அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
இதற்கு முன்னர் வெளியிட்ட கதம்பம் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
******
பாம்பின் சிகரம் பயணத் தொடரின் முந்தைய பகுதிகளை படித்து ரசித்திருப்பீர்கள் என நினைக்கிறேன். தொடரின் முந்தைய பகுதிகளை இது வரை படிக்கவில்லை என்றால், கீழே உள்ள சுட்டி வழி படிக்கலாம்.
இத்தொடரின் சென்ற பகுதி வரை இந்தப் பயணத்தின் முதல் நாள் அனுபவங்களை எழுதி இருந்தேன். இந்தப் பகுதியிலிருந்து இரண்டாம் நாள் அனுபவங்கள் எழுத இருக்கிறேன். முதல் நாள் விரைவில் தூங்க நினைத்து எங்கள் கொட்டகைகளில் இருந்தாலும், அங்கே வந்திருந்த மற்ற பயணிகள் - பெரும்பாலும் இளைஞர்(ஞி)கள் என்பதால் அவர்களுக்குத் தெரிந்த/பிடித்த விதத்தில் அவர்களது பயணத்தினை அனுபவித்துக் கொண்டிருந்தார்கள். ஆண் பெண் வித்தியாசம் இல்லாமல் சிலர் உள்ளூர் சரக்கு (நாட்டுச் சரக்கு) எங்கே கிடைக்கும் எனக் கேட்டு வழிகாட்டிகள் மூலம் அதனை வாங்கி அருந்திக் கொண்டிருந்தார்கள். அதன் தாக்கம் அவர்களை சத்தமாக பாட்டுக் கேட்டுக் கொண்டு நடனம் ஆட வைத்தது. எங்களுடன் வந்த இளைஞரான ஹரிஷ் அங்கே நடந்த விஷயங்களை கவனித்து எங்களுக்கு அடுத்த நாள் சொன்னார். அவரும் அந்தக் கொண்டாட்டங்களில் கலந்து கொள்ளாமல் ஒரு பார்வையாளராக அமர்ந்திருந்தார். அவர்களது கொண்டாட்டங்கள் அந்த அமைதியான சூழலில் அதிகமாகவே சத்தமாக இருக்க எங்களால் சரியாக தூங்க முடியவில்லை. ஆனாலும் அவர்கள் அவர்களுக்குப் பிடித்த விதத்தில் இருக்கட்டும் என நாங்கள் உறக்கத்தைத் தழுவினோம்.
இரவு ஒரு மணிக்கு எழுந்திருந்து வேலைகளை முடித்துக் கொண்டு நாங்கள் அன்றைய மலையேற்றத்திற்குத் தயாராக ஆரம்பித்தோம். கொஞ்சம் கொஞ்சமாக மற்ற மலையேற்றக் குழுவினர் அனைவரும் தயாராக ஆரம்பித்தார்கள். நாங்கள் எங்கள் வேலைகளை முடித்துக் கொண்டு, அதிகாலையில் இருக்கும் குளிரிலிருந்து எங்களை காத்துக் கொள்ளத் தேவையான உடைகளுடன் தயாராகிவிட்டோம். எங்கள் வழிகாட்டியான கௌரவ் மற்ற வழிகாட்டிகளுடன் சேர்ந்து காலை உணவாக போஹா என அழைக்கப்படும் அவல் கொண்டு சிற்றுண்டி தயாரித்துக் கொண்டிருந்தார்கள். அவரை அழைத்து, நாங்கள் தயார் என்று சொல்ல, அவரும் தயாராக இருப்பதாகச் சொன்னார். கொஞ்சமாக அவல் உப்புமாவை உண்டு, தேநீர் அருந்தி எங்கள் பயணத்தினை தொடங்க இருந்தோம். அந்த இரவில் உணவு உண்பதற்கு மனதில்லை என்றாலும், கொஞ்சமாகவேனும் சாப்பிடவேண்டும் என்று சாப்பிட்டு விட்டு புறப்பட்டோம். இல்லையெனில் அந்த உணவையும் எடுத்துக் கொண்டு நடக்க வேண்டும்.
