வெள்ளி, 8 ஜூலை, 2011

தொடர்பதிவு - நண்பேன்டா…


நம் வாழ்வில் நமக்குக் கிடைத்த முத்தான நண்பர்களைப் பற்றிய தொடர்பதிவுக்கு என்னையும் மதித்து பின்னூட்டம் மூலம் அழைத்த பதிவுலக நண்பர் A.R. ராஜகோபாலன்அவர்களுக்கும் தனது பதிவின் மூலம் அழைத்த சென்னை பித்தன் அவர்களுக்கும் முதலில் ஒரு நன்றியைப் பதிவு செய்வது நட்பின் கடமை அல்லவா?  இந்த பகிர்வில் நானும் என் நண்பர்களைப் பற்றி எழுதுகிறேன்

நட்பியல்என்று நட்புக்காகவே தனது திருக்குறளில் நட்பு, நட்பாராய்தல், தீநட்பு மற்றும் கூடாநட்பு என்ற நான்கு அதிகாரங்களில் 40 குறள்கள் எழுதி நட்பின் மகத்துவத்தை விளக்கி இருக்கிறார்.

அழிவி னவைநீக்கி ஆறுய்த்து அழிவின்கண்
அல்லல் உழப்பதாம் நட்பு.

அழிவு தரும் வழிகளில் நண்பன் சென்றால் அவனைத் தடுத்துநல்ல வழியில்அவனைச் செலுத்துவதோடு மட்டுமல்லாமல்அவனுக்குக் கேடு வரும் என்றால் அதை அவனுடன் பகிர்வது தான் நட்பு.


நட்பின் அரியணை எது என்றால்எப்போதும் மாறாமல் முடிந்தபோது எல்லாம் ஒருவர்க்கு ஒருவர் உதவுவதேயாம்.

இரு நபர்களுக்கு இடையே ஏற்படும் தொடர்புகளில் மிகவும் பெருமை உடையதாகக் கருதப்படுவது நட்பு ஒன்றுதானே. நட்பின் பெருமையைச் சொல்லும் பல பாடல்கள் சங்க இலக்கியத்திலே இருப்பதை பள்ளி நாட்களில் படித்திருக்கிறோமேநட்புக்கு இலக்கணமாக பாரி-கபிலர், அதியமான்-ஔவை,  போன்ற நட்புகளைப் பற்றி பள்ளியில் என் தமிழாசிரியர் சொன்ன உதாரணங்களும் நினைவுக்கு வருகிறது.   

பள்ளி என்றவுடன் நினைவுக்கு வருவது என்னுடன் பள்ளி காலத்திலிருந்து கூடப்படித்த நண்பர்கள் ராஜேந்திரன், குமார் ஆகியோர்.  இவர்களுடன் கல்லூரி வரை படித்திருக்கிறேன்.  மற்றும் ராபர்ட், கணேசன், முருகன் என்று நிறைய பேரைச் சொல்லலாம்

பள்ளியில் ஒன்றாக பல மாணவர்களுடன் படித்து நட்பு வைத்திருந்தாலும் அந்த நட்பில் பல இன்று வரை தொடரவில்லை என்பதில் எனக்குச் சற்று வருத்தம் தான்

கல்லூரியில் படித்த மூன்று வருடங்களில் முதல் வருடத்தில் 10 மாணவர்கள் இருந்தோம்.  இரண்டாம் மூன்றாம் வருடங்களில் எட்டே மாணவர்கள் மற்றவர்கள் மாணவிகள்.  கல்லூரியில் படித்து முடித்து விட்டு தற்போது இருபது வருடங்கள் உருண்டோடிவிட்டாலும் இன்னமும் எங்கள் நட்பு தொடர்ந்து கொண்டே இருக்கிறது. சுனில், குமார், ராஜேந்திரன், மிலிட்டரி முரளி, நட்ராஜ், பரந்தாமன், ராஜ்மோகன், சந்திரமோகன் மற்றும் கீச்-கீச் முரளி என்று அனைவருடனுமானது எங்கள் ஆழ்ந்த நட்பு வட்டம்கருத்து வேறுபாடுகள் அவ்வப்போது தலை தூக்கினாலும், விட்டுக்கொடுத்து போகும் மனப்பாங்கும் இருந்துவிட்டால் தானே அந்த நட்புக்கு அழகு


