வியாழன், 3 நவம்பர், 2022

புன்னகை! (சிறுகதை)



குருவி சேக்கறாப்ல காசு சேத்து கொண்டாந்துருக்கோம் தாயி! எங்க பாப்பாவுக்கு ஒரு சோடி வாங்கலாம்னு! என்றார்கள் கிராமத்திலிருந்து வந்திருந்த அந்த தம்பதிகள்.

உட்காருங்கம்மா! உட்காருங்க சார்! என்றாள் சிந்து!

சிந்து பிரபல நகைக்கடை ஒன்றில் பணிபுரிகிறாள்! புன்னகை ததும்ப அன்றாடம் இப்படி பலதரப்பட்ட மனிதர்களிடம் பேச வேண்டிய வேலை அவளுக்கு!

வளையல் எத்தன பவுன்ல பார்க்கறீங்கம்மா! என்றாள்.

நீயே சொல்லும்மா? எத்தன பவுன்ல வாங்கினா நல்லாருக்கும்?

மூணு பவுன்ல பாக்கறீங்களாம்மா? பார்க்கவும் நல்லாருக்கும்! அவ்வளவு சீக்கிரமா நசுங்காது!

அப்படியா!! சரிம்மா அப்போ மூணு பவுன்லயே காட்டு!

இதோ பாருங்கம்மா! உங்க பாப்பாக்கு இந்த வளையல் நல்லாருக்கும்! என்று சிலவற்றை பரிந்துரை செய்தாள்!

இப்ப பாப்பா என்ன படிக்கிறாங்க? என்று கேட்டாள் சிந்து!

பத்தாம் கிளாஸ்ம்மா! அது கண்ணாலத்துக்கு தான் கொஞ்சம் கொஞ்சமா வாங்கி சேக்கறோம்! அப்போ தானே நம்மால பண்ண முடியும்!

அப்படியா! சரி! சரி! இந்த டிசைன்லாம் பாருங்க! இதுல சேதாரமும் கம்மியா தான் இருக்கும்! பாப்பா தினசரி கையோட போட்டுட்டும் இருக்கலாம்!

சரிம்மா!

இந்த ரெண்டு டிசைன்ல இது தான் எங்களுக்கு பிடிச்சிருக்கு! இன்னைக்கு ரேட்டுக்கு எவ்வளவு ஆகுதுன்னு பார்த்து சொல்லும்மா!

இதோ பார்க்கிறேன்! என்று சொல்லி கணக்கிட்டாள்! அதுவரைக்கும் நீங்க காஃபி குடிச்சிட்டு இருங்க!

அதே நேரத்தில் பார்க்க வசதியான குடும்பம் ஒன்றிலிருந்து அதே செக்‌ஷனில் வளையல் பார்க்க வந்திருந்தார்கள்! அவர்களும் அவர்கள் மகளுக்காக தான் வந்திருந்தார்கள்.

கணவன், மனைவி மற்றும் அவர்களுடன் பதினைந்து வயது மதிக்கத்தக்க மகளும் வந்திருந்தாள்.

எத்தன பவுன்ல பார்க்கறீங்க மேம்?

நல்ல கனமா 10 பவுன்ல காட்டும்மா!

எங்க பொண்ணு போட்டுட்டு இருக்கிறத பார்த்து அவ கல்யாணம் பண்ணிட்டு போற குடும்பத்துல எல்லாரும் அசந்து போகணும் என்றார் கணவர்.

அப்படிங்களா! கடா டைப் மாதிரி காட்டறேன் சார்! பாப்பா கைக்கு அது அழகா இருக்கும்!

சில மாடல்களை எடுத்துக் காண்பித்தாள்! கணவனும் மனைவியும் அவர்களுக்குள் பேசிக் கொண்டிருக்க…

சார் நீங்க பார்த்துட்டு இருங்க! என்று சொல்லி விட்டு அருகில் அமர்ந்து மூணு பவுன் வளையலுக்கான தொகையை எடுத்து வைத்துக் கொண்டிருந்த கிராமத்து தம்பதிகளிடம் பில்லைத் தயார் செய்து கொடுத்து பணத்தை கட்டி விடச் சொன்னாள்.

அடுத்து பத்து பவுனில் வளையல்களை காண்பித்துக் கொண்டிருந்த வசதியான குடும்பத்தவர்களிடம்….

பார்த்துட்டீங்களா சார்! செலக்ட் பண்ணதுக்கு பில் போட்டுடலாங்களா! ஜி.எஸ்.டியோட அமெளண்ட் இவ்வளவு வருது சார்! பே பண்ணிடுங்க! நான் பேக் பண்ணித் தரேன் என்றாள்.

அவர்கள் பணம் செலுத்தி விட்டு வந்ததும்…

இந்தாம்மா! ஆல் தி பெஸ்ட்! அப்பாக்கு எவ்வளவு சந்தோஷம் பாரு! நல்லாப் படி! என்று வாழ்த்தி வழியனுப்பி வைத்தாள்!

அடுத்து கிராமத்து தம்பதிகளிடம்…

சார்! இந்தாங்க உங்க பாப்பாக்கு மேலும் மேலும் நிறைய வாங்குவீங்க! ரொம்ப நன்றி! என்றாள்.