சாதாரணமாக மலையேற்றம் செய்வதென்பது கடினமான விஷயம். அதில் முதுகுச் சுமையுடன் பயணிக்க வேண்டும் என்றால் அது மிகவும் கடினமாக இருக்கும் என்பதை எங்களது முதல் நாள் மலையேற்றத்தில் அனுபவித்து இருந்தோம். ஒரு சிறு பை என்றால் கூட அதனை முதுகில் சுமந்து கொண்டு மலையேற்றம் செய்வதற்கு அதிக சக்தி தேவைப்படும். நமக்கு இப்படியான சிறு சுமையே அதிகமாக உடலை வருத்துகிறது. ஆனால் இங்கேயே வசிக்கும் நபர்கள் தங்களது தினசரித் தேவைகளுக்கு பல விஷயங்களை தினம் தினம் கிலோ கணக்கில் சுமந்து கொண்டு தான் மலையேறுகிறார்கள் எனப் பார்க்கும்போது அவர்களது உடலுறுதியும் உள்ளத்தின் உறுதியும் கண்டு வியபாகவே இருந்தது. சின்னச் சின்ன அளவில் இருக்கும் எடையைக் கூட நாம் சுமந்து செல்ல கஷ்டப்படும்போது அவர்கள் சர்வ சாதாரணமாக முழுவதும் நிரம்பிய சிலிண்டர்களைக் கூட மலையேற்றத்தின் போது சுமந்து செல்கிறார்கள். தேவையான தண்ணீர், கொஞ்சம் புளிப்பு மிட்டாய்கள் (நா உலராமல் இருக்க), என மிகக் குறைவான எடையுடன் நாங்கள் நடக்க ஆரம்பித்தோம்.
நாங்கள் தங்கியிருந்த இடத்திலிருந்து சில தப்படிகள் நடக்க வனத்துறையின் சார்பாக அமைந்திருக்கும் அலுவலகமும் நாக் டிப்பாவிற்கு உங்களை அழைக்கும் அலங்கார வளைவும் உங்களை வரவேற்கிறது. அதனருகிலேயே இரண்டு பாதைகள் இருப்பது தெரிகிறது. எங்கள் வழிகாட்டி இந்த அலங்கார வளைவு வரை சென்று காத்திருங்கள் நான் வந்து விடுகிறேன் என்று சொல்லி இருந்ததால் காத்திருந்தோம். முற்றிலும் வனப்பகுதி - அந்த இரவு நேரத்தில் வனப்பகுதியில் சிறு சிறு பாதைகள் (நடந்து நடந்து உண்டான பாதைகள்) - அதீதமான அமைதி என மிகவும் ரம்மியமாக இருந்தது அந்தச் சூழல். எங்கும் பேரமைதி… நாங்கள் பேசுவது அவ்வளவு துல்லியமாக அந்தச் சூழலில் கேட்டது. அப்படிப் பேசியது அந்த அமைதியைக் கெடுப்பதாகவும் பட்டது எனக்கு. கௌரவ் வந்து சேர்ந்ததும் எங்கள் மலையேற்றத்தினை தொடங்கினோம். இரவு நேரம் என்பதால் நிலவொளி மற்றும் நக்ஷத்திரங்களின் ஒளி மட்டுமே நமக்கு வழிகாட்டி. அது மட்டுமே போதாது என்பதால் எங்கள் கைகளில் டார்ச் லைட் வைத்து எங்கள் பாதையைப் பார்த்தபடி நடந்தோம்.
எங்கேயும் சப்தமில்லை. வனம் முழுவதும் அப்படி ஒரு அமைதி. அந்த அமைதியான சூழலில், அந்த இரவில் அப்படி நடந்து செல்வது ஒரு வித புது அனுபவம்! கிட்டத்தட்ட ஒன்பது கிலோ மீட்டர் நடக்க வேண்டும். இணையத்தில் ஒரு சில இடங்களில் 10.5 கிலோமீட்டர் என்றும் இருக்கிறது. சரியான அளவீடு எங்கேயும் இருப்பதில்லை. வளைந்து நெளிந்து செல்லும் பாதைகள் ஓரிரு இடங்களில் இருந்தாலும், பல இடங்களில் பாதைகள் இல்லை. பாறைகள் மீது ஏறி, இறங்கிச் செல்ல வேண்டியிருக்கிறது. இரவு நேரம் என்பதால் எங்கேயும் படங்கள் எடுக்க முடியாமல் நேரடியாக தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கிறோம். இரவு நேர வனப்பயணம் எனக்கு மிகவும் பிடித்த அனுபவமாக இருந்தது. எங்கேயும் மயான அமைதி. காற்றில் அசையும் இலைகளின் ஒலி கூட துல்லியமாக காதுகளில் ஒலிக்கிறது. பெரும்பாலான இடங்களில் எங்களுக்குள் கூட நாங்கள் பேசிக் கொள்ளவில்லை. இரவின் அமைதியை ரசித்தபடி நாங்கள் நடந்து கொண்டிருந்தோம். அது சிலருக்கு பிடிக்காமல் போனதோ என்னவோ, அந்த அமைதியைக் குலைக்கும் வேலைகளைச் செய்யத் தொடங்கினார்கள்.
