வியாழன், 8 ஜூன், 2017

மூணு க்வார்ட்டர் வருமா? – Quarter as Barter!….

படம்: இணையத்திலிருந்து....

நேற்றைய பதிவில் சொன்னது போல, இதோ, இன்னிக்கும் ஒரு பதிவுடன் வந்துட்டேன்! தமிழகத்தில் இருந்த போது நிறைய விஷயங்கள் பார்க்கக் கிடைத்தது. தமிழகத்தில் பெரும்பாலானவர்கள் சோம பானத்தில் மூழ்கி விட்டார்கள் என்பதை சிலரின் பேச்சிலும் செயலிலும் தெரிந்து கொள்ள முடிந்தது. எங்கே பேச்சு தொடங்கினாலும், எந்த விஷயத்தில் தொடங்கினாலும், சுத்தி சுத்தி சோம பானம் பற்றிய பேச்சாகத் தான் முடிவதைப் பார்க்க முடிந்தது! அப்படி சில விஷயங்கள் பார்க்கும் முன்னர் தலைப்பில் சொன்ன Barter அதாவது பண்டமாற்று பற்றி சில விஷயங்கள் பார்க்கலாமே….


படம்: இணையத்திலிருந்து....

சின்ன வயதில் கோலி குண்டு சேகரிப்பது எனக்கு ஒரு பொழுதுபோக்கு! விளையாடுவேனா என்று கேட்டால் பதில் இல்லை என்று தான் சொல்ல வேண்டியிருக்கும்! ஆனாலும் ஒரு பெரிய டப்பா நிறைய அழகழகாய் நிறைய கோலி குண்டுகள் சேகரித்து வைத்திருந்தேன். மூன்று அளவுகளில் இருந்ததாய் நினைவு – சிறியது, நடுவாந்திரமாக சில, பெரிய கோலிகுண்டுகள் சில என இருக்கும். மற்ற தெரு நண்பர்களோடு  இரண்டு சிறிய கோலிகுண்டு ஒரு நடுவாந்திர அளவு கோலிகுண்டு கொடுத்து பெரிய அளவு கோலிகுண்டு வாங்கிக் கொள்வது வழக்கமாக இருந்தது – அதே போல் சிகரெட் அட்டைகள்/தீப்பெட்டிகள் மாற்றிக் கொள்வது என்ற அளவில் தான் பண்டமாற்று! பைசாவெல்லாம் பார்க்க முடிந்ததே இல்லை!

படம்: இணையத்திலிருந்து....

பண்டமாற்று பற்றி ஒரு முறை படித்த விஷயம் இப்போதும் நினைவில் உண்டு! பழங்காலத்தில் சில நாடுகளில் மண்டையோடுகள் கூட பண்டமாற்று செய்து கொண்டது உண்டு என்று படித்ததில், காலியாக இருக்கும் [!] நம்ம மண்டையோட்டுக்கு என்ன பொருள் கிடைக்கும் என்று யோசித்திருக்கிறேன்! தலையில் முடி குறைவாக இருப்பவர்களைப் பார்த்தால் அப்பா வேடிக்கையாக சொல்வதுண்டு – “உள்ளேயும் ஒண்ணுமில்ல, வெளியேயும் ஒண்ணுமில்ல!” நம்ம மண்டையோட்டுக்கு என்ன கிடைக்கும்னு யோசிச்சுப் பார்த்தா ஏதாவது கிடைக்கும்கறீங்க! எனக்குத் தெரிஞ்சு பைசாவுக்கு பிரயோஜனம் இல்லை!

ஆனா அந்த மண்டையோடு கொடுத்து பொருட்களை வாங்கி இருக்கிறார்கள் பழங்குடியினர்கள் என்று தெரிந்த போது கொஞ்சம் கலக்கமாகத் தான் இருந்தது! இப்போது ஏதாவது கடைக்குச் சென்று, பையிலிருந்து இரண்டு மண்டையோடுகளை டேபிளில் வைத்து, இதை வச்சுக்கிட்டு நாலு தோசை கொடுப்பா! என்று கேட்டால் எப்படி இருக்கும்! கொஞ்சம் அந்த காட்சியை உங்க மனக்கண்ணில் ஓட்டிப் பாருங்களேன்! சும்மா அதிரும் இல்ல! கல்லாவில் இருப்பவர் கத்திக்கொண்டு எழுந்திருப்பார் இல்ல!


