செவ்வாய், 10 மார்ச், 2015

சாப்பிட வாங்க: பேட்மி பூரி!



படம்: இணையத்திலிருந்து.....

சாதாரணமா பூரின்னா கோதுமை மாவுல செஞ்சு சாப்பிடுவாங்க... இல்லைன்னா மைதா சேர்த்து சோளா பூரி என்று சாப்பிடுவது நம் வழக்கம். ஆனால் வட இந்தியாவில் பேட்மி [Bedmi] பூரி என்றும் ஒன்று உண்டு. தில்லியின் சாந்த்னி சௌக் பகுதிகளில் இப்படி பேட்மி பூரி கிடைக்கும். சென்ற ஞாயிறன்று நண்பர் ஒருவர் இன்னிக்கு வீட்டுல பேட்மி பூரி செய்யப் போறாங்க! உங்களுக்கும் சேர்த்து தான் – கண்டிப்பா வந்துடுங்க! என்று சொன்னார்.

நானோ காலையிலேயே சாதம் வைத்து சீரக ரசம் – அதாங்க நம்ம உமையாள் காயத்ரி ஜி பதிவில் சொன்ன மாதிரி செய்து பார்க்கலாம் என அதற்கான தயாரிப்பில் இறங்கி இருந்தேன். அதை ராத்திரி செய்து சாப்பிடுங்க, இப்ப இங்கே வந்துடுங்க என அழைப்பு பலமாய் இருக்க, நானும் சரி என்று சொல்லி விட்டேன். பேட்மி பூரி சாப்பிட்டு சில மாதங்கள் ஆகிவிட்டது என்பதும் ஒரு காரணம். சரி என்று நான் செய்த சாதத்தினை எடுத்து வைத்து விட்டு, அவர்களது வீட்டிற்குச் சென்று விட்டேன்.

சென்று என்ன செய்தேன் எனக் கேட்கக் கூடாது – நல்ல ரவுண்டு கட்டி தொட்டுக்கையாக கொடுத்திருந்த உருளைக்கிழங்கு சப்ஜி, ராய்த்தா, மற்றும் சலாட் உடன் ஏழு எட்டு பூரிகளை உள்ளே தள்ளினேன். ”அட நீங்க மட்டும் நல்லா சாப்பிட்டு வந்தா எப்படி, எங்களுக்கு தரதான் முடியாது, எப்படிச் செய்வதுன்னு சொல்லவாது செய்யலாம் இல்ல” என நீங்கள் கேள்விக்கணைகளை வீசும் முன்னரே நானே சொல்லி விடுகிறேன்.

சரி இந்த பேட்மி பூரி எப்படிச் செய்வது என்று பார்க்கலாம்.....



படம்: இணையத்திலிருந்து.....


பொதுவாக குளிர் காலத்தில் இந்த பேட்மி பூரி செய்வது இங்கே வழக்கம். சாதாரண நாட்களிலும் கிடைக்கும் என்றாலும், குளிர் காலத்தில் தான் அதிகம் கிடைக்கும்.  வடக்கில் இந்த வகை பூரி செய்வதற்கென்றே, கோதுமை மாவு போலவே பேட்மி பூரி  மாவும் தனியாக கிடைக்கும்.  ஆனால் நமது ஊரில் இம்மாவு கிடைப்பது கடினம் என்பதால் நீங்கள் தடுமாற வேண்டாம். அதற்கும் வழி உண்டு. 

தயாரிக்க ஆகும் நேரம்: 2 மணி நேரம்.
சமைக்க ஆகும் நேரம்: சுமார் 30 நிமிடங்கள்.
எத்தனை பேர் சாப்பிடலாம்?  சுமார் நான்கு பேர்.

தேவையான பொருட்கள்:

கோதுமை மாவு [இரண்டு கப்], வறுத்த ரவை [அரை கப்], பாசிப்பருப்பு [ஒரு கப்], இஞ்சி – ஒரு துண்டு, பச்சை மிளகாய் 5, கொத்தமல்லிப் பொடி 1 தேநீர் கரண்டி, மஞ்சள் பொடி 2 தேநீர் கரண்டி, மிளகாய்த் தூள் காரத்திற்கு வேண்டியபடி மற்றும் உப்பு தேவையான அளவு.  பொரிக்கத் தேவையான அளவுக்கு எண்ணை அல்லது நெய்.

எப்படிச் செய்யணும் மாமு?

