திங்கள், 9 மார்ச், 2026

கதம்பம் - ஆதி வெங்கட்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு கதம்பம் பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   முகநூலில் எழுதிய இற்றைகளின் தொகுப்பு - அங்கே வாசிக்காதவர்களின் வசதிக்காகவும், எனது சேமிப்பிற்காகவும் இங்கேயும் பகிர்ந்து கொள்கிறேன்.


இதற்கு முன்னர் வெளியிட்ட அழகிய படங்களும் சில வரிகளும் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



******


குடும்பம் ஒரு கதம்பம் : 




அம்மா! இன்னிக்கு மாடல் பிராக்டிகலுக்கு ஏதாவது துணி நம்ம கிட்ட இருக்குமா??


அடுக்களையில் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்த நான். 


எப்போ வந்து சொல்ற பாரு?? நேத்து ராத்திரி சொல்லியிருந்தாக் கூட யோசிச்சிருக்கலாம்!


சரி! சரி! இந்தா சீக்கிரம் சாப்பிடு! நான் போய் பார்க்கிறேன்!


கப்போர்டிலிருந்து துணிமணிகளை எல்லாத்தையும் தூக்கி வெளியே போட்டு தேடி...


இது ஓகேவா பாரு!!


ம்ம்ம்.. ஓகேம்மா!


சரி! சீக்கிரம் சாப்புடு! லேட்டாறது!


அறையில் லேப்டாப்பில் டைப் பண்ணிக் கொண்டிருந்த என்னவரிடம் ஓடிச் சென்று , நான் டைட்டா பிடிச்சிக்கிறேன்! இதக் கொஞ்சம் கட் பண்ணுங்களேன்.


இந்தா கண்ணா! 


********


திருச்சியில் வெயில்காலம் நன்றாகவே துவங்கி விட்டது! பரீட்சைக்கு அப்புறம்! பரீட்சைக்கு அப்புறம்! என்று சில வேலைகளை ஒத்திப் போட்டுக் கொண்டிருந்தேன். அதிகாலையில் எழுந்து தேர்வுக்காக படித்துக் கொண்டிருப்பதும் பின்பு வீட்டு வேலைகளுமாக தான் சென்று கொண்டிருந்தது! ஞாயிறன்று என்னுடைய யூனிட் டெஸ்ட் நல்லவிதமாக நடந்து முடிந்ததால் ஒத்திப் போட்டுக் கொண்டிருந்த சில வேலைகளை துவங்கி விட்டேன்..🙂


********


இந்த வாரத்திலிருந்து விடுபட்டுப் போயிருந்த காலைநேர நடைப்பயிற்சியை மீண்டும் துவக்கியுள்ளோம்! இருள் பிரியாத காலைப் பொழுதில் இயற்கையை ரசித்தபடி, அன்றாட நிகழ்வுகளை பேசிக் கொண்டு நடப்பதும் இனிமை தான் இல்லையா! 


வெயில் வந்துவிட்டால், வத்தல், வடாம், ஊறுகாய், ஜூஸ்கள் என்று பக்குவம் செய்து வைக்க ஆரம்பித்து விடுவேனே! இரண்டு மூன்று வருடங்களாகவே வீட்டு சூழல், காலில் எனக்கேற்பட்ட பிரச்சினை என்று சரிவர எதையும் செய்ய முடியவில்லை! இந்த வருடமாவது கொஞ்சம் போல செய்து வைப்போமே என்று நினைத்திருக்கிறேன்!


இந்த வாரம் கொஞ்சம் போல அரிசியை ஊறவைத்து அரைத்து இலைவடாம் என்று சொல்லப்படுகிற தளிர்வடாம் செய்தேன்! நன்றாகவே வீசிப் பொரிந்தது! நேற்றும் ஒரு முறையை பின்பற்றி ஜவ்வரிசி வடாம் செய்திருக்கிறேன்! காய்ந்ததும் பொரித்து பார்க்கணும்! விரிவான செய்முறையில் செய்வதென்றால் இருவரில் யாராவது ஒருவராவது என்னுடைய உதவிக்கு வேண்டும்!