இன்றளவில் வலையின் மூலமும், அலைபேசி மூலமும் எங்கள் நட்பு தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இவர்கள் மட்டுமல்லாது கல்லூரியில் எங்களுடன் படித்த நிறைய மாணவிகள் திருமணம் முடிந்து வேறு வேறு ஊர்களில் வசித்துக் கொண்டு இருக்கும் இந்த நாட்களில் கூட,  எங்கள் கல்லூரி கால நட்பு, குடும்ப நட்பாகத் தொடர்ந்து கொண்டிருக்கிறது என்பதில் எங்கள் அனைவருக்குமே மகிழ்ச்சிதான்.

கல்லூரி முடித்து இருபது ஆண்டுகள் முடிந்து விட்ட நிலையில் இப்போது கூட எல்லோரும் தத்தமது குடும்பத்துடன் எங்கள் கல்லூரியில் இந்த ஆண்டில் சந்திக்கலாம் என யோசித்துக் கொண்டு இருக்கிறோம் என்பதிலேயே எங்கள் நட்பின் தீவிரம் உங்களுக்குப் புரிந்து விடும்.

பள்ளி, கல்லூரி நட்பு தவிர அலுவலக நட்பு, வலையுலக நட்பு பற்றியும் அனைத்து நண்பர்கள் பற்றியும் தனித்தனியே பதிவு எழுதும் அளவுக்கு விஷயங்கள் இருக்கிறது.  அதனால்தான் இந்த பதிவில் பொதுவாகவே எழுதி இருக்கிறேன்.

நல்லவர் நட்பும் தீயவர் நட்பும் எப்படிப்பட்டது என்பதைப் பற்றிய ஒரு பாடலும் அதன் விளக்கமும் சொல்லி இந்த பகிர்வை முடிப்பது தான் நல்ல முடிவாக இருக்கும் எனத் தோன்றுகிறது

நல்லார் செயும்கேண்மை நாள்தோறும் நன்றாகும்
அல்லார் செயும்கேண்மை ஆகாதே - நல்லாய்கேள்
காய்முற்றின் தின்தீங் கனியாம் இளம்தளிர்நாள்
போய்முற்றின் என்ஆகிப் போம் 
பொருள்: காயானது முற்றினால் தின்பதற்குப் பயன்படும் இனிய கனியாகும். இளம்தளிர் முற்றினால் அது சருகாகிப் பயன்படாமல் போகும். இவை போன்றே நல்லவர் நட்பு நாள்தோறும் நன்கு வளர்ந்து நன்மையைத் தரும். தீயவர் நட்பு நாள்தோறும் தேய்ந்து துன்பம் தருவதாகவே இருக்கும்.

மீண்டும் வேறு ஒரு பகிர்வில் சந்திப்போம்.

வெங்கட்.

குறிப்பு:  இந்தத் தொடர் பதிவினை, தொடர விரும்புவர்கள் தொடரலாமே


30 கருத்துகள்:

  1. சுவையான பதிவு வெங்கட். உங்கள் நண்பர்களில் என் பெயரில் ஒருவர் இருப்பதும் கேட்க மகிழ்ச்சியாய் இருக்கிறது. உங்கள் பதிவுகளில் உங்கள் எழுத்தின் சுவை பிடித்து சுவைக்க தொடங்கும் முன் விருந்து முடிந்து விடுகிறது. சற்று நீளமாக எழுதினால் இன்னும் சுவையாக இருக்கும் என்பது எனது எண்ணம்.

    பதிலளிநீக்கு
  2. நட்பைப்பற்றி ரத்தினச்சுருக்கமாக சொல்ல வேண்டியவைகளை அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள்.
    நல்ல பதிவு. நன்றி.

    voted 1 to 2 in Indli

    பதிலளிநீக்கு
  3. @ சந்திரமோகன்: பதிவிட்ட சில நிமிடங்களிலேயே உங்கள் கருத்துரை வந்ததில் மகிழ்ச்சி சந்திரமோகன். உங்கள் கருத்திற்கு நன்றி. சில சமயங்களில் பதிவு நீண்டு விடுகிறதோ என எண்ணியே சிறிய பதிவுகளாய் வெளியிடுகிறேன் நண்பா... அடுத்த பகிர்வுகளில் உங்கள் கருத்தினை நினைவில் கொள்கிறேன்....

