சனி, 12 அக்டோபர், 2019

காஃபி வித் கிட்டு – ரசனை – பாசிட்டிவ் செய்தி – தீபாவளி பரிசு – சுவை




காஃபி வித் கிட்டு – பகுதி – 49

அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம். இன்றைய பொழுதை ஒரு இனிமையான வாசகத்துடன் ஆரம்பிக்கலாம்.

இந்த வாரத்தின் ரசித்த வாசகம்:

ரசிப்பதற்கு ஏதேனுமொரு விஷயம் தினமும் கிடைத்துக் கொண்டிருக்கும் வரை வாழ்க்கை அழகானது.

இந்த வாரத்தின் பாசிட்டிவ் செய்தி – நம்புநாயகி கேட்டரிங் சர்விஸ்:



தமிழ் இந்து இணைய தளத்தில் இன்று படித்த பாசிட்டிவ் செய்தியிலிருந்து ஒரு பகுதி…

மதுரையின் புறநகர்ப் பகுதியில் உள்ளது உலகனேரி. அளவில் சிறிய அந்த ஊரில் யாரிடம் கேட்டாலும் நம்புநாயகி கேட்டரிங் சர்வீஸ் நிறுவனர் ஜெயசித்ராவின் வீட்டை அடையாளம் காட்டிவிடுவார்கள். திருநங்கையான ஜெயசித்ரா "இங்கு ஜெயா அம்மா என்றால் எல்லோருமே சொல்லிவிடுவார்கள். எங்களுக்கு பெரும்பாலும் ஏழை மக்களிடம் இருந்துதான் ஆர்டர்கள் வருகின்றன. நாங்கள் கட்டுப்படியாகும் விலையில் கொடுப்பதுதான் அதற்குக் காரணம். அதுதவிர மதுரை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்களுக்கு எனது சமையலின் கைப்பக்குவம் பரிச்சயம். அவ்வப்போது விழாக்களுக்கு அவர்களின் ஆர்டர்கள் வரும்" என்றார்.

ஜெயசித்ரா தனது தொழில் மீது பெருமிதம் கொண்டிருந்தாலும் சமூகம் இன்னும் நிறைய மாறவேண்டியிருக்கிறது எனக் கூறுகிறார். எங்கள் உணவின் சுவையைப் பலரும் பாராட்டுகின்றனர். எங்களுக்கு நன்றாக பரிச்சயமானவர்கள் மீண்டும் மீண்டும் அளிக்கும் வாய்ப்பே எங்களுக்குப் பெருந்துணை. புதிய ஆர்டர்கள் கேட்டுச் செல்லும்போது பல இடங்களில் எங்களுக்கு அவமானமே நிகழ்கிறது.

திருநங்கைகள் கையால் சமைத்த உணவை உண்பதை தரக்குறைவாக சிலர் கருதுகின்றனர். நாங்கள் கவுரமான தொழில் செய்துவாழ சமூகத்தின் ஒத்துழைப்பு மிக மிக அவசியம். பெரும்பான்மை சமூகம் எங்கள் மீதான பார்வையை மாற்ற வேண்டும். இருந்தாலும் இவற்றால் நாங்கள் சோர்ந்துவிட மாட்டோம். எங்களின் இலக்கை எட்டியே தீர்வோம்" என்றார்.

முழுச் செய்தியும் கீழேயுள்ள சுட்டியில் படிக்கலாம்…


ஜெயசித்ரா மற்றும் அவர் உடன் இருக்கும் மற்ற திருநங்கைகளுக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்…

இந்த வாரத்தின் தகவல் – தீபாவளியும் பரிசுகளும்




தலைநகர் தில்லியில் ஒரு வழக்கம். தீபாவளி வந்து விட்டால் விதம் விதமான பரிசுப் பொருட்களை பகிர்ந்து கொண்டு மகிழ்ச்சியை பரஸ்பரம் தெரிவித்துக் கொள்வார்கள். பெரும்பாலான நபர்கள் தரும் பரிசுப் பொருட்கள் மூன்று அல்லது நான்கு வித உலர் பழங்கள் அடங்கிய பரிசுப் பெட்டியாகத் தான் இருக்கும். தீபாவளிக்கு முன்னரே இந்த பொருட்களின் விற்பனை தொடங்கிவிடும். தீபாவளி என்றாலே கோலாகலம் தான். பட்டாசு வெடிக்கிறார்களோ இல்லையோ இப்படி பரிசுப் பொருட்களை பகிர்ந்து கொள்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள் என்பதால் விற்பனை அமோகமாக இருக்கும். இந்த வருடமும் பல பரிசுப் பொருட்களின் வியாபாரம் துவங்கி விட்டது – எத்தனை எத்தனை அழகான பொருட்களை விற்பனை செய்கிறார்கள்.  எனக்கு யாரும் கொடுப்பதுமில்லை நானும் யாருக்கும் கொடுப்பதில்லை! விற்பனைக்கு வரும் பொருட்களைப் பார்ப்பதோடு முடிந்து விடுகிறது தீபாவளிகள்! இந்த வருடம் விற்பனைக்கு வந்திருக்கும் பொருட்களை முடிந்தால் படம் எடுத்து பிறிதொரு சமயத்தில் பகிர்ந்து கொள்கிறேன்.

