வெள்ளி, 2 டிசம்பர், 2011

அறுவை சிகிச்சை…


[மனச்சுரங்கத்திலிருந்து…]



அந்த மருத்துவமனையின் மகளிர் உள்நோயாளிகள் பிரிவில் உடல் நிலை சரியில்லாது அனுமதிக்கப்பட்டிருந்தார் என் அம்மா. மாத்திரை மருந்துகள் எடுத்தும் சரியாகாததால் நான்கு-ஐந்து நாட்கள் அங்கேயே இருந்து தொடர் சிகிச்சை எடுக்க வேண்டியிருந்தது.  இரண்டு நாட்கள் சிகிச்சை முடிந்த நிலையில், மூன்றாவது நாள் காலை…

செவிலியர் ஒருவர் வந்து அம்மாவிடம் ஒரு பச்சை நிற அங்கியைக் கொடுத்து “ம்ம்ம்…  சீக்கிரம் உடைகளைக் களைந்து விட்டு இந்த அங்கியை மாட்டிக் கொள்! தலைமுடியை இரட்டைப் பின்னலாக போட்டுக்கொள்!” என்று சொல்ல, “ஏன்?” என்று கேட்டார் அம்மா.

அதற்கு அந்த செவிலியர், “மருத்துவமனையில் சொன்னால், சொன்னதைச் செய்யணும், கேள்வியெல்லாம் கேட்கக் கூடாது, பதில் சொல்ல எனக்கு நேரம் இல்லை” என்று மிரட்டியபடியே  அடுத்த வேலையைப் பார்க்கச் சென்று விட்டார்.  அம்மாவும் எதுக்கு என்று புரியாமலேயே, தனது 47 –வது வயதில் இரட்டை பின்னல் பின்னிக்கொண்டு மருத்துவமனையின்  பச்சை அங்கியை போட்டுக் கொண்டு, முகம் பார்க்கும் கண்ணாடியில் தன்னைப் பார்க்க, அந்தப் புரியாத நிலையிலும் தன்னைப் பார்த்து ஒரு சிரிப்பு…  “இந்த வயதில் இது தேவையா?” என்று நினைத்தாரோ என்னவோ!

இந்த அலங்காரத்தோடு தயாராகி, அந்த முரட்டு செவிலியர் வருகைக்குக் காத்திருந்தார்.  10-15 நிமிடங்களுக்குப் பிறகு வந்த அந்த செவிலியர் ”என்ன தயாரா?  அறுவை சிகிச்சைப் பிரிவுக்கு நடந்து வர முடியுமா, இல்லை தள்ளுவண்டி வேணுமா?” எனக் கேட்க, அப்போதும் மனதில் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு “எனக்கென்ன, நல்லாத்தானே இருக்கேன், நடந்தே வரேன்.  ஆனால், அறுவை சிகிச்சைப் பிரிவுக்கு எதுக்கு வரணும்?” என்று கேட்க, அந்த செவிலியர் சொன்ன பதில் மேலும் அதிர்ச்சியை உண்டாக்கியது.

”அட என்னம்மா, உன்னோட ரொம்ப பேஜாராப் போச்சு! சொன்னபடி செய்ய மாட்டியா, சும்மா கேள்வி மேல கேள்வி கேட்காத! இன்னிக்கு உனக்கு கண் ஆபரேஷன்.  இனிமே தொணதொணக்காம என் கூட வா!” என்று சொல்லி முன்னே நகர, அம்மாவோ அதிர்ச்சியில் அங்கேயே நின்று விட்டார்.

பத்தடி சென்றதும் திரும்பிப் பார்த்த அந்த செவிலியர், ”அட ஏன் நின்னுட்டே, முடியல்லியா? இதுக்குத்  தான் தள்ளுவண்டி வேணுமான்னு அப்பவே கேட்டேன், இப்ப இப்படி பண்ற!” என்று சொல்ல, அம்மா “எனக்கு, எதுக்கு ஆபரேஷன்?” என்று  கேட்டே விட்டார்.

அப்போது அந்த செவிலியர் சொன்ன பதில் தான் இந்தக்  கட்டுரையின் ஹைலைட்!  “ஏம்மா, உனக்குப் படிக்கத் தெரியுமா, இங்க பாரு சீட்டு! உன் பேர் ஃபிலோமினா, வயசு 74, உனக்கு இன்னிக்கு கண் ஆபரேஷன்”. அப்போது தான் எதற்கு இந்த கூத்தெல்லாம் என்பது அம்மாவுக்கு மெள்ள புரிய ஆரம்பித்தது. 