பருப்பினை இரண்டு மணி நேரம் அளவு ஊற வைத்துக் கொள்ளவும். ஊறிய பிறகு, தண்ணீரை நன்கு வடிகட்டிவிட்டு இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். அரைத்த பிறகு அதில் மிளகாய்த் தூள், மஞ்சள் தூள் மற்றும் கொத்தமல்லி பொடி உப்பு ஆகியவற்றைச் சேர்த்து நன்கு கலந்து வைக்கவும்.

பிறகு கோதுமை மற்றும் ரவையைச் சேர்த்து அதில் கொஞ்சம் எண்ணை சேர்த்துக் கொண்டு அரைத்து வைத்திருக்கும் கலவையையும் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.  தேவையெனில் கொஞ்சம் தண்ணீரும் சேர்த்துக் கொள்ளலாம். பூரி பதத்திற்கு பிசைந்து வைத்து அதை மூடி வைத்து விடவும். அரை மணி நேரம் இப்படி வைத்து விட்டு, உருளைக்கிழங்கு சப்ஜி, சட்னி போன்றவற்றையும் செய்து கொள்ளலாம்.  

மாவினை சிறு சிறு உருண்டைகளாகச் செய்து பூரிகளாக இட்டுக் கொள்ளுங்கள்.  வாணலியில் எண்ணை வைத்து நன்கு சுட்ட பிறகு, ஒவ்வொரு பூரியாக அதில் போட்டு பொன்னிறமாகப் பொரித்து எடுத்து விடுங்கள். எண்ணைக்குள் பூரியைப் போடும்போது கவனம் தேவை என்பதை சொல்லவும் வேண்டுமோ? தொட்டுகையாக உருளைக்கிழங்கு, சட்னி என அசத்தலாக இருக்கும் இந்த பேட்மி பூரி!

”இந்த ஊற வைத்து அரைக்கிற வேலையெல்லாம் நமக்கு ஆகாது” என்று சொல்பவர்கள் “பேட்மி பூரி மாவு” கிடைக்கிறதா என்று பார்த்து, கோதுமை மாவு போலவே இந்த மாவினை தண்ணீர் சேர்த்து பிசைந்து பூரியாக பொரித்துக் கொள்ளலாம்.

என்ன நண்பர்களே இந்த வாரம் உங்கள் வீட்டில் பேட்மி பூரி தானே!

மீண்டும் வேறு ஒரு அனுபவம்/உணவு வகையோடு விரைவில் உங்களைச் சந்திக்கிறேன்.

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

திங்கள், 9 மார்ச், 2015

நெடுஞ்சாலை உணவகத்தில் ப்யாஜ் பராட்டா



தேவ் பூமி ஹிமாச்சல் – பகுதி 3

தேவ் பூமி ஹிமாச்சல் – பகுதி 1 2

 படம்: இணையத்திலிருந்து....

கர்னால் நகரின் பக்கத்தில் இருக்கும் ஒரு உணவகத்தில் ஓட்டுனர் ஜோதி வண்டியை நிறுத்திய பின் இயற்கை உபாதைகளை முடித்துக் கொண்டு உணவகத்திற்குள் சென்றோம். வண்டிக்குள் இருந்த வரை குளிர் அவ்வளவாகத் தெரியவில்லை.  நெடுஞ்சாலையில் வெட்ட வெளியில் இருந்த உணவகத்தின் அருகே அப்படி ஒரு குளிர்ந்த காற்று. பார்க்கும் மக்கள் அனைவருமே ஒரு பெரிய மூட்டைக்குள் இருப்பது போல இருக்கிறார்கள் – எங்களையும் சேர்த்து தான்.

 உணவகத்தின் நுழைவாயில்....

வெளியிலேயே நாற்காலிகளும் மேஜைகளும் போட்டு இருந்தாலும் கண்ணாடித் தடுப்புகள் அமைத்திருந்த உட்புறத்திற்குத் தான் அனைவரும் சென்று கொண்டிருந்தார்கள். வெளியில் அடிக்கும் குளிர்காற்றிலிருந்து தப்புவது தான் அனைவரின் குறிக்கோளாக இருந்தது.  நாங்கள் வந்திருந்த அதே சமயத்தில் பல வண்டிகள் வெளியே வந்திருந்தன. 

அங்கே பல உணவகங்கள் வரிசையாக இருக்கும். அதில் நாங்கள் தேர்ந்தெடுத்தது ZHILMIL DHABA எனும் உணவகம். சில வருடங்களுக்கு முன்னரே ஒரு பயணத்தில் அங்கே சாப்பிட்ட அனுபவம் உண்டு. கூடவே ஜோதியும் இங்கே சாப்பிடலாம் என்று பரிந்துரைக்க அந்த உணவகத்தினைத் தேர்ந்தெடுத்தோம். பெரும்பாலும் வட இந்தியாவில் காலை உணவாக பராட்டா தான் கிடைக்கும். இங்கேயும் அதே.