ராஜா காது கழுதை காது:

திருச்சி மலைக்கோட்டையிலிருந்து திருவரங்கம் நோக்கிப் பயணத்த போது என் முன் இருக்கையில் ஒரு புது மண ஜோடி. ”புதிதாக கல்யாணம் ஆனவர்களுக்கு எத்தனையோ பேச இருக்கும்! அதையெல்லாமா காது கொடுத்து கேட்டீங்க?” என்று யாரும் வம்புக்கு வருவதற்குள் சொல்லி விடுகிறேன் – அப்படி அனைத்தையும் கேட்கவில்லை. கொஞ்சம் சத்தமாகவே அந்தப் பெண் சொன்னது எனக்கு மட்டுமல்ல பேருந்தில் இருந்த பலருக்கும் கேட்டது! பேருந்து சத்திரம் பேருந்து நிலையத்திற்கு அருகே இருக்கும் உணவகம் தாண்டியபோது அந்தப் புதுமண ஜோடி பேசியது இது தான்…

ஆண்: அங்கே பாரு – நேத்து நாம அந்த ஹோட்டல்-ல தான் சாப்பிட்டோம்!

பெண்:  ஆமாங்க… நல்லாவே இல்லை – பெயர் மட்டும் தான் ஹோட்டல் சுவை! உணவுல சுவையே இல்லை!

இந்த வாரத்தின் விளம்பரம் – பெண் கல்வி

பெண் குழந்தைகளை படிக்க வைக்கக் கூடாது எனும் எண்ணம் இன்னும் பல கிராமங்களில் இருக்கிறது. எத்தனை வருடங்கள் ஆனாலும் இந்த மாதிரி எண்ணங்களை சிலர் விடுவதில்லை. நெஸ்ட்லே நிறுவனத்தின் ஒரு விளம்பரம் – மனதைத் தொட்டது.  பாருங்களேன்.




இந்த வாரத்தின் ஸ்வாரஸ்ய கேள்வி பதில்:

கேள்வி: thinking out of the box என ஆங்கிலத்தில் சொல்லபடுவதன் அர்த்தம் என்ன?

பதில்:  ஒரு சோப்பு தயாரிக்கும் ஜப்பான் நிறுவனத்தில் ஒரு பிரச்சினை எழுந்தது. ஒவ்வொரு சோப்பினையும் ஒரு சோப்பு பெட்டிக்குள் வைத்து மூடி அதனை அந்த நிறுவனம் விற்பனைக்கு அனுப்பிவைக்கும். பிரச்சினை என்னவென்றால் சில பிளாஸ்டிக் டப்பாவில் சோப்புகள் வைக்கப்படவில்லை. அந்த தயாரிப்பு முழுவதும் தானியங்கியால் இயக்கப்பட்டதால் மனித கண்காணிப்பு சாத்தியம் இல்லை. அந்த இயக்கம் முழுவதும் கன்வேயர் பெல்ட் மூலம் இயக்கப்பட்டது. நிறுவன அதிகாரிகள் கையை பிசைந்து கொண்டிருந்தனர். சோப்பு இல்லாத பெட்டியை கண்டுபிடிப்பது கடினமாக இருந்தது. ஊழியர் கூட்டம் நடத்தி ஆலோசனை கேட்டனர்.

ஒரு ஊழியர் சுலபமான வழி ஒன்றை சொன்னார். கான்வெயரின் இறுதிப்பகுதியில் சோப்பினை பெட்டியில் வைக்கும் பகுதியின் பக்கவாட்டில் பெரிய மின் விசிரியை வைத்து வேகமாக ஓடவிட்டனர். சோப்பு அடைபடாத பெட்டிகள் காற்றின் வேகத்தால் கீழே தள்ளப்பட்டன. எல்லா பெட்டிக்குள்ளும் சோப்பு இருப்பதை உறுதி செய்ய முடிந்தது.

