புதன், 17 ஏப்ரல், 2024

கதம்பம் - அவல் வடாம் - வார சந்தை - வெயில் - சட்னி - சாக்லேட் புட்டிங் - பிடி கொழுக்கட்டை


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நன்நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.  


இதற்கு முன்னர் வெளியிட்ட குரோதி வருடம் - வாழ்த்துகள் பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கு மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 




*******


அவல் வடாம் - 6 ஏப்ரல் 2024:




வெயிலில் மிகவும்  கடுப்பாகத் தான்  இருக்கிறது! அடுக்களை பக்கமே போக வேண்டாம் போல உள்ளது!  இணையத்தில் தேடியதில் அடுப்பு பக்கமே போகாமல் ஒரு வடாம் தயார் செய்யலாம் என்று குறிப்பிட்டிருந்தது எனைக் கவர்ந்தது! பரிசோதனை முயற்சியாக இன்று அதை செய்து பார்த்துள்ளேன்! 


கடைகளில் பேப்பர் போன்ற மெலிதான அவல் கிடைக்கும் இல்லையா! அதை நீரில் நனைத்து முற்றிலும் வடித்து விட்டு அதனுடன் உப்பு, காரம், பெருங்காயம் சேர்த்து கலந்து முறுக்கு அச்சில் பிழிந்து விடலாம்! ஓரிரு நாளில் காய்ந்து விடும்! பொரித்து பார்க்க மட்டும் அடுப்பு பக்கம் போனால் போதும்..🙂


பொதுவாக இந்த மெலிதான அவலை எதற்காக  வாங்குவார்கள் என்று தெரியலை! ஒரு பாத்திரத்தில் போட்டு நீரில் நனைத்ததும் தண்ணீர் முழுவதையும் இழுத்துக் கொண்டு மாவாகி விட்டது! நீரை வடித்தும் ஒரு துண்டில் போட்டு வைத்தும் கூட மாவு தளர தான் இருந்தது! அதனுடன் பச்சை மிளகாய் அரைத்து சேர்க்கும் போது இன்னும் தளர்ந்து தான் போனது! 


அதனால் இந்த அவலை நீரில் நனைக்காமல் லேசாக தண்ணீர் தெளித்து பிசறி வைத்தாலே போதும் என்பது புரிந்தது! எனக்கு கிடைத்த இந்த அனுபவத்தை உங்களிடமும் பகிர்ந்து கொள்கிறேன். தேவைப்படுபவர்களுக்கு உபயோகித்துக் கொள்ள இந்த டிப்ஸ்  உதவலாம்!


*******


வார சந்தை - 8 ஏப்ரல் 2024:



ஏங்க! வாங்க!


ஏங்க! வாங்க!


அள்ளிப் போடுங்க! 


ஆக்கிச் சாப்பிடுங்க!


மாங்கா கூப்பிடுது!


கேரட் சிரிக்குது!


இன்றைய வாரச்சந்தையில் வியாபாரி ஒருவர் சத்தமாக இப்படிச் சொல்லிக் கொண்டிருந்தார்..🙂 எல்லோரும் புன்னகையுடன் அவரிடம் வாங்கிக் கொண்டிருந்தனர்! 


வியாபார நுணுக்கம் என்பது இதுதானே! சலிப்பும், புலம்பலும், எரிச்சலுமாய் இருப்போரிடையே இவர் வித்தியாசமாகத் தெரிந்தார்! எதையும் நேர்மறையாய் சிந்தித்து செயல்படுகிறார்!


மாங்கா கூப்பிடுது!

கேரட் சிரிக்குது!


நல்லா இருக்கில்ல! மகளும் நானும் மாற்றி மாற்றிச் சொல்லிக் கொண்டே அவரைக் கடந்து சென்றோம்!


வழியெங்கும் ஆங்காங்கே வீடுகளில் முருங்கை..… பூவும் காய்களுமாய் கொத்து கொத்தாய் காய்த்து தொங்கிக் கொண்டிருக்கிறது! இது தான் சீசன் போல! இங்கு யாரும் பறிப்பதாக தெரியவில்லை!


