புதன், 7 ஜனவரி, 2026

புத்தாண்டு - ஆதி வெங்கட்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.  


இதற்கு முன்னர் வெளியிட்ட பிரபலத்துடன் ஒரு உலா பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



******


புத்தாண்டு : 


புத்தாண்டும் பிறந்து இதோ மூன்றாம் நாளுக்கும் விறுவிறுவென்று  பறந்து சென்றுவிட்டது! எல்லோருக்கும் நல்லதாகவே நடக்கட்டும் என்ற பிரார்த்தனையோடு அன்றைய நாளைத் துவக்குகிறேன்! புத்தாண்டு தீர்மானங்கள் என்று ஏதும் எடுப்பதில்லை என்றாலும் முடியற போது இதைத் தொடர்ந்து கடைப்பிடிப்போமே! என்று சில விஷயங்களை மட்டும் மனதில் முடிச்சிட்டுக் கொள்வேன்! சந்தர்ப்ப சூழ்நிலைகளைப் பொறுத்து அவை தொடர்வதும் நிற்பதுமாக இருக்கும்!



இப்போதைக்கு 'ராம' நாமத்தை அன்றாடம் ஒரு பக்கமேனும் எழுதலாமே என நினைத்து செய்து வருகிறேன்!  மனதால், எழுத்தால், சிந்தனையால், சொல்லால் இறைவனை துதித்துக் கொண்டிருத்தல் என்றும் நன்மையே தரும் என்பதில் என்றும் மாற்றுக் கருத்தே இல்லை! 



இதோ இந்தப் பதிவை டைப் செய்து கொண்டிருக்கும் போதே வாட்ஸப்பில் ஒரு தகவல்! இன்றைய ஆருத்ரா தரிசன நாளுக்காக உறவினரான அக்கா ஒருவர் எழுதிய சிவபெருமானைக் குறித்த அழகான பாடல் ஒன்றினையும் அவரே தீட்டிய சிவ சொரூபத்தையும் தரிசிக்கும் பாக்யம் கிடைத்தது! அப்போது வாசலில் அருகில் உள்ள தோழி தன் மகளிடம் கொடுத்தனுப்பிய திருவாதிரைக் களியும், எழுகறி கூட்டும் கிடைத்தது! ஓம் நமசிவாய!



புத்தக வாசிப்பில் பதிவர் ஜோதிஜி அவர்கள் எழுதிய 'டாலர் நகரம்' வாசிக்கத் துவங்கியிருக்கிறேன்! ஆடைகள்  தயாரிப்பிலும், வடிவமைப்பிலும் புகழ்பெற்ற திருப்பூரில் நடைபெறும் நுணுக்கமான விஷயங்களை தன்னுடைய எளிமையான நடையில் விரிவாகச் சொல்லியிருக்கிறார்! வாழ்க்கையை Zeroவிலிருந்து துவக்குவது என்று சொல்வதைப் போல தான் நாலு முழ வேட்டியும் கையில் ஒரு மஞ்சப்பையும் எடுத்துக் கொண்டு புறப்பட்டு வந்த இவர் அங்கே 'கற்றதும் பெற்றதும்' என இந்த புத்தகத்தில் உள்ள  ஒவ்வொரு அத்தியாயத்திலும் ஏராளமான தகவல்களை பகிர்ந்து கொண்டிருக்கிறார்!


இந்த நூலை வாசிக்கும் போது மகள் தன் துறை சார்ந்த தகவல்களை அவ்வப்போது என்னிடம் பகிர்ந்து கொண்டதும் நினைவுக்கு வந்தது! பெரிய பெரிய மால்களிலோ, துணிக்கடைகளிலோ வேண்டிய ஆடைகளைத் தேர்வு செய்து வாங்கி விடுகிறோம்! ஆனால் அந்த ஆடைகள் எப்படி உருவாகிறது என்றெல்லாம் நாம் சிந்தித்து பார்ப்பதில்லை! இந்தத் துறையிலும் அத்தனை விஷயங்கள் இருக்கிறது!


தொடர்ந்து வாசித்து விட்டு முடிந்தால் பகிர்கிறேன்! திங்கள் முதல் என்னுடைய வகுப்புகளும் துவங்க இருக்கின்றன! இனி! நேரம் சரியாக இருக்கும்!


******


இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


ஆதி வெங்கட்

திருவரங்கம்

7 ஜனவரி 2026


7 கருத்துகள்:

  1. எல்லாப் பதிவிலும் முதலில் நீங்கள் பகிரும் வாசகம் பார்த்ததும் எனக்குத் தோன்றிய வரிகள்..!

    எதிர்பார்ப்பில்லாமல் இரு 
    என்று சொல்லி 
    மற்றவர்கள் அப்படி 
    இருக்க வேண்டும் என்றே 
    எதிர்பார்க்கிறோம்!!

    அதாவது எதிர்பார்ப்பு இல்லாமல் மற்றவர்கள் இருக்கவேண்டும் என்பதே தமது எதிர்பார்ப்பு!!

    பதிலளிநீக்கு
  2. ராமராமராம நாமம் அழகாய் அமைந்திருக்கிறது,  ''ராமநாமத்தை சொல்பவன் எவனோ பூமியில் அவனே பாக்கியவான்'' என்று பாடல் இருக்கிறது! 

    இங்க் பேனாவில்தான் எழுதுகிறீர்களா?  அருமை.

    பதிலளிநீக்கு
  3. ஜெயா அக்கா எழுதியுள்ள கவிதை அருமை என்றால் சிவலிங்கம் ஓவியமும் அவரே தீட்டியது என்னும் தகவல் இன்னும் பிரமிக்க வைக்கிறது.  வணங்குகிறேன்.

    பதிலளிநீக்கு
  4. நிர்மலா ரெங்கராஜன்7 ஜனவரி, 2026 அன்று 8:01 AM

    வாசகம் 👍
    திருவாதிரை சிவன் பாடலும் ஓவியமும் அருமை.

    பதிலளிநீக்கு
  5. யதார்த்தமான் வாசகம்

    உறவினர் அக்கா எழுதிய பாடல் அருமை. அவரே தீட்டிய சிவபெருமான் ஓவியம் வாவ்!!

    கீதா

    பதிலளிநீக்கு
  6. ஒரு காலத்தில் ராம ராம எழுதியது...அதை காஞ்சி சங்கரமடத்துக்கு அனுப்பினால் அப்போது படத்துடன் பிரசாதம் அனுப்புவார்கள்.

    கீதா

    பதிலளிநீக்கு
  7. வணக்கம் சகோதரி

    பதிவு அருமை. இன்றைய வாசகமும் அருமை.

    புத்தாண்டு பிறந்து நாட்கள் ஓடிக் கொண்டேதான் உள்ளன. திரும்பி பார்ப்பதற்கும் இந்த ஆண்டின் இறுதியும் வந்து விடும். தாங்கள் இந்த ஆண்டில் ராம மந்திரத்தை எழுத தொடங்கியது சிறப்பு. இறைவன் அனைத்து நலன்களையும் உங்களுக்கு தர வேண்டுமாய் நானும் ஸ்ரீ ராமபிரானை வேண்டிக் கொள்கிறேன்.

    உங்கள் உறவினர் எழுதிய கவிதையும், சிவபெருமானின் ஓவியமும் அருமையாக உள்ளது. அது உங்கள் கைக்கு கிடைத்ததும் சிவபெருமானின் பிரசாதமும் கிடைத்தது குறித்து மகிழ்ச்சி.

    உங்களின் புத்தக வாசிப்பு தொடர்வதற்கும் மகிழ்ச்சி. வாழ்க வளமுடன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....