எங்களுக்குப் பிறகு புறப்பட்ட இளைஞர்கள் தங்கள் கைகளில் Bluetooth Speaker-கள் வழி பாடல்களை சப்தமாக ஒலிக்க விட்டபடி நடந்து வந்தார்கள். அந்த வனத்தின் இரவு நேர அமைதியைக் குலைக்கும்படி அப்படிச் செல்வது சரியல்ல என்று அந்த இளைஞர்களுக்கு யார் புரியவைப்பது? உறங்கிக் கொண்டிருக்கும் வன விலங்குகள் கோபம் கொண்டால் அனைவருக்குமே பாதகமாக முடியும் என்பதை உணராத அறிவிலிகள். அப்படியே பாடல் கேட்டபடி நடக்கவேண்டும் என்றால் காதுகளில் ஒலிபெருக்கியை மாட்டிக்கொண்டு நடக்கலாமே! இப்படி ஒன்றிருவர் என்றால் பரவாயில்லை. பத்துப் பதினைந்து பேரைக் காண முடிந்தது. எங்கள் நண்பர் இந்தர்ஜீத் ஒரு இளைஞரிடம் அந்த ஒலியை நிறுத்தச் சொன்னார். ஆனால் எத்தனை பேருக்கு இப்படிச் சொல்லிக் கொண்டு இருக்கமுடியும். வேறு சில மலையேற்றப் பயணிகளும் சிலரிடம் சொன்னார்கள் என்றாலும் அந்த இடத்தினை விட்டு சற்றே தூரம் சென்றபிறகு தங்கள் ஒலிபெருக்கி மூலம் மீண்டும் பாடல் கேட்க ஆரம்பித்தார்கள். இயற்கையை ரசிக்க இவர்களுக்குத் தெரியவில்லை என்ற ஆதங்கம் தான் மிச்சம்.
தொடர்ந்து நடந்து கொண்டிருக்க அவ்வப்போது தண்ணீரும் தேவைப்பட்டது. ஆங்காங்கே நாங்கள் கொண்டு சென்ற புளிப்பு மிட்டாய்களும் நா உலராமல் இருக்க எங்களுக்குத் தேவையாகவும் உபயோகமாகவும் இருந்தது. இரவு இரண்டு மணியிலிருந்து நடக்க ஆரம்பித்தது. கிட்டத்தட்ட நான்கு, நான்கரை மணி நேரம் தொடர்ந்து நடந்திருப்போம். கொஞ்சம் கொஞ்சமாக பொழுது புலர ஆரம்பித்தது. வனப்பகுதியில் இருந்த மரங்களில் குடிகொண்டிருக்கும் பறவைகளின் விதம் விதமான குரல்கள் எங்கள் காதுகளுக்கு இனிமையாக, ஒரு வித இசை போல இருந்தது. அந்தப் பறவைகள் தங்களுக்குள் பேசிக் கொண்டிருக்கும், ”நம் அமைதியைக் குலைக்க வந்திருக்கும் இந்த மானிடப் பதர்கள் யார்” என்று எனக்குத் தொன்றியது. கொஞ்சம் கொஞ்சமாக வனத்தின் அழகு எங்களுக்குப் புலப்பட மனதில் மகிழ்ச்சியும் பேரானந்தமும் ஒரு சேர எங்களுக்குக் கிட்டியது. எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா என்று இறைவனிடம் சொல்லத் தோன்றியது. ”இந்த இன்பம் மட்டுமல்ல, இன்னும் உண்டு பார்ப்பதற்கு, நீ தயாராக இரு” என்று காதோரம் ஒலிப்பது போல இருந்தது. அப்படிப் பார்த்த காட்சிகள் என்ன, என்ன வித அனுபவம் கிடைத்தது என்பதையெல்லாம் தொடர்ந்து அடுத்த பதிவில் எழுதுகிறேன். பின் குறிப்பு: இரவு நேரத்தில் மலையேற்றம் என்பதால் இந்தப் பதிவில் படங்கள் இல்லை. நண்பர் ஹரிஷ் எடுத்த சில காணொளிகள் மட்டும் இணைத்திருக்கிறேன். அந்தக் காணொளிகள் வழி வனத்தின் அடர் இருட்டை நீங்கள் உணர்ந்து கொள்ள முடியும். அடுத்த பகுதி வெளியிடும் வரை பயணத்தில் தொடர்ந்து இணைந்திருங்கள் நண்பர்களே.
