வியாழன், 12 மார்ச், 2026

அவன் அருளாலே அவன் தாள் வணங்கி - சதுரகிரி பயணம் - பகுதி நான்கு - பத்மநாபன்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


இதற்கு முன்னர் வெளியிட்ட அவன் அருளாலே அவன் தாள் வணங்கி பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



******


இந்த வருடத்தின் சதுரகிரி பயணம் குறித்த அனுபவங்களை இரண்டு பகுதிகளாக இது வரை வெளியிட்டு இருக்கிறேன் - அதற்கான சுட்டி கீழே…   


அவன் அருளாலே அவன் தாள் வணங்கி - பகுதி ஒன்று


அவன் அருளாலே அவன் தாள் வணங்கி - பகுதி இரண்டு


அவன் அருளாலே அவன் தாள் வணங்கி - பகுதி மூன்று


தொடரின் அடுத்த பகுதியும், நண்பர் பத்மநாபன் அவர்களின் வார்த்தைகளில் - ஓவர் டு பத்மநாபன் - வெங்கட் நாகராஜ்.


*******


அவன் அருளாலே அவன் தாள் வணங்கி - பத்மநாபன்:



கோரக்கர் குகை...

தொடர்ந்து பயணத்தில் இணைந்திருக்கும் நண்பர்கள் அனைவருக்கும் நன்றி.  கொஞ்ச தூரத்தில கோரக்கர் குகை வந்தது. கோரக்கர் சித்தர் தவம் செஞ்ச புனிதமான இடமாம். கொஞ்சம் கீழ இறங்கி கொஞ்சம் ஜிம்னாஸ்டிக் எல்லாம் பண்ணி அந்த குகைக்கு கிட்டப் போனா ஒரு நாலஞ்சு பேரு வரிசைகட்டி நின்னாங்க. ஏன்னா, ஒவ்வொரு ஆளாத்தான் குகைக்குள்ள போக முடியும். நிறைய பெண்களும் ஜிம்னாஸ்டிக் பண்ணி குகைக்கு வந்திருந்தாங்க. குகைக்குள்ள ஒரு சிறிய அழகான சிவலிங்கம். உள்ளே ஒரு பைரவரும் ஆனந்த தூக்கம் போட்டுக் கொண்டிருந்தார். 







அந்த குகைக்கு கீழே ஒரு அழகான நீரோடை. அருமையா தண்ணி ஓடிக்கிட்டு இருக்கு. புனிதமான நீரோடை. வாய் வச்சு குடிச்சா புனிதம் கெட்டுடும்னு ஒரு குரங்கார் மனிதனைப் போல கையால் எடுத்து எடுத்து தண்ணி குடிச்சுகிட்டு இருந்தாரு. அந்த நீரோடையை ஒட்டி ஒரு சரிவான உயரமான பாறை. பாக்கவே ஆனந்த பரவசமா இருந்தது. இந்த ஆனந்த அனுபவத்துல அதிகமா மூழ்கினவர் வெங்கட்தான். ஆமா, திடீர்னு பாத்தா அந்த சரிவான பெரிய பாறை மேலயிருந்து ஓம்! ஓம்! னு ஆனந்த பரவச சத்தம். எல்லோரும் அந்தத் திசையையே பார்க்க அங்கே நம் வெங்கட் பத்மாசனத்தில அமர்ந்து தியானம் செய்ய ஆரம்பித்து விட்டார். அடுத்த சித்தர் தோன்றி விட்டார்னுதான் நினச்சேன். ஒரு சின்ன பயம் வந்துட்டு. மலையேறுன சாமி ஆனந்த பரவசத்தில மலையிறங்க மாட்டேன்னு சொல்லிட்டா. ஆனா கொஞ்ச நேரத்துல கீழ இறங்கி வந்துட்டாரு. கோரக்கர் சித்தர் அவர் காதுல அந்த இடத்துக்கு ஒரு கோரக்கர் போதும், வெங்கட்கர் ஸ்ரீரங்கத்துக்கு வேணும்னு சொல்லியிருப்பார்போல. ஏற்கனவே அங்க ஒரு அப்ரெண்டிஸ் சாமியார் காவி உடுத்து தலைமுடி வளர்த்து வித விதமாக போட்டோக்கு போஸ் கொடுத்துக்கிட்டு இருந்தாரு.