படம்: இணையத்திலிருந்து....

இந்த பண்டமாற்று முறை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் மெசபடோமியா பழங்குடியினர் காலத்திலேயே இருந்திருக்கிறது என்று படித்திருக்கிறேன்! மனிதர்கள் தங்களது உணவு மற்ற தேவைகளுக்கு பதிலாக விளைபொருட்களையும், மற்றவற்றையும் கொடுத்து வாங்கிக் கொண்டிருக்கிறார்கள். பணம் என்ற ஒன்றை கண்டுபிடிப்பது வரை இப்படித்தானே! இப்போது பணம் வந்து விட்டாலும் சில இடங்களில் இந்த பண்டமாற்று இருந்து கொண்டிருக்கிறது என்பதை பார்க்க முடிகிறது! பணம் பற்றிய பேச்சு வரும்போது இந்த பண்டமாற்று பற்றி கேட்க முடிந்தது – சில விஷயங்களைப் பார்க்கலாம்!

திருவரங்கத்திலிருந்து திருப்பராய்த்துறைக்கு மாலை நேரத்தில் செல்ல வேண்டியிருந்தது. சத்திரம் பேருந்து நிலையத்தில் அந்த நேரத்தில் திருப்பராய்த்துறை வழி செல்லும் பேருந்துக்கு நிறைய பேர் காத்திருந்தார்கள். ஒரு பேருந்து வந்தவுடன் பாய்ந்து சென்று கையில் கிடைப்பதை சீட்டில் போட்டு இடம் பிடிப்பார்கள்! அப்படி ஒருவர் பை ஒன்றை போட்டு இடம் பிடித்தார். பக்கத்து சீட்டில் ஆள் வந்து அமர்ந்த பிறகும் பை வைத்தவரைக் காணோம்! அவர் பை போட்ட ஆள் வரலையே, யாராவது எடுத்துட்டுப் போயிட்டா என்ன ஆவறது என்று புலம்பிக் கொண்டிருந்தார். பேருந்து புறப்படும் சமயத்தில் ஒரு பெரியவர் – மீசையை முறுக்கியபடி வந்து பையை எடுத்து அங்கே உட்கார, புலம்பிக் கொண்டிருந்தவர் “இப்படி பையை வச்சுட்டு எங்கே போனீங்க! யாராவது எடுத்துட்டுப் போயிருந்தா என்ன ஆகும்?” என்று கவலையுடன் கேட்க, மீசைக்காரர் சொன்ன பதில்! ”போனாப் போகுது! எடுத்தவன் அதை வச்சு மூணு க்வார்ட்டர் வாங்கிடுவானா!” புலம்பினவர் அதன் பிறகு கப் சிப்!

இங்கே இப்படி என்றால், ஒரு காய்கறி கடையில் பேச்சு இப்படி போனது – ”கிலோ எப்படிப்பா?” கடைக்காரர் சொன்ன பதில் கேட்டவுடன் காய் வாங்க வந்தவர் சொன்னது – “என்னப்பா, ஒரு க்வார்ட்டரை விட அதிக விலை சொல்றயே!” எங்கும் எதிலும் க்வார்ட்டர் தான் முன்னிலை வகிக்கிறது போங்க! இப்படியே போனா, பேசாம, நோட்டு, காயின்லாம் அச்சடிக்கறத விட்டுட்டுடலாம்…. எதைக் கொடுத்தாவது க்வார்ட்டர் வாங்க ஆட்கள் நிறைய இருக்காங்க என்று, யாராவது அரசாங்கத்துக்கிட்ட சொல்லுங்கப்பா!

தொடர்ந்து ச[சி]ந்திப்போம்!

நட்புடன்

வெங்கட்

புது தில்லி.

