அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
இதற்கு முன்னர் வெளியிட்ட கதம்பம் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
*******
இந்தப் பயணத் தொடரின் முந்தைய பகுதிகளுக்கு நீங்கள் அனைவரும் தந்த வரவேற்பிற்கும், கருத்துரைகளுக்கும் மனம் நிறைந்த நன்றி. தொடரின் சென்ற பகுதியில் பீமாகாளி மந்திர் வளாகத்தில் இருந்த நீண்ட சங்கிலி குறித்தும் அது எதற்காக என்பதை அங்கே இருந்த காவலரிடம் கேட்டுத் தெரிந்து கொண்டோம் என்றும் எழுதி இருந்தேன். அந்தச் சங்கிலி எதற்கு என்பதை சென்ற பகுதியில் எழுதாமல் ஒரு சஸ்பென்ஸுடன் முடித்திருந்தேன். இந்தப் பகுதியில் அந்தச் சங்கிலி தொங்குவதற்கான காரணம் என்ன என்பதையும் அந்தக் காவலரிடம் பேசியபோது கிடைத்த மற்ற தகவல்களையும் உங்களிடம் பகிர்ந்து கொள்ள இருக்கிறேன். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்!
இந்தப் பகுதியில் இருக்கும் ஆலயம் மற்றும் சில வீடுகள் பல வருடங்கள் முன்னர் கட்டப்பட்டவை. குளிர்காலம், பனிப்பொழிவுக் காலம் போன்றவற்றை மனதில் வைத்து கட்டுமானங்களை கட்டும் போதே இரண்டு அல்லது மூன்று தளங்களாகவே கட்டியிருக்கிறார்கள். கீழ் தளத்தில் இருக்கும் கதவு போன்ற அமைப்பு சிறிய அளவில் இருந்திருக்கிறது. கால்நடைகள் - மாடு, யாக், ஆடுகள் போன்றவை கீழ்/தரைத் தளத்தில் இருக்க, முதலாம் மாடியில் அவற்றுக்கான உணவு வகைகளைச் சேமித்து வைத்துக் கொள்ள பயன்படுத்தி இருக்கிறார்கள். அதற்கு மேல் தளத்தில் தான் அவர்கள் வசிக்கும் வீடுகள் அமைத்திருக்கிறார்கள். பெரும்பாலும் மனிதர்கள் மேல் தளத்தில் இருப்பதால், கீழே இருக்கும் பகுதியில் வெளி மனிதர்கள் யாரேனும் வந்து வீட்டினரை அழைக்க வேண்டும் என்றால் எப்படி அழைப்பது - அந்தக் காலத்தில் இப்போது போல மின்சாரத்தில் இயங்கும் Calling Bell வசதிகள் இல்லையே! கதவுகளில் நாதாங்கி அல்லது வளையங்கள் மாட்டி அதனைத் தட்டுவார்கள் என்றாலும் தரைத் தளத்தில் தட்டினால் இரண்டாம் தளத்தில் இருப்பவர்களுக்குக் கேட்காது.
இதனைக் கருத்தில் கொண்டு தான் இப்படி இரண்டாம் தளத்திலிருந்து நீண்ட சங்கிலியைக் கட்டி வைத்திருப்பார்கள். கீழே வரை அந்தச் சங்கிலி தொங்கிக் கொண்டிருக்கும். விருந்தாளிகள் வந்தால் அந்தச் சங்கிலியைப் பிடித்து ஆட்டினால், அதன் மறு புறத்தில் இருக்கும் ஒரு அமைப்பு சத்தம் எழுப்ப, மேலே இருப்பவர்களுக்கும் அந்தச் சத்தம் கேட்டு,மேலிருந்து எட்டிப் பார்த்து விருந்தினரை அடையாளம் கண்டபின்னர் கீழே வந்து கதவைத் திறந்து விடுவார்களாம். அதற்காகவே இப்படியான வசதியை அந்தக் காலத்தில் ஏற்படுத்தி வைத்திருக்கிறார்களாம். இந்தத் தகவல் மட்டுமல்லாது வேறு சில தகவல்களையும் அவரிடம் நாங்கள் பேசித் தெரிந்து கொள்ள முடிந்தது. அவர் அதே ஊரைச் சேர்ந்தவர் என்பதோடு ஹிமாச்சலப் பிரதேசத்தின் காவல்துறையில் பணி கிடைத்ததோடு அவரது ஊரிலேயே பணிபுரிய வாய்ப்பும் கிடைத்தது காளி மாதாவின் அனுக்ரஹம் என்று சொல்லிக் கொண்டிருந்தார். அவர் ஊர் குறித்தும், ஆலயம் குறித்தும் செய்திகள் கேட்டபோது மகிழ்வுடன் பகிர்ந்து கொண்டார்.
