அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
நேற்று வெளியிட்ட சுந்தரி கண்ணால் ஒரு சேதி… பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
நீங்கள் யாருக்காக எல்லாவற்றையும் இழக்கிறாயோ… நீங்கள் யாருக்காக எல்லாவற்றையும் செய்கிறாயோ…. அவர்கள் தங்களது வாழ்க்கையில் ஒரு கட்டத்திற்கு மேலே உங்களை ஒரு ஆளாகக் கூட மதிப்பதில்லை என்பதே நிதர்சனம்!
பல சமயங்களில் இந்த உண்மையை உணர்ந்திருக்கிறேன் - நீங்களும் அப்படி உணர்ந்திருக்கலாம்!
******
சின்னச் சின்ன விஷயங்கள் தான் என்றாலும் போகிற போக்கில் நம் மனதை அலைக்கழித்து விட்டுப் போகும் நிகழ்வுகள் நடந்த வண்ணமே இருக்கின்றன. நேற்று எழுதிய பதிவு கூட அப்படியான ஒரு நிகழ்வினை வைத்து எழுதப்பட்ட பதிவே! பதிவின் வழி சொன்ன விஷயம் நடந்த விஷயம் தான் - சின்னச் சின்ன விஷயங்களைச் சேர்த்து பதிவாக எழுதி இருக்கிறேன். இப்படியான கதை மாந்தர்களின் கதைகளை எழுதுவது இன்னும் தொடரும் என்றே எனக்கும் தோன்றுகிறது. தொடர்ந்து கேட்டுக் கொண்டிருக்கும் விஷயங்களை பதிவில் எழுதுவதும் ஒரு வித நிறைவைத் தருகிறது. பதிவுலகிற்கு வந்த புதிதில் இப்படியெல்லாம் தினம் தினம் பதிவு எழுதுவேன் என்று நினைத்துக் கூட பார்த்ததில்லை. திரும்பிப் பார்த்தால் எனக்கே அதிசயமாக இருக்கிறது - திரும்பிப் பார்க்க வைக்கும் விதமாக இன்றைய பதிவு - எனது பக்கத்தில் 2400-ஆவது பதிவு!
எனது பக்கத்தில் என் பதிவுகள் மட்டுமல்லாது, இல்லத்தரசியின் பதிவுகளும், நண்பர் பத்மநாபன் மற்றும் சிலரது பதிவுகளும் வெளியிட்டு வந்தாலும் பெரும்பாலும் - 90 சதவிகிதத்திற்கும் மேலாக எனது பதிவுகளே இருக்கின்றன. மீள் பதிவு என்பது மொத்தமாகவே பத்துக்குள் அடங்கி விடும்! எழுத வேண்டும் என்ற எண்ணம் இன்னும் குறையவே இல்லை என்பதில் எனக்கே மகிழ்ச்சியாகவும் அதே சமயம் ஆச்சர்யமாகவும் இருக்கிறது. வலைப்பூவில் தற்போது எழுதுபவர்கள் குறைவு என்றே சொல்லலாம். முன்பு இங்கே எழுதிக் கொண்டிருந்தவர்கள் பலரும் முகநூல் பக்கம் சாய்ந்து விட்டார்கள். சின்னச் சின்னதாய் உதிக்கும் எண்ணங்களை ட்விட்டர் பக்கங்களில் பதிவிட ஆரம்பித்து விட்டார்கள். வலைப்பூவில் நீண்ட பதிவுகளை எழுதுவது பலருக்கும் பிடிக்கவில்லை போலும்!