”அடடா, நல்ல வேளை, இப்பவாவது சொன்னீங்களே, என் பேரு ஃபிலோமினா இல்லை, என் வயசு 47, ஒவ்வாமையினால் அரிப்பு ஏற்பட்டு அதற்காகத்தான் இங்கு சிகிச்சை எடுத்துக் கொண்டு இருக்கிறேன்! எனக்கு இரண்டு கண்ணும்  நல்லாத்தான் தெரியுது” என்று சொல்ல, அதற்கு அந்த செவிலியர் அலட்சியமாக சொன்ன பதில் – “ஏம்மா இதை முன்னாடியே சொல்ல மாட்டியா!  சரி, சரி, இதெல்லாம் மருத்துவரிடம் சொல்லிடாதே…. போய் உன் உடைகளை மாட்டிக்கொள், நான் ஃபிலோமினாவைத் தேடறேன்”.

இதெல்லாம் நடந்த ஒரு மணி நேரத்தில் அம்மா, எனக்கு இப்போ நல்லா இருக்கு, நான் வெளி நோயாளியா வந்து சிகிச்சை எடுத்துக்கறேன் எனச் சொல்லி டிஸ்சார்ஜ் வாங்கிக்கொண்டு எதுவும் அசம்பாவிதம் நடப்பதற்குள் தப்பித்து வீட்டுக்கு வந்துவிட்டார். 

இந்த நிகழ்ச்சி நடந்து 20 வருடங்களுக்கு மேலாகி விட்டது.  மருத்துவர்கள், செவிலியர்கள் ஆகியோரது பணி மிகவும் மகத்தான ஒன்று.  இப்பணியில் மிகவும் பொறுமையும் பொறுப்பும் தேவை.  எத்தனையோ நல்லவர்கள் இந்தப் பணியில் இருந்தாலும், மேலே சொன்ன செவிலியர் போன்ற சிலரால் மொத்த மருத்துவத் துறைக்கும், சேவகர்களுக்கும் பழி ஏற்பட்டு விடுகிறது. 

மருத்துவமே வியாபாரமாகி விட்ட இந்நாட்களில் இன்னும் நிலைமை மோசமாகிக் கொண்டே போவது தான் வருத்தமாக இருக்கிறது. இந்த நிலை என்றுதான் மாறுமோ என்ற கேள்வி என் மனதில் தோன்றி மறைவதை தடுக்க முடியவில்லை.

மீண்டும் சந்திப்போம்!

வெங்கட்.



49 கருத்துகள்:

  1. உண்மை...இந்த நிலை என்றுதான் மாறுமோ? அதே ஆதங்கம் தான் எனக்கும் நண்பரே...

    பதிலளிநீக்கு
  2. அரசாங்க மருத்துவமனையில்.....என்று....நமக்கு தரமான மருத்துவம் கிடைக்கிறதோ? அன்று மாறும்...!!

    பதிலளிநீக்கு
  3. ஆஸ்பிடல் பணி யாளர்கள் இப்படி கவனக்குறைவாக நடந்தால் பாதிக்கப்படுவது அப்பாவி பொது மக்கள்தானே.

    பதிலளிநீக்கு
  4. நல்ல வேளை.. அம்மா கேட்டதால் பிழைத்தார்.. த்ரில்லிங் எஸ்கேப்

    பதிலளிநீக்கு
  5. @ சென்னை பித்தன்: வருத்தும் உண்மை... நிஜம் ஐயா...

    தங்களது உடனடி வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  6. @ ரெவெரி: இந்த நிலை எப்போது மாறும்? இது ஒரு பெரிய கேள்விக்குறி தான் நண்பரே...

    தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  7. @ அப்பாஜி: அரசாங்க மருத்துவமனை, தனியார் மருத்துவமனை எல்லாமே இப்படித்தான் இருக்கிறது நண்பரே...

    தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  8. @ லக்ஷ்மி: நிச்சயம் அப்பாவி பொது மக்கள் தான் பாதிக்கப்படுகிறார்கள் அம்மா...

    தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றிம்மா...

    பதிலளிநீக்கு
  9. அப்போ அவ்வளவு நாள் சாப்பிட்ட மருந்து கண் மருந்துதானே..? ஆண்டவா கிரேட் எஸ்கேப்...!

    பதிலளிநீக்கு
  10. @ ரிஷபன்: த்ரில்லிங் எஸ்கேப்... ஆனாலும் அந்த ரெட்டை பின்னல் தோற்றம் நினைத்து இப்பவும் சிரிப்பார்!

    தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  11. @ MANO நாஞ்சில் மனோ: நல்ல வேளை அது கண் மருந்து அல்ல! ஒவ்வாமைக்கான மருந்து-மாத்திரைகள் தான்.

    தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி நண்பரே...

    பதிலளிநீக்கு
  12. தவறென தெரிந்தும் வருந்தி திருந்தாத ஜென்மங்கள் அன்பரே............

    பதிலளிநீக்கு
  13. படம் சூப்பர்,பதிவுக்கு தகுந்தாற்ப் போல்

    பதிலளிநீக்கு
  14. நல்லவேளையாகத் தப்பித்தார் தங்கள் அம்மா.

    //மருத்துவர்கள், செவிலியர்கள் ஆகியோரது பணி மிகவும் மகத்தான ஒன்று. இப்பணியில் மிகவும் பொறுமையும் பொறுப்பும் தேவை. எத்தனையோ நல்லவர்கள் இந்தப் பணியில் இருந்தாலும், மேலே சொன்ன செவிலியர் போன்ற சிலரால் மொத்த மருத்துவத் துறைக்கும், சேவகர்களுக்கும் பழி ஏற்பட்டு விடுகிறது.//

    உண்மை.

    பதிலளிநீக்கு
  15. @ A.R. ராஜகோபாலன்: ”தவறென தெரிந்தும் வருந்தி திருந்தாத ஜென்மங்கள்!” தவறை ஒத்துக்கொள்ளவும் தைரியமும், மனதும் வேண்டுமே....

    தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி நண்பரே...

    பதிலளிநீக்கு
  16. @ ராமலக்ஷ்மி: நிச்சயமாக அதில் தப்பித்தது தம்பிரான் புண்ணியம்!

    தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  17. மருத்துவமே வியாபாரமாகி விட்ட இந்நாட்களில் இன்னும் நிலைமை மோசமாகிக் கொண்டே போவது தான் வருத்தமாக இருக்கிறது. இந்த நிலை என்றுதான் மாறுமோ என்ற கேள்வி என் மனதில் தோன்றி மறைவதை தடுக்க முடியவில்லை.

    மாறுமோ இந்த நிலை...

    பதிலளிநீக்கு
  18. //மருத்துவமே வியாபாரமாகி விட்ட இந்நாட்களில் இன்னும் நிலைமை மோசமாகிக் கொண்டே போவது தான் வருத்தமாக இருக்கிறது.//

    கரெக்டு.. சேவை மனப்பான்மை குறைஞ்சுக்கிட்டுத்தான் வருது.

    பதிலளிநீக்கு
  19. படிக்க நகைச்சுவையாக இருந்தாலும், நல்லவேளையாக தங்கள் தாயார் தப்பினார்கள். இதுபோல சில இடங்களில், ஒரு சிலரின் பொறுப்பின்மையால், மிகப்பெரிய தவறுகள் ஏற்பட்டுவிடுகின்றன.

    இப்படித்தான் என் சம்பந்திக்கு கண் ஆபரேஷன் செய்து லென்ஸ் பொருத்தப்பட்ட மருத்துவ மனையில் ஒரு பெரிய கோளாறு நடந்து விட்டது.

    இவர் பெயரும் இவருக்கு அடுத்து போனவரும் பெயரும் ஒன்றாக இருந்துள்ளதில் ஏதோ குழப்பமாகி லென்ஸை பவர் மாற்றி வைத்து ஆபரேஷனும் முடிந்து விட்டது. பிறகு தான் விஷயமே தெரிய வந்தது. மீண்டும் ஆபரேஷன் செய்வது முடியாத காரியம் என்றும் டாக்டர் சொல்லிவிட்டார். பணமும் ஒரு பெருந்தொகை கட்டி, அது யானை வாயில் போன கரும்பாகி விட்டது. டாக்டரால் வருத்தம் மட்டுமே தெரிவிக்க முடிந்தது, அதுவும் எதிர்பார்த்த பார்வை கிடைக்கவில்லை என்ற புகார் கொண்டுபோன போது. இது என்ன அதிர்ஷ்டமா? துரதிஷ்டமா? தலையெழுத்தா? புரியவில்லை.

    என்னிடம் முன்பே சம்பந்தி ஆலோசனை கேட்டபோது, நான் வழக்கமாக Once in 9 months periodical eye check-up செய்துகொள்ளும் மிகவும் சிறப்பானதொரு தனியார் மருத்துவ மனைக்குப் போகச்சொன்னேன். ஆனால் அவர் அதைக் கேட்காமல், வேறு யாரோ சொன்னார் என்று, மிகவும் Costly யானதொரு தனியார் மருத்துவ மனையைத் தேர்ந்தெடுத்தார். சரி எப்படியோ நல்லபடி ஆனால் சரி என்று நானும் விட்டுவிட்டேன்.