அவர் சொன்ன மற்றுமொரு தகவல் எங்களுக்கு மகிழ்ச்சி அளிப்பதாக இருந்ததோடு நல்லதொரு விஷயமாகவும் இருந்தது. கைலாஷ் என்று சொன்னால் ஒரே ஒரு கைலாஷ் மட்டுமே பலருக்கும் தெரிந்திருக்கும். கேதார்நாத் என்றாலே உத்திராகண்ட் மாநிலத்தில் இருக்கும் ஒரு கேதார் மட்டுமே பலருக்கும் தெரியும். ப்ரயாக், கேதார் மற்றும் கைலாஷ் என மூன்றிற்குமே ஐந்து எனும் எண் சேர்த்து பஞ்ச் ப்ரயாக், பஞ்ச் கேதார் மற்றும் பஞ்ச் கைலாஷ் என இடங்கள் ஐந்து ஐந்தாக உண்டு. அவற்றை எல்லோரும் அறிந்து கொள்ளும் விதமாக இங்கே தருகிறேன்.
பஞ்ச் ப்ரயாக் - தேவ் ப்ரயாக், ருத்ர ப்ரயாக், கர்ண ப்ரயாக், நந்த் ப்ரயாக் மற்றும் விஷ்ணு ப்ரயாக் - அனைத்துமே உத்திராகண்ட் மாநிலத்தில் இருக்கின்றன.
பஞ்ச் கேதார் - கேதார்நாத், துங்க்நாத், ருத்ரநாத், மத்மஹேஷ்வர் மற்றும் கல்பேஷ்வர் - பஞ்ச் ப்ரயாக் போலவே பஞ்ச் கேதார் என அழைக்கப்படும் ஐந்து கேதார்களும் உத்திராகண்ட் மாநிலத்தில் இருக்கின்றன.
பஞ்ச் கைலாஷ் - கைலாஷ் (திபெத், சைனா), ஆதி கைலாஷ் (உத்திராகண்ட்), கின்னோர் கைலாஷ், மணிமஹேஷ் கைலாஷ் மற்றும் ஸ்ரீகண்ட் கைலாஷ் (கடைசி மூன்றும் ஹிமாச்சலப் பிரதேசத்தில் உள்ளன) ஆகிய ஐந்து கைலாஷ்.
