அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி. முகநூலில் எழுதிய பதிவு ஒன்று - அங்கே வாசிக்காதவர்களின் வசதிக்காகவும், எனது சேமிப்பிற்காகவும் இங்கேயும் பகிர்ந்து கொள்கிறேன்.
இதற்கு முன்னர் வெளியிட்ட பனிச்சிகரங்களில் ஒரு சிவாலயம் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
******
Diary RJ Saha - 26.04.2026 :
திருவரங்க வாழ்வில் தான் FM கேட்க பழகிக் கொண்டேன்! கோவையில் இருந்தவரை ரேடியோவோடு தான் அன்றைய நாள் துவங்கும்! மங்கள வாத்தியம், சுப்ரபாதம், இலை சத்து தழை சத்து என்று வேளாண் செய்திகள், நாட்டு நடப்புகள், மெல்லிசை பாடல்கள், ஒலி சித்திரம் என்று நம் குடும்பத்தில் ஒரு அங்கத்தினராகவே இடம்பெற்றது அன்றைய நாளின் ரேடியோ!
FMஇலும் அதிகாலை ஐந்து மணி துவங்கி ஆன்மீகத் தகவல்கள், சஷ்டி கவசம், பக்தி பாடல்கள் என்று தான் நாள் துவங்குகிறது! இப்படி ஒவ்வொரு வேளையிலும் ஏதேனும் ஒரு நிகழ்ச்சியோடு நாமும் ஒன்றென கலந்து விடுவோம்! திருச்சியின் புகழ்களில் ஒன்றான Hello FM 106.4 ஐ நான் கேட்க ஆரம்பித்து 14 வருடங்கள் கடந்து விட்டன!
அடுக்களையில் ஒரு ஓரமாக மெல்லிய சத்தத்தில் உலக விஷயங்களும், பாடல்களும் ஒலித்துக் கொண்டிருக்க என்னுடைய அன்றாட வேலைகளும் ஒருபுறம் நடைபெற்றுக் கொண்டிருக்கும்! இதுவே என் அன்றாட வாழ்க்கை முறையாகவும் மாறிவிட்டது! கடந்த நான்கு வருடங்களாக நம்ம வீட்டில் டிவியும் வைத்துக் கொள்ளவில்லை, அதன் அவசியமும் ஏற்படவில்லை என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்!
FMல் நாள்முழுவதும் ஏதேனும் நிகழ்ச்சிகளும் பாடல்களும் ஒலித்துக் கொண்டே தான் இருக்கும் என்றாலும் குறிப்பிட்ட சில நிகழ்ச்சிகள் மனதைக் கவர்ந்ததாக இருக்கும்! அதில் ஒன்று தான் இரவுநேரம் ஒலிக்கும் ‘டயரி’ என்ற நிகழ்ச்சி! அதன் தொகுப்பாளர் ‘சகா’ என்பவர் அந்த நிகழ்ச்சியை தொகுக்கும் விதமும், அவரின் வார்த்தைப் பிரயோகமும், அவரின் இதமான குரலும் என நன்றாக இருக்கும்!
இரவுநேரம் தலையணைக்கு அருகில் FM ரேடியோவை அலைபேசியில் ஒலிக்கச் செய்து கேட்டுக் கொண்டே தூங்கிப் போன நாட்களும் உண்டு! இந்த டயரி நிகழ்ச்சியில் அன்றாடம் யாரேனும் ஒருவரின் வாழ்க்கை அனுபவத்தினை விவரிப்பதாகவும் அதற்கான காரணமும், தீர்வும் பாடல்களின் இடையில் சொல்லப்படுவதாகவும் இருக்கும்!
‘நான் உங்கள் சகா, டயரி நிகழ்ச்சியின் வழியே உங்களிடம் பேசிக் கொண்டிருக்கிறேன்’...என்று துவங்கும் அந்த நிகழ்ச்சியின் காந்தர்வ குரலும் அவரின் இதமான தமிழும் அனைவரையும் கட்டிப் போட வைத்தது! டயரி நிகழ்ச்சிக்காக காத்திருப்போர் ஏராளம்! அவசர உலகின் பரபரப்பில் ஒவ்வொரு நாளின் முடிவும் மனதுக்கு இதமாய் நிறைவு பெறும் போது அந்த நாளுக்கான முழுமையும் நல்லவிதமாக இருக்கும்!
சில நாட்களுக்கு முன்பு தான் மகள் இவரின் புகைப்படத்தை இணையத்தில் காண்பித்தாள்! அம்மா! நீ தினமும் கேட்டுண்டு இருப்பியே டயரி ப்ரோகிராம்! அந்த ப்ரோகிராமோட RJ இவர் தான்! டயரி சகா! என்றாள்! இதமான குரலுக்கு சொந்தக்காரர்! எத்தனையோ பேரின் துன்பத்திலும், கஷ்டத்திலும், இன்பத்திலும், உற்சாகத்திலும் தன் குரலால் மயிலிறகாய் வருடிக் கொடுத்திருக்கிறார்!