Out of the box thinking என்பது ஒரு பிரச்சனையில் நம்மால் சாதாரணமாக முடிவுக்கு வரவில்லை என்றால் மாற்று சிந்தனை மூலம் தீர்வு காண்பதே.

பின்னோக்கிப் பார்க்கலாம் வாங்க:

2016-ஆம் ஆண்டு இதே நாளில் எழுதிய ஒரு பதிவு. படிக்காதவர்கள் படிக்கலாமே!


நண்பர்களே, இந்த வாரத்தின் காஃபி வித் கிட்டு பதிவு பற்றிய உங்கள் கருத்துகளைச் சொல்லுங்களேன். விரைவில் வேறு சில செய்திகளோடு மீண்டும் ச[சி]ந்திப்போம்….
 
நட்புடன்

வெங்கட்
புது தில்லி

52 கருத்துகள்:

  1. ரசனையான விடயங்கள் எல்லாமே குறிப்பாக சோப் கம்பெனியில் ஃபேன் வைப்பது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவில் பகிர்ந்த விஷயங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கில்லர்ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  2. சுவாரஸ்யமான கதம்பம்.   மதுரைச் செய்தி படித்த நினைவாய் இருக்கிறது. குட்மார்னிங்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காலை வணக்கம் ஸ்ரீராம்.

      மதுரைச் செய்தி - சனி [12.10.19] தமிழ் இந்துவில் வந்தது. அதற்கு முன் படித்ததில்லை நான். வேறு எங்கேனும் வந்திருக்கிறதா பார்க்க வேண்டும்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  3. இனிய விடுமுறை லேட் காலை வணக்கம்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

    வாசகத்துடன் நான் 100 சதவிகிதத்திற்கும் மேல் ஹைஃபைவ் சொல்கிறேன்...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இனிய காலை வணக்கம் கீதாஜி!

      வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  4. ஜெயசித்ரா அவர்களுக்குப் பாராட்டுகள் வாழ்த்துகள். அவருடன் இருக்கும் மற்ற திருநங்கைகளுக்கும். சமூகம் எதைத்தான் சொல்லவில்லை...எப்படி இருந்தாலும் என்ன செய்தாலும் இப்படியும் சொல்லும் அப்படியும் சொல்லும்...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //சமூகம் எதைத்தான் சொல்லவில்லை// அதானே... அவர்களுக்கு ஏதாவது சொல்லிக்கொண்டே இருக்க வேண்டும் கீதாஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  5. ப்போது இங்கும் வடக்கைப் போல தீபாவளிப் பரிசுப் பொருட்கள் வந்துவிட்டன ஜி. பெரிய கடைகளில் எல்லாம் இதுதான் வியாபாரமே. நட்ஸ் அண்ட் ஸ்பைசசில் எப்போதுமே கிஃப்ட்ஸ் இப்படி இருக்கும்.

    ராகாக கா ஹா ஹா ஹா ஹா..மாப்பிள்ளை ஹோட்டல்ல சாப்பாடு நல்லாருந்துச்சுல நு சொல்றதுக்குள்ளயும் பெண் முந்திக் கொண்டாளோ?!!! ஹா ஹா ஹா...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கிஃப்ட்ஸ் - இது பல சமயங்களில் தொந்தரவு தான் கீதாஜி! நம் ஊரிலும் வந்து விட்டதா? பல வட இந்தியர்கள் அங்கேயும் குடி பெயர்ந்து ஆரம்பித்திருக்கலாம் - அல்லது இங்கே இருந்து அங்கே சென்ற தமிழர்கள் ஆரம்பித்திருக்கலாம்.

      ராகாககா - :))))

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  6. காணொளி செம. அக்குழந்தைகள் வெரி க்யூட்..ரசித்தேன்...நகரங்கள் விரிந்து நம் கிராமங்களை தங்கள் வசம் ஆக்கி கிராமங்கள் அழிந்து வருகின்றன ஆனால் எண்ணங்கள் இன்னும் விரிவடையவில்லை. கிராமங்கள் வரை விரிவதற்குப் பதிலாக மக்களின் எண்ணங்கள் விரிந்தாலே போதும்..