நாங்கள் பார்த்துக் கொண்டிருந்த பீமாகாளி மந்திர் வளாகத்திலிருந்து எதிரே பார்த்தால் தெரியும் மலைச் சிகரங்களைக் காண்பித்து, இங்கேயிருந்தே நீங்கள் ஸ்ரீகண்ட் கைலாஷ் மஹாதேவை காண முடியும் என்று சொல்லி, எங்களிடம் அலைபேசியில் இருக்கும் Zoom வசதியைக் காண்பிக்கச் சொல்ல, நண்பர் Pramod இடம் இருந்த அலைபேசியான Samsung S23 - ஐ கேட்டு வாங்கிக் கொண்டு , அதில் இருக்கும் 100 X Zoom வசதியினால் நன்கு Zoom செய்து அலைபேசி வழி எங்களுக்கு அந்த மலைச்சிகரத்தினை காண்பித்தார். இந்த ஸ்ரீகண்ட் கைலாஷ் என்பது தரைமட்டத்திலிருந்து கிட்டத்தட்ட 17150 அடி (5227 மீட்டர்) உயரத்தில் இருக்கும் ஒரு மலைச்சிகரம் - 75 அடி உயரம் இருக்கும் அந்தச் சிகரத்தினை தான் சிவபெருமானாக - ஸ்ரீகண்ட் மஹாதேவ் என போற்றி வழிபடுகிறார்கள். மிகவும் கடினமான ஒரு மலையேற்றம் அது. Base Camp எனச் சொல்லப்படும் Jaon கிராமத்திலிருந்து ஒரு வழி மலையேற்றம் சுமார் 35 கிலோ மீட்டர் - ஆக மேலே சென்று மீண்டும் திரும்ப மொத்தம் 70 கிலோ மீட்டர் நடைப் பயணம். இந்த நடைப் பயணத்தினை முடிக்க ஆறிலிருந்து எட்டு நாட்கள் ஆகலாம்.
அடர்ந்த காடு, பனிப்பாறைகள் (Glacier) மற்றும் பனி உருகியதால் உருவாகும் ஓடை/ஏரிகள் என பல பகுதிகளை நடந்து கடந்து தான் இந்த மலைச்சிகரத்தினை அடைய வேண்டியிருக்கும். அப்படி கடுமையான நடைப்பயணம் முடிந்து பார்க்க வேண்டிய ஸ்ரீகண்ட் கைலாஷ் மஹாதேவரை நாங்கள் சராஹன் கிராமத்திலிருந்து அலைபேசி வழிக் காண முடிந்தது - அந்த ஈசன் செயல். அந்தக் கிராமத்துக் காவலர் உதவியுடன் நாங்கள் தரிசனம் பெற்றோம். என்னதான் மலையேற்றம் எனக்குப் பிடித்தது என்றாலும், எல்லா சிகரங்களையும் இப்படி மலையேற்றம் செய்து பார்க்க முடியாது - அதற்குக் கொடுத்து வைத்திருக்க வேண்டும் அல்லவா! முந்தைய ஹிமாச்சலப் பயணத்தில் கின்னோர் கைலாஷ் மஹாதேவரைக் கூட இப்படி எனது Canon DSLR Camera 250MM Zoom Lens வழி தான் கல்பா எனும் இடத்திலிருந்து பார்த்து ரசித்தேன். அதனை பகிர்ந்து கொண்டுமிருக்கிறேன். முடிந்தவரை பஞ்ச் ப்ரயாக், பஞ்ச் கேதார் மற்றும் பஞ்ச் கைலாஷ் பயணிக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு உண்டு. இது வரை பஞ்ச் ப்ரயாகில் தேவ் ப்ரயாக் மற்றும் ருத்ர ப்ரயாக் சென்றதுண்டு. பஞ்ச் கேதாரில் துங்க்நாத் மட்டுமே சென்று பார்த்து வந்திருக்கிறேன். பஞ்ச் கைலாஷ் என அழைக்கப்படுவதில் இரண்டு கைலாஷ் - கின்னோர் கைலாஷ் மற்றும் ஸ்ரீகண்ட் கைலாஷ் - ஆகிய இரண்டுமே இப்படியான உபகரணங்கள் வசதியுடன் தான் பார்த்திருக்கிறேன்.