அப்படியே கொஞ்சம் மேல இரட்டை லிங்கத்தையும் தரிசிச்சுகிட்டு மேல போனா ஒரு சின்ன சுனை. சுனையிலேயிருந்து கொஞ்சமா தண்ணி வெளியேறிக்கிட்டுத்தான் இருந்து. ஆனா, சுனைத்தண்ணிக்கு மேல மர இலையெல்லாம் விழுந்து கலங்கலா இருந்தது. அந்த சுனைக்கு பேரு நாவல் ஊற்று. ஒரு பெரிய நாவல் மரத்து வேர்களோட அடியிலிருந்துதான் அந்த ஊத்துதண்ணி வருது. அந்த தண்ணி சக்கரை வியாதிக்கு நல்லதாமே. ஆனா தண்ணி கலங்கலா இருந்ததால எல்லோரும் அத குடிக்க யோசிச்சிக்கிட்டு இருந்தா. கொஞ்சம் தெளிவாயிருந்த இடத்திலிருந்து நாங்க கொஞ்சம் தண்ணியை எடுத்து சாத்திரத்துக்கு, எந்த சாத்திரம்னு கேக்கப்படாது, வாயிலயும் தலையிலயும் தெளிச்சுக்கிட்டோம். எங்களப் பாத்து இன்னும் கொஞ்சம் பேரும் தெளிச்சுகிட்டாங்க.


அப்படியே சிவ சிவான்னு மேல ஏறிக்கிட்டே இருந்தோம். வெறும் கால்ல நடந்ததால உள்ளங்காலெல்லாம் சுருக் சுருக்னு அக்குப்பஞ்சர் நடந்துக்கிட்டு இருக்கு. அப்பம் பாத்து பச்சரிசிப்பாறைன்னு ஒரு இடம் வருது. ஆஹா! பொடி பொடியா பச்சரிசி மாதிரி பாறைக்கல்லு கிடக்குமாமே. சரியாப்போச்சுன்னு நினைச்சுகிட்டே அந்த இடத்தையும் கடந்துட்டோம். அப்படியே வனதுர்க்கை கோயில், பெரிய பசுக்கிடை, கருப்பசாமி கோயில் எல்லாரையும் கும்பிட்டு மேல சுந்தரமகாலிங்கம் கோயிலை கண்டு கொண்டோம். ஒரு பக்கம் கோயிலை கண்ட சந்தோஷம், இன்னொரு பக்கம் வெற்றிகரமா மலையேறிட்ட சந்தோஷம். 



சுந்தர மகாலிங்கம் கோயிலைக் கண்டதும் உடன் வந்த தம்பி மதியழகனுக்கு சந்தோஷம் தாங்கல. ஓடிப் போய் நுழைவாயில் படிகளில் நின்று ரெண்டு கைகளையும் தூக்கி சந்தோஷப் பட்டார். அடிவாரத்திலேயிருந்து மேல வருவது வரை தண்ணி கூட குடிக்காம கட்டுப்பாடா வந்தவராச்சே. நானும் வெங்கட்டும் ரெண்டு மூணு இடத்திலே உப்பு போட்ட எலுமிச்சை சூசு குடிச்சிருந்தோம். 


