வியாழன், 2 ஜூலை, 2026

ஆலய உலா - ஸ்ரீ சீதா தேவி சமேத ஸ்ரீ கோதண்டராமர் கோவில், ஊற்றத்தூர் - வெங்கட் நாகராஜ்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


இதற்கு முன்னர் வெளியிட்ட மூன்று நாட்கள் மூன்று சிகரங்கள் தொடரின் ஒரு பகுதியான Guppy Aunty - மலைச்சரிவும் தாமதமும் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



*******


கோவில் உலா பதிவுகள் எழுதி நாளாகிறது.  கடைசியாக கோவில் உலா எழுதியது ஸ்ரீஅரவிந்தநாயகி சமேத ஸ்ரீ வேணுகோபால சுவாமி திருக்கோயில், உத்தமர்சீலி எனும் பதிவு தான். அதன் பிறகு கோவில் உலா செல்லவும் இயலவில்லை.  ஏதேதோ வேலைகளில் மூழ்கி விட, வார விடுமுறைகளில் ஆலய உலா செல்லும் திட்டமும் செயல்படுத்த இயலவில்லை.  சென்ற வாரத்தில் மூன்று நாட்கள் தொடர்ந்து விடுமுறை என்பதால் எப்படியும் ஒன்றிரண்டு ஆலயங்களுக்கேனும் சென்று வர வேண்டும் என்று திட்டமிட்டேன்.  திட்டமிட்டபடியே தொடர்ந்து இரண்டு நாட்கள் திருச்சியில் இதுவரை பார்த்திராத மூன்று ஆலயங்களுக்குச் சென்று வர முடிந்தது. அந்த ஆலய உலா குறித்த அனுபவங்கள் இன்றிலிருந்து வரும் நாட்களில் வெளியிடுகிறேன்.  முதலில் இன்றைக்கு ஒரு விஷ்ணுவின் ஆலய உலா பார்க்கலாம் வாருங்கள்.  கடந்த 26 ஜூன் 2026 அன்று காலை நேரத்திலேயே வீட்டிலிருந்து எனது இரு சக்கர வாகனத்தில் புறப்பட்டேன். கண்போன போக்கிலே கால் போகலாமா பாடல் நினைவிருக்கிறதா? அது போல எங்கே வாகனம் போகிறதோ அங்கே போகலாம் என நினைத்துக் கொண்டு கீழே இறங்கினேன்.  ஒரு வாரத்திற்கு முன்பு இணையத்தில் உலவியபோது ஒரு சிவாலயம் குறித்த தகவல் கிடைத்தது. சரி அங்கே போகலாம் என்று புறப்பட்டு விட்டேன். ஆனால் அந்த ஊரில் எனக்கு முதலில் கண்ணில் பட்டது விஷ்ணு ஆலயம் - ஹரியால் இருந்தால் என்ன இல்லை ஹரனாக இருந்தால் தான் என்ன! என்னைப் பொறுத்தவரை இரண்டுமே ஒன்று.