கின்னோர்/கின்னர் கைலாஷ் மற்றும் ஸ்ரீகண்ட் கைலாஷ் ஆகிய இரண்டு இடங்களுக்கும் மலையேற்றம் செய்ய உங்களுக்கு வழிகாட்டி தேவையாக இருக்கும். இந்த மலையேற்றப் பயணங்களை சில நிறுவனத்தினர் ஒவ்வொரு வருடமும் ஜூலை-ஆகஸ்ட் மாதங்களில் அவர்கள் நடத்துகிறார்கள். அவர்கள் உடன் பயணிப்பது நல்லது என்பதால் இப்படியான ஒரு நிறுவனத்தினை தொடர்பு கொண்டு அவர்கள் சொல்லும் வழியில், அவர்களது வழிகாட்டியுடன் பயணிப்பது தான் நல்லது. இந்தப் பயணங்களுக்கெல்லாம் அதிக நாட்கள் தேவை என்பதால் தற்போதைய நிலையில் நிச்சயம் என்னால் செல்ல இயலாது. அதனால் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு தூரத்திலிருந்து ஸ்ரீகண்ட் கைலாஷ் பார்க்க முடிந்ததே என்று த்ருப்தி அடைவதோடு, அதனைக் கொடுக்க நமக்கு உதவிய அந்த ஆண்டவனுக்கும் ஒரு வழியாக இருந்த அந்தக் காவலருக்கும் நன்றி சொல்வதே நல்லது. இப்படியான எண்ணங்கள் அந்த ஆலயத்தில் இருக்கும் நேரத்திலும் எனக்குள் இருந்தது. தொடர்ந்து அந்தக் காவலருடன் ஆலயத்தில் வாசிக்கும் வாத்யம், கீழே அமைந்திருக்கும் சிறு சிவன் மற்றும் நரசிம்மர் ஆலயங்கள், பராமரிக்கும் அழகான பூஞ்செடிகள், அங்கே இருக்கும் கடைகள் போன்றவை குறித்து பேசிக் கொண்டிருந்த பிறகு அவருக்கு நன்றி சொல்லி, அவரிடமிருந்து விடை பெற்றுக் கொண்டு வெளியே வந்தோம். அங்கிருந்து கிராமத்தில் உலா வந்தோம். கிராமத்தில் பார்த்த மற்ற இடங்கள் என்ன, தகவல்கள் என்ன போன்றவற்றை அடுத்த பகுதியில் சொல்கிறேன். அதுவரை பயணத்தில் இணைந்திருங்கள் நண்பர்களே.
*******
இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…
நட்புடன்
வெங்கட் நாகராஜ்
திருவரங்கம்
24 ஜூன் 2026












முதல் படத்தில் இருக்கும் பூ படம்... அது பூவா மொட்டா?
பதிலளிநீக்குமொட்டு தான். இரண்டொரு நாட்களில் நன்கு விரிந்து பூவாகியிருக்கலாம் ஸ்ரீராம்.
நீக்குசங்கிலி பற்றிய விவரமும், கைலாஷ் கேதார் விவரமும் சுவாரஸ்யம்.
பதிலளிநீக்குசங்கிலி விவரம், மற்றும் ஸ்ரீகண்ட் கைலாஷ் விவரம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி ஸ்ரீராம்.
நீக்குஅடடே.. நானும் சாம்சங் S 23 தான். ஸ்ரீகண்ட் மஹாதேவ் செல்லவேண்டும் என்னும் எண்ணம் உங்க மனதில் இந்நேரம் உதயமாகி இருக்க வேண்டுமே...
பதிலளிநீக்குஆஹா... உங்களிடம் இருப்பது சாம்சங் எஸ்23 ஆ? நல்ல படங்கள் எடுக்க முடியும் அதில்.
நீக்குஸ்ரீகண்ட் மஹாதேவ் செல்ல வேண்டும் என்ற எண்ணம் மனதில் உதயமாகி இருக்குமே? ஹாஹா... பயணம் செய்ய எப்போதும் ஆசை தான் ஸ்ரீராம். ஆனால் எல்லாப் பயணங்களும் செய்ய முடியாது என்பதையும் தெரிந்தே, உணர்ந்தே இருக்கிறேன்.
ஓ.. எனக்கு பதில் அடுத்தடுத்த பாராக்களிலேயே இருக்கிறது!