வழியில் ஒரு வீட்டின் வாசலில் வெள்ளை நிற போகன்வில்லா பூக்கள் குடை போல பூத்துக் குலுங்கி அந்த வீட்டு வாசல்கேட்டையே மறைத்துக் கொண்டிருக்கிறது! பார்க்கவே ரம்மியமாய் மனதுக்கு இதமாக இருந்தது!


இங்கு வீற்றிருக்கும் காவல் தெய்வத்திற்கு கோடை விழா! இளைஞர் பட்டாளம் கூட்டாக சேர்ந்து கோவிலைச் சுற்றிலும் அருகே இருக்கும் மரங்களில் கூட  மின்விளக்குகளால் அலங்கரித்திருந்தனர்!


நாளைய சமுதாயம் இத்தனை அர்ப்பணிப்புடன் வேலை செய்திருக்கிறார்களே என்று நினைத்த போது மகிழ்வாக இருந்தது! ஆனால் அங்கு ஒலித்த இல்லை இல்லை அலறிய பாடல்களோ முற்றிலும் முரண்பட்டு இருந்தது!!


ஒய்! திஸ் கொ..லை..வெ..றி கொ///லை//வெ//றி/ டி....!


ஊதா கலரு ரிப்பன்! உனக்கு யாரு அப்பன்!


*******


வெயில்  - 10 ஏப்ரல் 2024:


வெயிலின் தாக்கம் அதிகம் தான் உள்ளது! வீட்டின் உள்ளேயே ஏதேனும் செய்து கொண்டு என்னுடைய பொழுதுகள் கடந்து செல்கின்றன! நிச்சயமாக மழை ஒன்று வந்தால் தான் நன்றாக இருக்கும்! அன்றாடம் அதற்கான பிரார்த்தனை மட்டும் தான் என்னிடத்தில்! 


ஆங்காங்கே தண்ணீர் பஞ்சமும் தலைதூக்கத் துவங்கியுள்ளது! திருச்சி மாநகராட்சியிலேயே இரு வேளை வந்த தண்ணீர் இப்போது ஒரு வேளை மட்டும் தான் என குறைக்கப்பட்டுள்ளது! முடிந்தவரை தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துவது எப்போதுமே நல்லது! இங்கு திருவரங்கத்தின் வீதிகளில் இரு வேளையிலும் வாசல் தெளிக்கவே தண்ணீரை நிறைய செலவழிப்பதாக எனக்கு எப்போதுமே  தோன்றும்!


*******


பீர்க்கங்காய் தோல் சட்னி - 10 ஏப்ரல் 2024:



பீர்க்கங்காய் நமது உடலின் மூட்டுகளுக்குத் தேவையான வலிமையைத் தருகிறது! மூட்டுவலி உள்ளவர்கள் இந்தக் காயை அடிக்கடி சேர்த்துக் கொள்ளலாம்! கடந்த ஒரு வருட காலமாக Osteo ortheritis பிரச்சனையினால் knee support உதவியினால் தான் என்னால் நடக்க முடிகிறது! நடுவில் சுவற்றை பிடித்துக் கொண்டெல்லாம் தான்  நடந்தேன்! இப்போது பரவாயில்லை!


பீர்க்கங்காய் வாங்கும் போது அதன் தோலை வீணடிக்காமல் தோலில் துவையல் ஒருநாளும், வெங்காயம் தக்காளியுடன் சேர்த்து வதக்கி சட்னி ஒருநாளுமாக செய்து விடுகிறேன்! இட்லி, தோசை, சப்பாத்தி, ப்ரெட் என்றும் எல்லாவற்றுக்கும் ஒத்துப் போகிறது! வாய்ப்புக் கிடைத்தால் செய்து பாருங்களேன்!


*******


சாக்லேட் புட்டிங் - 10 ஏப்ரல் 2024:



வீணாக தூக்கிப் போடும் ப்ரெட்டின் அடிபக்கத்தையும், ஓரங்களையும்  எடுத்து தூளாக்கி அதனுடன் கோக்கோ பவுடரும், பாலும் சேர்த்து செய்த சாக்லேட் புட்டிங்! நன்றாகவே இருந்தது!


*******


அவல்+ரவை சேர்த்த பிடி கொழுக்கட்டை - 10 ஏப்ரல் 2024:



பொடித்த அவலுடன் ரவை சேர்த்து தாளிப்பு கொடுத்து செய்த காலை உணவு! அவலில் முன்பு பிடி கொழக்கட்டை செய்திருக்கிறேன்! 


