறப்பு வாய்ந்தது! ஒவ்வொரு உற்சவத்திலும் பெருமாள் புறப்பாடாகி வரும் இடங்கள் மாறுபடும்! அந்தக் காலம் முதல் இன்றைய நாள் வரை இன்ன இன்ன உற்சவத்தில் இந்த மண்டபத்திலிருந்து தான் புறப்பாடாக வேண்டும் என்ற நியதியை நெறி தவறாமல் பின்பற்றப்பட்டு வருகிறது! நேற்றைய பொழுது வேறு ஒரு இடத்தில் என்றால் இன்றைய பொழுது ‘தாத்தாச்சாரியார் தோப்பில் உள்ள ஆஸ்தான மண்டபத்திலிருந்து’...! இந்த தாத்தாச்சாரியார் தோப்பு என்பது மிகவும் பிரபலமானது! இந்த தோப்பின் மாம்பழங்கள் மிகவும் பிரசித்தி பெற்றது! காவேரி பாலத்தின் அருகே வரிசையாக மாம்பழங்கள் விற்பனை செய்யும் கடைகள் காணப்படும்! அவையெல்லாம் இந்த தோப்பின் மாம்பழங்கள் தான்! அதனாலேயே இந்த சாலைக்கு ‘மாம்பழச்சாலை’ என்று பெயர்! இந்த தாத்தாச்சாரியார் தோப்பின் முற்பகுதி ‘மூலத்தோப்பு’ என்று சொல்லப்படும் சாலையில்! இந்த நீண்ட நெடிய தோப்பின் பின்பகுதி ‘மேலூர்’ சாலையில்! நாங்கள் இந்த தோப்பின் பிற்பகுதியில் தான் வசிக்கிறோம்! வருடத்தில் ஒருமுறை கருட சேவையைக் காண வரும் மக்களுக்காக பின்பகுதியில் உள்ள வழியையும் திறந்து விடுகிறார்கள்! தோப்பில் உள்ள ஆஸ்தான மண்டபத்தை அடைய நாம் இதில் சற்று தூரம் நடக்க வேண்டும்! உள்ளே வாகனங்களை எடுத்துச் செல்ல அனுமதியில்லை என்று கேள்விப்பட்டதால், என்னவரும், நானும் பேசிக் கொண்டே நடக்கத் துவங்கினோம்! சில நாட்கள் முன்பு தான் ‘இந்த மாதிரி தோப்புக்குள்ள எல்லாம் நம்மள விட்டா நல்லா இருக்கும் இல்ல??’ என்று இருசக்கர வாகனத்தில் வரும் போது என்னவரிடம் சொல்லிக் கொண்டு வந்தது நினைவுக்கு வந்தது! தோப்பின் உள்ள மா, பலா, வாழை, சப்போட்டா, பப்பாளி என்று இருபுறமும் பசுமையின் இருப்பிடமாக கொள்ளை அழகாக இருந்தது! மாமரங்களில் பூக்கள் பூத்து குலுங்கிக் கொண்டிருக்கின்றன என்றால் பலாமரங்களில் கொத்து கொத்தாக காய்களும் பிஞ்சுகளும்! இயற்கையின் ஆச்சரியங்களை பார்த்து ரசித்துக் கொண்டும் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டும் சென்றோம்! நாங்கள் இருவரும் நடந்து சென்ற பாதை சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் இருக்கும்! மாலை ஆறுமணியளவில் குறிப்பிட்ட ஆஸ்தான மண்டபத்திலிருந்து ரங்கன் கருட வாகனத்தில் புறப்பாடாகி வரவே அங்கு நின்று நிதானமாக தரிசிக்க முடிந்தது! ‘நல்லதே நடக்கணும்! எல்லோரையும் நல்லபடியாக வைத்திருப்பா! எங்கும் அன்பும் புரிதலும் ஓங்கி இருக்கணும்!’ என்று நின்ற இடத்தில் நின்றே நன்கு பிரார்த்தித்துக் கொண்டே தரிசித்தேன்! வழக்கம் போல் நம் மக்களிடையே தள்ளுமுள்ளு இருந்தது தான்! என்னவரும் என்னிடத்தில், ‘நீ இங்கேயே இரும்மா! எங்கேயும் போயிடாத! நமக்கு அவசரமே இல்ல! பொறுமையா வந்த வழியே நடந்து போவோம்! தள்ளிடப் போறாங்க! அதனால பார்த்து மட்டும் நில்லு!’ என்று சொல்லியிருந்தபடியால் அதே இடத்திலேயே நின்று கொண்டேன்! அவரும் என்னருகிலேயே நின்று புகைப்படங்களும், காணொளிகளும் எடுத்துக் கொண்டிருந்தார்! கருட சேவையை கண்குளிர தரிசித்து விட்டு வந்தவழியே மீண்டும் நடக்கத் துவங்கினோம்! வாயிற்காவலர், வாகனத்தில் செல்ல அனுமதி இல்லை என்று எங்களுக்கு மட்டும் தான் சொல்லியிருப்பார் போல…:) ஏன் என்றால் நாங்கள் செல்லும் பாதையில் அவ்வளவு வாகனங்கள் எங்களைக் கடந்து சென்றன..🙂 எல்லாம் நன்மைக்கே! என்று தான் நான் எடுத்துக் கொண்டேன்! வாகனத்தில் சென்றிருந்தால் இத்தனை அழகையும் ரசித்திருக்க முடியாது! புகைப்படங்களும் எடுக்க முடிந்திருக்காது! இன்றைய நாளில் மாலைநேர நடைப்பயிற்சியும் செய்ய முடிந்தது! தோப்பின் உள்ள நாம போக முடிஞ்சா நல்லா இருக்கும் இல்ல! என்ற என் எண்ணமும் ஈடேறியது! இயற்கையான சூழலில் இறைவனின் தரிசனமும் கிடைத்தது! இந்த நிகழ்வு எங்கள் இருவருக்குமே மிகவும் பிடித்த தருணமாகவும் அமைந்தது! ரங்கா! ரங்கா!


