செவ்வாய், 20 அக்டோபர், 2026

நவராத்திரி கொலு 2026 - பகுதி இரண்டு - ஆதி வெங்கட்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   முகநூலில் இந்த நவராத்திரி நாட்களில் எழுதிய இற்றைகளின் தொகுப்பு ஒன்று - அங்கே வாசிக்காதவர்களின் வசதிக்காகவும், எனது சேமிப்பிற்காகவும் இங்கேயும் பகிர்ந்து கொள்கிறேன்.


இதற்கு முன்னர் வெளியிட்ட நவராத்திரி கொலு 2026 - பகுதி ஒன்று  பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



*******



நவராத்திரி கொண்டாட்டங்கள் குறித்த எனது நேற்றைய பதிவினை படித்து ரசித்த அனைவருக்கும் நன்றி. தொடர்ந்து இன்றைய பதிவில் தொடர்ந்து கொண்டாட்டங்கள் குறித்துப் பார்க்கலாம் வாருங்கள்!


நவராத்திரி 2026 - நான்காம் நாள் - 14 அக்டோபர் 2026:


தாம்பூலம்!










வெற்றிலை, பாக்கு, பழத்துடன், மஞ்சள், குங்குமம், புஷ்பம் இவற்றுடன் நாணயம் ஒன்றையும் வைத்து தருவதே தாம்பூலம்! பிறகு வஸ்த்ர தானத்திற்காக ரவிக்கைத் துணியும் வைத்து தரப்பட்டது! கால ஓட்டத்தில் அவரவரின் வசதிக்கேற்பவும், உபயோகத்துக்கு உகுந்த மாதிரியும்  தாம்பூலத்தில் வைத்துத் தரப்படும் பொருட்களும் மெல்ல மெல்ல மாறியது! 


நாள் கிழமைகளில் பாரபட்சமின்றி நம் வீட்டிற்கு எல்லோரையும் அழைத்து அவர்களுக்கு நம்மால் இயன்றதை இன்முகத்துடன் வைத்துத் தருவதில் தான் உண்மையான மகிழ்ச்சி இருக்கிறது! இந்த சந்தர்ப்பத்தில் என் அம்மாவை தான் நினைத்துக் கொள்வேன்! எங்கள் வீட்டில் கொலு வைக்கும் வழக்கம் இல்லை என்பதால் வரலஷ்மி நோன்புக்கு எல்லோரையும் அழைத்து அம்மா சந்தோஷமாக தாம்பூலமும் பிரசாதமும் கொடுப்பாள்! 


நம் வீட்டில் நவராத்திரியில் அக்கம்பக்கத்தவர்கள் மட்டுமல்ல அண்டை வீடுகளில் வீட்டுவேலை செய்பவர்கள், தூய்மை பணியாளர்கள், பூக்காரர், வாட்ச்மேன் என்று எல்லோரையுமே வீட்டிற்கு அழைத்து தாம்பூலம் கொடுப்பது தான் வழக்கம்! நவராத்திரியில் இம்முறை எதேச்சையாக நான் சந்தித்த பூ விற்கும்  பெண்மணி ஒருவருக்கு தான் முதல் தாம்பூலத்தை கொடுத்தேன்!


அதே போன்று பிளாஸ்டிக்கை தவிர்க்க எண்ணி eco friendlyஆகவும் பெண்களுக்கு உபயோகமாகவும் இருப்பதை பார்த்து தான் தேர்வு செய்வோம்! இம்முறை ஆன்லைன் மூலம் ‘Wedtree’ல் ஆர்டர் செய்து pichwai Coin purses & அழகான Saree border Tin jarsம் வரவழைத்துக் கொண்டோம்! அதனுடன் trendக்கு தகுந்தாற் போல் பிளவுஸ் பிட்டை ப்ளீட் எடுத்து அதனுடன் க்யூட்டான fridge magnets வைத்து தான் தந்து கொண்டிருக்கிறேன்! நேரமின்மையால் இந்த வருடம் இப்படி! நல்லதே நடக்கட்டும்! நலமே சூழட்டும்!