அப்படியே மேல ஏறி சுந்தர மகாலிங்கம் சன்னதிக்கு போனோம். சாதாரண தினமாதலால் அதிக கூட்டமில்லை. எந்த தடையோ தடங்கலோ இல்லாமல் சுந்தரன் சாய்ந்து நின்று திவ்ய தரிசனம் தந்தார். மனசு நிறைய ஈசனடி போற்றி! எந்தையடி போற்றி! நேசனடி போற்றி! சிவன் சேவடி போற்றி! நேயத்தே நின்ற நிமலனடி போற்றி! மாயப் பிறப்பறுக்கும் மன்னனை போற்றி! என்று அந்த சுந்தரனை வாயாரப் பாடி, மனதால் சிந்தித்து “வான்முகில் வழாது பெய்க, மலிவளம் சுரக்க, மன்னன் கோன் முறை அரசு செய்க, குறைவிலாது உயிர்கள் வாழ்க, நான் மறை அறங்கள் ஓங்க, நற்றவம் வேள்வி மல்க, மேன்மை கொள் சைவ நீதி விளங்குக உலகமெல்லாம்” என்று அந்த சுந்தர மகாலிங்கத்தை இறைஞ்சி மனம் நெகிழ தரிசித்து அடுத்த சன்னதியில் இருந்த ஆனந்தவல்லி அம்மனையும் வணங்கி மனம் நிறைந்து வெளியே வந்தோம். 


அப்போது மணி பதினொன்னு பதினொன்னரைக்கு மேல ஆச்சுன்னு நினைக்கேன். மனசு நிறஞ்சு போச்சு. ஆனா வயறு பரிதாபமா ‘இது தகுமோ, இது முறையோ, தருமந்தானோ’ ன்னு முறையிடுது. அதுக்கேத்த மாதிரி கஞ்சிமடம்னு பலகையை வேற கண்ணு பாத்து வயறுக்கு மெசேஜ் அனுப்பிட்டுது. ஆனா என்ன செய்ய, அந்த கஞ்சி மடம் பூட்டு போடப்பட்டு எங்களை வஞ்சித்து வஞ்சி மடமா மாறியிருந்தது. அந்த மடம் சிறப்பு நாட்களுக்கு மட்டும்தான் போல. ஆனா மகாலிங்கம் எங்களை கை விடல்ல. கொஞ்ச தூரத்திலேயே சந்தன மகாலிங்கம் சன்னதிக்கு போற வழியிலேயே மக்கள் தட்டும் கையுமா சாப்பிட்டுக் கிட்டு இருந்தாங்க. ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தமேன்னு வயறு வெட்கமில்லாம கூத்தாடுது. சரி, சரி கண்ட்ரோல் யுவர்செல்ஃப்ன்னு கட்டுப்படுத்தி தட்டும் கையுமா அன்னமிடும் அன்னையர் முன் நின்றோம். பார்த்தவிழி பார்த்திருக்க வெண்மையான சாதம் சுடச் சுட தட்டிலே வந்து விழ, கூடவே சாம்பார் கம்பெனி கொடுக்க, பீட்ரூட் பொரியல் நானும் உடன் வருவேன் என்று அடம் பிடிக்க தட்டு நிறைந்தது. கொஞ்சம் தள்ளி ஒரு படிக்கட்டுல உட்கார்ந்து சாப்பிடுவோம்னு போய் உட்கார்ந்தோம். ஆனா கூடவே பின்னால ஒரு ஆளு இருக்கிற மாதிரி ஒரு ஃபீலிங். திரும்பி பார்த்தா ஒரு குரங்கார் ஒரே தட்டுல ரெண்டு பேரும் சாப்பிடுவமான்னு சிரிக்கிறாரு. ஆனா அந்த அளவு நம்ம மனசு விசாலமாகல்லியே. அதனால அவருக்கிட்ட இருந்து கொஞ்சம் நகர்ந்து தள்ளிப் போய் சாப்பிட்டோம். அந்த நேரத்து பசிக்கு தேவாமிர்தமா இருந்தது. 


தொடர்ந்து அடுத்த பகுதியில சொல்றேனே….  