*******


திருவரங்கம் மாசி வெள்ளி கருட சேவை - வெங்கட் நாகராஜ் :






வீட்டின் எதிரே தாத்தாச்சாரியார் தோப்பு - அதனுள்ளே ஒரு அழகிய மண்டபம் உண்டு - ஒவ்வொரு வருடமும் மாசி மாத திருப்பள்ளி ஓடம் எனும் தெப்போற்சவம் சமயத்தில் நம்பெருமாள் இந்த மண்டபத்திற்கு எழுந்தருள்வது வழக்கம்.  தோப்பின் இருபுறமும் உள்ள வாசல்கள் திறந்து வைக்க மக்கள் தோப்பின் உள்ளே சென்று நம்பெருமாளை தரிசித்து வரலாம்.  இது வரை எனக்கு இப்படி தோப்பின் உள்ளே சென்று நம்பெருமாளை தரிசிக்கும் வாய்ப்பு அமையவில்லை. இந்த முறை அப்படி ஒரு வாய்ப்பு வர நானும் இல்லத்தரசியும் சென்ற ஞாயிறு (22-02-2026) மாலை நேர நடையாக தோப்பின் உள்ளே சென்று நம்பெருமாளை தரிசித்து வந்தோம்.  மிகப் பெரிய தோப்பு இது. உள்ளே மா, பலா, வாழை, தென்னை என நிறைய மரங்கள் உண்டு.  அதைத் தவிர பப்பாளி, சப்போட்டா போன்ற சில பழவகைகளுக்கான மரங்களும், நிறைய பூச்செடிகளும் இருக்கின்றன.  அழகான சூழலில் மாலை நேரம் சென்று வந்தது மனதுக்கு மிகவும் உகந்ததாக இருந்தது.  



முதலில் தோப்பின் காவல்காரரிடம் கேட்டபோது தோப்பு வழி வாகனத்தில் செல்ல முடியாது என்றார்.  சரி நல்லதாயிற்று என நடந்தே உள்ளே சென்றோம்.  அதன் பிறகு பார்த்தால் பலரும் இரு சக்கர வாகனம், நான்கு சக்கர வாகனங்களில் உள்ளே வருகிறார்கள் - அந்த தோப்பின் அமைதியைக் குலைத்தபடி! எங்களைப் பொறுத்தவரை நடந்ததால் நல்லதாகவே அமைந்தது - நிறைய படங்கள் எடுக்க முடிந்ததோடு, இயற்கையின் அழகை ரசிக்கவும் முடிந்தது. “எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது” என்கிற மனப்பக்குவம் வந்துவிட்டால் எல்லாம் சுகமே! கடந்த சில வருடங்களாகவே இந்த மனப்போக்கு தான் இருக்கிறது எனக்கு - ஆனாலும் சில சமயங்களில் மனக்குரங்கு அங்கேயும் இங்கேயும் தாவி, ஏன், எதற்கு என்கிற சிந்தனைகளைச் செய்ய ஆரம்பித்து விடுகிறது - எதையோ பற்றி பேச ஆரம்பித்து எங்கேயோ செல்கிறேன்! 















