சனி, 28 டிசம்பர், 2013

ஓவியக் கவிதை – 5 – கவியாழி கண்ணதாசன்



டிசம்பர் மாதம் ஏழாம் தேதி “கவிதை எழுத வாருங்கள்” என்ற தலைப்பில் என்னுடைய வலைப்பூவில் ஒரு படத்தினை வெளியிட்டு கவிதை எழுத அழைப்பு விடுத்திருந்தேன். வருகிற 31-ஆம் தேதி வரை கவிதைகள் எழுதி அனுப்பலாம் எனவும் அதில் சொல்லி இருந்தேன். இந்த வேண்டுகோளுக்கு செவி சாய்த்து சில நண்பர்கள் கவிதைகளை எழுதி அனுப்பி இருக்கிறார்கள். அந்த வரிசையில் இது ஐந்தாம் கவிதை.

ஓவியம் எழுத அழைப்பு விடுத்து, வெளியிட்ட ஓவியம் திரு ராஜன் அவர்களின் கைவண்ணத்தில் உருவானது. ஓவியம் கீழே.



இந்த ஓவியத்திற்கான கவிதை எழுதிய கவியாழி கண்ணதாசன் அவர்கள் பற்றிய சிறு குறிப்பு:

கவியாழி எனும் வலைப்பூவில் கவிதைகள் படைத்து வரும் திரு கவியாழி கண்ணதாசன் அவர்கள் தனது வலைப்பூவில் வாரத்திற்கு நான்கைந்து கவிதைகளையாவது வெளியிடுகிறார்.  இவரை இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஒன்றாம் தேதி நடைபெற்ற இரண்டாவது பதிவர் சந்திப்பில் தான் முதன் முறையாகச் சந்தித்தேன். சற்று நேரமே பேச முடிந்தாலும் மனதில் நின்றவர்! தொடர்ந்து அவரது தளத்திலும், புத்தகங்களிலும் படைப்புகள் எழுதி புகழ் அடைந்திட எனது வாழ்த்துகள்.

மேலே கொடுத்துள்ள ஓவியத்திற்கு கவியாழி கண்ணதாசன் அவர்கள் எழுதிய கவிதையை ரசிக்கலாம் வாருங்கள்....

மார்கழிப் பூவை சூடியதால்
மங்கையே மயக்கம் வருகிறதா 
மன்னவன் என்னிடம் ஏன்
மலருக்கே  தயக்கம் வருகிறது

தேனிக்களும் வண்டுகளும்
தேனிசை ராகமாய் பாடுகிறது
மயிலும மானுமே மகிழ்ந்து 
மகிழ்ச்சியாய் இங்கு  ஓடுகிறது

நங்கையே நல்லமுதே சுவையே
நானருந்த உனக்கு  நாணமே
நாழியும் கடப்பதாய் கோபமோ
நல்விருந்து படைக்கிறேன் வா

என் அருகில் நீயும் வா
என் மடியில் சாய்ந்திடவா
நின் இதழ் எனக்குத் தா 
நிலையை மறந்த மகிழ்ச்சியைத் தா

-          கவியாழி கண்ணதாசன்

என்ன நண்பர்களே, கவிதை ரசித்தீர்களா?  இந்த ஓவியத்திற்கான ஐந்தாம் கவிதை இது. கவிதை படைத்த கவியாழி கண்ணதாசன் அவர்களுக்கு ஒரு அழகிய பூங்கொத்து!



வரும் 31-ஆம் தேதி வரை நேரமிருக்கிறது. அதாவது இந்த வருடத்தின் கடைசி நாள்! இன்னும் சில நாட்களே இருக்கிறது வருடம் முடிய! கவிதை எழுத விருப்பம் இருப்பவர்கள் ஓவியத்திற்கான கவிதை எழுதி எனது மின்னஞ்சலில் [venkatnagaraj@gmail.com] அனுப்பி வைத்தால் கவிதை வந்த வரிசைப்படி ஒவ்வொன்றாய் எனது பக்கத்தில் வெளியிடுகிறேன். இங்கே வெளியிட்ட பிறகு உங்கள் பக்கத்திலும் வெளியிடலாம்.

மீண்டும் வேறொரு பகிர்வில் சந்திக்கும் வரை......

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

வெள்ளி, 27 டிசம்பர், 2013

ஃப்ரூட் சாலட் – 73 – செவிலித்தாய் – முயற்சி – சிசு வதை


இந்த வார செய்தி:



எனது நெய்வேலி நண்பர் பாலாஜி ராஜாராமன் அவரது முகப்புத்தகத்தின் முகப்பில் தாஜுதீன் என்பவர் பகிர்ந்த இந்த செய்தியை எல்லோருடனும் பகிர்ந்து கொண்டிருந்தார். அது அப்படியே இங்கே.....