நேற்றைய பொழுது இவரின் மறைவுச் செய்தியை கேட்ட போது மிகவும் அதிர்ச்சியாக இருந்தது! 51 வயது தான் என்றார்கள்! ஏதேனும் உடல்நலமின்மையால் அவதிப்பட்டாரா என்று தெரியவில்லை..🙁
ஒவ்வொரு நாளையும் இதமாய் நிறைவு செய்த அந்த குரல் இன்று ஒரு நீண்ட நிறைவுக்குச் சென்றுவிட்டது…:( அவரின் ஆன்மா சாந்தியடையவும், அவரின் குடும்பத்திற்கு தைரியத்தை தரவும் இறைவனை இறைஞ்சுகிறேன்.
காற்றில் கலந்தது காந்தக் குரல்…..! அவரின் குரலையும் இங்கே பகிர்ந்திருக்கிறேன்.
most important person ❤️ RJ Saha words 💯 💝 #rjsaha #hellofm #shortvideo #lifechanging #trending
********
இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…
நட்புடன்
ஆதி வெங்கட்
திருவரங்கம்
12 மே 2026


சட்டென சில மரணங்கள் மனதை உலுக்கி விடுகின்றன. அவரையும் நம் குடும்பத்தில் ஒருவராய் நீங்கள் நினைத்திருப்பீர்கள்.
பதிலளிநீக்குஆமாம் சார். நம்ப முடியவில்லை. நல்ல ஆத்மா.
நீக்குதங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம் சார்.
அவர் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாறவும், அவரை இழந்து வாடும் நட்புகளுக்கும் உறவுகளுக்கும் அவர் இழப்பை தாங்கும் மனவலிமையை கொடுக்கவும் இறைவனைப் பிரார்த்திப்போம்.
பதிலளிநீக்குதங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம் சார்.
நீக்குமுன்பெல்லாம், அதாவது பள்ளிக் காலங்களில் ரேடியோ கட்டாயம் இருக்கும். யார் முதலில் எழுகிறார்களோ, அவர்கள் வானொலியை ஆன் செய்து விடுவார்கள். எப்போது, எந்த நிலையம் வைக்க வேண்டும் என்று எல்லோருக்குமே தெரியும்.
பதிலளிநீக்குஎங்கள் வீட்டில் அப்பா தான் ரேடியோவை முதலில் வைப்பார். மங்கள நாதத்துடன் துவங்கும் அன்றைய நாள்.
நீக்குதங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம் சார்.
இப்போதெல்லாம் நான் ரேடியோ பக்கமே செல்வதில்லை. FM எனக்கு மஹா அலர்ஜி. பேசிக்கொண்டே இருப்பார்கள். விளம்பரங்களாயிருக்கும். பொறுமை இருக்காது.
பதிலளிநீக்குஎன்னவருக்கும் ரேடியோ வைப்பதில் உடன்பாடில்லை தான்..:) ஆனால் எனக்கு அடுக்களையில் சத்தம் வேண்டும். சுறுசுறுப்புக்கான டானிக் FM தான்.
நீக்குதங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம் சார்.
சமீபத்தில் குடந்தை, சேலம், பெங்களூரு என்று பயணங்கள் மேற்கொண்டபோது அதிகாலை கிளம்பும்போது காரில் ஆறு அல்லது ஆறரை வரை FM கேட்டிருக்கிறேன். பென் டிரைவ் வைத்திருக்கிறேன் என்றாலும் முதலில் அதைப் போடக்கூடாது, முதலில் சாமி பாட்டு என்று பாஸ் சொல்வதால் அப்படி போடுவோம். அவர்களும் ஐந்து மணிக்குதான் பக்தியை ஆரம்பிப்பார்கள்!
பதிலளிநீக்குபயணங்களில் பாடல்கள் கேட்பது சுகமான அனுபவமாக இருக்கும். காலையில் எல்லா இடத்திலுமே பக்திப்பாடல்கள் தான் ஒலிக்கும்.
நீக்குதங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம் சார்.
நேற்றைய உங்கள் பதிவிலிருந்து ஒரு படம் எடுத்து அதற்கு ஒரு கதை எழுதி இருக்கிறேன். வந்து படிக்க அழைக்கிறேன்!
பதிலளிநீக்குhttps://engalblog.blogspot.com/2026/05/blog-post_12.html
அப்படியா! மிக்க மகிழ்ச்சி சார். நிச்சயம் வந்து படிக்கிறேன்.
நீக்குதங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம் சார்.
எனது சிறு வயது தொட்டு இளமைக் காலம் வரை இரண்டறக் கலந்து இருந்தது இலங்கை வானொலியும் அதன் தமிழ் அறிவிப்பாளர்களும். 1990 களில் அதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான கே எஸ் ராஜா அவர்கள் கொல்லப்பட்டது மறக்க முடியாத வருந்தத் தக்க நிகழ்வு!
பதிலளிநீக்குரேடியோவுடனான தங்கள் பந்தம் அருமை சார். உண்மை தான்! அன்றைய குடும்பங்களில் இரண்டற கலந்தது ரேடியோ.
நீக்குதங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்து சார்.
வாசகம் அருமை.
பதிலளிநீக்குநானும் Hello FM 106.4 ஐ தொடர்ந்து கேட்டு வருகிறேன்.
இரவு நான் உங்கள் சகா, டயரி நிகழ்ச்சியும் கேட்பேன்.
கிராமபோன், நிகழச்சியும் நன்றாக இருக்கும்.