தவிர வலைப்பூக்களை படிப்பவர்களும், படித்த பின் கருத்துகளை பகிர்ந்து கொள்பவர்களும் குறைந்து கொண்டே இருக்கிறார்கள். முன்பெல்லாம் சினிமா, அரசியல் இல்லாத பதிவுகளுக்குக் கூட வாசகர்கள் எண்ணிக்கையும், கருத்துகளின் எண்ணிக்கையும் அதிகமாக இருந்ததுண்டு. இப்போது அப்படி இல்லை! குறைந்து கொண்டே வருகிறது. என்னதான் மாய்ந்து மாய்ந்து எழுதினாலும் சிலரது பக்கங்களில் நான்கு ஐந்து கருத்துகளைக் கூட பார்க்க முடிவதில்லை. சினிமா/அரசியல் பற்றிய பதிவுகளுக்கும், செய்திகளுக்கும் இருக்கும் வரவேற்பு சிறுகதைகள், கவிதைகள், பயணக் கட்டுரைகள் போன்றவற்றிற்கு இருப்பதில்லை என்பது கண்கூடு. ஆனாலும் எழுதுபவர்கள் எழுதிக் கொண்டே தான் இருக்கிறார்கள் - என்னையும் சேர்த்து! நமக்குப் பிடித்தவரை எழுதுவோம் என்ற எண்ணம் மட்டுமே காரணம்.
பொதுவாகவே யார் எனது பதிவுகளுக்கு வருகிறார்கள், வருவதில்லை, வரவைப் பதிவு செய்கிறார்களா என்பதை நான் பார்ப்பதில்லை. முடிந்த அளவு நான் தொடரும் அனைத்து பதிவர்களின் பதிவுகளையும் படித்து விடுவதோடு எனது வருகையையும் அறிவிக்கும் விதமாக ஓரிரு வரிகளாவது எழுதாமல் இருப்பதில்லை. நான் படிக்கும் பல வலைப்பூக்களில் எழுதுபவர்கள் எனது பக்கம் வருவதே இல்லை என்பதையும் உணர்ந்திருந்தாலும் நான் படிப்பதை நிறுத்துவதில்லை. அவர்கள் ஏன் வருவதில்லை என்று கேட்பதும் இல்லை! அவரவருக்கு அவரவர் வேலை முக்கியம்! சூழலும் அப்படி. பதிவுலகில் இருக்கும் அரசியலும் அப்படி. நிறைய பேருக்கு தான் எழுதுவது மட்டுமே எழுத்து என்ற எண்ணமும் இருப்பதையும் பார்க்கிறேன். எப்போதும் போலவே நான் எனது பாதையில் சென்று கொண்டிருக்கிறேன். பாதைகளில் முட்களையும், தடைகளையும் நினைத்து, பயணிக்காமலேயே இருப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை!
இத்தனை வருடங்களில் எழுதிய பதிவுகளிலிருந்து சிலவற்றை தொகுத்து மின்னூல்களாகவும் வெளியிடுவதில், அவற்றைப் படித்து நண்பர்கள் தரும் கருத்துகளைத் தெரிந்து கொள்வதில் சமீப மாதங்களாக ஆர்வம் வந்திருக்கிறது. இதுவரை வெளியிட்ட புத்தகங்களுக்குக் கிடைத்த வரவேற்பும் மகிழ்ச்சியைத் தருகிறது. சமீப நாட்களில் முகநூலில் இருக்கும் வாசிப்புக் குழுக்கள் காரணமாக எனது நூல்களை படிப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து இருக்கிறது என்பதை இந்த நாளில் சொல்லிக் கொள்வதில் மகிழ்ச்சி. கிண்டில் வழி புத்தகங்கள் வெளியிடுவது கடந்த மூன்று நான்கு மாதங்களாக நின்றிருக்கிறது - வேலைப்பளு ஒரு காரணம் என்றாலும் விடுமுறை நாட்களிலாவது இந்த வேலையைச் செய்திருக்கலாம். வரும் வாரங்களில் தொகுத்து நூல் வெளியிட வேண்டும் என்று நினைத்திருக்கிறேன் - நினைத்தது நடக்கிறதா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்!
இது காறும் எனது பதிவுகளைப் படித்து, எனக்கு தொடர் ஆதரவினை அளித்து வந்த அனைத்து நட்புகளுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த வலைப்பூ வழி தொடர்ந்து சந்திப்போம் நட்புகளே!
நாளை வேறொரு பதிவு வழி உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…
நட்புடன்
வெங்கட் நாகராஜ்
புது தில்லியிலிருந்து…
வாசகம் சொல்லும் உண்மையை கிட்டத்தட்ட எல்லோரும் தத்தங்கள் வாழ்க்கையில் அனுபவித்திருப்பர்கள்.