திருச்சியிலிருந்து சென்னை செல்லும் நெடுஞ்சாலையில் பயணித்தால் பெரம்பலூர் வருவதற்கு முன்னதாக வரும் ஒரு ஊர் பாடாலூர் என்பது. அந்த ஊரிலிருந்து, மேம்பாலத்தின் கீழே இருக்கும் பாதையில் வலப்புறம் திரும்பி மேலும் 4 கிலோ மீட்டர் பயணித்தால் வரும் ஊர் தான் ஊற்றத்தூர். கால ஓட்டத்தில் தற்போது இந்த ஊரின் பெயர் ஊட்டத்தூர் என்று மாறியிருக்கிறது. ஏன் ஊற்றத்தூர் என்ற பெயர் என்பதற்கு இங்கே இருக்கும் சிவன் கோவில் கதை இருக்கிறது. அது அந்த ஆலயம் குறித்த பதிவில் எழுதுகிறேன்.  இப்போதைக்கு ஊட்டத்தூரில் (நாம் இப்போதைய பெயரிலேயே பார்க்கலாம் - இல்லையெனில் குழப்பம்தான் மிஞ்சும்!) இருக்கும் கோதண்டராமர் சன்னதி குறித்த தகவல்களையும் எனது அனுபவங்களையும் பார்க்கலாம்.  எனது வீட்டிலிருந்து வாகனத்தில் புறப்பட்டு கொள்ளிடம் ஆற்றைக் கடந்து, No.1 Toll Gate, கூத்தூர், சமயபுரம், ஆகிய இடங்களைக் கடந்து, பாடாலூர் வரை சென்று அங்கிருந்து வலப்பக்கம் திரும்பி நான்கு கிலோ மீட்டர் பயணித்தால் ஊட்டத்தூர்.  மொத்தம் சுமார் 37 கிலோமீட்டர் பயணித்து ஊட்டத்தூரை அடைந்தேன். முன்பெல்லாம் பேருந்தில் தான் இத்தனை தூரம் பயணிப்பது வழக்கம். இப்போது இரு சக்கர வாகனத்தில் நிறைய தூரம் பயணிக்கிறேன்.  சற்றே அயர்ச்சி தரும் என்றாலும் நினைத்த நேரத்தில் நினைத்த இடத்திற்குப் பயணம் செய்ய முடிகிறது என்ற காரணத்தினால் இப்படியான இரு சக்கர வாகன பயணங்கள்! அதுவும் தனியாகப் போகும்போது இது தான் வசதி. 



ஊட்டத்தூரின் பிரதான சாலையிலேயே வலப்பக்கம் ஒரு ஆலயம் தெரிய, அது தான் சிவன் கோவிலோ என்ற எண்ணத்துடன் கோபுர வாசலில் நின்று கொண்டிருந்த பெரிய வண்டியின் அருகே எனது வாகனத்தையும் நிறுத்தி விட்டு பதாகையைப் பார்த்தால் கோதண்டராமர் சன்னதி என்று தெரிந்தது.  மிகவும் பழமையான ஆலயம். வாசலில் இருந்த பதாகை ஏழாம் நூற்றாண்டியில் கட்டப்பட்ட வைணவத் திருத்தலம் எனும் தகவலையும் ஆலயத்தில் தரிசிப்பதால் கிடைக்கும் பலன்களைப் பற்றியும் சொல்கிறது.  ஆலயத்தின் பழமையைப் போலவே இந்தப் பதாகையும் மிகவும் பழையதாக, பராமரிப்பின்றி இருக்கிறது. உள்ளே நுழைந்ததும் நம்மைக் கவர்வது அனுமன்! வாசலை நோக்கி அனுமன் இருக்க, அவருக்குப் பின்புறம் கருடன் - கோதண்டராமரை நோக்கி இருக்கிறார்.  இருவரையும் தரிசனம் செய்து கொண்டு உள்ளே சென்றால் பெரிய மஹா மண்டபம் - அழகான தூண்களும் சிற்பங்களும் இருக்கின்றன என்றாலும் பெரிதாக கவனிக்கப்படாமல் பாழடைந்து தான் இருக்கிறது. 