நட்புடன்


பத்மநாபன்


*******



இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


வெங்கட் நாகராஜ்

திருவரங்கம்

12 மார்ச் 2026



26 கருத்துகள்:

  1. ரசனையான அனுபவங்கள்.  சுவாரஸ்யமான எழுத்து நடை.  குரங்கார் தண்ணீர் குடிக்கும் இந்த வீடீயோவை நான் பேஸ்புக்கிலோ, இன்ஸடாவிலோவும் பார்த்த நினைவு!  அங்கு பகிர்ந்திருந்தீர்களா?!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இங்க முதல் பதிவில் வெங்கட்ஜி கொடுத்ததில் இருந்துச்சே trailer பதிவில்!

      கீதா

      நீக்கு
    2. கீதா ஜி சொன்னது போல இந்தப் பயணத் தொடரின் முதல் பகுதி - நான் எழுதிய பகுதியில் இந்த காணொளி இணைத்திருந்தேன் ஸ்ரீராம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
    3. இங்கே குறிப்பிட்டமைக்கு நன்றி கீதா ஜி.

      நீக்கு
  2. வெங்கட் தியானம் செய்யும் காட்சி கண்டேன்.  முன்னரே அவர் நிறைய பதிவுகளில் அமைதியான கோவில்களை பார்க்கும்போது அங்கு அமர்ந்து சிறிது நேரம் சகஸ்ரநாமம் சொன்னேன் என்றோ, தியானம் செய்தேன் என்றோ எழுதியதைப் படித்திருக்கிறேன்.  அவருள் ஒரு ரிஷி இருக்கிறார்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வெங்கட் தியானம் செய்யும் காட்சி கண்டேன். முன்னரே அவர் நிறைய பதிவுகளில் அமைதியான கோவில்களை பார்க்கும்போது அங்கு அமர்ந்து சிறிது நேரம் சகஸ்ரநாமம் சொன்னேன் என்றோ, தியானம் செய்தேன் என்றோ எழுதியதைப் படித்திருக்கிறேன். அவருள் ஒரு ரிஷி இருக்கிறார்!//

      ஆமாம்!! அதுவும் உத்தரகான்ட் - ப்ரேம் Bபிஷ்ட் அவரோடு போன பயணம்....அந்த தவழ்ந்து சென்ற அத்ரி முனி அருவி...அங்கும் ....

      கீதா

      நீக்கு
    2. //அவருள் ஒரு ரிஷி இருக்கிறார்// ஹாஹா.... :) அப்படியெல்லாம் இருந்திருந்தால் பரவாயில்லை! இது போன்ற ஏகாந்தமான இடங்களைக் கண்டால் மனதில் ஒரு அமைதியும் நிம்மதியும் வந்து விடுகிறது. இயற்கையின் பேராற்றலுக்கு முன்னர் நாம் எம்மாத்திரம் என்கிற உணர்வு ஒவ்வொரு முறையும் வருவதுண்டு.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
    3. உண்மை தான். அத்ரி முனி அருவி அருகிலும் கூட இப்படியாக அமர்ந்து கொண்டிருந்தேன். உங்கள் நினைவில் இருப்பதில் மகிழ்ச்சி கீதா ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  3. நானாக இருந்தால் அந்த சாம்பார் சாதத்தையும் பீட்ரூட் பொரியலையும் ஒரு க்ளிக் எடுத்து போட்டிருப்பேனாக்கும்!!!   அது சரி, ஜனம் அதிகமில்லை என்று சொன்னீர்கள்..  உள்ளே சுந்தரமகாலிங்கத்தை படம் எடுக்கவில்லையா?  "பப்பு..  இது தப்பு"  என்று மனசுக்குள் சொல்லிக்கொண்டு விட்டு விட்டீர்களா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நாங்களும் எடுத்திருக்கலாம்.... ஆனால் அந்த நேரத்தில் நீண்ட நடைக்குப் பிறகு உணவு உண்ண வேண்டும் என்பதில் தான் அதிக கவனம் இருந்தது. சுந்தர மகாலிங்கம், சந்தன மகாலிங்கம் சன்னதிகளில் படம் எடுக்க அனுமதி இல்லை. சிலர் எடுத்துவிடுகிறார்கள் என்றாலும் பொதுவாக நான் படம் எடுப்பதில்லை. கோரக்கர் குகையில் எடுத்த படம் போட்டிருக்கிறேன் - ஒரு பதிவில்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  4. சாதாரணமாக கோவிலில் சுற்றும்போது ஏதாவது ஒரு இடத்தை நான் சும்மா தொட்டுக் கும்பிடுவேன். 

