அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
இதற்கு முன்னர் வெளியிட்ட சங்கிலி எதற்கு - ஸ்ரீகண்ட் கைலாஷ் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
*******
பெரம்பலூர் பேருந்து நிலையம் சென்று எதிரே இருக்கும் அஸ்வின் ஸ்வீட்ஸ் உணவகத்தில் காலை உணவை உட்கொண்டோம் - இட்லி, வடை, இடியாப்பம் என நான் சாப்பிட, மகள் இட்லி, வடை மட்டுமே போதும் என்று சொல்லிவிட்டார். சுவை நன்றாகவே இருந்தது. மொத்த செலவு ரூபாய் 223/- மட்டும். பெரம்பலூரிலிருந்து நெய்வேலி அல்லது நெய்வேலி டவுன்ஷிப் செல்ல பஸ் கிடைக்குமா என்று பார்க்க, விருத்தாச்சலம் வரை தான் கிடைத்தது. அன்றைய நாள் சிதம்பரம் நகரில் தேர்த் திருவிழா மட்டுமல்லாது, நீட் தேர்வு நாள் என்பதால் பல பேருந்துகளை மாற்றி விட்டிருக்கிறார்கள் என்று தெரிந்தது. அதனால் பெரம்பலூரிலிருந்து விருத்தாச்சலம், விருத்தாச்சலத்திலிருந்து நெய்வேலி (மந்தாரக்குப்பம்), பிறகு அங்கிருந்து நெய்வேலி டவுன்ஷிப் என்று மாற்றி மாற்றி திருச்சியிலிருந்து நெய்வேலி டவுன்ஷிப் செல்ல நான்கு பேருந்துகளில் மாறிச் செல்ல வேண்டியிருந்தது! கஷ்டம்! ஒரு வழியாக டவுன்ஷிப் தச்சர் சாலை அருகே இறங்கிக் கொண்டு அங்கிருந்து எங்கள் வீடு இருந்த பகுதிக்கு நடந்தே சென்றோம்.
வழியில் நான் படித்த 18-வது பிளாக்கில் இருந்த நடுநிலைப்பள்ளியை மகளுக்குக் காண்பித்தேன். சில மாதங்களுக்கு முன்னர் இந்தப் பள்ளி மூடப்பட்டு, கட்டிடம் பாழடைந்த நிலையில் இருந்தது. ஆனால் இந்த முறை பார்த்தால், அந்தக் கட்டிடம் வேறொரு தனியார் பள்ளிக்குக் கொடுத்ததோடு, கூடுதலாக கட்டிடங்களும் கட்டி பன்னிரெண்டாவது வரை படிக்க வசதி இருக்கும் பள்ளியாக மாற்றி இருக்கிறார்களாம். அரசியல் செல்வாக்கு உடையவர் அந்தப் பள்ளியை நடத்துகிறார் என்று கேள்விப்பட்டேன். எப்படியோ, பள்ளியில் கல்வி கற்க மாணவர்களுக்கு நல்ல வாய்ப்பு அமைந்தால் சரி. பள்ளி அருகிலேயே இருந்த நாகலிங்க மரம் இன்னமும் இருக்கிறது - பூக்களுடன்! அருகே செல்லக்கூடாது என்று சொல்லிச் சொல்லி அனுப்புவார் அம்மா - பாம்பு இருக்கும் என்ற பயமுறுத்தலுடன்! அப்படியே நான் சுற்றித் திரிந்த இடங்களையெல்லாம் மகளுக்குக் காண்பித்தபடி நடந்து எங்கள் நீண்ட கால நண்பர்/உறவினர் வீட்டிற்குச் சென்று சேர்ந்தோம். அவர்களிடம் இரு சக்கர வாகனத்தினை வாங்கிக் கொண்டு நெய்வேலி நகரில் சில இடங்களை என் மகளுக்கும் காண்பித்து அழைத்து வந்தேன். அவளது சிறு வயதில் அங்கே வந்திருக்கிறாள் என்றாலும் பெரிதாக அந்த நினைவுகள் அவளுக்கு இல்லை என்பதால் ஒவ்வொரு இடமாகக் காண்பிக்க முடிந்ததில் எனக்கு மகிழ்ச்சி.