பதிலளிநீக்குபதில் - பதிவில் இருக்கிறது - ஆம் ஸ்ரீராம்.
நீக்குவாசகம் நல்லாருக்கு. புன்சிரிப்பும் வந்தது!
பதிலளிநீக்குகீதா
வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கீதா ஜி.
நீக்குஇரண்டாவது படம் விரியக் காத்திருக்கும் ரோஸ் மொட்டு!
பதிலளிநீக்குஹிந்தி பதாகையை வாசித்தேன் பொத்தாம் பொதுவாகப் புரிந்தது. சில சொற்களுக்கு அர்த்தம் பார்க்கிறேன் இணையத்தில். இப்படிக் கத்துக்கலாமேனுதான்!
சங்கிலி விஷயம் புரிந்தது. நல்ல யோசனை!
கீதா
ஹிந்தி புரிவது சுலபம் தான். தொடர்ந்து வாசித்து/கேட்டு, பேசி வந்தால் புரிந்து கொள்ளலாம் கீதா ஜி.
நீக்குப்ரயாக், கேதார் மற்றும் கைலாஷ் என மூன்றிற்குமே ஐந்து எனும் எண் சேர்த்து பஞ்ச் ப்ரயாக், பஞ்ச் கேதார் மற்றும் பஞ்ச் கைலாஷ் என இடங்கள் ஐந்து ஐந்தாக உண்டு//
பதிலளிநீக்குபாஞ்ச் ப்ரயாக் - நீங்க சொல்லிருந்தீங்க முன்னர். தேவப்பிரயாகையில் நீராடியது? ருத்ரப்ர்யாக்... பற்றியும் சொன்ன நினைவு...என் நினைவுத் திறனைப் பரிசோதித்தல்தான்...அது போல பஞ்ச கேதாரில் துங்கநாத் நீங்க போய் வந்தீங்களே அப்ப இது சொன்ன நினைவு.
பஞ்ச் கைலாஷில் ஸ்ரீகண்ட் கைலாஷ், கின்னர் கைலாஷ் யம்மாடியோவ்! பார்க்கவே பயங்கரமாக இருக்கிறதே
//அதில் இருக்கும் 100 X Zoom வசதியினால் நன்கு Zoom செய்து அலைபேசி வழி எங்களுக்கு அந்த மலைச்சிகரத்தினை காண்பித்தார். //
வாவ்!
கின்னோர் முன்ன இப்படிப் பார்த்திருக்கீங்களோ?
அட! அடுத்து வரும் வரிகளில் வந்துவிட்டது...நான் பாஸ்!
விவரங்கள் அறிந்து கொண்டேன்...ஹூம் கிட்ட இருக்கும் இடங்களுக்கே போக முடியலை. ஹிமாச்சலுக்கும் உத்ர்காண்டிற்கும் பயணம் செய்ய ஆசைதான்...எல்லாத்துக்கும் ஆசைப்படுவோம்!!! என்று..ஹிஹிஹி
என் நினைவுக்கு பாஸ் மார்க் போட்டுக் கொண்டேன் ப்ர்யாக் நீங்க சொல்லியிருப்பது பார்த்ததும்...
விவரங்களும் படங்களும் அருமை வெங்கட்ஜி! ரசித்தேன்
கீதா
உங்களுக்கும் பயணங்கள் வாய்க்கட்டும். எனக்கும் சில பயணங்கள் செல்லும் விருப்பம் இருக்கிறது. அதிக நாட்கள் எடுக்கும் என்பதால் இப்போதைக்கு பயணங்கள் இல்லை. உள்ளூரில் நிறைய ஆலயங்கள் செல்லத் தொடங்கியிருக்கிறேன். நேற்றும், இன்றும் திருச்சி வட்டாரத்தில் நான்கு ஆலயங்களுக்குச் சென்று வந்தேன். நல்ல அனுபவங்கள் கிடைத்தன கீதா ஜி.