மக்கள் சாரி சாரியாக தோப்பின் உள்ளே உள்ள மண்டபத்தினை நோக்கி நடந்து கொண்டிருந்தார்கள்.  நாங்களும் நடந்தோம்.  காலையில் ஆலயத்திலிருந்து புறப்பட்ட நம்பெருமாள் தோப்பில் தங்கி மாலை நேரம் தான் அங்கேயிருந்து புறப்படுவார் என்பதால் பகல் நேரத்தில் சென்றால் தீர்த்தம், சடாரி வாங்கிக் கொள்ளலாம்.  ஆனாலும் மண்டபத்தில் எப்போதுமே கூட்டம் இருக்கும் - தூரத்திலிருந்து பார்ப்பதில் இருக்கும் ஆனந்தம், கிட்டே சென்று தள்ளுமுள்ளுகளில் சிக்கி, பார்க்கக் கூட முடியாமல் வெளியே வருவதில் இருக்காது.  அதனால் எப்போதுமே சற்று தள்ளியே இருந்து பார்ப்பதே வழக்கம்.  அதனால் இந்த முறையும் ஒரு தென்னை மரத்தின் அருகே நின்று கொண்டு காத்திருந்தோம்.  மக்கள் பலரும் எப்படியாவது முண்டியடித்து முன்னே சென்று தாம் மட்டுமே நம்பெருமாளை பார்த்துவிட வேண்டும் என்கிற நோக்கத்துடன் மற்றவர்களை இடித்துத் தள்ளியபடி சென்று கொண்டிருந்தார்கள். 


ஒரு ஓரமாக நின்று கொண்டாலே ஆற அமர நம்பெருமாளை தரிசிக்க முடியும்.  எத்தனை பார்த்தாலும், நம்பெருமாளின் அழகு கற்பனைக்கு எட்டாத, தீராத தாகம் தான்.  ஆனாலும் ஒரு வித திருப்தி நிச்சயம் நமக்கு வேண்டும்.  நம்மைப் போலவே காத்திருக்கும் பல பக்தர்களும் பார்க்க வேண்டுமே என்கிற நல்லெண்ணமும் அனைத்து பக்தர்களிடமும் வேண்டும் - ஆனால் இங்கேயும் தனது பணம், செல்வாக்கு போன்றவற்றை காண்பித்துக் கொள்பவர்கள் தான் அதிகமாக இருக்கிறார்கள். இது இயற்கை! மனித இயல்பு என்று விட்டுவிலகி ஒரு ஓரமாக நின்று நிதானமாக தரிசனம் செய்து திரும்புவதே எங்கள் பாணியாக இருக்கிறது. இந்த முறையும் அப்படியே.  


சில நிமிடங்கள் காத்திருந்த பிறகு சரியாக ஆறு மணிக்கு வேட்டுச் சப்தம் கேட்க, நம்பெருமாள் புறப்பாடு தொடங்கிற்று.  ஸ்ரீபாதம் தாங்கிகள் தங்களது தோள்களில் வெள்ளி கருட வாகனத்தில் நம்பெருமாளை தாங்கிய வண்ணம் மண்டபத்திலிருந்து கீழே இறங்க, சற்றே திரும்பியதும் நல்ல தரிசனம் கிடைத்தது.  நாங்கள் நின்றிருந்த இடம் சரியான இடமாக இருந்ததால் இரண்டு மூன்று நிமிடங்கள் நல்ல தரிசனம் கண்டதுடன், சில படங்களும், காணொளியும் எடுக்க முடிந்தது.  எங்களுக்குக் கிடைத்த தரிசனம் உங்களுக்கும் கிடைக்க வேண்டுமே என்கிற நோக்கத்தில் எடுத்த படங்களும் காணொளியும் இந்தப் பதிவில் சேர்த்திருக்கிறேன் - தோப்பின் உள்ளே எடுத்த மற்ற படங்களுடன் சேர்த்து!  நீங்களும் தரிசனம் கண்டதோடு, தோப்பின் இயற்கைச் சூழலையும் ரசித்திருப்பீர்கள் என்ற நம்பிக்கையுடன் பதிவினை மேலே நகர்த்துகிறேன்.  