ஊர் சுற்றி பார்த்த பிறகு நண்பர் வீட்டிற்கு வந்து சேர மதிய உணவு தயாராக இருந்தது - மாங்காய் சாதம், தொட்டுக்கொள்ள ஊறுகாய், சாதம், கூட்டு, தயிர், ஆவக்காய் ஊறுகாய் என மதிய உணவை முடித்துக் கொண்டு சற்றே ஓய்விற்குப் பிறகு அவர்களது வீட்டிலிருந்து நடக்கும் தூரத்தில், புத்தகக் கண்காட்சி நடக்கும் Lignite Hall இருக்கிறது என்பதால் அங்கே சென்று சேர்ந்தோம். ஆளுக்கு பத்து ரூபாய் தான் நுழைவுக் கட்டணம். அதனைக் கொடுத்து உள்ளே செல்ல நுழைவாயில் அழகாக அமைத்திருந்ததையும் பார்க்க முடிந்தது. அங்கே ஒரு படம் எடுத்துக் கொண்டு உள்ளே சென்றோம். மதிய நேரம் என்பதால் அவ்வளவாகக் கூட்டம் இருக்கவில்லை. நிறைய பதிப்பகத்தினர் வந்திருந்தார்கள் என்றாலும் பெரிய பதிப்பகங்கள் - வானதி போன்ற பதிப்பகங்கள் ஏனோ வரவில்லை. ஒவ்வொரு பதிப்பகமாக உள்ளே நுழைந்து பார்த்துக் கொண்டிருந்தோம். எனக்கு பெரிதாக ஏதும் வாங்கத் தோன்றவில்லை. சுற்றிப் பார்த்ததில் அலுப்பு வருவதற்கான வாய்ப்பில்லை என்றாலும் கடுமையான சூடு அங்கே தெரிந்ததால் - மேலே Tin Sheet - விரைவில் அலுப்பும் வந்து விட்டது.
மகளும் கொஞ்சம் சோர்ந்து போனாள். நடுநடுவே கொஞ்சம் ஓய்வெடுத்துக் கொண்டு மீண்டும் சுற்றினோம். புத்தகங்களுக்கான ஸ்டால்களை விட, அங்கே இருந்த கூட்டத்தினை விட உணவு ஸ்டால்கள் இருந்த இடத்தில் தான் கூட்டம் அதிகம் இருந்தது என்று தோன்றியது - வழமை போலவே! தில்லி அப்பளம், உருளை ஸ்ப்ரிங் ரோல், பஞ்சு மிட்டாய், ஐஸ்க்ரீம், குளிர் பானங்கள் என என்னென்னமோ இருந்தது. சூடு அதிகம் இருந்ததால் எதையுமே பார்க்கவோ, சாப்பிடவோ தோன்றவில்லை. அவ்வப்போது ஓய்வு எடுக்க மட்டுமே அந்தப் பகுதியில் இருக்கும் மரத்தடிக்குச் சென்று ஓய்வெடுத்தோம். இரண்டு மூன்று சுற்று வந்து பிடித்த சில புத்தகங்களை மகள் வாங்கிக் கொண்டதோடு, அம்மாவிற்கும் சில புத்தகங்களை வாங்கிக் கொண்டாள். வாங்கிய புத்தகங்களின் பட்டியல் கீழே…
The Full Moon Coffee Shop - Mai Mochizuki (Translated by Jesse Kirkwood).
Once Upon a Curfew - Srishti Chaudhary.
Days at the Torunka Cafe - Satoshi Yagisawa
ஃபேஷன் டிசைனிங் கற்றுக் கொள்ளுங்கள் - R.S. பாலகுமார்.