30 கருத்துகள்:

  1. போன வார செய்தி : க்வார்ட்டர் கிடைக்கவில்லை என்பதற்காக ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தற்கொலை! - அடக் கொடுமையே....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு
  2. அரசே சோம பாண விற்பனையில் இருக்கும்பொழுது,
    குடிமக்களில் பெரும்பாலோர் குடி- மக்களாக இருப்பதில் வியப்பில்லை ஐயா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அரசே விற்பனையில்! :(

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  3. மிகவும் ஆர்வமாகப் படித்து வந்தேன். கடைசிவரை நல்ல ‘கிக்’குடன் தள்ளாடிப்போனேன். நன்றாக எழுதியுள்ளீர்கள் வெங்கட்ஜி :)

    குறிப்பாக இன்றைய ஹோட்டலில் 4 தோசைக்கு பதிலான இரண்டு மண்டையோடுகளை வைக்கும் கற்பனை + பஸ்ஸில் பையைப்போட்டு விட்டு தாமதமாக ஏறியவர், ஒருவேளை பாம்பாட்டியாக இருந்து, பைக்குள் பாம்புக்குட்டிகளை வைத்திருப்பாரோ எனவும் கற்பனை செய்து நினைத்தேன். :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா... உங்களுக்கும் கிக் ஏறி விட்டதா! :)

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!

      நீக்கு
  4. சிறிய இடைவெளிக்குப் பின் 'கிர்' ன்னு 'கிக்' ஸ்டார்ட் பண்ணீட்டிங்க. வெரிகுட்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி....

      நீக்கு
  5. கைக்குழந்தை சேட்டைகளைக்கூட குவார்ட்டர் அடிச்ச மாதிரி தூங்குதுன்னு சொல்ல ஆரம்பிச்சுட்டாங்க. நாடு குட்டிச்சுவரா போச்சுண்ணே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நாடு குட்டிச்சுவரா போச்சுண்ணே! :(

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி

      நீக்கு
  6. பொதுமக்கள் நலனில் அக்கறை கொள்ள வேண்டிய அரசாங்கமே ஆதரவு கொடுத்து விற்கும் போது என்ன செய்ய முடியும்..தற்கொலைகள் கூட நடக்கிறது...அரசு மீட்பு மையங்களை அமைத்து க்வாட்டரில் மிதந்தவர்களை மிதப்பவர்களைக் கரையேற்றி வாழ வைக்க வேண்டாமோ? என்ன சொல்ல..

    கீதா: மேற் சொன்ன கருத்துடன்...ஆஹா நானும் கோலிக் குண்டுகள் சிறியது பெரியது, நடுத்தரம் என்று விளையாடியதும் உண்டு, சேர்த்துவைத்ததும் உண்டு, நிறைய. ஆனால் கோலிக் குண்டுகள் மட்டும் நான் யாருக்கும் கொடுக்க மாட்டேன் பண்டம் மாற்றும் முறையில். ஆனால் நான் என்னிடம் இருக்கும் தீப்பெட்டிப் படங்கள் கொடுத்து கோலிக் குண்டுகள் பெற்று விடுவேன்!!! சிறிய வயதில் மயில் தோகை கொடுத்து நெற்றியில் தட்டி சொடக்கு போடும் சொடக்கு அதன் பெயர் மறந்துவிட்டது ...அது வாங்கியதுண்டு. சிகரெட் அட்டைகள், தீப்பெட்டிகள், மஞ்சாடி, புளியங்கொட்டை, என்று பல...நிறைய நினைவுகள்...ஜி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி.

      நீக்கு
  7. பண்டமாற்று, நான் சிறுவனாக இருந்தபோது (6-7 வயது) இருந்தது. தாமிரவருணியில், வெள்ளம் வந்தபோது, இக்கரையிலிருந்து அக்கரைக்கு, படகில் கொண்டுவிட, 25 பைசா அல்லது வீட்டில் வந்து நெல் வாங்கிக்கொள்வார்கள். நாங்க சிறுவர்கள் (லீவுல எல்லா உறவினர்களும்) 4-5 முறை ஜாலியா படகில் சென்றுவிட்டு (வீட்டுப் பெரியவர் பெயரைச் சொல்லித்தான்), அடுத்த நாள், படகுக்காரன், வீட்டுக்கு வந்து, நெல் தாங்க என்று கேட்டபோதுதான், அவர்களுக்கு நாங்கள் செய்த அட்டூழியம் தெரியவந்தது.

    கோலிக்குண்டு-இப்போதெல்லாம் பசங்களுக்கு இந்த விளையாட்டு தெரியுமான்னே தெரியலை. எல்லோரும் செல்போனில்தான் இருக்கிறார்கள்.

