வெள்ளி, 3 ஜூலை, 2026

கதம்பம் - பயணம் - Gen Z - கோவை - ஆதி வெங்கட்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு கதம்பம் பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   முகநூலில் எழுதிய இற்றைகளின் தொகுப்பு ஒன்று - அங்கே வாசிக்காதவர்களின் வசதிக்காகவும், எனது சேமிப்பிற்காகவும் இங்கேயும் பகிர்ந்து கொள்கிறேன்.


இதற்கு முன்னர் வெளியிட்ட ஸ்ரீ சீதா தேவி சமேத ஸ்ரீ கோதண்டராமர் கோவில், ஊற்றத்தூர் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



********


பயணம் - 29 ஜூன் 2026 : 




கோவையை நோக்கி ஒரு ரயில் பயணம்! வெயில் இங்கு கடுமையாக இருந்தாலும் வழியெங்கும் தென்படும் குல்மொஹர் மலர்களும், குடையாக  விரிந்து காணப்படும் மரத்தில் ஆங்காங்கே மிளிரும் நட்சத்திரம் போல் ஏதோ மஞ்சள் நிற மலர்களும் என கண்களுக்கு விருந்தளித்து கடக்கச் செய்கிறது!


******


Gen Z…. - 29 ஜூன் 2026 : 


இதுவரை Gen Z தலைமுறை பற்றியும் அவர்களின் எண்ணங்களைப் பற்றியும் கேள்விப்பட்டிருக்கிறேன்! எங்கள் மகளும் கூட அந்த தலைமுறை தான்!  என்னோடு ஒப்பிட்டுப் பார்க்கும் போது அவளின் எண்ணங்கள் மாறுபடும்! அதை நான் பல நேரங்களில் உணர்ந்திருக்கிறேன்! இன்றைய ரயில் அனுபவத்தில் என்னருகில் அமர்ந்திருக்கும் ஒரு Gen Z பெண்!


எனக்கும் மகளுக்கும் அருகருகே அல்லாமல் வேறு வேறு இடத்தில் இருக்கைகள் கிடைக்கவே, என்னருகே அமர்ந்திருந்த Gen Z பெண்ணிடம், தனியா வந்திருக்கீங்களா! மாற்றிக் கொள்ள முடியுமா! எனக் கேட்டுப் பார்த்தேன்! அந்தப் பெண் உடனேயே அதற்கு, 'என்னால மாத்தி மாத்தி எல்லாம் உட்கார முடியாது! நான் முதல்ல அந்த இடத்துல தான் உட்கார்ந்திருந்தேன்! இப்போ திரும்பியும் அதே இடத்துக்கு போகப் பிடிக்கல! போகமாட்டேன்! என்று பட்டென்று சொல்லி விட்டாள்...🙂


சரியென நாங்களும் அதை இயல்பாக எடுத்துக் கொண்டு விட்டோம்! ஆனால் யோசித்துப் பார்த்தால் அந்தப் பெண்ணின் எண்ணங்கள் தான் என்ன? முதலில் தன்னுடைய இடம் எதுவென்று அறியாமல் அமர்ந்த அந்த இடத்திற்கு மீண்டும் செல்வதை விரும்பமாட்டேன் என்கிறாளா? அல்லது யார் சொல்வதையும் நான் ஏன் ஏற்க வேண்டும் என்கிறாளா? இப்படியும் மனிதர்கள்!




எதிர் இருக்கையில் ஒரு சின்னஞ்சிறு பாலகன்! தன் அம்மாவிடம் வரிசையாக கேள்விகளை கேட்டுக் கொண்டும், விளையாடிக் கொண்டும், ஜன்னல் கண்ணாடியை இப்படியும் அப்படியுமாக தள்ளி விட்டுக் கொண்டும் வருகிறான்!


******


கோவை - 30 ஜூன் 2026:



நேற்று இரவு கோவையில் இறங்கியது முதலாக சில்லென்ற காற்றும் குளுகுளுவென்ற சூழலுமாக எங்களை வரவேற்றது! இதோ அதிகாலையில் குளிர்க்காற்றில் பறவைகளின் கீச்கீச் என்ற ஒலியில் தான் விழித்தெழுந்தேன்! திருச்சியில் பெரும்பாலும் வெய்யில் தான்! புழுக்கமும் வியர்வையுமாகவே இருப்பதால் இப்போது இந்தக் காற்று மிகவும் குளிர்வதைப் போல தோன்றுகிறது! கோவையை விட்டு பிரிந்தும் 24 வருடங்கள் கடந்துவிட்டன!


நேற்று ரயிலை விட்டு இறங்கியதும் முகத்தில் சில்லென்ற பட்ட குளிர்க்காற்றில் மேல்துண்டை முண்டாசு போல் கட்டிய அப்பாவின் முகம் சட்டென நினைவுக்கு வந்தது! அப்பா கோவையை பற்றி எப்போதும் பெருமைப்பட்டுக் கொண்டிருப்பார்! சுவையான சிறுவாணித் தண்ணீரும், மணக்க மணக்க பேசும் கொங்குத் தமிழும் என சொல்லிக் கொண்டிருப்பார்!


காலம் தான் எல்லாவற்றுக்கும் பதில் சொல்லிக் கொண்டிருக்கிறது!


******


இன்றைய கதம்பம் பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


ஆதி வெங்கட்

திருவரங்கம்

3 ஜூலை 2026


2 கருத்துகள்:

  1. எனக்கு இந்த  Gen Z தலைமுறை   பற்றி ஒன்றும் புரியவில்லை.  ஏன் அப்படி சொல்கிறார்கள்?  எதனால் இப்படி பெயர் வந்ததது?  அந்த சின்னஞ்சிறு பாலகன் என்ன தலைமுறை?!

    பதிலளிநீக்கு
  2. கோவை அனுபவங்கள் இனிதாகட்டும்.  உங்கள் பழைய வீட்டைத்தேடி நீங்கள் சென்ற அனுபவம் பேஸ்புக்கில் கண்டேன்.

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....