அன்றாடம் இப்படி விதவிதமான மனிதர்களை பார்த்துப் பழகும் சிந்துவுக்கு 28 வயதாகிறது! அறிவும், அழகும் நிறைந்த பெண்ணாக வலம் வரும் இவளின் வாழ்வை சற்றே பார்வையிடுவோம்!

அதிகாலையில் எழுந்து அரக்கபரக்க வீட்டு வேலைகளை முடித்துக் கொண்டு, வயதான பெற்றோருக்கு வேண்டிய உதவிகளை செய்து விட்டு பேருந்தைப் பிடித்து வேலைக்கு வந்துவிடுவாள்.

இவளின் வருமானத்தில் தான் அந்தக் குடும்பம் நடைபெறுகிறது! மிடுக்கான உடையிலும் புன்னகை ததும்பும் பேச்சாலும் இங்கு நகை வாங்க வரும் குடும்பங்களுக்கு ஏற்றாற் போல் பேசும் இவளின் வாழ்வில் புன்னகையைத் தவிர வேறு நகை இல்லை!

மகளின் நல்வாழ்வுக்காக பெற்றோர் சிறுகச் சிறுக சேமித்து நகைகளை வாங்குவதைப் பார்க்கும் போது இவளின் மனதில் ஏக்கம் உண்டாகும்! இவளுக்கு இப்படியெல்லாம் வாங்கிக் கொடுக்கவோ எடுத்துச் செய்யவோ யாருமில்லை!

நம்பிக்கை என்னும் ஆபரணத்தை மட்டும் அணிந்து கொண்டு பம்பரமாக சுழன்று புன்னகையுடன் பணிபுரியும் அவளுக்கென்று அழகான ஒரு வாழ்க்கை விரைவில் அமையத் தான் போகிறது! நாமும் அவளுக்காக பிரார்த்தித்துக் கொள்வோம்!

நட்புடன்

ஆதி வெங்கட்
திருவரங்கம்.



பட உதவி - கூகுள்

17 கருத்துகள்:

  1. பெரும்பாலான கடைகளில் பணிபுரியும் பெரும்பாலான பெண்களின் நிலை இதுதான். அழகாக படம் பிடித்துக் காட்டி இருக்கிறீர்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை தான் சார். குடும்பச் சூழல் தான் எல்லாவற்றையும் நிர்ணயிக்கிறது!

      தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம் சார்.

      நீக்கு
  2. பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி தனபாலன் சகோ.

      நீக்கு
  3. ஒரு பெண் அல்ல! பல பெண்கள் இப்படி வாழ்கிறார்கள். வாழ்த்துவோம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் சார். பல பெண்களின் நிலை இது தான்.

      தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி சார்.

      நீக்கு
  4. பதில்கள்
    1. குடும்பச் சூழலால் நிர்ணயிக்கப்பட்ட பெண்களின் நிலை இப்படித்தான் இருக்கிறது சார்.

      தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி ஜம்புலிங்கம் ஐயா.

      நீக்கு
  5. மனம் கனத்துப் போய்விட்டது,
    நம்பிக்கை என்னும் ஆபரணத்தை மட்டும் அணிந்து கொண்டு பம்பரமாக சுழன்று புன்னகையுடன் பணிபுரியும் அவளுக்கென்று அழகான ஒரு வாழ்க்கை விரைவில் அமைய வாழ்த்துவோம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பல பெண்களின் நிலை இப்படியாகத் தான் இருக்கிறது.

      தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  6. கதை அருமை. நம்பிக்கையோடு புன்னகை எனும் நகை அணிந்த சிந்துவிற்கு நல்ல வாழ்க்கை அமைய வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நம் வாழ்த்துகளால் அவளது வாழ்க்கை சிறப்பாக அமையட்டும்!

      தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.

      நீக்கு
  7. உறுக்கமான சிறுகதை மேடம்.
    நகைக்கடையில் பணிபுரியும் பெண்களின் மனநிலையை சிறப்பாக காட்டியிருக்கிறிர்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பல பெண்களின் நிலைமை இப்படி தான் இருக்கிறது. அவர்களுக்கு நல் வாழ்க்கை விரைவில் அமைய பிரார்த்திப்போம்.

      தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி அரவிந்த் சார்.

      நீக்கு
  8. வணக்கம் சகோதரி

    நலமா? கதை அருமையாக உள்ளது. வேலைக்குச் சென்று தன் உழைப்பை தன் குடும்பத்திற்கு பயனுள்ளதாக ஆக்கி வரும் பெண்களின் உண்மை நிலையை நன்றாக சொல்லியுள்ளீர்கள்.

    தங்களின் வலைத்தள வருகை மகிழ்ச்சியளிக்கிறது. தொடர்ந்து வாருங்கள். வாழ்த்துக்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நலமே மேம். தாங்களும் நலம் என்று நினைக்கிறேன். தங்களின் உழைப்பால் குடும்பத்தை முன்னேற்றத் துடிக்கும் பெண்கள் இவர்கள்!

      தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி கமலா ஹரிஹரன் மேம்.

      நீக்கு
  9. பல பெண்களின் வாழ்க்கை குடும்பத்துக்காக உழைப்பதுவே அவர்கள் வாழ்க்கை உயரவேண்டும் ..

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....