அன்பு நண்பர் திரு பாலாஜி மாதேஸ்வரன் தருமபுரி மருத்துவ கல்லூரியில் ஆண் செவிலியராக பணியாற்றுகிறார். இரண்டு நாட்களுக்கு முன்பு உறவினர் ஒருவரை பார்க்க மருத்துவமனை சென்று இருந்தேன். அப்பொழுது நண்பர் பாலாஜி யை பார்க்க நேர்ந்தது. அவர் பணியாற்றும் இடம் தீவிர சிகிச்சை பிரிவு அதுவும் தற்கொலை முடிவால் விஷம் அருந்தி அபாய கட்டத்தில் உள்ளவர்களுக்கு சிகிச்சை அளிப்பது. கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் அங்கு இருந்தேன். அப்பொழுது அவரது அர்பணிப்பு உணர்வுடன் கூடிய அவரது பணியை பார்த்து வியந்து போனேன். ஒரு நிமிடம் கூட ஓய்வு எடுக்காமல் சுழன்று சுழன்று அவர் பணியாற்றிய விதம், நோயாளிகளின் மேல் அவர் காட்டிய பரிவு, உறவினர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அனுசரணை, உணர்வற்று கிடக்கும் நோயாளிகளின் செய்கைகளை குறிப்பறிந்து மருத்துவம் அளித்தது, மயக்கம் தெளிந்து அவர்கள் எடுத்த ஒரு நிமிட விபரீத முடிவால் ஒவ்வொரு நிமிடமும் வலி மற்றும் வேதனையுடன் அலறும் கதறும் நோயாளிகளை ஆறுதல் படுத்தி அவர்களுக்கு தேவையான மருத்துவ உதவிகள் அளித்தது ஒவ்வொரு நிமிடமும் பம்பரமாக அந்த பிரிவு முழுவதும் சுற்றி சுற்றி ஒவ்வொரு நோயாளிகளையும் தனது தாயாக, தந்தையாக,தம்பி, தங்கையாக எண்ணி அவர் ஆற்றிய பணி இன்னும் என் கண்களை விட்டு அகலவில்லை. நான் கேட்டேன் இப்படி ஒற்றை ஆளாக ஒரு நிமிட ஓய்வு இல்லாமல் சுற்றுகிறீர்களே சிறிது ஓய்வு எடுத்து கொள்ளலாமே என்று .

அதற்கு நண்பரின் பதில்: நான் தாமதிக்கும் ஒவ்வொரு நிமிடமும் ஒரு உயிர் போவதற்கான வாய்ப்பு அதிகம் அவ்வாறு எனது தாமதத்தால் நடைபெற்றால் அது எனக்கு மிகுந்த மன வேதனை அழித்துவிடும். அதனால் தான் என்னால் முடிந்தவரை ஒவ்வொரு உயிரையும் காப்பாற்றுவதற்கான அத்தனை முயற்சியும் இருக்கும் சில நேரம் உணவு கூட அருந்த முடியாத சூழ்நிலை ஏற்படும் இருப்பினும் உயிரை காப்பாற்றிய மன நிறைவு.

நாம் கேள்விபட்டு இருப்போம் அரசு மருத்துவமனைகளில் மேற்சொன்ன எதுவும் இருக்காது என்று ஆனால் இவரது அர்பணிப்பு, உழைப்பு பார்த்த பிறகு அந்த ஏழை மக்கள், அறியாமையில் உள்ள மக்கள் கஷ்டத்தை உணர்ந்து தனது கடமையை செய்யும் நண்பனை நினைத்து பெருமை கொள்கிறான் பொதுவாக செவிலியர்களை செவிலி தாய் என்று தான் அழைப்பார்கள் உண்மை தான் இவர் ஆண் உருவில் இருந்தாலும் இவரும் ஒரு தாய் தான். உன்னத பணியாம் செவிலிய பணியை பாராட்டுவோம் வாழ்த்துவோம் அவர்கள் பணி மென்மேலும் சிறக்க.



இந்த வார முகப்புத்தக இற்றை:



இருள் என்று தெரிந்தும் கண்ணைத் திறந்து கொண்டு தான் பயணிக்கிறோம். அது போல தோல்வி என்று தெரிந்தாலும் முயற்சி செய்து கொண்டிருப்போம் – வெற்றி காணும் வரை.

 
இந்த வார குறுஞ்செய்தி: 



WHEN YOU PRAY FOR OTHERS GOD LISTENS TO YOU AND BLESSES THEM AND SOME TIMES WHEN YOU ARE SAFE AND HAPPY REMEMBER THAT SOMEONE HAS PRAYED FOR YOU……


ரசித்த ஓவியம்: 



முகப்புத்தகத்தில் அவ்வப்போது உலவும் போது சில படங்களும், ஓவியங்களும் அப்படியே மனதில் பதிந்து விடும். அப்படி பதிந்த ஒரு ஓவியம் தான் இன்றைக்கு இங்கே பகிர்ந்து கொள்ள நினைத்தது – அருமையான ஓவியம். வசந்தன் என்பவர் வரைந்துள்ள இந்த ஓவியம் கண்ணையும் கருத்தையும் கவர்ந்தது. அந்த ஓவியம் இதோ உங்கள் ரசனைக்கு.....








ராஜா காது கழுதைக் காது:



நேற்று அலுவலகம் செல்வதற்காக வீட்டிலிருந்து பேருந்து நிறுத்தம் நோக்கி சென்று கொண்டிருந்தேன். ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் கீழே ஒரு கணவன் – மனைவி நின்று கொண்டிருக்க, கணவன் கார் கதவினைத் திறக்கும் வரை காத்திருந்தார் மனைவி. அப்போது கணவனுக்கு திடீரென தனது அலைபேசியைக் கொண்டு வராதது நினைவுக்கு வர, மனைவியிடம் “நான் அலைபேசியை மறந்து வீட்டிலே வைத்துவிட்டேன்!” என்று சொன்ன போது மனைவி சொன்னது –



“தினம் உங்களுக்கு இதே வேலையாப் போச்சு. ஒரு நாளாவது எல்லாத்தையும் மறக்காம எடுத்து வைச்சுக்கறதில்லை – ஒரு நாள் என்னையே எங்கேயாவது மறந்து விட்டுட்டு வரப் போறீங்க!”



கணவன் படியில் ஓடியபடியே சொன்னது – ”மறக்காம விட்டுட்டு வந்துடத் தான் நினைக்கறேன் – முடியல!”





ரசித்த விளம்பரம்:



பெண் சிசுக் கொலை பற்றி நிறைய கேள்விப் பட்டிருக்கிறோம்.  தமிழகத்தின் சில பகுதிகளில் நிறையவே நடக்கின்ற ஒன்று – கருத்தம்மா படத்தில் பாரதிராஜா காண்பித்த மாதிரி. இங்கே பெண் சிசுவதை தடுப்பது பற்றி ஒரு அருமையான விளம்பரம் – நான் பார்த்ததை பகிர்ந்து கொண்டிருக்கிறேன். 




ஹிந்தி புரியாதவர்களுக்காக: மருத்துவமனையில் தனது கருவைக் கலைப்பதற்காக மாமியார் மற்றும் கணவருடன் வந்திருக்கும் ஒரு கர்ப்பவதி, கலக்கத்துடன் காத்திருக்கிறார். அப்போது ஒரு பெண் சிசுவின் குரல் – அம்மா என்று அழைத்து, “கடவுளே என் கைகளில் ரேகை எழுதுவதற்குள் எனது தலைவிதியை நிர்ணயிக்காதீர்கள். நான் பூமியில் பிறக்க வேண்டும். உங்களை தொந்தரவு செய்ய மாட்டேன். உணவு உண்டு நீங்கள் இனிப்பு சாப்பிடும் சமயத்தில் பாத்திரங்கள் தேய்த்து தருவேன். எனக்காக படிப்பிற்கு செலவு செய்ய வேண்டாம் – நான் சகோதரனின் புத்தகத்திலேயே படித்துக் கொள்கிறேன். வரதட்சிணை தரவேண்டும் என நினைக்காதீர்கள், நான் கடைசி வரை உங்களுடன் இருந்து உங்களைப் பார்த்துக் கொள்கிறேன், ப்ளீஸ்மா என்னையும் வாழ விடுங்கள்” என்று கெஞ்சுகிறது வயிற்றில் வளரும் அந்த பெண் சிசு. கேட்ட அந்த மாமியார் தனது மனதை மாற்றிக் கொண்டார் என்பதும் காண்பித்திருக்கிறார்கள்.



படித்ததில் பிடித்தது!:



அவருக்காக...

செவ்வாய் தோஷமும்,
நாகதோஷமும்
தீண்டிப் பார்த்த என் ஜாதகத்தை
நைந்து போகாமல்
ஒட்டவைத்த உன் உறவுக்கு
ஆபீஸ் போக ஸ்கூட்டர்,
கையில் வைர மோதிரம்
என்று லஞ்சம் கொடுத்து
இலட்சியத்தை இலட்சமாக்கி
மறுதலித்துப் பேச முடியாமல்
மௌனமாகி ஊமையாகி
தடித்துப் போன உதடுகளில்
லிப்ஸ்டிக் சிரிப்பை
உதிர்த்துக் கொண்டிருப்பது எல்லாம்
கடமை முடிந்தது என
கண் மூடித் தூங்கும் என் அப்பாவுக்காக!

