புதன், 4 மார்ச், 2026

அவன் அருளாலே அவன் தாள் வணங்கி - சதுரகிரி பயணம் - வெங்கட் நாகராஜ்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


இதற்கு முன்னர் வெளியிட்ட மாசி மாத திருப்பள்ளி ஓடம் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



*******



கோரக்கர் குகையில்....

அவன் அருளாலே அவன் தாள் வணங்கி….  எந்த ஒரு செயலும் செய்வதற்கு நாம் எத்தனை முயற்சித்தாலும், அவன் அருளின்றி அந்த செயலைச் செய்ய முடியாது.  இரண்டு மூன்று வருடங்களுக்கு முன்னர் ஒரு தமிழகப் பயணத்தில் சட்டென்று முடிவெடுத்து சதுரகிரி மலைப்பயணம் மேற்கொண்டேன்.  மீண்டும் அங்கே சென்று வர வேண்டும் என்கிற எண்ணம் இருந்தது என்றாலும் செல்ல முடியவில்லை.  சென்ற ஃபிப்ரவரி மாதம் உத்தராகண்ட் மலைப்பகுதியில் மலையேற்றம் செய்து வந்த பிறகு வேறு எங்கேயும் செல்லவில்லை என்பதும், கடைசி மலையேற்றத்திற்குப் பிறகு ஒரு வருடம் கடந்து விட்டது என்பதும் மனதிற்குள் அவ்வப்போது வந்து போகும் எண்ணமாக இருந்தது.  சரி சட்டென்று முடிவெடுத்து எங்கேயேனும் சென்று வரலாம் என யோசித்தபோது மனதில் தோன்றிய எண்ணம் - அவன் தோன்ற வைத்த எண்ணம் - சதுரகிரி சென்று வரலாம் என்பது.  உடனடியாக திட்டம் தயாரானது. 



சங்கிலி பாறை....


இது எப்படி இருக்கு?

ஃபிப்ரவரி மாதக் கடைசி - வெள்ளி அன்று இரவு புறப்பட்டு, சனிக்கிழமை மலையேற்றம் முடிந்து, பிரதோஷ நாளில் சந்தன மஹாலிங்கம், சுந்தர மஹாலிங்கம் தரிசனம் பெற்று - முடிந்தால் இரவு தங்கிவிட்டு, ஞாயிறு காலை மலையிலிருந்து இறங்கலாம் எனத் திட்டமிட்டேன்.  இரவு தங்குவதில் தடை வந்தால், அன்றே மலையிலிருந்து இறங்கி வீடு திரும்பிவிடலாம் என முடிவு செய்தேன்.  சென்ற முறை இரண்டு பேர் உடன் சென்றேன் என்றால், இந்த முறையும் என்னுடன் இரண்டு பேர் வருவதற்குத் தயாரானார்கள்.  எனது அலுவலகத்தில் பணிபுரியும் ஒரு இளைஞர் மற்றும் வேறொரு நண்பர் - அந்த நண்பர் உங்களுக்கும் தெரிந்தவர் தான் - வேறு யாருமல்ல - பத்மநாபன் அண்ணாச்சி தான்.  சென்ற முறை சதுரகிரி சென்று வந்த பிறகு, “அடுத்த முறை போனா, நானும் வரேன்” என்று சொல்லி இருந்தார். அவரையும் அழைத்து, பேசி முடிவெடுத்தோம்.  அவர் வீட்டிலிருந்து மதுரை வரை அவர் வர, நாங்கள் திருச்சியிலிருந்து மதுரை சென்று பிறகு மூவரும் சதுரகிரி நோக்கிய பயணம் மேற்கொள்வதே திட்டம்.  



சில இடங்களில் இப்படியான பாதை என்றால்...


பல இடங்களில் இப்படி.... 


எச்சரிக்கை... வழுக்குப் பாறை...

வெள்ளி அன்று அலுவலகத்தில் பணி ஓய்வு நிகழ்வு வேறு இருந்தது. அது முடிவதற்கே ஏழு மணி ஆகிவிட்டது.  அதன் பிறகு வீடு திரும்பி தேவையானவற்றை எடுத்து வைத்துக் கொண்டு இரவு பதினோரு மணி அளவில் வீட்டிலிருந்து புறப்பட்டு விட்டோம்.  பயணம் எப்படி இருந்தது, தரிசனம் எப்படி, அனுபவங்கள் என்ன என்பதையெல்லாம் எழுத பத்மநாபன் அண்ணாச்சியிடமும் கேட்டிருக்கிறேன்.  அவர் எழுதுவார் என்று நம்புவோமாக….  நள்ளிரவு பன்னிரெண்டு மணி அளவில் திருச்சியின் புதிய பேருந்து முனையம் அமைந்திருக்கும் பஞ்சப்பூரிலிருந்து மதுரை செல்ல 1 TO 1 பேருந்துகள் நிறையவே இருக்கின்றன.  அவற்றில் ஒன்றில் அமர்ந்து மதுரை நோக்கிய பயணத்தினை இறையருளால் தொடங்கிவிட்டோம். நானும் மதியழகன் எனும் அலுவலக இளைஞரும் திருச்சியிலிருந்து புறப்பட, பத்மநாபன் அண்ணாச்சி, சுசீந்தரத்திலிருந்து புறப்பட்டு விட்டார். நாங்கள் மதுரை மாட்டுத் தாவணி பேருந்து நிலையத்தினை இரவு இரண்டு மணிக்கு அடைந்து காத்திருந்தோம். 



வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு, வெறுங்காலுடன் மலைப்பாதையில்....

பத்மநாபன் அண்ணாச்சியிடம் அலைபேசியில் தொடர்பு கொண்டபோது இன்னும் அரை மணி நேரம் ஆகலாம் என்றார்.  அவர் வரும் வரை பராக்கு பார்த்துக் கொண்டிருந்தோம்.  அந்த இரவு வேளையிலும் மதுரையின் மாட்டுத் தாவணி பேருந்து நிலையம் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது.  எங்கே பார்த்தாலும் மல்லிகைப் பூ வியாபாரம். கூடவே விதம் விதமான கடைகளில் ஜிகிர்தண்டா.  எல்லோருமே ஒரிஜினல், பாரம்பரிய ஜிகிர்தண்டா என்ற பதாகை வைத்திருக்கிறார்கள் - யார் ஒரிஜினல் என்பது இறைவனுக்கே வெளிச்சம்.  பரபரவென இயங்கிக் கொண்டிருக்கும் பேருந்து நிலையத்தில் ஒரு சில பூ வியாபாரிகள் அவர்கள் கடைகளுக்கு முன்னரே பூ களவு போகும் என்ற பயமின்றி தூங்கிக் கொண்டிருக்க, சிலர் அந்த நேரத்திலும் வாழ்வினை ரசித்து, சிரித்துப் பேசிக் கொண்டிருந்தார்கள்.  கண் தெரியாத ஒரு இளைஞர் அனைவரிடமும் “பத்து ரூபாய் கொடு” என்று கேட்டுக் கொண்டிருந்தார்.  கொடுக்கும் நோட்டினை தடவித் தடவிப் பார்த்தபிறகு வேறொருவரிடம் “இது எத்தனை ரூபாய்?” என்று கேட்டுக் கொண்டிருந்தார்.  



தியானத்திற்கு தியானம்... ஓய்வுக்கு ஓய்வு!

சாதாரணமாகவே தள்ளாடும் தமிழகம் - இரவு நேரத்தில் சொல்ல வேண்டுமா?  ஒரு நபர் தனியாக அமர்ந்து சம்பந்தமில்லாமல் பேசியதோடு - பார்க்கும் நபரிடமெல்லாம் - கண்டக்டர் கிட்ட கேளு என்று சொல்லிக் கொண்டிருந்தார்.  அவரிடம் கேட்க வேண்டிய அவசியமில்லை - அவரை யார் கடந்தாலும் கண்டக்டர் கிட்ட கேளு என்பதையே திரும்பத் திரும்பச் சொல்லி, அதன் பிறகு கைகளையும் தலையையும் ஆட்டி ஆட்டி எதையோ ஒரு விஷயத்தினை பேசிக்கொண்டிருந்தார்.   சரக்கு எப்படியெல்லாம் மனிதர்களை ஆட்டிப் படைக்கிறது என்பதை நான் யோசித்துக் கொண்டிருந்தேன்.  தினம் தினம் இப்படிக் குடிப்பதற்கு காசு நிறையவே தேவை - காசு விரயமாவதோடு, குடிப்பவர்களின் உடல் நலனும் கெடுகிறது என்ற எண்ணம் இன்னும் அதிக வேதனையைத் தந்தது.  அந்த மனிதரின் குடும்பத்தினர் எவ்வளவு தொல்லைகளைச் சந்திப்பார்கள் என்ற எண்ணமும் மனதில் வந்து போனது.  அரசாங்கமே சரக்கு விற்பனைக்கு முக்கியத்துவம் தரும்போது என்ன செய்ய முடியும்….  



சுமையில்லாமல் நடப்பதே சிரமம் எனும்போது...
தலைச்சுமையுடன் நடக்கும் உள்ளூர்காரர்கள்...

கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மதுரை பேருந்து நிலையத்தில் காத்திருந்த பிறகு, அண்ணாச்சி வந்து சேர்ந்தார். வந்ததும் அவர் கேட்ட முதல் கேள்வி - “என்ன அண்ணே எத்தனை நாய் வாங்கினீங்க?” என்பது தான் - ஏனெனில் அவரிடம் நான் சொன்னது, “இறங்கினதும் கடைசில ராஜபாளையம் போற பஸ் கிட்ட வந்துடுங்க” என்று சொல்லி இருந்தேன்! ஆரம்பமே அதிரடியாகத் தான் இருந்தது!  அவர் வந்ததும், ராஜபாளையத்திற்குச் செல்லும் பேருந்தில் ஏறிக் கொண்டோம்.  அந்த இரவு நேரத்திலும் கூட மதுரையிலிருந்து ராஜபாளையம் செல்ல ஐந்து/பத்து நிமிடங்களுக்கு ஒரு பேருந்து இருக்கிறது - பேருந்து வசதி விஷயத்தில் தமிழகம் Far far better - வடக்கில் இருக்கும் பேருந்து வசதிகளை ஒப்பீடு செய்தால்!  வடக்கிலும் இத்தனை வருடங்கள் இருந்ததால் இதனைச் சொல்கிறேன் - நம்மவர்கள் குறை சொன்னாலும் பேருந்து வசதிகள் நிறையவே தான் இருக்கிறது. பிறகு என்ன நடந்தது?  வரிசையாகச் சொல்கிறேன் - சில பதிவுகள் வெளிவரலாம் என்ற முன்னெச்சரிக்கையுடன்…


முன்னோட்டமாக சில படங்களும் காணொளிகளும் இந்தப் பதிவினில் இணைத்திருக்கிறேன்.  தொடர்ந்து பயணிப்போம் நண்பர்களே!


*******


இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


வெங்கட் நாகராஜ்

திருவரங்கம்

4 மார்ச் 2026


16 கருத்துகள்:

  1. வாவ்! அருமையான பயணம்! அதைப் பற்றிய பதிவு!

    என் மனதில் எப்பவும் இம்மலை வந்து போகும். போவதற்கும் வசதிகள் உண்டு. நெருங்கிய உறவினரும் அங்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் உண்டு. ஆனால் தற்போதைக்குப் போகும் வாய்ப்பு துளியும் இல்லை. ஆனால் மனதில் ஓடிக் கொண்டே இருக்கிறது. நம்பிக்கையுடன் இருக்கிறேன். பார்ப்போம்.

    கீதா

    பதிலளிநீக்கு
  2. பப்பு அண்ணாச்சியும் கூட ஆஹா! ரொம்பவே நல்லாருந்திருக்கும்.

    படங்கள் எல்லாம் சூப்பர்.

    நம்ம ஃப்ரென்ட் ரொம்ப அழகா நம்மைப் போலவே தண்ணீர் குடிப்பதைப் பார்த்துப் பார்த்து ரசித்தேன்! அழகு அழகுச் செல்லம்!

    கீதா

    பதிலளிநீக்கு
  3. பப்பு அண்ணாச்சியும் கூட ஆஹா! ரொம்பவே நல்லாருந்திருக்கும்.

    படங்கள் எல்லாம் சூப்பர்.

    நம்ம ஃப்ரென்ட் ரொம்ப அழகா நம்மைப் போலவே தண்ணீர் குடிப்பதைப் பார்த்துப் பார்த்து ரசித்தேன்! அழகு அழகுச் செல்லம்!

    கீதா

    பதிலளிநீக்கு
  4. வழுக்குப் பாறையில் செல்லும் காட்சிக் காணொளியில் ஒரு பெண்மணி தன் மொபைலில் யாருக்கோ காட்டிக் கொண்டே செல்கிறாரோ இல்லைகாணொளி எடுத்துக் கொண்டே செல்கிறாரோ?

    கீதா

    பதிலளிநீக்கு
  5. வேட்டியை மடித்துக் கொண்டு வெறுங்காலுடன் - கூட இருப்பவர் பப்பு அண்ணாச்சியோ!!? ஃபோட்டோன்னதும் தலைய குனிஞ்சுகிட்டார் போல! ஹாஹாஹா...

    கீதா

    பதிலளிநீக்கு
  6. பாவம் குரங்கார்.  அவருக்கு அங்கே ஒரு டம்ளர் வைக்கக் கூடாதோ!

    சரியும் பாறையில் தியானம் அருமை.  நல்ல ஒரு க்ளிக்.

    மதுரையிலிருந்து அந்தப் பாடத்தியில் எத்தனை முறை பயணித்திருக்கிறேன்!  ஸ்ரீல்லிபுத்தூரில் பணிபுரிந்த நாட்களும், இதே மகாலிங்கமாலை தாண்டி வத்ராப்பிலும்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // பாடத்தியில் //

      கஷ்டம்.. கஷ்டம்... "பாதையில்" என்று படிக்கவும்!!