இந்த வருடம் இதுவரை அரிசியில் இலைவடாமும், அவல் மற்றும் ஜவ்வரிசி வடாமும் செய்திருக்கிறேன்! நேற்று ரவையிலும் இலைவடாம் இணையத்தை பார்த்து செய்திருக்கிறேன்..🙂


பரிசோதனைகள் இல்லாமல் நானில்லை..🙂


*******



இன்றைய கதம்பம் பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


ஆதி வெங்கட்

13 கருத்துகள்:

  1. உங்கள் சமையல் பரிசோதனைகள் சுவாரஸ்யமாய் இருக்கின்றன.  அவல் போட்டுச் செய்திருக்கும் இரண்டு ஐட்டங்களையும் பாஸிடம் சொல்கிறேன்.  அடிக்கும் வெயிலிலும் உற்சாகமாய்  இருக்கும் அந்த காய்கறிக் கடைக்காரர் வாழ்க...   அடிக்கும் வெயில் அயர்ச்சியைத் தருகிறது.    எப்போது வருமோ இந்த வருட கோடை மழை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் சார். மழை நன்கு அடித்து பெய்ந்திட வேண்டும். புழுக்கமும் உஷ்ணமும் அப்போது தான் குறையும்! ஆனால்! இதெல்லாம் ஒரு வெயிலே இல்லை என்று சொல்வோரும் இங்கு உண்டு!

      தங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம் சார்.

      நீக்கு
  2. /// பொதுவாக இந்த மெலிதான அவலை எதற்காக வாங்குவார்கள் என்று தெரியலை!... ///

    நீங்கள் உலகம் தெரியாமல் இருக்கின்றீர்கள்...

    இடித்த அவல் கேட்டு வாங்க வேண்டும்...

    இந்த மெல்லிய அவல் தான் இன்றைய அவல்!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் சார்! உலகம் தான் தெரிந்திருக்கவில்லை! இடித்த அவல் தான் எப்போதுமே வாங்குவேன்! உப்புமா, பிடி கொழக்கட்டை, தோசை என்று செய்திடுவேன்.

      இந்த மெல்லிய அவல் தான் இன்றைய அவல் என்றால் இதை எதற்காக வாங்குவார்கள் என்று தான் தெரியலையே சார்!

      அதை தெரிந்து கொள்வதற்காக தான் புலம்பியிருந்தேன்...:)

      தங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜு சார்.

      நீக்கு
  3. பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜு சார்.

      நீக்கு
  4. பதிவில் அனைத்தும் அருமை ஆதி.
    நானும் அவல் வடாம் செய்வேன், வெயில் வீணாக போகாமல் நிறைய வற்றல், வடாம்களை வருடத்திற்கு செய்து வைத்து கொள்வேன். இப்போது பிள்ளைகளுக்கு வற்றல் செய்பவர்களிடம் வாங்கி வந்து இருக்கிறேன். அது மனதுக்கு கஷ்டமாய் இருக்கிறது. பழைய சிறு வயது பெண்ணா செய்தது போதும் என்று பிள்ளைகள் சொல்கிறார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நாமே செய்து கொண்டதை விடுத்து பிறரிடம் வாங்குவது என்பது வருத்தம் தான்! ஆனால் நம் உடலையும் கவனித்துக் கொள்ள வேண்டுமே!

      தங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.

      நீக்கு
  5. பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.

      நீக்கு
  6. பேப்பர் அவல் என இதனைச் சொல்லுவேன். இதில் ரோஸ் எசென்ஸ் (சிவப்பாக சீனிப் பாகுடன் கூடியது) விட்டு, ஆறின பாலைச் சேர்த்து உடனே சாப்பிடுவேன் ஒரு வேளை உணவாக. எனக்கு மிகவும் பிடித்தது. வேறு எதற்கும் உபயோகிக்க முடியும் எனத் தோன்றியதில்லை சட்னு கரைவதால். வடகம் நன்று.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மெஷின் அவல் என்றும் சொல்வார்கள். உண்மை தான். சட்டுனு கரைந்து மாவாகி விடுகிறதே என்று தான் யோசிக்கிறேன். இது வேறு எதற்கும் பயன்படுத்த முடியாது!

      தங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லை சார்.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....