*******
இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…
நட்புடன்
வெங்கட் நாகராஜ்
புது தில்லி
20 ஃபிப்ரவரி 2025
ஆண் பெண் வித்தியாசம் இல்லாமல் சிலர் உள்ளூர் சரக்கு (நாட்டுச் சரக்கு) எங்கே கிடைக்கும் எனக் கேட்டு வழிகாட்டிகள் மூலம் அதனை வாங்கி அருந்திக் கொண்டிருந்தார்கள். //
பதிலளிநீக்குஎன்ன சொல்ல ஜி? கண்டிப்பாக அரசு நிறைய தடைகளைக் கொண்டு வர வேண்டும். இப்படியான பயணங்கள் அங்கு கோயில் இருந்தாலும் சரி இல்லைனாலும் சரி, இயற்கையே தெய்வீகம் தானே! அதை நாம் மதிக்க வேண்டும் இல்லையா.
நான் முன்பெல்லாம் பிரதானமந்திரி தளத்தில் தனிப்பட்ட ரீதியிலும் புகார்கள் குறைகளைப் பதியலாம். அப்படிப் பதிந்த போது, எனக்கு அந்த அலுவலகத்திலிருந்து அழைப்பு வந்தது. தெரியாத எண் என்றால் நான் எடுப்பது இல்லை என்பதால் எடுக்கவில்லை. ஆனால் மீண்டும் அழைப்பு வரவே என் கணவர் எடுத்தார். பிரதானமந்திரி அலுவகலத்திலிருந்து அழைப்பு, நீ ஏதேனும் குறை அங்கு பதிந்திருந்தாயா என்று கேட்டார் ஆமாம் என்றேன். அழைத்த பெண்மணியும், அதைச் சொன்னார். சொல்லி ஏதானும் நடவடிக்கை எடுக்கப்பட்டதா இப்ப எப்படி என்று கேட்டார். ஒரு நடவடிக்கையும் எடுத்ததாகத் தெரியவில்லை, எந்த ரிசல்டும் தெரியவில்லை என்று சொன்னேன். அவர் ஹிந்தியில்தான் பேசினார். நன்றி என்று சொல்லி வைத்துவிட்டார்.
அதன் பின் நான் எதுவும் பதிவதில்லை.
இப்ப இதைப் பதியலாமா என்று தோன்றத் தொடங்குகிறது.
கீதா
சுய ஒழுக்கம், பொது இட, சமூகப் பொறுப்பு, இயற்கையின் மீது நேசமும், மதிப்பும் மரியாதையும் வேண்டும்.
பதிலளிநீக்குஆமாம் மலையேற்றம் என்பது மிகவும் கடினமான விஷயம். அதுவும் முதுகுச் சுமையுடன். ஆனால் கையில் தூக்கிக் கொண்டு ஏறுவதை விட அது பரவாயில்லை. இதனை நான் பர்வதமலை ஏற்றத்தின் போது உணர்ந்திருக்கிறேன். இத்தனைக்கும் இப்போது நீங்கள் செய்வது போன்ற அத்தனைக் கடினமானதும் இல்லை. ஆனால் முதுகுப் பையில் தண்ணீர்க்குப்பி மட்டுமே இருந்தது. நாங்கள் மொத்தம் 15 பேர்.
ஆமாம் கண்டிப்பாக அங்கு வாழ்வபர்களுக்கு மன உடல் உறுதி கூடுதல்தான் ஜி. பெண்களும் கூட ஏறுவார்களே!