பதிலளிநீக்குபதிவுலகம் சில வருடங்களுக்கு முன் இருந்த பரபரபபியும், சுறுசுறுப்பபையும் இழந்துதான் நிற்கிறது. புதுமுகம் போல அது இப்போது அலுத்து விட்டது போல. இதேபோல ட்விட்டரோ, பேஸ்புக்க்கோ சீக்கிரமே அவையும் அலுத்துப் போக்கும் நிலை வரலாம். பார்ப்போம்.
வாசகம் உங்களுக்கும் பிடித்து இருந்ததில் மகிழ்ச்சி ஸ்ரீராம். ட்விட்டர் ஃபேஸ்புக் போன்றவையும் அலுத்துப் போகலாம் - புதியதாக மற்றொன்று வந்தால்....
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
பதிவைப் படிப்பவர்கள் குறையவில்லை என்பது என் எண்ணம். முன்னம் பதிவுகளை இணைக்க பாலங்கள் இருந்தன (தமிழ்மணம் போன்று). அவற்றில் அரசியல் இருந்தாலும், என்ன என்ன பதிவுகள் வந்திருக்கின்றன என்பதைப் பார்த்து நமக்குப் பிடித்தவைகளைப் படிக்கும் வாய்ப்பு இருந்தது. இப்போது அத்தகைய தளங்கள் இல்லாததால், 'தொடர்பவர்கள்' என்பதைப் பார்த்து புதிய பதிவுகளைப் படிக்கவேண்டியிருக்கிறது. எதில், நான் விரும்பும் தளங்கள் என்று கம்பைல் பண்ணி வைத்துக்கொள்வது என்று யோசிக்கிறேன் (அதிலும் புதிய பதிவுகள் வந்தால் தெரியாது).
பதிலளிநீக்குஉங்கள் இடுகைகள் அனேகமாக எல்லாவற்றையும் (குறும்படங்கள், விளம்பரங்கள், சில நேரங்களில் மின்னூல் விமர்சனங்கள், புத்தக விமர்சனங்கள் போன்றவை தவிர) படித்துவிடுவேன். சில நேரங்களில் பின்னூட்டம் போடத் தோன்றுவதில்லை. அவ்ளோதான். ஆனால் அட்டெண்டென்ஸ் உண்டு. முன்பு த.ம +1 என்ற அரசியல் இருந்ததனால் பின்னூட்டங்கள் நிச்சயம் வரும், இப்போது அப்படி இல்லை அல்லவா?
தமிழ்மணம் போன்ற பாலங்கள் இப்போது இல்லை என்பதும் வேதனை தான். இப்போது வாட்ஸப் குழுமங்கள் இருந்தாலும் அதில் இருப்பவர்கள் பலரும் பதிவுகளை படிப்பதில்லை.
நீக்குபதிவு குறித்தும், வலையுலகம் குறித்தும் நீங்கள் சொல்லி இருக்கும் விஷயங்கள் நன்று.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
நினைத்தால் நடந்தே தீரும் ஜி...
பதிலளிநீக்குநினைத்தால் நடந்தே தீரும் - உண்மை தான் தனபாலன்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
//வாசகர்கள் எண்ணிக்கையும், கருத்துகளின் எண்ணிக்கையும் // - என் மனதில் தோன்றுவது, பின்னூட்டங்கள் மூலம் இடுகை எழுதுபவரோடு interact செய்வார்கள், சில தளங்களில். மற்றபடி இடுகையைப் படித்தபோது மனதில் ஏதேனும் பகிரணும் என்று தோன்றினால்தான் எழுதுவார்கள் என்று நினைக்கிறேன். சில தளங்களில் பின்னூட்டத்திற்கு நிச்சயம் மறுமொழி இருக்கும்போது கண்டிப்பாக எழுதணும்னு தோன்றும். அவ்ளோதான்.
பதிலளிநீக்குநீங்க தொடர்ந்து எழுதுங்க. நீங்கள் கேள்விப்படும் செய்திகளின் மூலம் எழுதும் கதை, தில்லி அனுபவங்கள், பயணங்கள் போன்றவை படிக்க ரசனையாக இருக்கு.