தோப்பிலுள்ள மண்டபத்தில் புறப்பட்டு மூலைத்தோப்பு, திருவடித் தெரு எனத் தொடர்ந்து புறப்பாடு கண்டு ரங்கா ரங்கா கோபுரம் வழியாக நம்பெருமாள் ஆலயத்திற்குத் திரும்புவது வழக்கம்.  பக்தர்கள் பெருமாளுடன் மண்டபத்திலிருந்து அவரைத் தொடர்ந்து ஆலயம் செல்வதும் உண்டு.  ஆனால் பலரும் அப்படிச் செல்வதில்லை.  அங்கிருந்தே வீடு திரும்பிவிடுவார்கள். நாங்கள் சற்று கூட்டம் குறையட்டும் என பொறுமை காத்து, வந்த வழியாகவே இயற்கையினை ரசித்தபடி வீடு திரும்பினோம்.  பெருமாளைப் பார்க்கும்போது தான் பொறுமை இல்லை என்றால் வீடு திரும்பும் போதும், தோப்பின் உள்ளே இருக்கும் குறுகிய பாதையில் நடப்பவர்களைக் கடந்து சென்ற வாகனங்களில் இருப்பவர்கள் தொடர்ந்து ஒலி எழுப்பிக் கொண்டிருந்தார்கள்.  


தோப்பின் உள்ளே இருந்த பறவைகளும், மயில்களும் கூட “யாரடா இது எங்கள் அமைதியான சூழலைக் கெடுப்பது” என்று நினைத்திருக்கக் கூடும்.  பொதுவாகவே இங்கே எவருக்குமே பொறுமை என்பதே இல்லை என்பது நிதர்சனம். இதில் வெளியே வரும்போது வண்டியில் செல்லக்கூடாது என்று என்னிடம் சொன்ன அதே காவல்காரர் - “வண்டியெல்லாம் வருதுல்ல, கொஞ்சம் கூட ஒதுங்கமாட்டேன்னு வரீங்களே?” என்றார்!  என்ன சொல்ல?  நீங்கள் வண்டியை அனுமதிக்க மாட்டேன் என்று சொல்லிவிட்டு இத்தனை வண்டிகளை அனுப்பி இருக்கிறீர்களே என்று கேட்டால், அவர்கள் எல்லாம் தோப்பின் உரிமையாளர்கள் என்று கூசாமல் பொய் சொல்கிறார்! :) இவர்களிடம் பேசி ஒரு பயனும் இருக்கப் போவதில்லை! நம்பெருமாளை தரிசித்ததில், தோப்பின் உள்ளே இருக்கும் இயற்கைச் சூழலை ரசித்ததில் கிடைத்த ஆனந்தத்தினை இவரிடம் பேசி ஏன் கெடுத்துக் கொள்ள வேண்டும் என்று அங்கிருந்து நகர்ந்தேன்.  எது எப்படியோ, மாலை நேரத்தில் ஒரு சிறப்பான நடையும், நம்பெருமாளின் வெள்ளி கருட தரிசனமும் கிடைத்ததில் மகிழ்ச்சி.  


*******


இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


வெங்கட் நாகராஜ்

திருவரங்கம்

25 ஃபிப்ரவரி 2026




12 கருத்துகள்:

  1. தாத்தாச்சாரியார் தோப்பு பற்றி அறிந்ததுண்டு. மாம்பழம் தகவல்களும்.

    உங்க குடியிருப்பின் எதிரில் இருக்கு இல்லையா? தோப்பு. வந்த போது பார்த்திருக்கிறேன். அப்ப ஆதியும் சொன்னாங்க. ஒரே ஒரு முறைதானே வந்திருக்கிறேன்.

    கீதா

    பதிலளிநீக்கு
  2. தாத்தாச்சாரியார் தோப்பு பற்றி அறிந்ததுண்டு. மாம்பழம் தகவல்களும்.

    உங்க குடியிருப்பின் எதிரில் இருக்கு இல்லையா? தோப்பு. வந்த போது பார்த்திருக்கிறேன். அப்ப ஆதியும் சொன்னாங்க. ஒரே ஒரு முறைதானே வந்திருக்கிறேன்.

    கீதா

    பதிலளிநீக்கு
  3. இப்ப பலா சீசன். மாம்பூ சீசன். மாங்காய்கள் அடுத்த மாதம் வரத் தொடங்கிவிடும் இப்ப சில மாங்காய்கள் கிடைக்கின்றன என்றாலும்....சீசன் மார்ச் ஏப்ரல் முதல் ஜூலை வரை.ந்அக்கும்
    தோப்புக்குள் தோட்டத்திற்குள் நடப்பது என்பது மனதிற்கு உற்சாகம் அளிக்கும் ஒன்று

    கீதா

    பதிலளிநீக்கு
  4. நம்ம ஊரில் சட்ட, விதிமுறைகள் அவமதிப்பு என்பதற்கு விடிவுகாலமே இல்லை. அரசு விதிமுறைகளை மிகவும் வலிமையாக்கும் வரை.