ஆகாயம் காணாத நட்சத்திரம் - இந்திரா சௌந்தர்ராஜன்
சனிக்கிழமை விபத்து - இந்திரா சௌந்தர்ராஜன்
அதீத சூடு கண்காட்சிப் பகுதியில் இருந்ததால் சீக்கிரமாகவே சோர்ந்து விட, போதும் என்று வெளியே வந்து விட்டோம். நான் நெய்வேலி வருவது குறித்து முன்னரே தெரிவித்திருந்தாலும், சூழ்நிலை காரணமாக நண்பர்களால் புத்தகக் கண்காட்சிக்கு நாங்கள் இருந்த வரை வர இயலவில்லை. சில நண்பர்கள் அழைத்து அவர்களது இயலாமையைச் சொல்ல, இதற்காக வருந்த வேண்டாம் என்றும் அவர்களது வேலைகளைக் கவனிக்கும்படியும் சொல்லி விட்டேன். எல்லா நேரங்களிலும் இப்படி நண்பர்களை சந்திப்பது முடியாத விஷயம் தான் என்பதை உணர்ந்தே இருக்கிறேன் என்பதால் பார்க்க முடியாமல் போனதில் வருத்தமில்லை. மாலை ஐந்தரை மணிக்கு மேல் மதுரை வரை செல்லும் பேருந்து நெய்வேலி டவுன்ஷிப் பகுதியிலிருக்கும் Central Bus Stand - லிருந்து இருப்பது தெரிய ஒரு ஆட்டோ வரவழைத்து அங்கே சென்று காத்திருந்தோம். நல்லவேளையாக அந்தப் பேருந்து, வந்து சேர்ந்ததோடு, காலியாகவும் இருந்தது. வசதியாக அமர்ந்து கொள்ள ஆறு மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு பத்தரை மணி போல வீட்டிற்கு வந்து சேர முடிந்தது. வாங்கிய புத்தகங்கள் அதிகம் இல்லை என்றாலும், நெய்வேலி சென்று மகளுக்கு நான் படித்த பள்ளிகள், கல்லூரி, சுற்றித் திரிந்த இடங்கள் என்று பல விஷயங்களைக் காண்பிக்க முடிந்ததில் மகிழ்ச்சி.
பதிவினை நிறைவு செய்யும் முன்னர் ஒரு தகவல் - மாலை நேரங்களில் தான் விழாக்கள், நிகழ்ச்சிகள் என்று நிறைய விஷயங்கள் இருந்தன. ஆனாலும் அன்றைக்கே வீடு திரும்ப வேண்டியிருந்ததால் அது போன்ற நிகழ்வுகளில் பங்கு கொள்ள முடியவில்லை. பகலில் எந்தப் பதிப்பகத்திலும் பிரபல எழுத்தாளர்கள் யாரையும் பார்க்கவும் முடியவில்லை. இப்போதெல்லாம் எல்லா புத்தகக் கண்காட்சிகளிலும் தவறாமல் பார்க்கக் கிடைக்கும் ஒரு ஸ்டால் - மணி பேச்சு ஆனந்த் ஸ்ரீனிவாசன் - அவர்களின் ஸ்டால்! பணம் சம்பாதிப்பது குறித்தான அவரது புத்தகங்களுக்கும் பேச்சிற்கும் நிறைய வரவேற்பு இருக்கிறது போலும்! அவரது சில காணொளிகளைப் பார்த்திருந்தாலும் எனக்கென்னமோ அத்தனை ஈர்க்கவில்லை! திருச்சி புத்தகக் கண்காட்சியில் அவரது ஸ்டாலில் அவரே அமர்ந்திருந்தும் நான் அந்தப் பக்கமே செல்லவில்லை! எப்படியோ அந்த ஞாயிறில் மனதுக்குகந்த இடத்திற்குச் சென்று வர முடிந்ததில் மகிழ்ச்சி.