      நீக்கு
    2. ஹாஹா.... நான் ஏதோ, நீங்க வட்டார வழக்கில் எழுதி இருக்கீங்களோன்னு நினைச்சேன்! :)

      நீக்கு
  7. நான் வளர்த்த செல்லம் ராஜபாளையம் க்ராஸ்.  மோதி என்று பெயர்.   பெருமளவு நாட்கள் மதுரையிலும்,  பின்னர் திருமணத்துக்குப் பின் சென்னையிலும்.

    பதிலளிநீக்கு
  8. அரசன் எவ்வழி அவ்வழி மக்கள்!

    தலைச்சுமையுடன் நடப்பது அதுவும் வழுக்குப் பாறையில். வழக்கமாக இருக்கும்!

    “என்ன அண்ணே எத்தனை நாய் வாங்கினீங்க?” என்பது தான் - ஏனெனில் அவரிடம் நான் சொன்னது, “இறங்கினதும் கடைசில ராஜபாளையம் போற பஸ் கிட்ட வந்துடுங்க”//

    சிரித்துவிட்டேன்!

    நினைச்சேன். அதான் சொன்னேன் நம்ம பப்பு அண்ணாச்சி கூட இருந்தா மலையேற்றம் சிரமமாகவே தெரியாது. லொள்ளுசபாவைல்ல கூட கூட்டிட்டுப் போறீங்க!!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  9. தமிழகத்தில் போக்குவரத்து நிஜமாகவே நல்ல வசதி. அதுவும் மதுரை கேட்கணுமா தூங்கா நகரம். ஜே ஜே லோகம்தான் எப்பவும்!

    இங்கும் கூடப் பரவாயில்லை என்றே சொல்லலாம், ஜி, போக்குவரத்துப் பற்றி.

    பதிவுகள் தொடரட்டும் ஜி!

    கீதா

    பதிலளிநீக்கு
  10. மிக இனிய பயணம். விரைவிலேயே………… என் அனுபவத்தையும் எழுத முயற்சிக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  11. //எந்த ஒரு செயலும் செய்வதற்கு நாம் எத்தனை முயற்சித்தாலும், அவன் அருளின்றி அந்த செயலைச் செய்ய முடியாது.//

    உண்மை.

    சதுரகிரி மலைப்பயணம் அருமையாக இருக்கிறது. படங்களும் செய்திகளும் அருமை.
    காணொளிகள் அருமை. குரங்கு நீர் அருந்தும் காட்சி அருமை.
    வழுக்குப் பாறை என்று சொல்லி ஏறும் பெண்கள் பார்த்தேன், நன்றாக நிமிர்ந்து கையில் கோலுடன் ஏறுவது அழகு.
    உங்கள் அருமை நண்பர் பத்மநாபன் அண்ணாச்சி உடன் வந்தது மகிழ்ச்சி, அவர் கேட்ட கேள்வி சிரிப்பு .
    ராஜபாளையம் என்றால் வளர்ப்பு செல்லம் வளர்ப்பவர்களுக்கு ஆசை வரும் அவற்றைப்பார்க்க.

    பதிலளிநீக்கு
  12. அருமையான பயணம்.

    என்னுடைய ஆசை என்ன என்றால், இதனை பத்மனாபன் அண்ணாச்சி படிக்கக்கூடாது. அவர் தன் பாணியில் எழுதி அனுப்பியிருக்கணும். இரண்டு பேரும் ஒரே பயணத்தை எப்படிப் பார்க்கிறீர்கள் என்று தெரிந்துகொள்ளலாம்.

    சொல்லியிருந்தால் நானும் வந்திருப்பேன். ஆனால் நடக்க கஷ்டமாக இல்லையா? இல்லை மூவரும் ஹிந்தியிலேயே சம்சாரிச்சீங்களா?

    பதிலளிநீக்கு
  13. விஜயலஷ்மி சென்னை8 மார்ச், 2026 அன்று 6:22 PM

    சதுரகிரி பயணம் அருமை நான் சென்று வந்தது ஞாபகம் வந்தது

    பதிலளிநீக்கு
  14. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. சதுரகிரி பயணத் தொடர் அருமை. படங்கள் அனைத்தும் நன்றாக உள்ளது. என் நேரமின்மையால் சில பதிவுகளை தவற விடுகிறேன். மன்னிக்கவும். பயணக்கட்டுரை யில் விபரமான எழுத்துக்களை மிகவும் ரசித்தேன். . இத்துடன் வெளி வந்த மற்ற இரண்டு பதிவுகளையும் படிக்கிறேன். நானும் உங்கள் பயணத்துடன் தொடர்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....