    நாம் அதற்கு மதிப்பு கொடுத்து பின்பற்றுவோம். நீங்க பின்பற்றியது மகிழ்வான விஷ்யாம். அதுதான் நாம் அடுத்ததலைமுறைக்குச் சொல்லும் நல்ல விஷயம்.

    இப்படிப் பலரும் பின் பற்றாததனால்தான் வழி வழியாக முறைகேடுகள் நடந்து கொண்டிருக்கின்றன.

    கீதா

    பதிலளிநீக்கு
  5. படங்களும் காணொளியும் சிறப்பு வெங்கட்ஜி.

    கீதா

    பதிலளிநீக்கு
  6. படங்களும் காணொளியும் சிறப்பு வெங்கட்ஜி.

    கீதா

    பதிலளிநீக்கு
  7. ஆனால் இங்கேயும் தனது பணம், செல்வாக்கு போன்றவற்றை காண்பித்துக் கொள்பவர்கள் தான் அதிகமாக இருக்கிறார்கள். இது இயற்கை! மனித இயல்பு என்று விட்டுவிலகி ஒரு ஓரமாக நின்று நிதானமாக தரிசனம் செய்து திரும்புவதே எங்கள் பாணியாக இருக்கிறது. இந்த முறையும் அப்படியே. //

    இதுதான் சிறந்தது ஜி! டிட்டோ!

    பதிலளிநீக்கு
  8. ஆனால் இங்கேயும் தனது பணம், செல்வாக்கு போன்றவற்றை காண்பித்துக் கொள்பவர்கள் தான் அதிகமாக இருக்கிறார்கள். இது இயற்கை! மனித இயல்பு என்று விட்டுவிலகி ஒரு ஓரமாக நின்று நிதானமாக தரிசனம் செய்து திரும்புவதே எங்கள் பாணியாக இருக்கிறது. இந்த முறையும் அப்படியே. //

    இதுதான் சிறந்தது ஜி! டிட்டோ!

    கீதா

    பதிலளிநீக்கு
  9. “யாரடா இது எங்கள் அமைதியான சூழலைக் கெடுப்பது” என்று நினைத்திருக்கக் கூடும். பொதுவாகவே இங்கே எவருக்குமே பொறுமை என்பதே இல்லை என்பது நிதர்சனம்.//

    உண்மை.

    படங்கள் எல்லாம் மனதைக் கவர்கின்றன ஜி!

    கீதா

    பதிலளிநீக்கு
  10. கருடசேவை விவரங்களும் படங்களையும் ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
  11. வாசகம் அருமை.

    //‘நல்லதே நடக்கணும்! எல்லோரையும் நல்லபடியாக வைத்திருப்பா! எங்கும் அன்பும் புரிதலும் ஓங்கி இருக்கணும்!//

    கருட சேவை படங்களும் உங்கள் பிராத்தனையும் அருமை ஆதி.


    //“எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது” என்கிற மனப்பக்குவம் வந்துவிட்டால் எல்லாம் சுகமே! //
    ஆமாம் வெங்கட் இந்த மனபக்குவம் எல்லோருக்கும் வந்து விட்டால் நல்லதுதான்.
    படங்கள் எல்லாம் அருமை.

    காணொளி மூலம் கருட சேவையை நன்கு தரிசனம் செய்து கொண்டேன்.
    இன்று புதன் கிழமை பெருமாள் தரிசனம் கிடைத்தது மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
  12. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. இன்றைய வாசகமும் அருமை.

    உங்கள் இருவரின் கருட சேவை படங்களின் வாயிலாக ரங்கநாத் பெருமாளின் தரிசனம் நன்றாக கிடைக்கப் பெற்றேன். 🙏. உங்கள் இருவரின் பார்வையிலும் வந்த பதிவை ரசித்து படித்தேன். தோப்பும், அதிலுள்ள இயற்கை மரங்களும், அழகான காட்சிகளும் அருமை. படங்கள் அனைத்தும் நன்றாக உள்ளது.

    எது நடக்கிறதோ அது நன்றாக நடக்கட்டும் என நானும் பெருமாளிடம் வேண்டிக் கொண்டேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....