ஞாயிறு, 6 நவம்பர், 2022

யாரிவள் - 101 - திகிலும்! தெய்வீகமும்! - ஆதி வெங்கட்









புதிய சூழலில் புதிதான அறிமுகங்களுடன் நாட்கள் மெல்ல நகரத் தொடங்கியது! மாலையில் மொட்டைமாடியில் எட்டு நடை போடத் துவங்கினாள்! இப்படியே இருந்தால் எப்படி!! ஆரோக்கியத்தின் மீதும் சற்று கவனமாக இருக்கணும் என்று நினைக்கத் துவங்கினாள்!
நடையை முடித்து விட்டு அங்கேயே இருக்கையில் அமர்ந்து தோழியுடன் சற்று நேரம் பேசிக் கொண்டிருப்பாள்!


அப்போதெல்லாம் இதமான காற்றில் நாசியை துளைத்த நாகலிங்கப் பூவின் மணமும், கண்ணுக்கு குளிர்ச்சியாக எதிரே உள்ள தென்னந்தோப்புகளும், ஆதவனின் அஸ்தமனக் காட்சியும் என ஒவ்வொரு நாளும் மனதிற்கு இதத்தை தந்தது! நேர்மறை எண்ணங்களை தோற்றுவித்தது! நடப்பதெல்லாம் நன்மைக்கே!


மாலை 6:30 மணி ஆகிவிட்டால் போதும் அன்றாடம் அருகில் உள்ள தோப்பிலிருந்து பெரும் படை ஒன்று பறக்கத் துவங்கி விடும்! என்ன அது! தினமும் இதே நேரத்தில் பறக்கின்றதே??? ஆமாம்! அன்றொரு நாள் வெளியில் சென்று விட்டு வீட்டிற்கு ஆட்டோவில் வந்த போது இந்த இடத்திற்கான அடையாளமாக அந்த ஓட்டுனர் கூட இந்த இடத்தைப் பற்றி சொல்லியிருந்தது இவளுக்கு மிகுந்த ஆச்சரியமாக இருந்தது!


ஒருநாள் பகல் நேரத்தில் போய் பார்க்கச் சொன்னாரே!!! சக்தி வாய்ந்த இடம் என்றும் சொன்னார்! இதைப் பற்றி தோழியிடம் சொன்ன போது அவருக்கும் இதில் ஆர்வமிருக்கவே இருவரும் ஒருநாள் காலைநேரத்தில் கிளம்பி விட்டார்கள். அன்று தை வெள்ளிக்கிழமை! கையில் அருகில் உள்ள கோவிலுக்கு எடுத்துச் செல்ல பாலும், பூஜைக்கான பொருட்களும் இருந்தது!


முதலில் இங்கே என்ன தான் இருக்கிறது! என்று பார்த்து விடுவோம் என்று அந்தத் தோப்பை நோக்கிச் சென்றார்கள்! புதிதாக குடியிருப்புகள் உருவாகத் தொடங்கியிருந்த இடம் என்பதால் ஜன சந்தடியும் இல்லை! காற்றும் வேகமாக அடித்துக் கொண்டிருந்தது! கொஞ்சம் திக் திக் என்று தான் இருந்தது இவளுக்கு!!


அந்த இடத்தில் மண்ணில் புதைந்திருந்த இந்த இடத்தின் காவல் தெய்வமான அம்பாளும், பெரும் மரம் ஒன்றின் ஒவ்வொரு இலையிலும் தொங்கிக் கொண்டிருந்த ஆயிரக்கணக்கான பழம் தின்னி வெளவால்களும், அருகிலேயே பாம்பு புற்று ஒன்றும் தான் அமைந்திருந்தது!


இவர்கள் பார்த்துக் கொண்டிருந்த நேரத்தில் அங்கே பூசாரியும், பகுதி மக்கள் சிலரும் கூட வந்து சேர்ந்து விட, மனதிற்கு சற்று தெம்பு கிடைத்த உணர்வு அவளுக்கு! பூஜைக்கான பொருட்களை பூசாரியிடம் கொடுக்க அவர் அம்பாளுக்கும் அருகில் இருந்த பப்பாளி மரத்திற்கும் தீபாராதனை காண்பித்தார்! கொண்டு வந்த பாலை பாம்பு புற்றுக்கு விட்டுவிட்டு வீடு வந்து சேர்ந்தார்கள்!


இங்கு இந்த வெளவால்களை யாரும் துன்புறுத்துவதில்லை! தெய்வாம்சமாக நினைக்கிறார்கள். மாலைநேரத்தில் இரை தேடிச் செல்லும் வெளவால்கள் எப்போது திரும்புகிறது என்று தெரியவில்லை! இது அன்றாடம் நடக்கும் நிகழ்வு! மாலை நேரங்களில் பெரும் படை ஒன்று வானில் தெரிந்தால் மணி சரியாக 6:30 என்று சொல்லி விடலாம்!


இந்த மண்ணில் ஆச்சர்யங்களுக்கும், அதிசயங்களுக்கும் பஞ்சமே இல்லை! அவற்றை போற்றி பாதுகாப்போம்!

நட்புடன்

ஆதி வெங்கட்
திருவரங்கம்.

7 கருத்துகள்:

  1. சுவாரஸ்யமான இடமாகத்தான் தெரிகிறது.  வௌவால்களைக் கண்டாலே எனக்கு பயம்!  அல்லது அலர்ஜி!

    பதிலளிநீக்கு
  2. தகவல் ஆச்சர்யமாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  3. உயிரினங்கள் வாழவேண்டும் அவர்களுக்கும் இடம் வேண்டுமே.
    எங்கள் பகுதியிலும் மாலையானால் உணவுக்காக பெரும்படையாக புறப்பட்டு செல்லும் வெளவால்களை பார்க்கலாம். ஒருமைலில் இருந்து செல்கின்றன.

    பதிலளிநீக்கு
  4. வணக்கம் சகோதரி

    பதிவு அருமை. தாங்கள் அந்த திகிலூட்டும் பகுதிக்குச்சென்று அங்குள்ள தெய்வங்களுக்கு பூஜைகள் செய்வித்தது சிறப்பு. பதிவு சுவாரஸ்யமாக இருக்கிறது. வௌவால்கள் பொதுவாக மாலை மங்கும் நேரத்தில் ஒரு குறிப்பிட்ட மரத்திலிருந்து வானில் பறப்பதை நானும் பார்த்துள்ளேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி பதிவை தொடர்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  5. வெளவால்கள் பறப்பதை நானும் பார்த்து இருக்கிறேன்.
    திகில் கதை படிப்பது மாதிரி இருந்தது.

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....