நீக்குஅழகான புகைப்படங்கள்,வர்ணனை. நீ camera வழியாக ஈஸ்வரனை தரிசனம் செய்தாய்.நாங்கள் உன் படங்கள் வழியாக! நன்றி🙏🏻
பதிலளிநீக்குஉனக்காகவே யாரோ எழுதியிருக்கிறார்கள்(இன்றைய வாசகம்)
விஜி.
படங்களும் வர்ணனைகளும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி விஜி.
நீக்குவாசகம் எனக்காகவே எழுதியது - ஹாஹா... இருக்கலாம்!
"ப்ரயாக், கேதார் மற்றும் கைலாஷ் என மூன்றிற்குமே ஐந்து எனும் எண் சேர்த்து பஞ்ச் ப்ரயாக், பஞ்ச் கேதார் மற்றும் பஞ்ச் கைலாஷ் என இடங்கள் ஐந்து ஐந்தாக உண்டு" என்பதை விரிவாக அறிந்து கொண்டோம் சில படங்களும் கண்டோம். தரிசித்துக் கொண்டோம்.
பதிலளிநீக்குபதிவு வழி உங்களுக்கும் சில புதிய விஷயங்களைச் சொல்ல முடிந்ததில் மகிழ்ச்சி மாதேவி ஜி.
நீக்குநேற்றுத்தான் பேசிக்கொண்டிருந்தேன், பஞ்ச கேதார் தரிசிக்கணும்னு. பஞ்சப்ரயாகைல தேவப்பிரயாக சில முறை போயிருக்கேன். மத்த பிரயாகையை எல்லாம், தூரத்திலிருந்து காண்பித்துவிடுகிறார்கள். இந்த இரண்டும் தரிசிக்கணும்னு ஆவல்.
பதிலளிநீக்குமுன்பு கைலாசம் செல்லணும் என்று நினைத்திருந்தேன் (அதில் உள்ள கஷ்டங்கள் தெரிந்தும்). ஆனால் கைகூடவில்லை. இனி சாத்தியம் இல்லை.
பஞ்ச் கேதார் தரிசிக்க எனக்கும் ஆவல் உண்டு. பஞ்ச் ப்ரயாக் தூரத்தில் இருந்து தான் காண்பிப்பார்கள் - தனியாக இதற்கென்றே பயணிக்க நினைத்திருக்கிறேன் - எப்போது கைகூடும் என்பது ஆண்டவனுக்கே வெளிச்சம் நெல்லைத் தமிழன்.
நீக்குகைலாஷ் யாத்திரை - கடினமானது மட்டுமல்ல அதிக அளவில் பணமும் வேண்டியிருக்கும் பயணம் அது.
நீங்க துங்க்நாத் தரிசனம் செய்ததிலிருந்து அது என் மனதில் இருக்கிறது.
பதிலளிநீக்குநீங்க சென்றிருக்கும் ரிமோட் கோயில்களைத் தரிசிக்கவும் எனக்கு ஆவல். அதுக்கு சக்தி வேண்டாமா?
துங்க்நாத் - ஆம் அன்று பேசிய போது கூட இது பற்றி பேசிக்கொண்டிருந்தது நினைவில் இருக்கிறது நெல்லைத் தமிழன்.
நீக்குபயணம் செய்வதற்கான சக்தி - இறைவனிடம் விட்டுவிட்டால் அவன் பார்த்துக் கொள்வான் என்றே எனக்குத் தோன்றும். நம் ஒவ்வொரு செயலும் அவன் வகுத்த வழியில் தானே!
25-35 மைல் நடக்கணும்னா, அதுவும் 6-7 நாட்கள் சாப்பாட்டுக்கு என்ன பண்ணுவாங்க?
பதிலளிநீக்குடிரை ஃப்ரூட்ஸ் மாதிரியா இல்லை அவங்கள்லாம் ரொம்பவே தீவிரமாக மிகக் குறைந்த உணவுடன் சென்றுவரும் வைராக்யம் கொண்டவங்களா?