    பதிலளிநீக்கு
  4. # வை. கோபாலகிருஷ்ணன்: தங்களது சுவையான கருத்திற்கு நன்றி சார். தங்கள் வருகையும் கருத்தும் என்னை மேன்மேலும் எழுதத் தூண்டும்....

    பதிலளிநீக்கு
  5. நட்பின் பிணைப்பு முடிவின்றி தொடரட்டும்...

    பதிலளிநீக்கு
  6. நல்லவர் நட்பு நாள்தோறும் நன்கு வளர்ந்து நன்மையைத் தரும். தீயவர் நட்பு நாள்தோறும் தேய்ந்து துன்பம் தருவதாகவே இருக்கும்.//

    நல்ல நட்பு வாழ்க! வளர்க!

    பதிலளிநீக்கு
  7. அருமை. அதிலும் பழைய நட்புகளைப் பார்க்கும்போது இருக்கும் மகிழ்ச்சி இருக்கே........ஹைய்யோ! சொல்லி மாளாது.

    படங்கள் அருமை. அதில் எங்க கப்புவும் ஜிஞ்சுவும் இருக்காங்களே!!!!!

    பதிலளிநீக்கு
  8. @ சரோ: தங்கள் வருகைக்கு நன்றி.

    # கவிதை வீதி சௌந்தர்: தங்களது வருகைக்கும் நற்கருத்திற்கும் நன்றி சௌந்தர்.

    @ கோமதி அரசு: தங்களது தொடர் வருகைக்கும் கருத்திற்கும் நன்றிம்மா. நீங்களும் உங்கள் கணவரும் நலம் தானே... உங்கள் இருவருக்கும் வணக்கங்கள்....

    # துளசி கோபால்: உண்மை... நட்பினைப் பார்க்கும் போது கிடைக்கும் மகிழ்ச்சி அளவிடமுடியாதது... அட உங்க கப்புவும், ஜிஞ்சுவும் இருக்காங்க இல்ல.... வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  9. ஆயிரம் வார்த்தைகளில் புரியாதது ஒரு காட்சியில் புரியும் என்பதற்கு ஏற்ப முதல் படமே ஆயிரமாயிரம் அர்த்தங்களை சொல்லுகிறது , நீங்கள் தேர்தெடுத்த இலக்கியமும்,நட்பை நலியாமல் சொன்ன பாங்கும் அற்புதம் , என்னை மதித்து என் பெயரையும் துவக்கத்தில் சொன்னதற்கு நன்றி நண்பரே, உங்களின் நட்பு வட்டத்தில் நானும் இருக்கிறேன் என்ற நம்பிக்கையோடு

    பதிலளிநீக்கு
  10. @ A.R. ராஜகோபாலன்: தங்களது கருத்திற்கு மிக்க நன்றி நண்பரே... நீங்களும் தானே இந்த பகிர்வுக்குக் காரணம்... அதனால் நண்பரான உங்களுக்கு நன்றி சொல்லாமல் எழுத முடியுமா.... தங்கள் தொடர் வருகையும் கருத்தும் என்னை மகிழ்விப்பது மட்டுமல்லாமல் தொடர்ந்து எழுதவும் ஊக்குவிக்கும்....

    பதிலளிநீக்கு
  11. பின்னிட்டீங்க நண்பா! பின்னிட்டீங்க! அதிலும் அந்த படங்கள் அற்புதம்.

    திருவள்ளுவரையும், சிவப்பிரகாசரையும் துணைக்கு வைத்துக் கொண்டு நட்பிலக்கியம் படைத்து விட்டீர்கள்.

    (அப்படியே டாஸ்மாக் பக்கம் போனால் இன்றைய இளைஞர்கள், நட்பு என்ற போர்வையில் நட்பை எப்படி அவமதிக்கிறார்கள் என்பதைக் காணும் போது மனம் வருந்துகிறது.)