அன்றாடம் இணைய வழியில் தோழிகள் இணைந்து செய்யும் செளந்தர்ய லஹரி நித்ய பாராயணமும், பின்பு வீட்டுக் காரியங்களும் , மாலைநேரம் சுண்டல் தாளிப்பும் பின்பு இல்லம் தேடி கொலுவை காண வருவோருக்கு தாம்பூலம் தருவதுமாக இன்றைய நாள் மிகவும் இனிதாகவே சென்றது!





இன்று வேர்க்கடலை சுண்டல் பண்ணி  நிவேதனம் செய்தேன்! இன்றைய நிறம் நீலம்! சென்ற ஆண்டு தம்பி வாங்கித் தந்த ஒரு நீல நிறப் புடவையை இன்று தான் பிரித்து உடுத்திக் கொண்டேன்!


மீதிக்கதைகளை தொடர்ந்து பார்க்கலாம்.


*******


நவராத்திரி ஐந்தாம் நாள் - 15 அக்டோபர் 2026:





நவராத்திரி ஐந்தாம் நாளான இன்றைய நாளில் காலை நேரத்து வேலைகளை பரபரவென்று முடித்துக் கொண்டு என்னவருடனேயே கிளம்பி அலுவலகம் செல்லும் வழியில் முகநூல் தோழி Rajeswari Periyaswamy யின் இல்லத்தில் இறங்கிக் கொண்டேன்! 


தோழியுடனும் அவரின் மகளுடனும் சற்று நேரம் இனிமையாக செலவிட்ட பின் வீட்டிற்கு திரும்பியதும், செளந்தர்ய லஹரி வகுப்புத் தோழி Bhuvana Ramachandran நவராத்திரி கொலுவைக் காண எங்கள் இல்லத்துக்கு வந்திருந்தார்! அவருடன் சற்றுநேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு தாம்பூலமும் தந்தேன்!


மாலைநேரம் வழக்கம் போல் சுண்டல் நிவேதனமும், நட்புகளின் வருகையுமாகச் சென்றது! இன்று வெள்ளைக் காராமணியில் சுண்டல் செய்திருந்தேன். சற்றே மாறுதலாக தேங்காயுடன் கொத்தமல்லி சேர்த்து அரைத்துப் போட்டும், இஞ்சி துருவிப் போட்டும் செய்திருந்தேன்! நன்றாகவே இருந்தது!


இன்றைய நிறம் மஞ்சள் என்பதால் சில வருடங்களுக்கு முன்பு என் மாமா ஒருவர் வாங்கித் தந்த எனக்குப் பிடித்த மஞ்சள் நிறப் புடவையை தான் இன்று உடுத்திக் கொண்டேன்! இன்றைய நாள் இப்படியாகத் தான் இனிமையாகக் கழிந்தது!


அம்பாளின் அனுக்கிரஹத்தில் இங்கே இப்போது மழை நிதானமாக பெய்து பூமியையும், மனதையும் குளிர்வித்துக் கொண்டிருக்கிறது! நல்லதே நடக்கட்டும்!


தொடர்ந்து மீதிக்கதைகளை பார்க்கலாம்!


*******


நவராத்திரி ஆறாம் நாள் -  16 அக்டோபர் 2026:




இன்று நவராத்திரி வெள்ளிக்கிழமை என்பதால் சிவப்பு அவலில் இனிப்பு புட்டு செய்து அம்பாளுக்கு நிவேதனம் பண்ணினேன்! 


நீதாம்மா புட்டு பண்ணுவே! நானே வந்து வாங்கிக்கலாம்னு இருந்தேன்! நீயே கொண்டு வந்து கொடுத்துட்ட! என்று மகிழ்ந்தார் ஒரு மாமி!


அக்கம்பக்கம் நட்புகள் என்று வரிசையாக எல்லோரும் கொலுவைக் காண இல்லம் தேடி வந்து கொண்டே இருந்தனர்! இடையில் நானும் என்னவரை அமர்த்தி விட்டு எங்கள் குடியிருப்பிலேயே உள்ள சில வீடுகளுக்குச் சென்று தாம்பூலம் வாங்கி வந்தேன்!


