வியாழன், 17 பிப்ரவரி, 2011

"ரிஜப்சன்"-ன்னா என்னாபா?


தீராத விளையாட்டுப் பிள்ளை வலைப்பூவில் ஆர்.வி.எஸ். ரிசப்ஷன் பற்றி எழுதிய சில நாட்களிலேயே பக்கத்து வீட்டிலிருக்கும் உத்திராகண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர் தனது மகனின் திருமணம் முடிந்து இரண்டு நாட்களுக்குப் பிறகு அன்று மாலை 07.30 மணியிலிருந்து 10.30 மணி வரை “ரிஜப்சன்” (தட்டச்சுப் பிழை அல்ல!) வைத்திருப்பதாகச் சொல்லி எங்கள் குடும்பத்தினரையும் அழைத்தார்.

அவர் உத்திராகண்ட் மாநிலத்தில் உள்ள டேராடூனைச் சேர்ந்த கட்வாலி [Garhwali]. அவர்கள் பேசும் மொழியும் கட்வாலிதான். ஹிந்தி தெரிந்திருந்தாலும், வட இந்தியாவில் உள்ள மற்றவர்கள் அவர்களது மொழிகளான ஹர்யான்வி, பஞ்சாபி, கட்வாலி போன்றவற்றில் பேசும்போது நமக்குப் புரியாது. இந்த பிண்ணணியில் அவர்களது மகனின் திருமண ரிசப்ஷன் சென்றபோது அங்கு வந்திருந்தவர்களில் 90 சதவிகிதத்தினர் கட்வாலி. மற்ற 10 சதவிகிதத்தினரில் மற்ற ஹிந்திக்காரர்கள், ஒரு ஒரியாக்காரர், ஒரு மலையாளி, ஒரு வங்காளி ஆகியோருடன் தமிழ்நாட்டுக்காரனான நானும்.

சாதாரணமாக அவர்கள் கட்வாலியில் பேசினாலே ஒரு விதமாக இருக்கும் நமக்கு அங்கே ஏற்பாடு செய்திருந்த டி.ஜே யில் போட்ட பாட்டுகள் கூட கட்வாலி பாடல்கள் தான்! ஒரு மாதிரி பாடல் கீழே.



எங்கோ திக்குத் தெரியாத காட்டில் இருப்பது போல உணர்ந்தேன். குண்டாக வேடம் போட்டுக் கொண்டு ஒரு ஜோடி முகமூடியுடன் தன்னுடைய பொய்யான தொப்பையை ஆட்டி ஆடியது. அதில் பெண் வேடம் போட்ட நபருடன் (அது நிஜத்தில் ஆணா பெண்ணா என்றுகூட தெரியாமல்) ஆட கட்வாலி ஆண்களுக்குள் போட்டி வேறு! அப்படி ஆடும் போது புகைப்பட செஷன்கள் தனி!


வட இந்தியாவில் இது போன்ற வேடமிட்ட நபர்களும், ”டோல்” என்ற மேளம் வாசிக்கும் நபர்களும், கல்யாணம், ரிசப்ஷன் போன்ற நிகழ்ச்சிகளில் நல்ல வசூல் வேட்டை நடத்துவார்கள். மேடையில் இருக்கும் மணமகள்-மகனிடம் நீங்கள் மொய் எழுதிவிட்டு, புகைப்படக்காரர் சொல்லும் வரை பெரிய புன்சிரிப்பு சிந்தி கீழே இறங்கினால் உங்களை சூழ்ந்து கொள்வார்கள். நாம் மேடையில் இருந்து இறங்கும்போதே, மணமகள்-மகனை ஏதாவதொரு ரூபாய் நோட்டினால் சுற்றி [திருஷ்டி கழிப்பது போல] அந்த ரூபாய் நோட்டினை டோல் வாசிப்பவருக்கோ, வேடமிட்ட நபருக்கோ கொடுக்க வேண்டும்.

