அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
இதற்கு முன்னர் வெளியிட்ட நாகோ புத்த மடாலயம் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
*******
“எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்” - எவ்வளவு சிறப்பாகச் சொல்லி இருக்கிறார்கள். எது நடந்தாலும் அது நல்லதற்காகவே நடக்கிறது என்று அழகாய் சிந்தித்தால், அதனை ஒத்துக் கொள்ளும் மனம் இருந்தால் எந்த நிகழ்வு நடந்தாலும் அதைக் குறித்து நாம் கஷ்டப்பட வேண்டியதில்லை. கடந்த ஞாயிறில் நீண்டதொரு பேருந்துப் பயணம் - ஒரு பெண்மணி ஓட்டுனரிடம், “வண்டி எத்தனை மணிக்கு ஊர் போய் சேரும்?” என்று கேட்க, அதற்கு அவர் சொன்ன பதில் என்னைச் சிந்திக்க வைத்தது.
“நான் ஊருக்குப் போய் சேர்ந்ததும் correct ஆ எத்தனை மணிக்கு போய் சேரும்னு சொல்றேன் மேடம்!” என்றார் சிரித்தபடியே. கூடவே, இதுவும் சொன்னார் - “சரியான நேரம் சொல்ல முடியறது இல்லை - traffic பொறுத்து தான் போய் சேர முடியும். நான் ஒரு டைம் சொல்லி, அந்த டைமு க்கு போகலைன்னா அதையும் கேட்கிறாங்க, அதனால தான் இப்படி சொல்றேன்” என்று அவர் பக்க நியாயத்தைச் சொன்னார். அவர் சொல்வதும் சரிதான் என்று தோன்றியது எனக்கு.
ஒருவர் இருவர் இப்படிக் கேட்டால் பரவாயில்லை. பலரும் இப்படிக் கேள்வி கேட்கும்பொழுது, பதில் சொல்வது கடினம். Day in and day out, ஒரே மாதிரி கேள்விகள் வந்து கொண்டே இருந்தால் சலிப்பாகதான் இருக்கும். கோபம் வரும். ஆனாலும் சமாளிக்கிறாரே! அதிலும் public dealing என்பது கடினமான வேலை. அலுவலகத்தில் எனக்கும் இப்படியான அனுபவங்கள் நிறையவே உண்டு. இப்போதும் அது தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. ஒவ்வொருவரையும் சமாளிப்பதற்குள் ஒரு வழியாகி விடுகிறது.
பேருந்துப் பயணங்களில் நிறைய மனிதர்களை பார்க்க முடிகிறது. ஒவ்வொருவருக்குள்ளும் திறமைகளும் உண்டு. சில அசிங்கங்களும் உண்டு. ஞாயிறு பயணத்திலும் நிறைய அனுபவங்கள் கிடைத்தன. ஓட்டுநர் ஒரு இடத்தில் ஐந்து நிமிடம் பஸ் நிற்கும் என்று சொல்ல, அனைவரும் வேலைகளை முடித்து வர, அவர் கையில் பை….. பைக்குள் இரவுக்கான உணவு. அவரிடம் கேட்க, கிடைக்கும்போது வாங்கி வச்சிக்க வேண்டியிருக்கிறது. திருச்சியிலிருந்து கோவை, கோவையிலிருந்து திருச்சி, மீண்டும் திருச்சியிலிருந்து கோவை என தொடர்ந்து வாகனம் ஓட்ட வேண்டும் - கிடைக்கும் நேரத்தில், கிடைத்த இடத்தில் சாப்பிட வேண்டும்…… அதான் இப்படி என்றார்.
வெளியில் இருந்து பார்க்கும்போது அவரின் கஷ்டங்கள் நமக்குத் தெரிவதில்லை. அவருடன் பேசும்போது தான் அவர் தரப்பு வாதங்கள், அவரது கஷ்டங்கள் தெரிகிறது. அவரிடம் சில திறமைகள் இருக்கலாம், ஒளிந்து கிடக்கும் திறமைகளை வெளிப்படுத்த சரியான வாய்ப்பு அமையாமல் இருக்கலாம் என்று தோன்றியது - அன்றைய காலை நான் சந்தித்த ஆட்டோ ஓட்டுநர் அப்படி ஒரு நபர். அவரது ஆட்டோவில் பயணித்த போது அவரிடம் சில வார்த்தைகள் பேசினேன். Trip முடிந்து பணம் கொடுக்கும் போது, “சார் நீங்க தமிழ் புக்ஸ் படிப்பீங்களா சார்?” என்றார். ஓ படிப்பேன் என்ற போது அவர் சில விஷயங்கள் சொன்னார்.