இன்று வீட்டிற்கு வந்த குட்டீஸ் எல்லாருமே செம க்யூட்டாக இருந்தார்கள்! பட்டுப் பாவாடை சரசரக்க கொள்ளை அழகில் வலம் வந்த இரண்டே வயது நிரம்பிய தமிழிசை! அவளின் அக்கா ரங்க ப்ரியா! 


ஷக்தி, ஷங்க்ருதி இருவரும் U.S-இலிருந்து வந்தவர்கள்! அவர்களின் அப்பா அம்மா இருவருமே Scientists! சுட்டீஸ் இருவருமே அழகாக பாரம்பரிய உடையணிந்து வந்து நான் பாடுறேன்! நான் பாடுவேன்! என்று மாற்றி மாற்றி  அழகாக பாடினார்கள்! இனிப்பு புட்டையும் விரும்பி சாப்பிட்டனர்!


இன்றைய நிறம் பச்சை! மகள் பள்ளிச் சிறுமியாக இருந்த போது ஒருசமயம் தன் சேமிப்பில் என் பிறந்தநாளுக்கு வாங்கித் தந்த புடவை இது! அதைத் தான் இன்று உடுத்திக் கொண்டேன்! இப்படியாக இன்றைய நாள் மிகவும் இனிமையாகவே கடந்து சென்றது!


மீதிக்கதைகளை தொடர்ந்து பார்க்கலாம்! அடுத்த பதிவில்…


*******


இன்றைய தொகுப்புப் பகிர்வு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


ஆதி வெங்கட்

திருவரங்கம்

20 அக்டோபர் 2026





8 கருத்துகள்:

  1. நவராத்ரி படங்களும் நிவேதனமும் கவர்ந்தன.

    சில நாட்களாக, வீட்டின் ஒவ்வொரு பகுதியில் ஒரு இடத்தை எடுத்துக்கொண்டு சுத்தம் செய்கிறேன். பல விசேஷங்களில் கொடுக்கும் சிறிய சிறிய பரிசுப் பொருட்கள் அடைசலாக இருப்பதினால் தூரப்போடுகிறோம். மஞ்சள் குங்கும்ம் உபயோகம். மற்ற சிறிய பரிசுகள் அடைசலாகிவிடுகிறது. ரவிக்கைத் தைண்டு மாதிரி சுற்றுக்கு விடணுமோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் சார். அவ்வப்போது ஏதேனும் ஒரு பகுதியை எடுத்துக் கொண்டு சுத்தம் செய்தால் தான் நல்லது. தாம்பூலப் பரிசுகளையும் நம்முடைய தேவைக்குப் போக சுற்றுக்கு விடுவதும் நல்லது தான்! எல்லாவற்றையும் நாமே வைத்துக் கொண்டாலும் அடைசல் தான் உண்டாகும்.

      தங்களின் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லை சார்.

      நீக்கு
  2. தாம்பூலப்படங்கள் அழகழகாய் இருக்கின்றன.  எங்கள் வீட்டிலும் முதலில் கொலு கிடையாது.  வரலக்ஷ்மி நோன்புக்கு வகைவகையாய் யோசித்து கிப்ட் செலெக்ட் செய்வோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பரிசுப் பொருளை தேர்வு செய்வதும் மகிழ்ச்சியான விஷயம் தான் சார்.

      தங்களின் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம் சார்.

      நீக்கு
  3. ரங்க ப்ரியா... ஆஹா.. ஊருக்கேத்த பெயர். நவராத்திரி நாட்கள் சிறப்பாக நகர்வது அறிந்து மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் சார். ரங்கனிடம் ப்ரியை.

      தங்களின் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம் சார்.

      நீக்கு
  4. படங்களுடன் பகிர்ந்த விதம் மனம் கவர்ந்தது.. வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமணி சார்.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....