இது நடந்து கொண்டிருக்கும்போதே சாப்பாட்டுக் கடையும் ஆரம்பித்துவிடும். ஒரு பக்கத்தில் பானிபூரி, ஆலு சாட், ஆலு டிக்கி, ஃப்ரூட் சாட் என்று சிற்றுண்டிகள் இருக்க அவற்றைச் சாப்பிட்டுக் கொண்டே எப்பொழுது உணவுக்கான பஃபே ஆரம்பிக்கும் என்று எட்டி எட்டிப் பார்த்துக்கொண்டு இருப்பார்கள். சூப் வந்தவுடன் தெரிந்துவிடும் அடுத்தது உணவு என்று.

ஒரு மூலையில் அழகான தட்டுகள், ஸ்பூன்கள், ஃபோர்க், பேப்பர் நாப்கின் என அடுக்கி வைத்து பக்கத்திலேயே விதவிதமான டிசைன்களில் பச்சைக் காய்கறிகளையும் நறுக்கி வைத்திருப்பார்கள். அதை எடுத்துக்கொண்டு வரிசையாய் வைத்திருக்கும், பலவித உணவுகளில் எது வேண்டுமோ தட்டு முழுவதும் எடுத்துக்கொண்டு, அதை இடது கையில் பிடித்தபடி தள்ளாடியபடி வலது கையினால் சாப்பிடவேண்டியதுதான். ”கரணம் தப்பினால் மரணம்” என்பது இந்த இடத்தில் சாலப் பொருந்தும். கொஞ்சம் ஏமாந்தால் உங்கள் மேல் இடித்து விட்டு உங்கள் தட்டிலிருந்தோ அவர்கள் தட்டிலிருந்தோ உங்கள் மேல் கொட்டி அபிஷேகம் செய்து கொள்ளாமல் சாப்பிடுவது உங்கள் சாமர்த்தியம்.

இதைச் சாப்பிட்டு முடித்தபின் இனிப்பு வகைகளாய், சுடச்சுட குலாப் ஜாமூன், கேரட் ஹல்வா, பாசிப்பருப்பு ஹல்வா என்று விதவிதமாய் ஓரிடத்தில் வைத்திருப்பார்கள். அத்தனையிலும் ஒரு தொன்னையோ இல்லை உங்களுக்கு எது பிடிக்குமோ அதை ஒரு தொன்னையில் போட்டுக்கொண்டு சாப்பிட்டுவிட்டு அதன் மேல் ஒரு ஐஸ்கிரீமையும் உள்ளே தள்ளிவிட்டு கையை பேப்பர் நாப்கினில் துடைத்துப் போட்டு விட்டு வெளியே வந்தா முடிந்தது ரிஜப்சன்!

இந்த கட்வாலி ”ரிஜப்சன்” ஆவது பரவாயில்லை, தில்லியிலேயே தங்கி விட்ட தமிழர்கள் வீட்டு ரிசப்ஷன் எனில் அங்கே அட்டகாசங்களும், ஆடம்பரங்களும் இன்னும் அதிகம்! டிஜே-யில் ஹிந்தி, பஞ்சாபி மெட்டுகளுக்கு ஆடிக் கொண்டு இருப்பார்கள்!. தில்லியில் தமிழ்க்காரர்களின் கல்யாண ரிசப்ஷன் பற்றி இன்னொரு பதிவில் எழுதுகிறேன்…

மீண்டும் சந்திப்போம்…


வெங்கட் நாகராஜ்


31 கருத்துகள்:

  1. இந்தப் பக்கத்துக் கல்யாணங்களைப்பற்றி எழுதனும். நேரம் கிடைக்கமாட்டேங்குதுன்னு இருந்தேன்.

    உங்க பதிவு பார்த்ததும் மனமுடிச்சு எப்போன்னு விசாரிக்குது இப்போ:-)))))

    ரொம்பவே ஆடம்பரமாத்தான் இருக்கு!