அந்த விஷயம் என்ன? நாளைய பதிவில் சொல்கிறேன்… அதுவரை காத்திருங்கள்…
*******
இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…
நட்புடன்
வெங்கட் நாகராஜ்
திருவரங்கம்
14 ஜூலை 2026

எந்த பேருந்து ஓட்டுநரிடமும் (நடத்துனரிடமும்) எப்போ போய்ச் சேரும்னு கேட்கக்கூடாது. அப்படிக் கேட்டால், அவங்க நேரம் சொன்னால் வழியில் வண்டிக்கு பிரச்சனையோ இல்லை டிராபிக் பிரச்சனையோ வரும்னு நினைப்பாங்க.
பதிலளிநீக்குஎண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும் என்று படித்ததுமே எனக்கு GMB ஸார் நினைவு வருகிறது! அவர் அல்லது அவரும் சொல்லும் வார்த்தை.
பதிலளிநீக்குவருடா வருடம் தன் தந்தை திதிக்கு ஓசூர் செல்வார் பாஸ். மாமியார். மகன்கள், பாஸ் எல்லோரும் சென்னை பாரிமுனையில் உள்ள திருவள்ளுவர் பேருந்து நிலையத்தில் பஸ் ஏறுவார்கள்.
பதிலளிநீக்குஅப்போது அவர்களை பஸ் ஏற்றிவிடச் செல்லும் நானும் இந்த கேள்வியைக் கேட்டு மாட்டிக் கொண்டிருக்கிறேன். கடுப்பாகி விட்டார்கள் கண்டக்டரும் டிரைவரும். உண்மையில் இருவரும் டிரைவர்கள்தான். பாதிப்பாதி நேரம் ஓட்டுபவர்கள். இப்படி கேள்வி கேட்பது அபசகுனம் என்று சொன்னார்கள் அவர்கள். பலமுறை மன்னிப்பு கேட்க வேண்டி இருந்தது!
ஆட்டோ ஓட்டுநரோ இல்லை பேருந்தோ.. யாரிடம் எந்தத் திறமை இருக்கும், அவங்க நிலை எப்படின்னு தெரியாது.
பதிலளிநீக்குஅடையாறில் ஒரு ஆட்டோ ஓட்டுநர் அவர் மகள்கள் என்ன என்ன படிச்சருக்காங்க, என்ன நிலையில் இருக்காங்க என்று சொன்னது வியப்பா இருந்தது
அவர்கள் தரப்பில் நியாயம் இருப்பதாக எனக்கு தோன்றியது. பொதுமக்களை நேரடியாக சந்திக்கும் எந்தப் பணியும் சவாலானது. பொறுமை வேண்டும். சமாளிக்கும் திறமை வேண்டும்.
பதிலளிநீக்குஅடுத்து அந்த ஆட்டோ ஓட்டுநர் அப்படி என்ன சொன்னார் என்று தெரிந்து கொள்ள காத்திருக்கிறேன்!
காலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குபதிவு அருமை. /எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்” - எவ்வளவு சிறப்பாகச் சொல்லி இருக்கிறார்கள். எது நடந்தாலும் அது நல்லதற்காகவே நடக்கிறது என்று அழகாய் சிந்தித்தால், அதனை ஒத்துக் கொள்ளும் மனம் இருந்தால் எந்த நிகழ்வு நடந்தாலும் அதைக் குறித்து நாம் கஷ்டப்பட வேண்டியதில்லை/
நல்லதொரு வரிகள். பேருந்து ஓட்டுனர் சொன்னது சரிதான். ஒவ்வொருவரின் வாழ்விலும் எத்தனை சிரமங்கள். அதனை அவர்கள் கடந்து மற்றவர்களுக்காக வாழும் போதுதான் அவர்களின் தியாகங்கள் புரிகிறது.
ஆட்டோ ஓட்டுனரின் எண்ணங்களை புரிந்து கொள்ள இனியும் நாளையப் பதிவுக்காக தொடர்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
எ பி யில் வாழ்க்கை பற்றிய கவிதை. இங்கும் வாழ்க்கை பற்றிய பொன்மொழி. தற்செயலா?
பதிலளிநீக்குசிலர் சாதாரணமாக ஆகும் பயண நேரத்தை கூறுவர்.
Jayakumar