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காணொளி உங்களுக்கும் பிடித்திருந்ததில் மகிழ்ச்சி கீதாஜி. க்யூர் குழந்தைகள் தான். மக்களின் எண்ணங்கள் விரிந்தாலே போதும். இன்னும் பலர் குறுகிய வட்டத்திற்குள் தான் கீதாஜி!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  7. அவுட் ஆஃப் தெ பாக்ஸ் திங்கிங்க் செம!! அந்த மாற்றுச் சிந்தனை நிகழ்வு

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மாற்றுச் சிந்தனை... என்னவொரு சிந்தனை... உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கீதாஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  8. எங்கள் மீதான பார்வையை மாற்ற வேண்டும். இருந்தாலும் இவற்றால் நாங்கள் சோர்ந்துவிட மாட்டோம். எங்களின் இலக்கை எட்டியே தீர்வோம்" //

    இந்த மன உறுதி இருந்தால் போதும் எதையும் சாதித்து விடலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சாதிக்க மன உறுதி தேவைதான் ஜோசப் ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  9. ரசித்த கதம்பம்.

    //திருநங்கைகள்// - சமூகப் பார்வை மாறுவது மெதுவாகத்தான் நிகழும். ஆனால் நிகழும். சோர்வில்லாமல் அந்த இலக்கை நோக்கி அவங்க போகணும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்தப் பகிர்வு உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி நெல்லைத் தமிழன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  10. திருநங்கைகள் குறித்த செய்தி அருமை. எல்லாத் திருநங்கைகளும் இப்படி உழைத்துப் பிழைக்க வழி செய்ய வேண்டும். அரசும் பல திட்டங்களைக் கொண்டு வந்திருக்கிறது. அதை அவர்களும் பயன்படுத்திக்கொள்ள வழி செய்ய வேண்டும். மற்றப் பரிசுப் பொருட்கள் அடங்கிய படங்களும் மற்றத் தகவல்களும் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. திட்டங்கள் இன்னும் தேவை. இருக்கும் திட்டங்களை பயன்படுத்த மக்களும் தயாராக இருக்க வேண்டும் கீதாம்மா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  11. அவுட் ஆப் பாக்ஸ் திங்கிங் என்பது பற்றி அறிவேன். ஆனால் அதன் பின்புலத்தை இப்போதுதான் அறிகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.

      நீக்கு
  12. திரு நங்கைகள் சமையலறையே அழகாக இருக்கிறது.
    அவர்கள் உலகம் விரிவடைய வேண்டும்.
    தகுந்த வரவேற்பைப் பெற வேண்டும்.

    தீபாவளிப் பரிசுகள் நம் ஊரிலும் இவ்வாறு வட இந்தியர்களிடமிருந்து
    வரும்.
    அழகான கிப்ட் பாக்ஸ்.

    ஓ. இதுதான் அவுட் ஆஃப் தெ பாக்ஸ் திங்கிங்க் ஆ. அருமை.
    சுவாரஸ்யமான பஸ் பயணம் உங்களுடையது . நன்றி வெங்கட்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா.

      நீக்கு
  13. வணக்கம் சகோதரரே

    அருமையான காஃபி... என்ன.. ! நேற்று முற்பகல் தயாரித்த காஃபியை இன்று கடைசியாக வந்து காலை அருந்துகிறேன். ஆனாலும் காஃபியின் சுவை மாறவில்லை. ஹா.ஹா.ஹா.

    திருநங்கைகளின் சோர்வில்லாத முயற்சிகளுக்கு வாழ்த்துக்கள்.

    தீபாவளி பரிசுகள் நன்றாக உள்ளது. இங்கேயும் இந்த பரிசுகளை கடைகளில் பாத்திருக்கிறேன்.

    காதில் விழுவது பகிர்வதற்காகத்தானே! இல்லாவிட்டால் அதன் தலைப்புக்கு சம்பந்தம் இல்லாது போய் விடுமே! ஹா.ஹா.ஹா.

    சோப்பு கம்பெனியின் பிரச்சனையை தீர்த்த விதம் நன்றாக உள்ளது.

    விளம்பரம் நன்று. சுவையான இந்த வார காஃபிக்கு நன்றிகள்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கமலா ஹரிஹரன் ஜி.

      நீக்கு
  14. திருநங்கைகள் இப்படி உணவு வழங்கி சேவை செய்வது மிகவும் பாராட்டிற்குரியது. அவர்களையும் இந்தச் சமூகம் மதிக்கக் கற்க வேண்டும்.

    இங்கு கேரளத்தில் ஓணப்பரிசுகள் வரத் தொடங்கியுள்ளன. நன்றாகவே இருக்கிறது பரிசுப் பொருட்கள்.