ஜி வனப்பாதை. வன விலங்குகள் வரும் வாய்ப்பு உண்டா?
அப்படி நள்ளிரவில், அமைதியில் நடந்து செல்வது புது அனுபவம் த்ரில்லிங்க் அனுபவமும் இல்லையா?
உறங்கிக் கொண்டிருக்கும் வன விலங்குகள் கோபம் கொண்டால் அனைவருக்குமே பாதகமாக முடியும் என்பதை உணராத அறிவிலிகள். //
அதே ஜி.
// ”நம் அமைதியைக் குலைக்க வந்திருக்கும் இந்த மானிடப் பதர்கள் யார்” //
யெஸ் நான் சொல்ல நினைத்தேன் மலையும் மரங்களும் விலங்குகளும் கூட நினைத்திருக்கும் என்று நீங்கள் சொல்லிவிடட்டீர்கள்.
காணொளிகள் பார்த்தேன் ஜி. அடர் இருட்டும் நடக்கும் சத்தமும் மட்டுமே!!
நாங்கள் சின்னாரில் மலையின் கொஞ்சம் உயரத்தில் இருக்கும் பழங்குடி மக்களின் குடிசையில் (வனத்துறையில் பதிந்து ஏற்பாடு செய்து கொள்ளலாம்) இரவு தங்கியிருந்த தும் அங்கிருந்து கீழே பள்ளத்தாக்கில் விலங்குகள் யானைகள் காட்டைக் கடந்ததும் அதன் பின் மறுநாள் ஆற்றை ஒட்டி நடந்து சென்று மர வீட்டில் ஏறியதும் இரவு ஏணியை எடுத்து வைத்துவிடுகிறார்கள். கதவைத் திறக்காதீர்கள் என்றும் சொல்லியிருந்தார்கள் மறுநாள் அங்கே மரவீட்டின் கீழே ஒடிய ஆற்றில் குளித்து வன வழிகாட்டி. அதெல்லாம் நினைவுக்கு வந்தது.
உங்கள் பயணம் அருமை...ஜி ரசித்தேன்
கீதா
இரவு பயணம் அருமை...
பதிலளிநீக்குஇன்பமான பயணத்தை, அந்த இனிமையான மலைப்பகுதியில் இரவின் அமைதியை மயான அமைதி என்று குறிப்பது நியாயமல்ல. மலையும் வனமும் உறங்கி ஓய்வெடுத்துக் கொண்டிருந்த நிச்சலன அமைதி.
பதிலளிநீக்குமலைப்பகுதியில் சரக்கடித்து, அமைதிகயைக் கெடுத்துக்கொண்டு... என்ன இளைய சமுதாயமோ....
பதிலளிநீக்குபறவைகளின் விதம் விதமான குரல்கள் எங்கள் காதுகளுக்கு இனிமையாக, ஒரு வித இசை போல இருந்தது. //
பதிலளிநீக்குபறவைகளின் காலை நேர ஒலியை பதிவு செய்து இருக்கலாம் வெங்கட்.
இரவு நேரம் பயணம் அருமை. இரவு நேரம் மவுனம் தான் சரி.
அவர்கள் பாடல்களை சத்தமாக வைத்தது தப்பு.
பயணம் அருமை, தொடர்கிறேன்.
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குபயண பதிவு அருமை. இன்றைய வாசகமும் அருமை.
இரவில் மலையேற்றம் திரிலிங்காக இருந்திருக்கும். நீங்கள் சொல்லி வரும் போதே எங்களுக்குள்ளும் ஒரு திகில் நிறைந்த மகிழ்வான பயண அனுபவம் உடன் வருகிறது.
அதை கெடுப்பதற்கென்றே உங்களுடன் வந்தவர்கள் நடந்து கொண்ட முறை சரியானதல்ல..! காலையில் பொழுது புலர்ந்ததும் வனத்தின் காட்சியும், மரங்களில் பறவைகளின் ஒலிகளும் நீங்கள் விவரிக்கும் போது எனக்குள்ளும் அந்த சுகானுபவம் தொற்றிக் கொள்கிறது. இதன் முந்தைய இருபகுதிகளை நாளை படித்து விட்டு உங்கள் அருமையான பயணத்துடன் தொடர்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன். .