    மிகவும் Costly யான சிகித்சையினாலோ என்னவோ துரதிஷ்டவசமாக Rectify செய்ய முடியாத costly யான mistake நடந்து விட்டது. இப்போது அவருக்கு ஏற்கனவே இருந்த பார்வை இன்னும் மோசமாகி விட்டது. நடந்த பிறகு வருந்தி என்ன பயன்?

    பகிர்வுக்கு நன்றி. vgk

    பதிலளிநீக்கு
  20. ////மருத்துவமே வியாபாரமாகி விட்ட இந்நாட்களில் இன்னும் நிலைமை மோசமாகிக் கொண்டே போவது தான் வருத்தமாக இருக்கிறது. இந்த நிலை என்றுதான் மாறுமோ என்ற கேள்வி என் மனதில் தோன்றி மறைவதை தடுக்க முடியவில்லை.////

    ஆமா பாஸ் இந்த நிலை மாறவேண்டும்

    பதிலளிநீக்கு
  21. @ இராஜராஜேஸ்வரி: //மாறுமோ இந்த நிலை?// மாறவேண்டும்....

    தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  22. @ அமைதிச்சாரல்: //கரெக்டு.. சேவை மனப்பான்மை குறைஞ்சுக்கிட்டுத்தான் வருது.//

    இப்போது சேவை மனப்பான்மை “கிலோ எவ்வளவு?” என்பது தான் நிலை!

    தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  23. @ வை. கோபாலகிருஷ்ணன்: தங்களது வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி.

    நீங்கள் சொல்வது போல, சுலபமாய் தவறு நடந்துவிட்டது என்று சொல்லி விடுகிறார்கள். இவர்கள் போன்றவர்களை விடக்கூடாது... நஷ்ட ஈடு கேட்டு புகார் கொடுக்க வேண்டும். ஆனால் இவை அனைத்துக்கும் நம்மை நிறைய அலைய விடுவார்கள்... அதுதானே கஷ்டம்....

    பதிலளிநீக்கு
  24. @ K.s.s.Rajh: தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி நண்பரே...

    பதிலளிநீக்கு
  25. செய்யும் வேலையில் அக்கறையில்லாத் தன்மைதான் எல்லாத் துறைகளிலும் நடக்கும் அடிப்படையான குற்றங்களுக்குக் காரணம்.தவிரவும் சேவை செய்பவர்களின் இதமற்ற போக்கும் விஷயத்தை மேலும் குளறுபடியாக்குகிறது.

    பதிலளிநீக்கு
  26. @ சுந்தர்ஜி: கடமை என்பதை மறந்து விட்டு, கடமைக்கு வேலை செய்கிறார்கள்.... எல்லாத்துறைகளிலும் இப்படித்தான் இருக்கிறார்கள்....

    தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  27. கண்ணிமைக்கும் நேரத்தில தப்பினாங்க இல்லேன்னா தேவையில்லாம ஒரு கண் ஆபரேஷன்...

    பதிலளிநீக்கு
  28. உண்மைதான். வியாபாரமேதான்:(

    அறுவை சிகிச்சையில் காட்டும் தீவிரம் ஆஃப்டர் கேர் செய்வதில் இல்லை. சென்னை மருத்துவமனை ஒன்றில் கசப்பான அனுபவம்:(

    பதிலளிநீக்கு
  29. @ கே. பி. ஜனா: ஆமாம்! கண்ணிமைக்கும் நேரத்தில் கண் தப்பித்தது! தங்களது வருகைக்கும் அருமையான கருத்திற்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  30. @ துளசி கோபால்: ஆமாம் டீச்சர், இந்த மருத்துவமனைகள் வியாபார ஸ்தலங்களாகி பல வருடங்கள் ஆகிவிட்டது. இன்னும் கசப்பான அனுபவங்கள் எனக்கும் உண்டு.... :(

    தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  31. அய்யய்யோ! தங்கள் அம்மா தப்பியதை நல்ல நேரம்தானு சொல்லலாம்.

    கோபலகிருஷ்ணன் சார் சொல்லியுள்ளது இன்னும் கொடுமையா இருக்கு.

    மருத்துவமனைக்கு போனாலே நம் உயிர் நம்மளது இல்லைனுதான் நினைத்துகிட்டு போகனும்.இந்த நிலமைய நம்ம கெட்ட நேரம்னு சொல்லிக்க வேண்டியதுதான்.

    பதிலளிநீக்கு
  32. mmm.. அப்பவே ஆரம்பிச்சிடிச்சா..?