    பதிலளிநீக்கு
  2. இவங்க ச,ஸ எல்லாத்தையும் 'ஜ'வாக்கும்போது சிரிப்புதான் வருது.

    தோழியின் மகன் கல்யாணத்தில், மணம் நடக்கும் இடத்தின் அலங்காரத்துக்கு மட்டுமே ஏழு லட்சம் செலவானதாம். பத்தாததுக்கு, ஸ்டேஜ் போட்டு,அங்கங்க பெரிய ஸ்க்ரீன் வெச்சு, டான்ஸ் ஷோ வேற. ஜெய்மாலா சமயத்துல கூட மணமக்களை பாக்காம, டான்சை பாத்துட்டிருந்தது காமெடி.

    பதிலளிநீக்கு
  3. நல்லதொரு பதிவு தான். பாட்டமும் ஆட்டமும் வெகு ஜோர். மொழி எதுவானாலும், ஆண், பெண், ஆட்டம், பாட்டம், கவர்ச்சி உடை, உணர்ச்சிகள், ஆடம்பரச் செலவுகள் எல்லாவற்றிலுமே இந்திய ஒருமைப்பாடு தெரிகிறது.

    பதிலளிநீக்கு
  4. //இவங்க ச,ஸ எல்லாத்தையும் 'ஜ'வாக்கும்போது சிரிப்புதான் வருது. //- உண்மை :)

    பதிலளிநீக்கு
  5. கொஞ்சம் ஏமாந்தால் உங்கள் மேல் இடித்து விட்டு உங்கள் தட்டிலிருந்தோ அவர்கள் தட்டிலிருந்தோ உங்கள் மேல் கொட்டி அபிஷேகம் செய்து கொள்ளாமல் சாப்பிடுவது உங்கள் சாமர்த்தியம்.
    நிஜமாகவே அது ஒரு பெரிய அவஸ்தை.. பஃபே டைப்பில் சாபிடுவது ஒரு கலை.. கால் கடுக்க நின்று சாப்பிடுவதற்குள் அந்த ஆசையே போய் விடும்.

    பதிலளிநீக்கு
  6. ரிசப்ஷன் என்றாலே தேவையற்ற ஆடம்பரம்
    என்றாகி விட்டது

    பதிலளிநீக்கு
  7. வட இந்தியர்கள் கொண்டாட்டங்களை பெரிதாக செய்கிறார்கள்...உணவுவகைகள் ஆடல் பாடல் உடை என எல்லாவற்றிலும்... ஒரு ரிஜப்சனுக்கு எங்களையும் நேர்முகமாக அழைத்து சென்று விட்டீர்கள் இப்பதிவின் மூலம்...

    பதிலளிநீக்கு
  8. போன வார‌ம் ஒரு ப‌னியா வீட்டு க‌ல்யாண‌த்துக்கு போய் அச‌ந்து போயிட்டேன். இதுவ‌ரை நான் இந்த‌னை பிர‌மாண்டமான‌ க‌ல்யாண‌த்தை பார்த்தது இல்லை. க‌ல்யாண‌ ந‌ட‌ந்த‌ இட‌மே ஒரு தீம் பார்க் போல‌ இருந்த‌து. க‌பே காபி போன்ற‌ ஒன்று கூட‌ இருந்த‌, இந்திய‌ன், இத்தாலி, ப‌ஞ்சாபி, ஸ்வுத் இந்திய‌ன் என்று உண‌வு வ‌கைக‌ளை ப‌ட்டிய‌லிட‌வே முடியாதப‌டி நீண்டு இருந்த‌து. இதெல்லாம் ஸ்னாக்ஸ், நாங்க‌ள் ஸ்னாக்ஸ் ம‌ட்டுமே சாப்பிட்டு சாப்பாடே சாப்பிட‌வில்லை என்றால் பார்த்துக் கொள்ளுங்க‌ள். சினிமா சூட்டிங் போல் ராப்பில் ரோட்டேங் கேமிரா வைத்திருந்தார்க‌ள். இர‌வு 11 ம‌ணி வ‌ரை இருந்தும் ஜெய‌ மாலா கூட‌ ந‌ட‌க்க‌தால் பார்த்த‌ அள‌விலான‌ பிர‌ம்மாண்ட‌த்தை நினைத்தப‌டி வீடு வ‌ந்து சேர்ந்தோம். ஹூம்ம் ஒருநாள் கூத்துக்கு இவ‌ங்க‌ ப‌ண்ற‌ செல‌வு இருக்கே தாங்க‌ முடிய‌லை.