    (நீங்கள் ஏன் அந்தப் பக்கம் எல்லாம் போகிறீர்கள் என்று கேட்காதீர்கள். நம் ஊரில் எந்தப் பக்கம் போனாலும் அந்தப் பக்கம் வந்து விடுகிறது.)

    பதிலளிநீக்கு
  12. @ ஈஸ்வரன்: தில்லியில் என் முதல் நட்பே நீங்க தானே அண்ணாச்சி.... உங்களைப் பற்றி ஏற்கனவே எழுதி இருந்தாலும், உங்களுக்காகவே இன்னும் நிறைய பதிவுகள் எழுதும் அளவு நல்ல விஷயங்கள் இருக்கிறது நண்பரே....

    டாஸ்மாக்.... - என்ன சொல்வது... இன்றைய காலத்தில் இளைஞர்கள் மட்டுமல்ல, யுவதிகளும் இது போன்று இருக்கிறார்கள் என்பது வருத்தமான விஷயம்தான்...

    பதிலளிநீக்கு
  13. இனிய நட்பைப் பற்றி இலக்கிய மணம் கமழும் பதிவு;அந்தப் பூனைக்குட்டிகள்,அழகு!நன்றி வெங்கட்!

    பதிலளிநீக்கு
  14. @ சென்னை பித்தன்: தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சார். பூனைக்குட்டிகள் உங்களுக்கும் பிடித்ததா...

    பதிலளிநீக்கு
  15. பள்ளியில் ஒன்றாக பல மாணவர்களுடன் படித்து நட்பு வைத்திருந்தாலும் அந்த நட்பில் பல இன்று வரை தொடரவில்லை என்பதில் எனக்குச் சற்று வருத்தம் தான்.
    இதே வருத்தம் எனக்கும் இருக்கிறது. நிறைய நண்பர்கள் எங்கிருக்கிறார்கள் என்றே தெரியவில்லை. போன வாரம் என் பள்ளி நண்பன் ‘டேய்’ என்று வந்து தோளில் தட்டியபோது என்னமாய் குஷியானது..
    நட்பு .. நட்பூதான் நினைக்கும் போது மனதில் பூக்கிறது.

    பதிலளிநீக்கு
  16. @ ரிஷபன்: நட்பு - நட்பூ... வார்த்தைகளை வைத்து விளையாடுகிறீர்கள் சார். நண்பர்களை நீண்ட இடைவெளிக்குப் பிறகு சந்திப்பதில் இருக்கும் இன்பம் சொல்லில் அடங்காதது. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் இனிய நன்றி.

    பதிலளிநீக்கு
  17. அந்த நாள் ஞாபகம் வந்ததே.....
    நல்பதிவு நண்பரே...

    பதிலளிநீக்கு
  18. @ கலாநேசன்: உங்களுக்கும் ”அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே” வா... நீங்களும் தொடருங்களேன்.... தங்களது வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சரவணன்.

    பதிலளிநீக்கு
  19. நட்பும் அதை பேணும் விதமும் வாழ்வில் சுவையான விஷயங்கள்... அதை அழகாக பகிர்ந்தீர்கள்..
    அறிவியல் தொழில் நுட்பத்தின் வளர்ச்சியால் சாத்தியமான இந்த வலைநட்புக்களும் வாழ்வில் சுவை கூட்டுகிறது...

    பதிலளிநீக்கு
  20. # பத்மநாபன்: தங்களது வரவுக்கும் இனிய கருத்திற்கு நன்றி பத்துஜி! வலை நட்பு, அலுவலக நட்பு, பள்ளி நட்பு, கல்லூரி நட்பு என நட்பு வலை தொடர்ந்து கொண்டே இருந்தால் தானே வாழ்விலும் சுவை கூடும்.... வலைப் பூ உலகில் இருக்கும் இந்த 21 மாதங்களில் எத்தனை புதிய நண்பர்கள் எனக்குக் கிடைத்திருக்கிறார்கள்.... உங்களையும் சேர்த்து.