”என்ன இருக்கு?” என்ற கேள்வியே தேவையில்லை – இருந்தாலும் கடமைக்கு கேட்டு வைத்தோம். வரிசையாக “ஆலு பராட்டா, ப்யாஜ் பராட்டா, பனீர் பராட்டா, மூளி பராட்டா, கோபி பராட்டா, மேத்தி பராட்டா” என்று அவர் அடுக்கிக்கொண்டே போக, சிலர் ஆலு பராட்டா, சிலருக்கு ப்யாஜ் பராட்டா, சிலர் பனீர் பராட்டா எனச் சொல்லி பணியாளியைக் குழப்பி விட்டோம்.  எல்லோரும் சொல்லச் சொல்ல அவர் தலை முடியைப் பிய்த்துக் கொள்ளாத குறை! 

 டம்ப்ளருக்குள் பச்சை மிளகாய்....  பராட்டா ஒரு வாய்... மிளகாய் ஒரு கடி! ஆஹா என்ன ருசி!

சரி எத்தனை எத்தனை பராட்டாக்கள், என்ன வகை என்று சொல்லிய பின்னும் அவர் கைவிரல்களால் எண்ணிய படியே சென்று கொண்டிருந்தார். அதற்குள் வேறொரு பணியாள் எங்கள் அனைவருக்கும் தட்டு, டம்ளர் போன்றவற்றையும் சிறிய கண்ணாடி டம்ளரில் போட்டு வைத்திருந்த பச்சை மிளகாய்களையும் கொண்டு வைத்தார்.  கூடவே ஒவ்வொரு தட்டிலும் ஒரு ஊறுகாய் Blister Pack, Butter Paper-ல் மடித்த வெண்ணை வைத்தார்.  கூடவே எலுமிச்சை பிழிந்த முள்ளங்கி, வெங்காயம், மேலே தூவிக்கொள்ள உப்பு, மிளகுத் தூள் என வைத்து விட்டுச் சென்றார்.

 நெடுஞ்சாலையில் பயணிக்கும்போது எடுத்த படம் - இவர் தௌ. தேவிலால்!

உள்ளே இருந்து பராட்டா வருவதற்குள் வெங்காயம், முள்ளங்கி எல்லாம் காலி ஆனது! சுடச் சுட பராட்டா வர வேண்டுமே! பிறகு பராட்டா வர, ஒவ்வொருவராய் அவரவர் கேட்ட பராட்டாவினை கொடுத்திருந்த வெண்ணையை அதன் மேல் தடவி, தயிர் மற்றும் ஊறுகாய் தொட்டுக்கொண்டு ஒரு கட்டு கட்டினோம்.  ஒரு சிலர் ஒரு பராட்டாவிலேயே வயிறு நிரம்பியதாய்ச் சொல்ல, என்னைப் போல சிலர் மட்டும் இன்னும் ஒரு பராட்டா சாப்பிட்டோம் – முதலில் சாப்பிட்டது ப்யாஜ் பராட்டா, இரண்டாவதாக பாதி ஆலு பராட்டா, பாதி பனீர் பராட்டா! இரவு வரை தாங்க வேண்டுமே! ஏனெனில் பராட்டா சாப்பிடும்போதே மணி 11.45!

 குளிர் தாங்கலை! Atleast ஒரு சாக்காவது குடுத்தாங்களே... என்று யோசிக்கும் பைரவர்..

இப்படியாக அவரவர்களுக்குத் தேவையானதை சாப்பிட்டு முடித்தபின் அனைவரின் ஏகோபித்த வாக்களிப்பில் அந்த உணவகத்திற்கு நல்ல பெயர். உணவும் பிடித்திருந்தது எனச் சொல்லி விட அடுத்தது என்ன என்று கேட்க, குளிருக்கு இதமாய் ஒரு தேநீர் என்பதே அனைவரின் குரலாகவும் இருந்தது! பொதுவாகவே ஹரியானாவில் பால் மிகவும் நன்றாக இருக்கும். நல்ல Thick-ஆன எருமைப் பால்! தண்ணீர் கலப்பது இல்லை. அதனால் தேநீரும் நன்றாக இருக்கும். அனைவரும் தேநீர் அருந்தி அங்கிருந்து புறப்பட்டோம்.

 தேக்கு மரங்கள்.....