கூடவே இன்னுமொரு விஷயம் - வரும்போது நண்பர் வீட்டிலிருந்து ஒரு சிறு பலாவும் சில மாங்காய்களும் கிடைக்க அதனையும் பையில் போட்டு எடுத்து வந்தேன்! நீண்ட நாள் கழித்து நெய்வேலி பலாவும், மாவும் வீட்டிற்கு வந்திருக்கிறது. மாங்காய் தொக்காக மாறி இருக்கிறது - இன்னும் சுவைக்கவில்லை. பலா இப்போது தான் வாசம் வர ஆரம்பித்திருக்கிறது. இன்றோ, நாளையோ அதனை கபளீகரம் செய்ய வேண்டும்! இப்படியாக நெய்வேலி பயணம் குறித்து இங்கேயும் பகிர்ந்து கொண்டு விட்டேன்! மீண்டும் வேறு ஒரு பதிவு வழி உங்களைச் சந்திக்கிறேன்.
*******
இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…
நட்புடன்
வெங்கட் நாகராஜ்
திருவரங்கம்
25 ஜூன் 2026














பஸ்கள் மாறி செல்வதே அலுப்பாகி விடும். ஆனாலும் உங்கள் சொந்த ஊர்ப்பாசம் உங்களை வழிநடத்தி இருக்கிறது!
பதிலளிநீக்குபேருந்துகள் மாறி மாறிச் செல்வதில் அலுப்பு இருந்தாலும் சில சமயங்களில் வேறு வழியில்லை. போக முடிவு செய்து பேருந்து நிலையம் சென்ற பிறகு போய்த்தானே ஆக வேண்டும் ஸ்ரீராம்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.
என்னதான் சொல்லுங்க.. நம்ம ஊர்லயே கண்காட்சி நடந்து ஆசுவாசமாக போய்வருவது மாதிரி இருக்காது. அதுவே கூட பரபரப்பாகத்தான் சென்று வரவேண்டியிருக்கும்!
பதிலளிநீக்குஉண்மை தான். இருபத்தி ஐந்து வருடங்களாக நெய்வேலியில் நடந்து வருகிறது - ஆனால் இதுவரை ஒரு முறை கூட போகவில்லை என்பதே இந்த வருடம் சென்று வர ஒரு காரணமாக இருந்தது ஸ்ரீராம்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.
உங்கள் பழைய பள்ளியைப் பார்த்தபோது மனதில் எழுந்த நினைவுகள் சுகமாக இருந்திருக்கும். மகளுக்கும் அப்பா ஒரு மாணவனாக படித்த பள்ளி என்கிற ஆர்வம் பார்வையில் இருந்திருக்கும். சுவையான நினைவுகள், நிகழ்வுகள்!
பதிலளிநீக்குஆமாம். மகளுக்கு நான் படித்த பள்ளி, கல்லூரி, சுற்றித் திரிந்த இடங்களைக் காண்பித்த போது அவளுக்கும் மகிழ்ச்சி. நிறைய தகவல்களை பரிமாறிக் கொண்டோம் ஸ்ரீராம்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.
புத்தகக் கண்காட்சி அலுத்துதான் .போகிறது. பசியாய் இருப்பவனுக்கு ஒரு தட்டு சாதம் வைப்பதற்கு பதில் ஆயிரக்கணக்கான தட்டுகளில் பகல்வேறு உணவுகளை வைத்தால்...??!!
பதிலளிநீக்குஆயிரக்கணக்கான தட்டுகளில் பல்வேறு உணவுகளை வைத்தால் - ஆமாம் குழப்பம் தான் வரும் ஸ்ரீராம். பல இடங்களில் பிரபலங்களின் புத்தகங்களுக்கு மட்டுமே அதிக வரவேற்பு. மற்ற புத்தகங்களைத் தேடித் தேடிப் பார்த்து, சில பக்கங்கள் படித்து வாங்க வேண்டுமெனில் நிறைய நேரமும் பொறுமையும் தேவை. இப்போது அது எனக்கு இருப்பதில்லை என்பதையும் சொல்ல வேண்டும்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.