    ஜப்பானிய ஐடியா அவுட் ஆஃப் தெ ஃபோக்கஸ் மிக மிக அருமை.

    அனைத்தும் சுவைத்தேன்

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன் ஜி.

      நீக்கு
  15. திருநங்கைகள் பாராட்டுக்குரியவர்கள் ஆதரவு அளிக்கவேண்டும் மக்கள்.

    காணொளி அருமை.எண்ணங்கள் விரிவடையட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி.

      நீக்கு
  16. 20 லட்சம் பெண் குழந்தைகள் பள்ளி செல்லாமல் இருக்கின்றார்களா? வட இந்தியாவில் இந்த எண்ணிக்கை அதிகமாக இருக்கும்.

    அதென்ன சுவராசியம் என்பதற்கு நீங்க வேற மாதிரி எழுதுறீங்க?

    இந்த வாரத்தின் ஸ்வாரஸ்ய கேள்வி பதில்:

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜோதிஜி.

      நீக்கு

  17. //கவுரமான தொழில் செய்துவாழ சமூகத்தின் ஒத்துழைப்பு மிக மிக அவசியம்.//

    அவர்கள் சொல்வது உண்மை. சமூகம் அவர்களை பார்க்கும் பார்வை மாற வேண்டும். மரியாதை கொடுக்கவேண்டும்.
    காணொளி அருமை.
    பகிர்வு அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சமூகம் அவர்களைப் பார்க்கும் பார்வை மாற வேண்டும் என்பது சரியான வழி கோமதிம்மா...

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  18. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முருகானந்தம் ஐயா.

      நீக்கு
  19. என்ன வெங்கட்... ரொம்ப நாளா பதிவே போடாத மாதிரி இருக்கு.... அடுத்த பயணக் கட்டுரை ஆரம்பிக்க வேண்டியதுதானே..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் நெல்லைத் தமிழன், ஆமாம்... பதிவு போட்டு கிட்டத்தட்ட இரண்டு வாரம் ஆகிவிட்டது. பதிவுகள் வெளியிட முடியாத சூழல். பணிச்சுமை அழுத்துகிறது. விரைவில் நிலை மாறலாம்! எழுத வேண்டும் - எழுத விஷயங்கள் நிறையவே உண்டு! பார்க்கலாம்!

      தங்களது அன்பிற்கு நன்றி.

      நீக்கு
  20. உங்களுக்கும், ஆதி வெங்கட், ரோஷ்ணிக்கும் உளம் கனிந்த தீபாவளி நல் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
  21. உங்களுக்கும் குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி மாதேவி.

      நீக்கு
  22. இனிய தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துகள். டெல்லியா? ஸ்ரீரங்கமா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. டெல்லியில் தான் ஸ்ரீராம்.

      தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  23. திருநங்கைகளின் முயற்சி தொடரட்டும்...காணெளி அருமை, ஜப்பான் சோப் கம்பனி பற்றி படித்த நினைவு
    கதம்பம் அருமை.
    தீபாவளி நல்வாழ்துகள் சகோ.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி உமையாள் ஜி.

      நீக்கு
  24. இன்னும் ஒரு வாரத்துல, பதிவு போட்டு ஒரு மாதமாயிடும். பயணக் கட்டுரை எழுத ஆரம்பிக்கலையா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ம்ம்ம்ம்... எழுத இயலவில்லை. கணினி மாற்ற வேண்டும். அலைபேசி மூலம் எழுத இயலாது. விரைவில் பதிவுகள் வரும்...

      பயணக் கட்டுரை எழுத இருக்கிறது. அடுத்த பயணமும் வரும் வாரத்தில் உண்டு. மொத்தமாக எழுத வேண்டும். பார்க்கலாம்.

      தங்கள் அன்பிற்கு நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
  25. சுவாரஸ்யமான தொகுப்பு.

    ஜெயச்சித்ராவும் அவருக்கு ஆதரவளித்து வருபவர்களும் பாராட்டுக்குரியவர்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

      நீக்கு
  26. 1 1/2 மாதங்கள் ஆகிவிட்டதே... இவ்வளவு நாள் இடைவெளி கொடுத்ததில்லையே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம்... எப்போது பதிவுகள் வரும் என்று சொல்வதற்கு இல்லை நெல்லைத் தமிழன். பார்க்கலாம் எப்போது எழுத முடியும் என.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....