அந்த மஹா மண்டபத்தில் இடப்புறம் தும்பிக்கை ஆழ்வாரும், ஆதி கேசவரும் இருக்கிறார்கள். வலப்பக்கத்தில் ராமானுஜர், விஸ்வக்சேனர் சிலைகள் இருக்கின்றன.  மஹா மண்டபத்தினைக் கடந்து சென்றால், அர்த்த மண்டபம் தாண்டி கர்ப்பக்கிரஹத்தில் ஸ்ரீ சீதா தேவி, ஸ்ரீ கோதண்டராமர் மற்றும் ஸ்ரீ லக்ஷ்மணன் - பட்டாபிஷேகக் கோலத்தில் - நின்ற நிலையில்! இந்தக் கோலத்தில், எப்போதும்  ராமரின் காலடியில் அமர்ந்திருக்கும் அனுமன் இந்த ஆலயத்தில் இல்லை! அவர் வெளியே நின்று கொண்டிருக்கிறார் என்பதாலோ என்னவோ தெரியவில்லை.  மூன்று சிலைகளும் அப்படி ஒரு அழகு.  பார்த்துக் கொண்டே நின்றிருந்தேன்.  ஆலயத்தில் என்னைத் தவிர ஒன்றிரண்டு பக்தர்கள் இருந்திருக்கலாம்! கோவிலைக் கவனித்துக் கொள்ளும் பட்டர் அப்போது தான் வெளியே இருக்கும் தும்பிக்கை ஆழ்வாருக்கு அம்சி செய்து கொண்டிருந்தார்! அதனால் நானும் சீதா தேவி சமேத கோதண்டராமர் மற்றும் லக்ஷ்மணன் மட்டுமே அங்கே இருந்தோம். 


திவ்யமான தரிசனம் கிடைத்தது. சிறிது நேரத்தில் பட்டர் உள்ளே வர, தீபம் காண்பித்து, தீர்த்தம் அளித்து சடாரி சாற்றினார்.  தீபம் காண்பித்த போது ஆலயத்தின் பெருமைகளையும் சொல்லி தீபம் காண்பிக்க, கோதண்டராமரை கண்ணாரக் கண்டு களித்தேன்.  ஆலயத்தின் சிறப்பென அவர் சொன்னதும், வெளியே இருந்த பதாகை சொன்னதும் இது தான் - 


ஆலயம் ஏழாம் நூற்றாண்டில் கட்டப்பட்டது;


ஸ்ரீ சீதா தேவி தன் கணவரின் நலனுக்காக, லிங்கம் பிடித்து வழிபட்ட ஸ்தலம்;


ஸ்ரீ கோதண்டராமரை தரிசனம் செய்வதினால், ராமேஸ்வரம் சென்று, புனித நீராடி, ஸ்ரீராமரை ஸேவித்த புண்ணிய பலன் கிட்டும்;


ராமேஸ்வரம் சென்று செய்யவேண்டிய நேர்த்திக் கடன்களை, ஊட்டத்தூரில் இருக்கும் இந்த கோதண்டராமர் சன்னதியிலும் செய்யலாம்.  அதே அளவு பலன் கிடைக்கும்;


திருமணத் தடை உள்ளவர்கள் 9 சனிக்கிழமைகள் தொடர்ந்து நெய் தீபம் ஏற்றிட, திருமணம் கைக்கூடும்.  கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழும் தம்பதியினர் தொடர்ந்து 7 வாரம் வெள்ளிக்கிழமைகளில் வில்வ இலைகளினாலான சிட்டி விளக்கில் (?) நெய் தீபம் ஏற்றினால் மன வேறுபாடு விலகி மீண்டும் ஒன்று சேர்வார்கள்;


சனி பகவானின் தோஷம் உள்ளவர்கள் அவர்களது ஜன்ம நக்ஷத்திரத்தன்று இந்த ஆலயத்தில் வழிபட்டால் நல்லது நடக்கும்.