தொடர்ந்து நீங்கள் தரும் ஆதரவிற்கு நன்றி நெல்லைத் தமிழன். பயணங்கள் தொடர வேண்டும் - பார்க்கலாம் - விரைவில் ஒரு பயணம் அமையும் வாய்ப்பு தோன்றுகிறது.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
மெகா சீரியல் சாதனை. வாழ்த்துகள்.
பதிலளிநீக்குJayakumar
வாழ்த்தியமைக்கு நன்றி ஜெயகுமார் சந்திரசேகரன் ஐயா.
நீக்குதத்துவம் எனது மனதில் அழுத்தத்தை உண்டு பண்ணி விட்டது ஜி.
பதிலளிநீக்குதொடர்ந்து எழுதுங்கள் எனது பதிவுக்கு வருகையாளர்கள் குறைந்து விட்டதால் எழுதும் ஆர்வம் குறைகிறது ஆனாலும் எழுதுகிறேன்.
தத்துவம் - சொல்வது உண்மை என்பதால் அழுத்தம் தான் எனக்கும்.
நீக்குதொடர்ந்து எழுதுவோம் கில்லர்ஜி.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குவாசகம் அருமை. உண்மையும் கூட.... தங்களது சாதனை வியக்க வைக்கிறது. உங்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள். உங்களுடைய எழுத்தை நான் வலைத்தளம் வந்ததிலிருந்து விரும்பி படிக்கிறேன். தங்கள் தளம் சமையல், கதைகள், அனுபவங்கள், பயண கட்டுரைகள் என நல்ல பயனுள்ள செய்திகளை தருகிறது. மேலும் தந்து கொண்டிருக்கிறது. தொடர்ந்து எழுதுங்கள். நாங்களும் உங்களுடன் எப்போதும் பயணிக்கிறோம். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வணக்கம் கமலா ஹரிஹரன் ஜி. வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.
நீக்குஎனது வலைப்பூவினை தொடர்ந்து வாசித்து கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளும் சிலரில் நீங்களும் ஒருவர். மகிழ்ச்சி.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
2400 is a big number for sure. உண்மை தான் அண்ணா, நிறைய பேர் FB Twitter என அதுல மூழ்கி, பிளாக் எல்லாம் விட்டாச்சு (நான் உட்பட). ஆனா பிளாக் தனி தான், நம்ம சொந்த வீடு போல ஒரு உணர்வை தரும் இடம், I miss my blog. ஆனா ரெட்டை குதிரை சவாரிக்கு நேரமில்லாம விட்டாச்சு. Great going 👏
பதிலளிநீக்குபிளாக் - சொந்த வீடு போல! உண்மை தான் அப்பாவி தங்கமணி.
நீக்குரெட்டை குதிரை சவாரி - கொஞ்சம் கடினம் தான்.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
அருமையான பதிவு. தொடக்க வாசகமும் பிரமாதம்.
பதிலளிநீக்குபதிவும் வாசகமும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி இராமசாமி ஜி.
நீக்கு2402 பதிவுகளை வெளியிட்டு இன்னும் நிறைய எழுதனும் என்கிற உங்கள் தாகத்திற்கு வாழ்த்துக்கள் சார். அதுவே வாழ்வை சுவாரசியமாக்கும்.
பதிலளிநீக்குதொடர்ந்து எழுதுவோம் அரவிந்த். நீங்களும் வாசிப்பைத் தொடருங்கள் - எழுதுவதையும்!
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
வாசகம் எனக்குனே சொன்னாப்போல் அமைந்திருக்கிறது. என்னோட பல பதிவுகளுக்கு ஒரே ஒரு கருத்துக் கூட வந்ததில்லை. ஆனாலும் நான் வலைப்பக்கத்தைப் பராமரிப்பதிலேயே ஈடுபாடு கொண்டிருக்கேன். முகநூல்ப் பக்கம் வந்தாலும் அங்கே நேரம் செலவு செய்வது மிகக் குறைவு. ஆழமான சுழல்! உள்ளே இழுத்துவிடும் என்பதால் கரையில் நின்றே பார்ப்பேன்.
பதிலளிநீக்குவாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி. ஒரு கருத்தும் வராத பதிவுகள் - சில சமயம் இப்படி ஆகிவிடுகிறது.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா.