சனி, 8 பிப்ரவரி, 2025

காஃபி வித் கிட்டு - 213 - பற்றுவெளி - பிள்ளையார் காதல் - Chittara Art - அழகு - மரணம் - மெடிக்கல் இன்சூரன்ஸ் - கொலு


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


இதற்கு முன்னர் வெளியிட்ட முப்பது நிமிடத் தவம் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



******


இந்த வாரத்தின் சிறுகதை :  பற்றுவெளி


சொல்வனம் இதழில் படித்த கதை ஒன்று இந்த வாரத்தின் சிறுகதையாக… கதையிலிருந்து சில வரிகள் உங்கள் பார்வைக்கு.


அய்யனின் காணாமல் போகும் இந்த காரியம் வாடிக்கையாக நடந்துக்கொண்டே இருந்தது. ஒருநிலையில்  அய்யன் இப்படி போவதும் வருவதுமாக இருப்பதை வீட்டில் யாரும் பொருட்படுத்தாத சூழல் ஏற்பட்டது.  தேவானைக்கு மட்டும்  மனம் கேட்கவில்லை.  அய்யன் காணாமல் போவதை தடுக்க வேண்டும் என நினைத்தாள். செல்வம் மச்சானிடமும் சின்ன மச்சானிடமும் பேசினாள். அன்றிரவு அய்யன் அசந்து உறங்கும் நடுச்சாமத்தில் காட்டுச்சாலைக்குப் போனார்கள்.  அய்யனைக் கயிற்றுக் கட்டிலோடு வம்படியாகத்  தூக்கி வந்து வீட்டின் வலப்புறத்து  பழைய வீட்டில் தங்க வைத்து விட்டனர்.  


இங்கே அய்யன் எந்நேரமும் வேப்பமரத்தை பார்த்துக்கொண்டு  கயித்துக்கட்டிலிலேயே முடங்கியவர்போல் உட்கார்ந்திருந்தார்.  இருப்பினும் கொஞ்சம்  அசந்தாலும்  தடுமாறியபடி மூங்கில் தடியூன்றி  வயக்காட்டுக்கு கிளம்பிவிட முயன்றார். எப்பொழுதும் வீட்டில்  ஒருத்தர் அய்யனைக் கண்காணித்துக்கொண்டே இருந்தனர். 


என் மூத்த  மருமகள் ஜோதியையும் சும்மா சொல்லக்கூடாது. இந்த வீட்டுக்கு வாழ்க்கைப்பட்டு வந்ததிலிருந்து அய்யனை  அரும்பாடுபட்டு கவனித்துக் கொண்டாள். ஊரும் ஒரம்பரைச்சனங்களும் மெச்சினர்.


முழுக் கதையும் படிக்க சுட்டி கீழே…


பற்றுவெளி – சொல்வனம் | இதழ் 335 | 26 ஜன 2025


******

 

பழைய நினைப்புடா பேராண்டி : பிள்ளையார் காதல்!


2017-ஆம் ஆண்டு இதே நாளில் வெளியிட்ட பதிவு - பிள்ளையார் காதல்! - அந்தப் பதிவிலிருந்து சில வரிகள் இங்கே.  


எனது பெங்காலி நண்பர் ஒருவர் இருக்கிறார். அவருக்கு பிள்ளையார் மீது அப்படி ஒரு காதல்... அதுவும் தீராக் காதல்! அதனாலேயே பிள்ளையார் பொம்மைகள் சேகரிப்பதை ஒரு கடமையாகவே செய்து வருகிறார். எங்கே வித்தியாசமாக பிள்ளையார் பொம்மையினைப் பார்த்தாலும் வாங்கிவிடுவார்.  அவருக்காகவே எருக்கம் வேரில் செய்த பிள்ளையார், நவதானியங்களில் செய்த பிள்ளையார் என திருச்சியிலிருந்து வாங்கிக் கொண்டு வந்து கொடுத்திருக்கேன். இப்போது ஒரு விநாயகி பொம்மை வேண்டும் என கேட்டு இருக்கிறார். தமிழகத்தில் எங்கே கிடைக்கும் என்று பார்க்க வேண்டும்!


சென்ற வருடத்தில் சூரஜ்குண்ட் மேளாவில் பார்த்த பல பிள்ளையார் பொம்மைகளை ஒரு ஞாயிறில் புகைப்படப் பகிர்வாக  ”பிள்ளையார்பட்டி ஹீரோ” என்று பதிவு செய்திருந்தேன். சமீபத்தில் எனது மகள் வரைந்த பிள்ளையார் ஓவியங்களையும் “மகளின் ஓவியங்கள் – Saturday Jolly Corner” பகிர்ந்து கொண்டது உங்களுக்கு நினைவிருக்கலாம்.  இந்த பிள்ளையாரை யாருக்குத் தான் பிடிக்காது! குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் ரசிக்கும் ஒருவராயிற்றே – மஞ்சள் தூள் முதல் தானியங்கள் வரை எதை வைத்து வேண்டுமானாலும் பிள்ளையார் செய்து விடுகிறார்கள்.


நண்பருக்கு பிள்ளையார் பொம்மைகள் வாங்கி சேகரிப்பது பழக்கம் என்றால், எனது வழக்கம் எங்கே வெளியே சென்றாலும், பிள்ளையார் பொம்மைகளை படம் எடுப்பது.


மேலே உள்ள சுட்டி வழி முழு பதிவையும் படித்து ரசிக்கலாமே - இது வரை நீங்கள் படித்திருக்காவிட்டால்!  


******


இந்த வாரத்தின் ஓவியம் : Chittara Art


கர்னாடக மாநிலத்தில் பாரம்பரிய ஓவிய முறைகளில் ஒன்று  Chittara Art. அதில் மகள் வரைந்த ஓவியம் ஒன்று உங்கள் பார்வைக்கு… 



******


இந்த வாரத்தின் நிழற்படம் : அழகு


அலுவலக வளாகத்தில் எடுத்த ஒரு நிழற்படம உங்கள் பார்வைக்கு! “நான் அழகா இருக்கேன்ல” என்று கேட்கிறதோ இந்தக் குரங்கு தன் தோழனிடம்?



******


இந்த வாரத்தின் ஜென் கதை :  மரணம்


ஜென் கதைகள், கவிதைகள் என தேடிப்படிப்பதுண்டு. அப்படி படித்த ஒரு ஜென் கதை மரணம் குறித்தது. உங்களுக்கும் பிடிக்கலாம். படித்துப் பாருங்களேன்.


ஜென் ஞானி ஒருவரின் மனைவி இறந்து விட்டார். துக்கம் விசாரிக்க ஊரே திரண்டு வந்திருந்தது.எல்லோர் முகத்திலும் வருத்தம், கண்ணீர்.


ஆனால் ஞானியோ கைகளால் தாளம் போட்டபடி பாடிக் கொண்டிருந்தார், சர்வசாதாரணமாக! வந்தவர்களுக்கு அதிர்ச்சி. ஒருவன் துணிந்து கேட்டான், ”குருவே, நீங்களே இப்படி செய்யலாமா? என்ன இருந்தாலும் இவ்வளவு காலம் உங்களுடன் வாழ்ந்த உங்கள் மனைவி இறந்திருக்கும்போது, நீங்கள் கவலையின்றி பாடிக் கொண்டிருக்கிறீர்களே?” ஞானி சொன்னார், ”பிறப்பில் சிரிக்கவோ, இறப்பில் அழுவதற்கோ என்ன இருக்கிறது? பிறப்பும் இறப்பும் நம் கையில் இல்லை. என் மனைவிக்கு முன்பு உடலோ, உயிரோ இல்லை.பிறகு உயிரும் உடலும் வந்தன. இப்போது இரண்டும் போய்விட்டன. இடையில் வந்தவை இடையில் போயின. இதில் வருத்தப்படுவதற்கு என்ன இருக்கிறது?”


இப்படியான நிலை அனைவருக்கும் சாத்தியமல்ல என்பதையும் ஒப்புக்கொள்ள வேண்டும்.


******


இந்த வாரத்தின் பகிர்வு :  மெடிக்கல் இன்சூரன்ஸ்


மெடிக்கல் இன்சூரன்ஸ் குறித்த நிறைய எண்ணங்கள், கருத்துக்கள், விவாதங்கள் உண்டு. தேவையா இல்லையா என்பதை விட போதுமா போதாதா என்பதற்கான விவாதங்களும் நிறையவே உண்டு.  இதனை மிகவும் எளிதாக விளக்கும் படம் ஒன்றை சமீபத்தில் பார்த்தேன். அந்தப் படம் கீழே!



******


இந்த நாளின் ரசித்த கொலு :  இப்படியும் ஒரு கொலு…


கொலு போன்ற ஒரு விஷயம் இது.  எப்படி அழகாக ஒரு கொலு வைத்திருக்கிறார் பாருங்கள் - விற்பனைக்கு என்றாலும், இப்படியும் சிந்திக்க வேண்டுமே!

 

******


இந்த வாரத்தின் காஃபி வித் கிட்டு பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டம் வாயிலாக சொல்லுங்களேன்.  மீண்டும் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


வெங்கட் நாகராஜ்

புது தில்லி

8 ஃபிப்ரவரி 2025


11 கருத்துகள்:

  1. லோகமாதேவி நடை ஜோர்.  எதிர்பார்த்த முடிவு.  அய்யன் அசத்தி விட்டார்.

    பிள்ளையார் காதலை மறுபடி பார்த்தேன்.

    ஓவியம் ஓகே.  குரங்குசேட்டை ரசனை.

    ஜென் கதை மௌனம்.  இன்ஷியூரன்ஸ் நிதர்சனம்.  

    கொலு சூப்பர்.  மொத்தத்தில் கதம்பம் ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு அருமை.
      பற்றுவெளி கதை நன்றாக இருக்கிறது. அய்யன் பிழைத்து விடுவார் என்று நினைத்தேன், அது போலவே அவர் அமர்ந்து இருக்கிறார்.
      நண்பருக்கு விநாயகி பொம்மை கிடைக்கட்டும்.
      ரோஷ்ணியின் ஓவியம் அழகு., ஜென் கதையில் சொல்வது போல இருப்பது கடினம்.
      கொலு நன்றாக இருக்கிறது

      நீக்கு
    2. குரங்கு கண்ணாடி பார்த்து பேசி கொள்வது அருமை.

      நீக்கு
  2. சுட்டி வழி படித்த சிறுகதை அருமை.
    ஓவியம் 👍
    இன்சூரன்ஸ் படம் ஏற்கனவே youtube ல் பார்த்தது தான். இருந்தாலும் மீண்டும் ஒரு சிரிப்பும் சிந்தனையும்.
    மொத்தத்தில் காஃபி வித் கிட்டு அருமை👏👍

    பதிலளிநீக்கு
  3. சுட்டி வழி படித்த சிறுகதை அருமை.
    ரோஷ்னியின் ஓவியம் அருமை.
    இன்சூரன்ஸ் படம் ஏற்கனவே youtube ல் பார்த்தது என்றாலும்கூட மறுபடியும் ஒரு சிரிப்பு மற்றும் சிந்தனை.
    மொத்தத்தில் காஃபி வித் கிட்டு அருமை 👏👍

    பதிலளிநீக்கு
  4. சுட்டி வழி படித்த சிறுகதை அருமை.
    ரோஷ்னியின் ஓவியம் அருமை.
    இன்சூரன்ஸ் படம் ஏற்கனவே youtube ல் பார்த்தது என்றாலும்கூட மறுபடியும் ஒரு சிரிப்பு மற்றும் சிந்தனை.
    மொத்தத்தில் காஃபி வித் கிட்டு அருமை 👏👍

    பதிலளிநீக்கு
  5. வாசகம் நன்று.

    கதை நல்லாருக்கு. எழுதிய விதம் ஒரு சில இடங்களில் டக்கென்று புரியவில்லை என்றாலும் நல்லா எழுதியிருக்காங்க. முடிவு யூகிக்க முடிந்தது.

    கீதா

    பதிலளிநீக்கு
  6. பிள்ளையார் ஒரு versatile எனலாமோ? ஆமாம் எதை வைத்து வேண்டுமானாலும் வரையலாம் செய்யலாம்....தோஸ்த் ரீதியில்தான் வித விதமான வடிவங்களில் செய்ய முடிகிறதே! நானும் பிள்ளையாரை எங்கு பார்த்தாலும் ஒரு க்ளிக் அது போல ஆஞ்சுவையும்!!!

    அட! நான் இருக்கும் மாநிலத்தின் பாரம்பரிய ஓவியம் - ரோஷினிக்கு வாழ்த்துகள் நல்லாருக்கு.

    குரங்குகள் - சிரித்துவிட்டேன். பெட்ரோல் டாங்கை திறக்க முயற்சி?

    ஜென் தத்துவம் - வாழ்க்கையே ரயில்பயணம் போன்ற ஒன்று என்றுதானே சொல்வதுண்டு!- நானும் வாசிக்கக் கிடைத்தால் வாசித்துவிடுவதுண்டு.

    கீதா

    பதிலளிநீக்கு
  7. மெடிக்கல் இன்சுரன்ஸ் படம் ..... இதில்னிறைய உண்டு

    கொலு வித்தியாசமான ஒன்று!! நல்லாருக்கு

    கீதா

    பதிலளிநீக்கு
  8. வணக்கம் சகோதரரே

    இந்த வார காஃபி வித் கிட்டு அருமையாக உள்ளது. இன்றைய வாசகமும் அருமை.

    சொல்வனம் கதை பற்றுவெளி முழுவதும் படித்து ரசித்தேன். இத்தனை ஏற்பாடுகள் செய்தும், அய்யன் கடைசியில் உயிரோடு இருப்பார் என்றுதான் நானும் நினைத்தேன். ஒரு தமிழ் படத்தை நினைவுபடுத்தியது.

    பிள்ளையார் காதலும் படித்து வந்தேன். பிள்ளையார் என் இஷ்ட தெய்வம். பல பிள்ளையார்களை வணங்கி கொண்டேன்.

    தங்கள் மகள் வரைந்த ஓவியம் அருமை. மகளுக்கு வாழ்த்துக்கள்.

    ஜென் கதை சிறப்பு. நம்மால் இப்படி இருக்க முடியுமா என்பது சந்தேகம்தான்.

    குரங்குகள் அழகு போட்டிக்கு தயார் செய்து கொள்வது போல கண்ணாடி பார்த்துக் கொள்வது அருமையாக உள்ளது.

    கொலுவும் அருமை. எல்லா பகுதியையும் ரசித்துப் படித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  9. சிறுகதை, ரோஷிணியின் ஓவியம் அருமை.

    விதம் விதமான பிள்ளையார் சிலைகளை வாங்கும் நண்பர். நீங்கள் உதவுவது நல்ல பண்பு.

    கொலு வைத்து வியாபாரம் புதுமையாக இருக்கிறது. நன்றாகவும் உள்ளது.

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....