அட... இந்தத் த்த்துவத்தினால்தான் அவ்வப்போது மறுமொழி வருவதில்லையா ஹா ஹா ஹா
பதிலளிநீக்குஹாஹா... அப்படி அல்ல என்பது உங்களுக்கும் தெரியும் நெல்லைத் தமிழன். பல சமயங்களில் இணையம் பக்கம் வர இயல்வதில்லை. அலுவலக சிக்கல்கள், குடும்ப வேலைகள் என நேரம் ஓடிவிடுகிறது. முன்பு போல ஒரு வாரம், பத்து நாட்களுக்கு பதிவுகளை Schedule செய்தும் வைக்க முடிவதில்லை. இன்றைக்கு தான் சில பதிவுகளுக்கு மறுமொழி போட ஆரம்பித்திருக்கிறேன். இன்னமும் நண்பர்களின் பதிவுகளை படிக்க முடியவில்லை. நேரம் எடுத்துச் செய்ய வேண்டும் - பார்க்கலாம்!
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.
வாங்கியதில் இரண்டு புத்தகங்கள் மகளுக்கு போலிருக்கே
பதிலளிநீக்குஇரண்டு இல்லத்தரசிக்கு - நான்கு மகளுக்கு!
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி நெல்லைத் தமிழன்.
அஸ்வின்காலை உணவு.... பசியைத் தூண்டுகிறது.பயணம் ஆசை வருகிறது
பதிலளிநீக்குபசியைத் தூண்டும் படம் - :) உங்கள் இரண்டு வாரத்திற்கு முந்தைய பயணம் எப்படி இருந்தது ? அனுபவங்கள் பதிவாக வருமா? எங்கள் தளத்தில்?
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி நெல்லைத் தமிழன்.
வாசகம் அருமை.
பதிலளிநீக்குநெய்வேலி புத்தக கண்காட்சி பார்க்க கஷ்டபட்டு போய் வந்தாலும், மகளுக்கு சிறு வயது நினைவுகள் சுற்றி திரிந்த இடங்கள், படித்த பள்ளி உறவினர் வீடு என்று காட்டிய திருப்தி கிடைத்து இருக்கும் உங்களுக்கு.
மகள் வாங்கிய புத்தகங்களில் படிப்புக்கு தேவையானதும் இருக்கிறது. அம்மாவுக்கு பிடித்த கதை ஆசிரியர் புத்தகங்களும் இருக்கிறது.
வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா.
நீக்குஆமாம் அம்மா - மகளுக்கு இடங்களை காண்பித்ததில் மனதுக்கு மகிழ்ச்சி தான்.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.
இதுவரை ஒரு முறை கூட நெய்வேலி புத்தகக் கண்காட்சியினை நான் பார்த்ததில்லை என்பதையும் சொல்லி இருந்தேன். முடிந்தால் போக வேண்டும் என்ற எண்ணத்தையும் உங்களுடன் பகிர்ந்து கொண்டிருந்தது நினைவில் இருக்கலாம்.//
பதிலளிநீக்குயெஸ்...
ஆஹா இடியாப்பம்....ஒரு கிண்ணத்தில் தேங்காய்ப்பால் தெரிகிறது மற்றொன்றில் வெல்லமா? இல்லை குருமா போன்று ஏதாவதா?
கீதா.
ஆமாம். இதுவரை சென்றதே இல்லை என்பது ஒரு குறையாக இருந்தது எனக்கு. இந்த முறை சென்று வந்ததில் கொஞ்சம் திருப்தி.
நீக்குஇடியாப்பத்திற்கு தொட்டுக்கொள்ள குருமா அல்ல! தேங்காய்ப் பால் மற்றும் வெல்லமும் தேங்காய்ப் பாலும் சேர்ந்த கலவை.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி கீதா ஜி.
அது வெல்லம் தேங்காய் போன்று இருக்கிறது.
