வெள்ளி, 4 நவம்பர், 2022

யாரிவள் - 99



 

பண்டிகைகளும் பாரம்பரியமும்!





நம் மனதில் மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் உண்டாக்கும் பண்டிகை கொண்டாட்டங்களில் மெனக்கெடுதல் என்பது மிகவும் முக்கியமானது! உழைப்பும், நிதானமும், கவனமும் எனச் செய்யும் வேலையில் முழுவதும் ஈடுபடுத்திக் கொண்டால் தான் திருப்தியும் சந்தோஷமும் கிடைக்கும்!

அவளும் திருமணமாகி தனக்கென்று ஒரு வாழ்வும், பிடிமானமும் உருவாகியது முதலாக ஒவ்வொரு பண்டிகையின் போதும், தனக்கு தெரிந்த விதத்திலும் பெரியவர்களிடம் கேட்டுக் கொண்டும் பாரம்பரியம் குறையாத வண்ணம் செய்து கொண்டு வந்தாள்! பாரம்பரியமாக கடைபிடிக்கும் விஷயங்களை முழுவதுமாக செய்ய இயலாமல் போகும் போது கவலையும் கொள்வாள்!

அப்போதெல்லாம் அம்மா, அப்பாவோடு கொண்டாடிய பண்டிகைகளை நினைத்து பார்த்துக் கொள்வாள்! பணத் தட்டுப்பாடு இருந்தாலும் அம்மா பண்டிகைகளில் என்றுமே குறை வைத்ததே இல்லை! தீபாவளிக்கு குறைந்தபட்சம் மூன்று விதமான இனிப்புகளாவது செய்வாள். அதனுடன் தேன்குழல், மிக்சர் என்று வீடே அமர்களப்படும்! இதுபோக முதல் நாள் இரவு குலாப்ஜாமூன் வேறு செய்து ஜீராவில் மிதக்க விடுவாள்!

அம்மாவுக்கு எப்போதுமே சிறிதளவு செய்தெல்லாம் பழக்கமே இல்லை! பத்து பதினைந்து நாட்களாவது குழந்தைகள் சாப்பிடட்டுமே என்று நினைத்து நிறைய தான் செய்வாள்! அதோடு உறவுகளுக்கும், நட்புகளுக்கும் கொடுத்து விடுவாள்! அம்மாவின் கைப்பக்குவத்தில் அத்தனையும் ஜோராக இருக்கும்!

பள்ளியிலிருந்து வந்ததும் அம்மா இன்னிக்கு என்னென்ன சாப்பிடத் தருவாள்? என்ற ஆவலுடன் தான் காத்திருப்பாள் இவள்! ஏனென்றால் வீட்டில் தான் நிறைய பட்சணங்கள் இருக்கிறதே என்பதற்காக எல்லாவற்றையும் சாப்பிட முடியாது! ஒவ்வொரு நாளும் ஏதோ ஒரு இனிப்புடன் கொஞ்சமாக காரமும் சேர்த்து அம்மா தருவது தான்! 'எனக்கு இன்னும் ஒண்ணு வேணும்' என்று கேட்டாலும் கிடைக்காது!



மலரும் நினைவுகளை அசை போட்ட படியே இப்போதுள்ள புதிய சூழலிலும் ஒவ்வொரு பண்டிகையிலும் அம்மா பின்பற்றிய வழக்கத்தை நினைத்துக் கொண்டு செய்வாள்! அம்மாவைப் போல் இல்லையென்றாலும் அவளது மகளாக நான் பாதியாவது செய்ய வேண்டாமா!! இதோ அடுத்து என் மகளும் இருக்கிறாளே! அவளுக்கு நம் பாரம்பரியம் புரிய வேண்டாமா!

அம்மா பண்ணும் போதெல்லாம் குட்டிப்பெண்ணாக கூட இருந்து பார்த்துக் கொண்டிருப்பேன்! அவளுக்கு சிறு சிறு உதவிகளும் செய்து தருவேன்! இப்படித் தான் எனக்கு ஆர்வம் உண்டானது! அப்படி மகளுக்கும் ஆர்வம் ஏற்படணும்! என்று பலவாறு சிந்திப்பாள்! மகளாக இருந்த காலங்கள் மறைந்து விட அம்மாவாக மகளை நல்லவிதமாக வளர்க்கும் பொறுப்பு அவளுக்கு இருந்தது!

வாழ்வின் ஓட்டத்தில் இவளுக்கு கிடைத்த பலவித அனுபவங்களால் பக்குவம் ஏற்பட்டதைப் போல் அவளுக்கும் பொறுப்பும், பக்குவமும் ஏற்படணும்! சமுதாயத்தில் நல்லதொரு பெண்மணியாக திகழணும்! இனி! இவளின் வாழ்க்கையில் மகளே பெரும்பங்கு வகிக்கப் போகிறாள்!

நட்புடன்

ஆதி வெங்கட்
திருவரங்கம்.

13 கருத்துகள்:

  1. இது மாதிரி சம்பிரதாயங்கள் பாரம்பர்யமாக தொடரவேண்டும் என்னும் எண்ணம் எனக்கும் உண்டு.  இளைய தலைமுறை அதில் அக்கறை காட்ட வேண்டும்.  அதற்கு நாம் அவர்களையும் அனைத்திலும் ஈடுபடுத்திக்கொண்டு வழக்கங்களை செய்ய வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் சார். பாரம்பரியம் அடுத்தடுத்த தலைமுறைகளுக்கும் தொடரணும்!

      தங்களின் வருகைக்கும், கருத்துகளுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம் சார்.

      நீக்கு
  2. பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும், கருத்துகளுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜு சார்.

      நீக்கு
  3. என்றும் நம் பாரம்பரிய வழக்கம் மறக்கக்கூடாது....
    தொடரட்டும்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை தான் சார்.

      தங்களின் வருகைக்கும், கருத்துகளுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி சார்.

      நீக்கு
  4. அடுத்த தலைமுறையையும் ஈடுபடுத்துவதே சிறப்பு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நிச்சயமாக. அப்போது தான் பாரம்பரியமும் தொடரும்.

      தங்களின் வருகைக்கும், கருத்துகளுக்கும் மிக்க நன்றி அரவிந்த் சார்.

      நீக்கு
  5. பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும், கருத்துகளுக்கும் மிக்க நன்றி தனபாலன் சகோ.

      நீக்கு
  6. பண்டிகை கொண்டாட்டங்களில் மெனக்கெடுதல் என்பது மிகவும் முக்கியமானது!//

    உண்மை.

    மலரும் நினைவுகளும் தீபாவளி பலகாரங்களும் அருமை.
    முன்பு எல்லாம் அப்படித்தான் அக்கம் பக்கம் வீடுகளுக்கு பகிர்ந்தது போக மீதி பலகாரங்களை மாலை பள்ளி விட்டு வந்த பின் தருவார்கள்.
    இப்போது மாதிரி நினைத்த நேரம் எல்லாம் பலகாரங்களை சுவைக்க முடியாது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் அம்மா. அதனால் தான் சாப்பிட ஆர்வமும் இருந்தது! இப்போது ஏனோ அப்படியல்ல!

      தங்களின் வருகைக்கும், கருத்துகளுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....