-   ஜெயந்தி சிவகுமார், ஏற்காடு.  


என்ன நண்பர்களே இந்த ஃப்ரூட் சாலட்-ஐ ரசித்தீர்களா? மீண்டும் ஃப்ரூட் சாலட்-உடன் அடுத்த வெள்ளியன்று சந்திக்கும் வரை…



நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.



வியாழன், 26 டிசம்பர், 2013

ஓவியக் கவிதை – 4 – திருமதி பி. தமிழ்முகில் நீலமேகம்

டிசம்பர் மாதம் ஏழாம் தேதி “கவிதை எழுத வாருங்கள்” என்ற தலைப்பில் என்னுடைய வலைப்பூவில் ஒரு படத்தினை வெளியிட்டு கவிதை எழுத அழைப்பு விடுத்திருந்தேன். வருகிற 31-ஆம் தேதி வரை கவிதைகள் எழுதி அனுப்பலாம் எனவும் அதில் சொல்லி இருந்தேன். இந்த வேண்டுகோளுக்கு செவி சாய்த்து சில நண்பர்கள் கவிதைகளை எழுதி அனுப்பி இருக்கிறார்கள். அந்த வரிசையில் இது நான்காம் கவிதை.

ஓவியம் எழுத அழைப்பு விடுத்து, வெளியிட்ட ஓவியம் திரு ராஜன் அவர்களின் கைவண்ணத்தில் உருவானது. ஓவியம் கீழே.



இந்த ஓவியத்திற்கான கவிதை எழுதிய திருமதி பி. தமிழ் முகில் நீலமேகம் அவர்கள் பற்றிய சிறு குறிப்பு:

முகிலின் பக்கங்கள் எனும் வலைப்பூவில் கவிதைகள் படைத்து வரும் திருமதி தமிழ் முகில் அவர்கள் பக்கத்தில் நிறைய கவிதைகள் இருக்கின்றன. ”வல்லமை” இணைய இதழில் அவரது படைப்புகள் பல வெளி வந்திருக்கின்றன. தொடர்ந்து கவிதைகள் படைத்திட எனது வாழ்த்துகள்.

திருமதி தமிழ் முகில் அவர்கள் மேலே கொடுத்த ஓவியத்திற்கு எழுதிய கவிதையை ரசிக்கலாம் வாருங்கள்....

கார் முகிலென நங்கையவள்  குழல்
காற்றில் அலை பாய
கண்ணாளன் சூட்டிய மலர்ச் சரமோ
கானகமெங்கும் மணம்  பரப்ப
காளையவன் மனமும் கன்னியவள்
கவின்தனில்  மயங்கி பின் தாவ
காரிகையோ வெட்கத்தில் முகம் சிவக்க
கனியிதழ் வார்த்தைகள் எல்லாம்
கண்ணாமூச்சி காட்டி ஒளிந்து கொள்ள
கண்களின் சம்பாஷனைகள் அவ்விடம் அரங்கேற
காதல் பார்வையோடு மெளனமே மொழியாகிட
காசினியே கைகளில் தஞ்சம் அடைந்திட
காதல் மொழி  கிளிகள் இரண்டின்
கானமழை நனைத்திடுமே -
கானகத்தை காதல் மழையிலே !!!

-    திருமதி பி.தமிழ் முகில் நீலமேகம்

என்ன நண்பர்களே, கவிதை ரசித்தீர்களா?  இந்த ஓவியத்திற்கான நான்காம் கவிதை இது. கவிதை படைத்த திருமதி பி. தமிழ் முகில் நீலமேகம் அவர்களுக்கு ஒரு அழகிய பூங்கொத்து!



வரும் 31-ஆம் தேதி வரை நேரமிருக்கிறது. அதாவது இந்த வருடத்தின் கடைசி நாள்! இன்னும் சில நாட்களே இருக்கிறது வருடம் முடிய! கவிதை எழுத விருப்பம் இருப்பவர்கள் ஓவியத்திற்கான கவிதை எழுதி எனது மின்னஞ்சலில் [venkatnagaraj@gmail.com] அனுப்பி வைத்தால் கவிதை வந்த வரிசைப்படி ஒவ்வொன்றாய் எனது பக்கத்தில் வெளியிடுகிறேன். இங்கே வெளியிட்ட பிறகு உங்கள் பக்கத்திலும் வெளியிடலாம்.

மீண்டும் வேறொரு பகிர்வில் சந்திக்கும் வரை......

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.