    குடும்ப, சமூகத் தலைவர்களின் மண்டையோட்டை பத்திரப்படுத்தி, அதில் ஆர்ட் ஒர்க், மற்றும் மெட்டல்கள் சேர்த்து ஒரு பாத்திரமாகச் செய்து அதில் குடிக்கும் வழக்கம் திபெத்தியர்களிடத்து உண்டு. அந்தப் பெரியவர்களின் ஆசி கிடைக்கும் என்று நம்பிக்கை. 'ஏப்பா.. இந்த மண்டையோட்டில் 2 காபி ஊற்றித்தாப்பா' என்று ஹோட்டலில் சொல்ல வாய்ப்பு இருக்கிறது.

    இன்னும் பயணக் கட்டுரை தொடர ஆரம்பிக்கவில்லை. த. ம +1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் நினைவுகளையும் மீட்க இப்பதிவு உதவியதில் மகிழ்ச்சி...

      பயணக் கட்டுரைகள் ஆரம்பிக்க வேண்டும். இணைய இணைப்பில் சில சிக்கல்கள். கூடவே பணிச்சுமை. பின்னூட்டமே அலைபேசி இணைப்பில் தான்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத்தமிழன்.

      நீக்கு
  8. ‘எண்ணம் போல் வாழ்’ என்பார்கள். அதை தவறாக புரிந்துகொண்டு சோமபானம் சாப்பிடும் நம்மவர்களில் சிலர் (?) எதைப்பற்றி பேசினாலும் தாங்கள் நினைத்துக்கொண்டு இருப்பதையே சொல்கிறார்கள் போலும். பதிவை இரசித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

      நீக்கு
  9. நான் கோலி குண்டு விளையாடி இருக்கிறேன். ஆனால் மறந்து விட்டது. ஆறோ, ஏழோ சிறிய (பலிங்கி என்று சொல்லுவோம்) கோலி குண்டுகள். அதனுடன் ஒரு பெரிசு. அதற்கு ஏதோ பெயர் சொல்வார்கள். ஞாபகமில்லை! சார்மினார் அட்டை நூறு, சிஸர்ஸ் அட்டை 200, பாசிங் ஷோ 300, வில்ஸ் அட்டை 500... தங்க நிறத்தில் ஒன்று வரும். பெயர் நினைவில்லை அது 1000!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  10. மண்டையோட்டை வாங்கி என்ன செய்திருப்பார்கள்? மந்திரவாதிக்கு மை தயாரிக்க விற்றிருப்பார்களோ!

    அப்படி ஒரு குவார்ட்டர் விலைதான் என்னவாம்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படி ஒரு குவாட்டர் விலை தான் என்னவாம்? :) அது தெரிந்திருந்தால் இப்பதிவு வந்திருக்காதே!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  11. அருமை அருமை
    பண்டமாற்று,மண்டையோடு
    குவார்ட்டர் எனச் சொல்லி முடித்த விதம்
    அருமையிலும் அருமை
    நிஜமாகவே இப்படித்தான் இருக்கிறது
    பைசா பிரயோசனம் இல்லை என்பது கூட
    ஒரு குவாட்டருக்க்க் கூட
    பிரயோசனம் இல்லை என்பது மாதிரி
    சுவாரஸ்யமான பதிவு
    வாழ்த்துக்களுடன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒரு குவாட்டருக்குப் பிரயோஜனமில்லை!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமணி ஜி.

      நீக்கு
  12. பாதணிகளை கூட இருக்கையில் எறிந்து தம் இருப்பை பதிவு செய்பவரும் உள்ளார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அன்பே சிவம்.

      நீக்கு
  13. உப்பு கூட பண்டமாற்றாய் இருந்தது சொரணையுள்ள ஒருகாலத்தில் !
    குவார்ட்டர் அந்த இடத்தில் வந்தால் என்ன அர்த்தம் :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான்ஜி.

      நீக்கு
  14. பதில்கள்
    1. ஒழியாது....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி புலவர் ஐயா.

      நீக்கு
  15. நான் தம்பியோடு போட்டிபோட்டுக் கொண்டு கோலிக்குண்டுகள் சேகரித்திருக்கேன். தீப்பெட்டிப் படங்களும்! அவற்றை வைத்து கோலிக்குண்டுகள் விளையாடியதுண்டு. சில கோலிக்குண்டுகள் மாவால் ஆனவை உடைந்து போய் அழுதிருக்கேன். :) மண்டையோட்டைக் கொடுத்து தோசை வாங்குவது நல்ல யோசனை தான்! :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....