இது போன்ற பயணங்களில் பொதுவாக நடத்துபவர்கள் கூடவே சிலர் பொருட்களையும் எடுத்து வருவார்கள் - அவர்களே Guide, Cook என பல விஷயங்களைச் செய்வார்கள். பயணிப்பவர்களும் தங்களுடன் ட்ரை ஃப்ரூட்ஸ், நட்ஸ் போன்றவற்றை எடுத்துச் செல்வார்கள். ஒவ்வொரு இடங்களில் பழங்களும் கிடைக்கும் என்பதால் எடுத்துச் செல்வதுண்டு. ஒவ்வொரு நாள் இரவும் Camp பகுதிக்குச் சென்றதும் உணவு கிடைத்துவிடும். வழியில் சாப்பிட காலையில் புறப்படும்போதே சப்பாத்தி, சப்ஜி போன்றவை எடுத்துக் கொண்டு விடுவார்கள்.
நீக்குதனியாக, குழுவாக நாமே சென்றோம் என்றால் எல்லாவற்றையும் நாமே தான் கொண்டு செல்ல வேண்டும். Portable அடுப்பு, ஒன்றிரண்டு பாத்திரங்கள் எடுத்துச் சென்றால் மாகி போன்றவை தயாரித்துச் சாப்பிடலாம்.
பயணிக்க வேண்டும் என்ற ஆவலும் விருப்பமும் வந்து விட்டால் கஷ்டங்கள் பெரிதாகத் தெரியாது நெல்லைத் தமிழன்.
சமீபத்தைய பயணத்தில் என்னுடன் ஒருவர் வந்திருந்தார். சிறிது உயரம் குறைவு, தொந்தி தெரியும்படி. அவர் கிட்ட பேசினபோது அவர் ட்ரெக்கிங்கில் மிக மிக ஆர்வம் கொண்டவராம், தமிழகத்தில் பலப் பல மலைகளில் ட்ரெக்கிங் போயிருக்கிறாராம். வருடத்துக்கு நாலைந்து ட்ரெக்கிங் போய்விடுவேன்... மற்றவர்களுக்கும் உணவு கொண்டு போவேன் என்றெல்லாம் அவர் சொல்ல எனக்கு ஆச்சர்யம்.
பதிலளிநீக்குஇறைவன் பலருக்கு சக்தியையும் ஆர்வத்தையும் கொடுத்திருக்கிறான்.
வருடத்திற்கு நான்கு ஐந்து ட்ரெக்கிங்! வாவ்... அடுத்தவர்களுக்கும் உணவு கொண்டு போகும் நல்ல உள்ளம்... வாழ்க வளமுடன்.
நீக்குஇறைவன் அளிக்கும் சக்தி இல்லாமல் வேறேது...
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி நெல்லைத் தமிழன்.
ஸ்ரீகண்ட் கைலாஷ்பதிவு அருமை, படங்கள், செய்திகள் எல்லாம் அருமை.
பதிலளிநீக்குசங்கிலி விவரம் அருமை. மக்கள் எப்படி எல்லாம் யோசித்து அதை செயல் படுத்தி இருக்கிறார்கள்!
மொட்டும், மலரும அருமை.
கைடு உருந்தால் நம்க்கு பலவிதங்களில் நன்மை. பத்திரமாக அழைத்து சென்று விவரங்களை சொல்லி நம்மை வழி நடத்துவார்கள். நல்ல வழிகாட்டி கிடைத்து விட்டால் நல்லது.
பல இடங்களை தரிசனம் செய்வது எல்லாம் இறையருள் தான் .
//பல இடங்களை தரிசனம் செய்வது எல்லாம் இறையருள் தான் .// இறையருள் இல்லாமல் எந்த விஷயமும் நடப்பதில்லை - உண்மை தான் கோமதிம்மா.
நீக்குபதிவு வழி பகிர்ந்த விஷயங்கள் குறித்த தங்களது எண்ணங்களை இங்கே பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.