    பதிலளிநீக்கு
  21. எழுத வந்த புதுசில் இணைய நட்புகளை பற்றி மட்டுமே எழுதி வைத்திருக்கிறேன். கல்லூரி நண்பர்கள் யாரும் என்னுடன் தொடர்பில் இல்லை . ஊருக்கு சென்றால் பள்ளி நண்பர்கள் ஏரியா நண்பர்கள் நட்பு இன்றும் உண்டு. சென்னையில் பதிவர்கள் தான் என் நண்பர்கள்

    பதிலளிநீக்கு
  22. மிக அழகாய் உங்கள் கருத்துக்களை கோர்வையாய் சொல்ல உங்களால் இயல்கிறது.. அருமையான பதிவு.. நான்கூட உங்கள் நண்பன் எனும்போது சந்தோஷமாய் இருக்கிறது வெங்கட். தொடர்ந்து தரமான பதிவுகள் தாருங்கள்..

    பதிலளிநீக்கு
  23. @ எல்.கே.: தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி கார்த்திக்.

    # மோகன்ஜி: தங்களது இனிய கருத்திற்கு நன்றி ஜி! உங்கள் கருத்துகள் என்னை மேன்மேலும் நல்லவிதமாய் எழுதத் தூண்டும்....

    பதிலளிநீக்கு
  24. நட்பை பற்றி மிகவும் அருமையான பதிவு வெங்கட். படங்கள் மிகவும் பொருத்தமாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  25. அருமையாய் படங்கள் மகுடம் சூட்ட அரியணை ஏறிய நட்பு பகிர்வுக்கு பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  26. @ ராம்வி: தங்களது தொடர் வருகைக்கும் நல்ல கருத்திற்கும் மிக்க நன்றி.

    # இராஜராஜேஸ்வரி: படங்கள் கூகிளாண்டவரிடம் இருந்து எடுத்தவையே... பதிவுக்குப் பொருத்தமாய் இருக்கிறது என்று சொன்னவர்களில் நீங்களும் ஒருவர். தங்களது தொடர் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  27. 20 வருடங்களாக தொடர்ந்த நட்பு .. உண்மைதான் அது கேட்கும் போதே ஆச்சரியமா இருக்கு.. நட்பு தொடரட்டும் வளரட்டும்.. எல்லாரும் கல்லூரியில் சந்தித்துவிட்டு அதன் இனிமையையும் நீங்கள் பகிரவேண்டும்.

    பதிலளிநீக்கு
  28. @ முத்துலெட்சுமி: உண்மை தான். இரண்டு வருடங்களுக்கு முன் என்னையும் சேர்த்து எட்டு நண்பர்கள் [நண்பிகள்] சென்னையில் சந்தித்தோம்... அப்போது உருவான எண்ணமே இந்த சந்திப்பு... இன்னமும் இந்த வருட சந்திப்பு பற்றிய பேச்சுகள் நடந்து கொண்டு இருக்கின்றன. சந்திப்பு பற்றி நடந்தவுடன் கண்டிப்பாக எழுதுவேன்...

    உங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  29. வெங்கட், கல்லூரி வாழ்க்கை என்பது எல்லாருடைய வாழ்க்கையிலும் ஒரு முக்கியமான மற்றும் மறக்கமுடியாத ஒன்று. அத்தகைய ஒரு மறக்கமுடியாத கல்லூரி வாழ்க்கையில் நாமிருவரும் ஒன்றாக படித்தது எனக்கு பெருமை தரும் ஒன்று. கல்லூரி நண்பர்கள் என்றாலே VIP க்கள் தான்!!!

    பதிலளிநீக்கு
  30. @ C. குமார்: உனது வருகை என்னை மகிழ்வித்தது நண்பனே. மறக்கமுடிகிற கல்லூரி நாட்களா அவை.... மூன்று வருடங்களும் இன்னும் நீண்டு விடாதா என்று இப்போதும் தோன்றுகிறது என்பதிலிருந்தே நம் கல்லூரி நாட்களின் பெருமையை பறை சாற்றும்.... வருகைக்கும் கருத்திற்கும் நன்றி நண்பனே....

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....