    பதிலளிநீக்கு
  9. ரிஜப்சன் வாசித்தவுடன் என் மகளின் ஹிந்தி சார் சொல்லும் ரிவிஜன் தான் நினைவிற்கு வந்தது,அருமையான பகிர்வு.விருந்தை கண் முன்னே கொண்டு வந்திட்டீங்க.

    பதிலளிநீக்கு
  10. இப்படி ஒரு கோலாகலமான ஒரு reception - ஒரு தடவையாவது அட்டென்ட் பண்ணி கமென்ட் அடிக்கணும் என்று ஆசையை தூண்டும் பதிவு! என்சாய்.....!!!

    பதிலளிநீக்கு
  11. இங்கயும் இந்த ரிஜப்ஷன் வந்து ரொம்ப நாளாச்சு. பெரிய கல்யாணங்களிலே வைத்திருக்கிற எல்லா ஐட்டங்களையும் சாம்பிள் பார்க்கக் கூட முடியாத அளவிற்கு ஐட்டங்கள் வைக்கிறார்கள்.

    ஒரு கல்யாணத்தில டெக்கரேஷன் செலவு மட்டும் 10 லட்சம் ரூபாய். கோயமுத்தூர்ல பணம் ரொம்ப பெருத்துப்போச்சு?

    பதிலளிநீக்கு
  12. ரிஜப்ஷன் ஆடம்பரமாக இருக்கிறது.
    அங்கே எவ்வளவு சாப்பிடுகிறார்கள் என்பதை விட எவ்வளவு வீணாகுகிறது என்பதே பிரதானம்.

    பதிலளிநீக்கு
  13. ரிஜப்சன் அருமை வெங்கட்.

    அம்பாலாவில் ஒரு கல்யாணம் போன வருஷம் அக்டோபரில்.அப்போது அங்கே நல்ல குளிர்.

    அந்தப் பசங்க தோளைக் குலுக்கிக் குலுக்கி வியர்த்துக் கொண்டிருந்தார்கள் ஆடி ஆடி.

    அதுக்கேத்த மாதிரி ஒரு கட்டுக் கட்டினாங்க ஆடி முடிச்சப்புறம். அவங்களப் பாத்து ரெண்டு ஆட்டம் ஆடி அடுத்த நாள் ட்ரெய்னில் திரும்பற வரைக்கும் வலிச்சது கால்.

    வாழ்க்கையோட கடைசிக் கொண்டாட்டம் இதுன்னு ஒவ்வொரு கொண்டாட்டத்துலயும் அவங்க காதுல யாரும் சொல்லிடுவாங்களோ?

    பதிலளிநீக்கு
  14. @@ துளசி கோபால்: தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி. நீங்களும் எழுதுங்களேன் உங்கள் கோணத்தில்! படிக்க நாங்க ரெடி!!

    ## அமைதிச்சாரல்: தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சகோ. ஒவ்வொரு மாநிலத்தவருக்கும் வேறு வேறு விதமான பிரயோகம்!!

    @@ வை. கோபாலகிருஷ்ணன்: தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி. தேசிய ஒருமைப்பாடு – தேவை இல்லாத விஷயத்தில் மட்டுமே என்பதுதான் வருத்தம்.