    ஒரு எதிர்பார்ப்புதான்!  அது உடனே நிறைவேறும். 

    என் பின்னால் வருபவர்கள் அவர்களும் அந்தஇடத்தை தொட்டுக் கும்பிடுவார்கள். 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை தான். சிலர் இப்படி, மற்றவர்கள் செய்வதைப் பார்த்து தாங்களும் செய்வார்கள். எதனால், எதற்கு என்ற கேள்வியை விட, அப்படிச் செய்தால் ஏதோ பலன் கிடைக்கிறது போலும் என்கிற ஆசையும் எண்ணமும் தான்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  5. சுவாரஸ்யமான நடை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி நண்பரே.

      நீக்கு
  6. ஒரு சின்ன பயம் வந்துட்டு. மலையேறுன சாமி ஆனந்த பரவசத்தில மலையிறங்க மாட்டேன்னு சொல்லிட்டா. ஆனா கொஞ்ச நேரத்துல கீழ இறங்கி வந்துட்டாரு. கோரக்கர் சித்தர் அவர் காதுல அந்த இடத்துக்கு ஒரு கோரக்கர் போதும், வெங்கட்கர் ஸ்ரீரங்கத்துக்கு வேணும்னு சொல்லியிருப்பார்போல. ஏற்கனவே அங்க ஒரு அப்ரெண்டிஸ் சாமியார் காவி உடுத்து தலைமுடி வளர்த்து வித விதமாக போட்டோக்கு போஸ் கொடுத்துக்கிட்டு இருந்தாரு.//

    பப்புண்ணே!!!!! முடியலைப்பா சாமி!!! சிரிச்சு முடிலைப்பா...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இது போல எப்போதும் பேசுபவர் அண்ணாச்சி. பல முறை சிரித்து சிரித்து ரசித்திருக்கிறோம் அவரது பேச்சுக்களை.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி கீதா ஜி.

      நீக்கு
  7. சிரிப்புடன்....சுவாரசியாமாகச் சொல்லிப் போகும் விதம்....ரசித்தேன். உங்க அனுபவங்களும் அருமையாக இருக்கு. கொதியாவுன்னு கேட்டோ.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ”கொதியாவுன்னு கேட்டோ” - அடடா... வாய்ப்புகள் அமையாத போது கடினம் தான். அதிலும் விருப்பமுள்ளவர்கள் வாய்ப்பு கிடைக்காமல் போகும்போது அதனை மிகவும் மிஸ் செய்வது தான் வழக்கம். விரைவில் உங்களுக்கும் வாய்ப்பு அமைய எனது பிரார்த்தனைகள்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி கீதா ஜி.

      நீக்கு
  8. உங்களோடயே நானும் நடந்து வந்த ஃபீலிங்.