இந்தப் பயணம் முழுவதும் என்னைக் கவர்ந்த விஷயம் பசுமையான வயல்வெளிகள் – பல இடங்களில் கடுகு, கரும்பு, கோதுமை எனப் பயிரிட்டு இருந்தார்கள். கூடவே பல வயல்களின் ஓரங்களில் தேக்கு மரங்கள். மரங்களை வைத்து விட்டு சில வருடங்கள் காத்திருந்தால் நல்ல சாகுபடி. பராமரிப்பு என பெரிதாய் ஒன்றுமில்லை.  சாலையில் பயணித்தபடியே பல இடங்களில் இப்படி தேக்கு மரங்களைப் பார்க்க முடிந்தது.

பொதுவாகவே ஹரியானா, பஞ்சாப் மாநிலத்தில் உள்ளவர்கள் நல்ல உழைப்பாளிகள். விவசாயம் தான் அவர்களுக்கு முக்கியத் தொழில். அந்த பச்சைப் பசேலெனெ இருக்கும் வயல்வெளிகளைப் பார்த்தபடியே எங்கள் பயணம் தொடர்ந்தது. அடுத்த பகுதியிலும் வழியில் சந்தித்த சில நிகழ்வுகளைப் பார்க்கலாம்! ஏனெனில் நாங்கள் ஹிமாச்சலப் பிரதேசம் போய்ச் சேர்ந்தது மாலை ஏழு மணி அளவில். கிட்டத்தட்ட 12 மணி நேரப் பயணத்தில் கிடைத்த அனுபவங்களை ஒரே பதிவாகச் சொல்லி விட்டால் என்னாவது! :)

தொடர்ந்து பயணிப்போம்......

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

ஞாயிறு, 8 மார்ச், 2015

பூமகள் ஊர்வலம் …..



நேற்று ”பூக்களின் நடுவே கட்டிப்பிடி வைத்தியம்” பதிவில் சொன்ன மாதிரியே இன்றும் பூக்களின் ஊர்வலம் தான். நடுநடுவே சில Cactus, Bonsai செடிகளும் வரலாம்! ஆனாலும் நிறைய பூக்கள் என்பதால் பூமகள் ஊர்வலம் என்று சொல்லலாமே! நேற்றைய பதிவினை படிக்காதவர்கள் சற்றே மேலுள்ள சுட்டியின் மூலம் அதையும் படித்து விட்டு வரலாமே!


வரவேற்கும் பொம்மை
 

குழந்தைக்கு உணவு ஊட்டும் அம்மா.....


வாங்க வாங்க... முழுதும் பூக்களால் செய்யப்பட்டிருக்கிறேன் நான் எனச் சொல்லும் பொம்மை....


வண்ணம் கொண்ட வெண்ணிலவே......


டேலியா... டேலியா.... சொக்க வைக்கும் டேலியா....


இந்த போன்சாய் மரத்தின் வயது 35 என எழுதி வைத்திருந்தார்கள்......


இதன் வயது பத்து!


இன்னுமொரு டேலியா....


பூவே உன் பெயர் என்னவோ?


பிங்கி பேபி







கார்னேஷன்!


ஹை.... பூவுக்குள் பொம்மை....


ஒரு வகை கள்ளிச் செடி....





சரி இன்றைய படங்களைப் பார்த்து விட்டீர்களா?  அங்கே எடுத்த படங்களிலிருந்து வெகு சில படங்களை மட்டுமே இங்கே பகிர்ந்து கொள்ள முடிந்தது. எல்லாப் படங்களையும் இங்கே வெளியிடலாம் என்றால், பக்கம் திறப்பதற்கே நேரம் எடுத்து உங்களை கஷ்டப்படுத்தும். அதனால் எல்லாப் படங்களையும் ஒருங்கே எனது Flickr பக்கத்தில் தரவேற்றம் செய்திருக்கிறேன். அங்கே நீங்கள் எல்லாப் படங்களையும் பார்க்க முடியும். அதற்கான சுட்டி கீழே.....

https://www.flickr.com/photos/115538736@N06/sets/72157651210502051/



என்ன நண்பர்களே, இப்பதிவில் பகிர்ந்த படங்களையும் Flickr பக்கத்தில் சேமித்திருக்கும் படங்களையும் பார்த்து ரசித்தீர்களா? பின்னூட்டத்தில் உங்கள் எண்ணங்களைச் சொல்லுங்களேன்!

மீண்டும் சந்திப்போம்.....

நட்புடன்

வெங்கட்
புது தில்லி.