    ## கனாக்காதலன்: தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி நண்பரே.

    @@ அமுதா கிருஷ்ணா: தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

    ## ரிஷபன்: கால் கடுக்க நின்று சாப்பிட இஷ்டமில்லாமல் நிறைய முறை கொரித்து விட்டு வந்துவிடுவேன் :) தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சார்.

    @@ குறிஞ்சிகுடில்: தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

    ## ராஜி: ஆடம்பரம்தான் இவர்களுக்குப் பிரதானம். எத்தனை அனாவசிய செலவு! தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சகோ.

    @@ பத்மநாபன்: உண்மைதான். இவர்கள் உடைக்கும், சாப்பாட்டிற்கும் அதிகம் செலவு செய்கிறார்கள். தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சார்.

    ## உயிரோடை: ரிசப்ஷனுக்கே செலவு செய்யும்போது கல்யாணம் எனில் இன்னும் அதிக செலவு – அதிக விரயம். ஒவ்வொரு தட்டிலும் சாப்பிடாமல் கொட்டும் உணவினை பார்க்கும் போது வருத்தமே மிஞ்சும். தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

    @@ ஆசியா உமர்: ரிவிஜன் :) – ருடேசன் [Rotation], பேயன் [Passion] என்றெல்லாம் இவர்கள் சொல்லும்போது நமக்குப் புரிவதில்லை! தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சகோ.

    ## சித்ரா: நிறைய அழைப்பிதழ்கள் வந்து கொண்டே இருக்கிறது. தவிர்க்கமுடியாமல் செல்லும்போது பலவித அனுபவங்கள்! :) தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

    @@ தங்கராசு நாகேந்திரன்: தங்கள் முதல் வருகை? தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி. நீங்கள் தான் எனது 100-வது Follower! அதற்கும் தனியாக ஒரு நன்றி!!!

    ## DrPKandaswamy,PhD: பணம் இருப்பவர்களிடம் இன்னும் சேர்ந்து கொண்டே போகிறது! அவர்களும் அதை செலவு செய்ய புதுப்புது வழிகளைக் கண்டுபிடித்துக் கொண்டே இருக்கிறார்கள்!!! தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஐயா!!

    @@ இராஜராஜேஸ்வரி: தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி. விரயம் தான் அதிகம்:(

    ## சுந்தர்ஜி: பஞ்சாபிகள் எப்போதுமே உணவு, உடை போன்றவற்றை அதிகம் ரசிப்பவர்கள் தான். //வாழ்க்கையோட கடைசிக் கொண்டாட்டம் இதுன்னு ஒவ்வொரு கொண்டாட்டத்துலயும் அவங்க காதுல யாரும் சொல்லிடுவாங்களோ?// - இருக்கலாம் :) தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றிஜி!

    இண்ட்லி மற்றும் தமிழ்மணத்தில் வாக்களித்த அனைவருக்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  15. //”கரணம் தப்பினால் மரணம்” என்பது இந்த இடத்தில் சாலப் பொருந்தும்//

    ha ha ....nice expression...:)

    Never been to a place like this, but your post is tempting... நல்லா எழுதி இருக்கீங்க..:)

    பதிலளிநீக்கு
  16. @@ அ.த.: தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  17. நூறுக்கு வாழ்த்துக்கள் நண்பரே ... டிரீட் எப்போ?

    பதிலளிநீக்கு
  18. அண்ணாத்தே! உங்க ரிஜப்ஷன் அப்ஜர்வேஜன் ரொம்ப ஜுப்பர்.

    (இப்போது என்னுடைய கவலையெல்லாம் என்னவென்றால், நம்ம ஆளுங்க இருக்காங்களே, வட இந்திய திருமணங்களைப் பார்த்து அதே போல நம்ம ஊர் ரிஜப்ஷனையும் ரொம்ப ஆடம்பரமாக்கி விடுவார்களோ என்றுதான்)

    பதிலளிநீக்கு
  19. என்னை முதல் வரியில் சேர்த்துக்கொண்டதற்கு நன்றி!
    லேட்டுக்கு காதைப் பிடித்து ஒரு தோப்புக்கரணம்!