    உடனே ரொம்பவே ஒன்றிவிட்டேனோன்னு தப்பா நினச்சுக்கிடாதீங்க. சுடச்சுட சாதம், சாம்பார், பீட்ரூட் பொரியல், பசியைக் கிளப்பிடுச்சு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பசியைக் கிளப்பி விட்டது - ஹாஹா.... மிக மிகச் சுவையாக இருந்தது - பசி நேரத்தில், உணவு கிடைப்பது என்பது சுவையை விட உணவு கிடைப்பது தான் முக்கியமாக இருக்கும். அதிலும் இது போன்ற மலைப்பாதைகளில் வேறு உணவகங்கள் இல்லாதபோது கிடைக்கும் அன்னதானம் மகத்தான விஷயமாக இருக்கும்.

      தொடர்ந்து கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளும் உங்களுக்கு மனம் நிறைந்த நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
  9. உங்களுக்கு வெங்கட் தியானம் செய்ததைவிட, திரும்ப கீழ இறங்க துணையில்லாமல் போயிடுமேன்னு கவலைதான் அதிகமா இருந்திருக்கும். இல்லையா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹா... கவலை என்று பெரிதாக இருந்திருக்காது. எப்படியிருந்தாலும் வந்துவிடுவேன் என்பது அவருக்குத் தெரியுமே! எனக்கும் அவருக்குமானது இன்றைக்கு நேற்றைக்குப் பழக்கமா என்ன? 35 வருடப் பழக்கமல்லவா?

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
  10. எத்தனை மணிக்கு ஏற ஆரம்பிச்சீங்க? நடக்க முடிஞ்சதா? இடையில் சோர்வா இருந்ததா? ரெஸ்டுலாம் எடுத்தீங்களா?

    அதையும் எழுதிடுங்க. எலுமிச்சை சூஸ்லாம் சாப்பிட்டிருக்கீங்க. இடையில் தண்ணிக்கு என்ன பண்ணுனீங்க? அதையும் தூக்கிட்டுப் போனீங்களா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காலை ஆறே முக்கால் மணி இருக்கலாம் - மலை ஏற ஆரம்பித்தபோது. போகும்போது இரண்டு பாட்டில் தண்ணீர் எடுத்துச் சென்றோம். நடக்கலாம் - நடுநடுவே கொஞ்சம் ஓய்வெடுத்துக் கொள்ளலாம் - உடம்பும் கால்களும் ஓய்வு கொடு என்று கேட்கும்போது சற்றே ஓய்வெடுப்பதே நல்லது. வழியில் சில இடங்களில் உள்ளூர் மக்கள் கடை போட்டிருப்பார்கள் - அவர்களிடம் தண்ணீர், சுக்குக் காப்பி, ஜூஸ், ஆரஞ்சு மிட்டாய், க்ளூக்கோஸ் என அனைத்தும் கிடைக்கும். வேண்டிய போது வாங்கிக் கொள்ளலாம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
  11. வாசகம் அருமை.
    படங்கள் காணொளி எல்லாம் அருமை.

    கோரக்கர் குகைகுள் இருக்கும் சிவலிங்கத்தை படம் எடுக்க வில்லையா?.

    குரங்கார் நீர் அருந்தியது அருமை.

    //மலையேறுன சாமி ஆனந்த பரவசத்தில மலையிறங்க மாட்டேன்னு சொல்லிட்டா. ஆனா கொஞ்ச நேரத்துல கீழ இறங்கி வந்துட்டாரு.//

    எல்லோர் நன்மைக்கும் பிரார்த்தனை செய்து இறங்கி விட்டார் .

    சுந்தர மகாலிங்கம், ஆனந்தவல்லி அன்னையை வணங்கி கொண்டேன்.
    பயண அனுபவம் அருமை.

    பதிலளிநீக்கு
  12. விஜயலஷ்மி சென்னை13 மார்ச், 2026 அன்று 1:06 PM

    வெங்கட்சார் தியானம் அருமை இதேபோல் உத்தர்கண்ட் பயணத்திலும் ஒரு குகையில் தியானம் செய்து இருக்கிங்க இரண்டாம் முறையாக உங்களுடன் பயணிப்பதாக உணர்ந்தேன்

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....