பதிலளிநீக்குவிலையும் ரொம்ப அதிகம் இல்லையே
எத்தனை பேருந்துகள் மாறி மாறி....சிரமம் தான்
நாகலிங்க மரம் எப்போது பார்த்தாலும் வியப்பைத் தரும் ஒன்று!
பள்ளி நன்றாக ஆகியிருப்பது சந்தோஷம்.
ரோஷ்ணிக்கு உங்கள் சிறு வயது அனுபவங்களைச் சொல்லி, இடங்களைக் காட்டியது அவருக்கும் அப்பாவின் இடங்களைப் பார்த்த மகிழ்ச்சியும் உங்களுக்குமே மனம் இதமாக இருந்திருக்கும்...
கண்காட்சியின் நுழைவு வாயில் ரொம்ப அழகாக 8இருக்கிறது
கீதா
பதிவின் பகுதிகள் குறித்த தங்கள் எண்ணங்களை இங்கே சொன்னதில் மகிழ்ச்சி கீதா ஜி.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.
நண்பர் வீட்டிலிருந்து ஒரு சிறு பலாவும் சில மாங்காய்களும் கிடைக்க அதனையும் பையில் போட்டு எடுத்து வந்தேன்! நீண்ட நாள் கழித்து நெய்வேலி பலாவும், மாவும் வீட்டிற்கு வந்திருக்கிறது.//
பதிலளிநீக்குஆஹா எஞ்சாய் மாடி!....என்னால் நெய்வேலி பலாவை மறக்கவே முடியாது. அது போல பண்ருட்டி பலாவும்.
கீதா
நேற்று மாலை பலாப்பழம் நறுக்கி, சுளைகள் எடுத்து வைத்து, இன்றும், நேற்றுமாக சாப்பிட்டோம். சிலருக்கு கொடுக்கவும் கொடுத்தோம்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி கீதா ஜி.
ஆதிக்கான புத்தகங்களும், ரோஷ்ணிக்கான புத்தகங்களையும் அடையாளம் காண முடிந்தது!!
பதிலளிநீக்குமணி பேச்சு ஆனந்த் ஸ்ரீனிவாசன் - அவர்களின் ஸ்டால்!//
ஆமாம் இவரது புத்தகங்கள், யுட்யூப் ரொம்ப பிரபலம்! எனக்கும் ஈர்ப்பில்லை.
கீதா
ஆமாம் யூவிலும், முகநூலிலும் நிறையவே பார்க்க முடிகிறது. எனக்கு அத்தனை பிடிக்கவில்லை கீதா ஜி.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.
வாசகம் சூப்பர்!
பதிலளிநீக்குகீதா
வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கீதா ஜி.
நீக்குரோஷ்ணி உடன் ஊர் சென்று புத்தகக் கண்காட்சி கண்டு வந்தது மகிழ்ச்சியான தருணமாக இருக்கும்.
பதிலளிநீக்குசிரமப்பட்டு பஸ் மாறி பயணித்தாலும் உறவுகளை சந்தித்து வந்ததும் மனதுக்கு நிறைவாக இருந்திருக்கும்.
வாங்கிய புத்தகங்களை எமக்கும் காண தந்ததற்கு நன்றி.
பதிவு குறித்த தங்களது எண்ணங்களை இங்கே பகிர்ந்து கொண்டதற்கு நன்றி மாதேவி ஜி.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.
ஒரு கல்லுல ரெண்டு மாங்காய் என்பது போல பழகிய ஊர், பழகிய மனிதர்களை பார்த்தது போலவும் ஆச்சு, புத்தக கண்காட்சிக்கு சென்ற்து போலவும் ஆச்சு இல்லையா?
பதிலளிநீக்குஒரு கல்லுல ரெண்டு மாங்காய் - நன்றி...
நீக்குமுதலில் பகிர்ந்திருக்கும் பொன்மொழி பிரமாதம்!
பதிலளிநீக்குபொன்மொழி உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.
நீக்கு