    எனக்குத் தெரிந்து கல்யாணங்களை கோலாகலமாகக் கொண்டாடுபவர்கள் வடக்கிந்தியர்கள் தான்.
    சுஜாதா ஒரு கற்றதும் பெற்றதும்மில் சொல்லுவார். .. கொஞ்சமா தருகிறேன்... எனது நினைவுகளில் இருந்து, வாத்தியார் வார்த்தையில் கலந்த என் என் மொழியில். சப்ஜெக்ட் அவரோடது... இங்க அங்க கொஞ்சம் என்னோட வார்த்தையில் இருக்கும்.. கண்டுக்ககூடாது...

    சாயந்திரம் வரை அங்கே ஒரு கல்யாணம் என்று யாருக்குமே தெரியாது..
    ஒரு வண்டியில் தோரணங்கள் பென்ச்சு, நாற்காலி வெல்கம் போர்டு என்று சகலத்தையும் கொண்டு வந்து இறக்கினார் ஒரு குண்டு சர்தார்ஜி!
    அடுத்த சில நிமிஷங்களில் சமையல் சாமான் செட்டுகளோடு ஒருவர் வந்து இறங்கினார்... ஒல்லி சர்தார்ஜி!
    ஒரு அரைமணியில் கல்யாணக் கோலம் பூண்டது அந்த இடம்...
    கடைசியாக மாப்பிள்ளை, பெண் வீட்டார் அனைவரும் ஆஜர்.
    பத்து பதினைந்து நிமிடத்தில் கல்யாணம் முடிந்தது.
    அதற்க்கப்புறம் பெருசுகள் அந்த இடத்தை காலி செய்யவேண்டும் என்றே காது கிழிய பாட்டுப் போட்டு விரட்டி முட்டிக்கால் முறியும் வரை ஆடினார்கள்.
    இரவு பதினோரு மணிக்கு மேல் அங்கு ஒரு கல்யாணம் நடந்ததாக யாருக்குமே தெரியாது.

    இது எப்படி இருக்கு! ;-))))))

    பதிலளிநீக்கு
  20. ரிஜப்சன் நல்லா இருக்கு வெங்கட்.

    தமிழ்க்காரர்களின் கல்யாண ரிசப்ஷன் அறிய ஆவல்.

    பதிலளிநீக்கு
  21. சதம் அடித்த வெங்கட் அவர்களே, கதவால் இசை மிகவும் வித்தியாசமாக அதே சமயம் மனதிற்கு மிகவும் இதமாகவும் இருந்தது. பலவித மொழி பேசும் வடநாட்டு மக்களின் கலாசாரம், பண்பாடு முதலியவற்றை எங்களுக்கு அவ்வப்போது தெரியப்படுத்தி இந்தியநாட்டின் ஒற்றுமையை வளர்த்திடும் ,பலப்படுத்திடும் தங்கள் தொண்டினை பாராட்டுவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.வாழ்க,வளர்க இவ்வையத்தோர் போற்றும்வண்ணம.
    சிந்திப்பதிலும், செயல்படுத்துவதிலும் இளசுகளின் வேகத்திற்கு எம்மால் ஈடுகொடுக்க முடியவில்லை என்பதால் தாமதம் என்று அறிக.
    மந்தவெளி நடராஜன்.