பட்டர் ஆலயத்திலிருந்து புறப்பட்டு விட மீண்டும் ஏகாந்தம்.  ஆலயத்தின் வாசலில் மஹாமண்டபத்தினைத் தாண்டி இரண்டு மூதாட்டிகள் - ஒருவர் பட்டரின் அம்மா.  மற்றவர் உள்ளூரில் இருக்கும் ஏதோ ஒரு பாட்டி. இருவரும் வெளியே பேசிக் கொண்டிருந்தார்கள்.  நான் உள்ளே ஏகாந்தத்தில் அமர்ந்திருந்தேன்.  சில நிமிடங்கள் அப்படியே அமர்ந்திருந்த பிறகு வெளியே வந்து பிராஹாரத்தில் ஒரு உலா வந்தேன்.  பாதையில் ஆங்காங்கே செடிகள்  முளைத்து, சரியான பராமரிப்பில்லை என்பதை பறைசாற்றியது. எத்தனை பழமையான கோவில், சரியாக பராமரிக்கவில்லை என்றால் இன்னும் சில வருடங்களில் புதர் மண்டிப்போகும் எனும் நிலை.  புதிது புதிதாக ஆலயம் அமைப்பவர்கள் இது போன்ற ஆலயங்களையும் கவனித்தால் பரவாயில்லை.  நான் சுற்றி வந்து பார்த்தபோது இன்னும் இரு பக்தர்கள் வந்தார்கள். பட்டர் வெளியே சென்றிருக்க, பட்டரின் அம்மாவே, “பிள்ளை இப்போ தான் புறப்பட்டு வெளியே போயிருக்கிறான்” என்று சொன்னபடி உள்ளே சென்று வந்தவர்களுக்கு தீர்த்தமும் சடாரியும் சாற்றினார். 


நுழைவாயில் அருகே ஒரு படமும், பதாகையை ஒரு படமும் எடுத்தேன். உள்ளே படம் எடுக்கத் தோன்றவில்லை. துவாரபாலகர் சிலைகள் பாழடைந்து விட்டது போலும் - அதற்கு பதிலாக சுதைச் சிற்பங்கள் - பெயிண்ட் பூசிய சிற்பங்களை அங்கே வைத்திருந்தார்கள். ஏனோ பிடித்தமாக இல்லை. இணையத்தில் தேடியபோது இந்தத் தளம் கிடைத்தது. அதில் சில படங்கள் போட்டிருக்கிறார்கள். தகவல்களும் இருக்கிறது. முடிந்தால் பாருங்கள். திருச்சி பக்கம் வந்தால், முடிந்தால், ஊட்டத்தூரில் இருக்கும் இந்தப் பழமையான ஆலயத்திற்கு வந்து ஸ்ரீ சீதாதேவி சமேத ஸ்ரீ கோதண்டராமரின் தரிசனம் பெறுங்கள். திவ்யமான தரிசனம் பெற்ற பிறகு அங்கிருந்து புறப்பட்டு நான் அடைந்தது, முதலில் செல்ல நினைத்த சிவாலயம். அந்த ஆலயம் குறித்த தகவல்களையும் எனது அனுபவங்களையும் அடுத்த ஆலய உலா பதிவின் வழி உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். அது வரை தொடர்ந்து இணைந்திருக்க வேண்டுகிறேன்.  எல்லோருக்கும் நல்லதே நடக்கட்டும்.


*******


இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


வெங்கட் நாகராஜ்

திருவரங்கம்

2 ஜூலை 2026


2 கருத்துகள்:

  1. பழமையான கோவில் என்னும் செய்தியே கவர்கிறது.  ஊருக்கு ஊர் ஆங்காங்கே இப்படி பல கோவில்கள்.  எல்லாவற்றையும் சென்று தரிசிப்பது சாத்தியமில்லை.  பெரம்பலூரில் இருக்கும் இரண்டு பெரிய கோவில்களையும், விருத்தாச்சலம் கோவிலையும், ஏன் அதற்கு முன் மதுராந்தகம் ஏரி காத்த ராமர் கோவிலையும் பார்க்க வேண்டும் என்று நினைக்கிறேன்...  இப்படியே போகிறது!

    பதிலளிநீக்கு
  2. 7 ஆம் நூற்றாண்டு பழமையான கோயில் பற்றிய தகவல்கள் நன்று. இப்படியான கூட்டமில்லா கோயில்கள் ரொம்பப் பிடிக்கும் ஏகாந்தமாக இருந்து வணங்கிவிட்டு வரலாமே என்றுதான். அந்த அமைதி தனி vibe.

    நானும் இங்கு சென்று வந்த ஒரு கோயில் பற்றி எழுத வேண்டும் என்று நினைத்து நினைத்து....அப்படியே கிடக்கிறது.

    கீதா

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....