    அமெரிக்காவுலே மருத்துவ சிகிச்சையில் தவறு நடக்குதாம்.. ஜீன்ஸ் படத்தில சொல்லி இருக்காங்க..

    பதிலளிநீக்கு
  33. நல்ல வேளை தப்பித்தார் அம்மா.

    மருத்துவப் பணி என்பது பொறுப்பான பணி. இதில் வேலைசெய்வோர் மிகவும் பொறுப்பாக நடந்து கொள்ள வேண்டும்.

    பதிலளிநீக்கு
  34. அடக்கடவுளே!
    இப்படி ஒருமருத்துவ மனையா!
    வயது வித்தியாசம் கூடவா தெரியாது!

    பதிலளிநீக்கு
  35. நல்ல வேளை.குளறுபடியில் மாட்டிக் கொள்ளாமல் அம்மா தப்பித்தாரே.கடவுளுக்குத்தான் நன்றி சொல்லணும். ஆனால் இது போன்ற அலட்சியப் போக்கால் எத்தனை பேருக்கு ஆபத்து?இம்மாதிரி பொறுப்பான பணியில் இருப்பவர்கள் அதை உணர்ந்து நடந்தால் தேவலை

    பதிலளிநீக்கு
  36. @ திருமதி பி.எஸ். ஸ்ரீதர்: நல்ல நேரம்தான் அன்று தப்பியது. கொடுமையே அந்த செவிலியர் தவறு என்பதை சாதாரணமாக எடுத்துக் கொள்வது தான்!

    தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஆச்சி.

    பதிலளிநீக்கு
  37. @ மாதவன் ஸ்ரீனிவாசகோபாலன்: ஆமாம்... அப்பவே ஆரம்பிச்சாச்சு! :(

    தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி நண்பரே....

    பதிலளிநீக்கு
  38. @ மாதேவி: //மருத்துவப் பணி என்பது பொறுப்பான பணி. இதில் வேலைசெய்வோர் மிகவும் பொறுப்பாக நடந்து கொள்ள வேண்டும்.//

    ஆமாம் சகோ... சரியாகச் சொன்னீர்கள்....

    தங்களது தொடர் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  39. @ புலவர் சா இராமாநுசம்: ஆமாம்! இப்படியும் ஒரு மருத்துவமனை... :(

    தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஐயா....

    பதிலளிநீக்கு
  40. @ ராஜி: //இது போன்ற அலட்சியப் போக்கால் எத்தனை பேருக்கு ஆபத்து?//

    உண்மை தான்... அலட்சியப் போக்கு மட்டுமல்லாது தவறை திருத்திக் கொள்ள முயல்வது கூட இல்லை என்பது தான் எனக்கு வருத்தம்..

    தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சகோ!

    பதிலளிநீக்கு
  41. நல்ல வேளை.
    நல்ல பதிவு.
    வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  42. @ ரத்னவேல்: நல்ல வேளைதான ஐயா...

    தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  43. ஒரு அலட்சிய மருத்துவரால் தான் எங்கள் அப்பாவை இழந்தோம்.
    உங்கள் அம்மாவுக்கு இருபது வருடங்களுக்கு முன்னாலயே இப்படி நடந்திருக்கா.
    கடவுளே! க்ஷண நேரத்தில் தப்பி இருக்கிறார்.
    திரு.கோபாலகிருஷ்ணன் சொல்வதைப் பார்த்தால் கலக்கமாக இருக்கிறது.
    விழிப்புப் பதிவாக இது இருக்கட்டும். நன்றி வெங்கட்.

    பதிலளிநீக்கு
  44. @ வல்லிசிம்ஹன்: //ஒரு அலட்சிய மருத்துவரால் தான் எங்கள் அப்பாவை இழந்தோம்.// ஓ... படிப்பதற்கே மிகவும் வருத்தமாக இருக்கிறது.

    நிறைய விஷயங்கள் இப்படித்தான் நடக்கின்றது..

    தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  45. படிக்கவே பகீர் என்கிறது. நல்ல வேளை. உங்கள் அம்மா தப்பித்தார். கடவுளுக்கு நன்றி...

    பதிலளிநீக்கு
  46. @ BalHanuman: ஆமாம் இது ஒரு பகீர் அனுபவம்தான் எங்களுக்கும். தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நண்பரே...

    பதிலளிநீக்கு
  47. நல்லவேளை தப்பிச்சாங்களே.. திகிலா இருக்கு நினைக்கவே ..

    பதிலளிநீக்கு
  48. @ முத்துலெட்சுமி: ஆமாம் தப்பித்தார்கள். இப்ப நினைத்தால் கூட திகில்தான்...

    தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....