    பதிலளிநீக்கு
  22. //தில்லியில் தமிழ்க்காரர்களின் கல்யாண ரிசப்ஷன் பற்றி இன்னொரு பதிவில் எழுதுகிறேன்…//

    இதுவும் இந்த ரிஜப்ஷன் மாதிரிதானா... வெயிட்டிங் வெயிட்டிங்... கோவைல மார்வாடிங்க கல்யாணமும் கிட்டத்தட்ட இதே மாதிரிதேன்... கலக்கல்ஸ் ஆஃப் இந்தியா :)

    பதிலளிநீக்கு
  23. இதுவாவது ரிஜப்ஷந்தான் எனக்கு ஒரு அனுபவம். கல்யாணத்துக்கு ஒரு “15 நாட்கள் முன்பே மெஹந்தி பார்ட்டி, தாண்டியா, கார்பான்னு ஏக அமக்களமா
    பிள்ளை வீட்டுக்காரா பெண்வீட்டுக்காரால்லாம் ஒன்ராக டான்ஸ் ஆடி பாடி கொண்டாடினார்கள்.இத்தனைக்கு அவங்களும் நம்ம தமிழ்க்காரங்கதான்..

    பதிலளிநீக்கு
  24. லேட்டா வந்ததிற்கு ஸாரி. சுவாரஸ்யமாக விவரித்திருக்கிறீர்கள். அண்மையில் ஒரு கல்யாண ரிசப்ஷன் பஃபேயில் ப்ளேட்டுடன் உடன்வந்த நக்கல் நண்பன் பாடிக் கொண்டே வந்தான்"பிச்சைப் பாத்திரம் ஏந்தி வந்தேன் அய்யனே என் அய்யனே!"

    பதிலளிநீக்கு
  25. @@ கலாநேசன்: தங்கள் வருகைக்கும் கருத்திற்கு நன்றி சரவணன். விருந்து தானே! கொடுத்தால் போயிற்று :)

    ## ஈஸ்வரன் [பத்மநாபன்]: தேவையான கவலை. ஏற்கனவே இப்படித்தான் ஆடம்பரமாய் இருக்கிறது! தங்கள் வருகைக்கும் கருத்திற்கு நன்றி அண்ணாச்சி!

    @@ ஆர்.வி.எஸ்.: தங்கள் வருகைக்கும் கருத்திற்கு நன்றி தல! சுஜாதா அவர்களின் வரிகள் கொடுத்தமைக்கும் நன்றி.

    ## கோமதி அரசு: தங்கள் வருகைக்கும் கருத்திற்கு நன்றிம்மா. தில்லி தமிழர்களின் ரிசப்ஷன் பற்றி பிறகு எழுதுகிறேன்..

    @@ வி.கே.என்.: தங்கள் வருகைக்கும் கருத்திற்கு நன்றி! லேட்டா வந்தாலும், கருத்துகள் சொன்னமைக்கு நன்றி.

    ## அன்னு: தங்கள் வருகைக்கும் கருத்திற்கு நன்றி சகோ.

    @@ எல்.கே.: உண்மைதான் கார்த்திக். இது தேவையில்லாத ஒன்றுதான். தங்கள் வருகைக்கும் கருத்திற்கு நன்றி

    ## லக்ஷ்மி: தங்கள் வருகைக்கும் கருத்திற்கு நன்றிம்மா. நமது பழக்க வழக்கங்களை விட்டு விட்டு அடுத்தவர்களின் பழக்கவழக்கங்களை கொண்டாடுவதில் நமக்கு நிகர் நாமே!

    @@ மோகன்ஜி: ”பிச்சைப் பாத்திரம் ஏந்தி வந்தேன்!” நல்ல நகைச்சுவை. என்ன வேறு யாரோ போட மாட்டார்கள், நாமே எடுத்துக் கொள்ள வேண்டியதுதான்! தங்கள் வருகைக்கும் கருத்திற்கு நன்றி ஜி!

    பதிலளிநீக்கு
  26. சாப்பாட்டை விட இந்த சாட் ஐட்டங்கள் தான் ஆசையா இருக்கும் ..

    \\கரணம் தப்பினால்// :))

    பதிலளிநீக்கு
  27. @@ முத்துலெட்சுமி: எனக்கு இந்த சாட் ஐட்டங்கள் அவ்வளவாக பிடிப்பதில்லை! வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....