கிடைக்கும் நேரத்தில் புத்தக திருவிழாவில் வாங்கிய Mandala art colouring bookல் வண்ணங்களை நிரப்பி அழகுபடுத்துகிறேன். அந்த நேரத்தில் மனம் ஒன்றுபடுகிறது! அமைதியடைகிறது! சிறுபிள்ளையாக எண்ண வைக்கிறது..🙂 மனது மட்டும் கூலானால் போதுமா! உடலையும் கூலாக வைத்திருக்க ஜிகிர்தண்டாவும் செய்து பரிமாறினேன்…:)


புத்தக வாசிப்பில் தற்சமயம் இந்திரா சாரின் பாஷாண லிங்கம் வாசித்துக் கொண்டிருக்கிறேன்! சதுரகிரியைச் சுற்றி பயணிக்கிறது கதை! வாசித்ததும் அதன் அனுபவத்தினை பகிர்ந்து கொள்கிறேன்.


******



இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


ஆதி வெங்கட்

திருவரங்கம்

9 மார்ச் 2026


8 கருத்துகள்:

  1. காலை நேர பரபரப்புகள் சகஜம் , சிரமம் என்றாலும் சுவாரஸ்யம்!
    ஆமாம், வெய்யில் நன்றாகவே வறுக்கத்தொடங்கி விட்டது.
    வடாம் பற்றி சொன்னால் கீதா அக்கா நினைவுக்கு வருகிறார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை தான். எல்லோர் வீட்டிலும் நிகழும் விஷயங்கள் தான் சார்.

      ஆமாம் கீதா மாமி வடாம் போடத் துவங்கினால் அன்று மழை வரும் என்று சொல்வது தான் எனக்கு நினைவுக்கு வருகிறது.

      தங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம் சார்.

      நீக்கு
  2. பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா சேச்சி.

      நீக்கு
  3. ஓ! வெங்கட்ஜி எழுதும் சதுரகிரி பயணம் அந்த இடத்தைப் பற்றிய இந்திரா சௌந்தரராஜனின் கதையா...

    இங்குமே வெயில் தெரிகிறது ஆனால் 2.30க்கு மேல் 4 மணி வரை உச்சத்தில் அதன் பின் தணிந்துவிடுகிறது இது இப்போதைய நிலை. காலை நன்று 12 1 மணி வரை ரொம்பத் தெரியலை. ஆனால் இந்த முறை வெயில் இங்குமே கூடுதலாக இருக்கும் என்று தெரிகிறது. இப்ப நடக்கும் போர் முன்னர் நடந்த போர் எல்லாமே மாசுபடுத்தி இயற்கையை மாற்றியிருக்கவும் வாய்ப்புகள் உண்டு

    மண்டலா ஆர்ட் சூப்பர்.

    வடாம் போட்டுக் கொண்டிருந்த நான் சமீபகாலமாகப் போடுவது இல்லை.

    படத்தில் இருக்கும் வடாம், கப்பில் இருக்கும் something cool? Ice cream? or smoothie? எல்லாமெ நல்லாருக்கு

    கீதா

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம். அந்த சதுரகிரியைப் பற்றித் தான் இந்த நூலில் சொல்லியுள்ளார் இந்திரா சார்.

      கப்பில் இருப்பது ஜிகிர்தண்டா.

      தங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா சேச்சி.

      நீக்கு
  4. வாசகம் அருமை.


    நீங்கள் இலைவடாம், தளிவடாம், ஊறுகாய்கள், ஜூஸ் செய்து வைத்து கொள்வதை படித்தவுடன்.

    நான் கோடையில் வடுமாங்காய், மோர் மிளகாய், கத்திரி வற்றல், கொத்தவரை வற்றல்
    வித விதமாக கூழ் வற்றல்கள் என்று போட்ட காலங்கள் நினைவுக்கு வருகிறது.


    காலை நேரம் ரோஷ்ணிக்கு உதவிசெய்து, படிக்க வேண்டியதை படித்து, ந டைப்பயிற்சி செய்து இப்படி குடும்பத்துக்கு வேண்டியதை பார்த்து பார்த்து செய்வதில் கிடைக்கும் மகிழ்ச்சி அளவிட முடியாது ஆதி.Mandala art colouring bookல் வண்ணங்களை நிரம்பி மகிழுங்கள்.
    வாழ்த்துக்கள் ஆதி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் அம்மா. குடும்பத்துக்காக நேரம் எடுத்து பார்த்து பார்த்து செய்வதில் ஒரு ஆத்ம திருப்தி கிடைக்கிறது.

      தங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....