அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
இதற்கு முன்னர் வெளியிட்ட நலம்… நலம் அறிய ஆவல் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
******
இந்த வாரத்தின் எண்ணங்கள் : “Husband தான் போயாச்சு….”
சமீபத்தில் எனக்குத் தெரிந்த ஒரு young couple குறித்த சில செய்திகள் காதில் விழுந்தன. காதல் திருமணம் புரிந்தவர்கள்! திருமணத்திற்குப் பிறகு வாழ்க்கை கசந்தது! இருவருக்கும் அடிக்கடி சண்டை! ஒரு உச்சகட்டத்தில் அந்தப் பெண் தற்கொலைக்கு முயன்று, காப்பாற்றப்பட்டார். எல்லோருமாக பேசி பிரச்சனைகளைக் கொஞ்சம் தீர்த்து வைத்தார்கள். ஆனாலும் கசப்பு அகலவில்லை. அவ்வப்போது இருவருக்கும் சண்டைகள் தொடர்ந்தன. கணவன் மனைவியை அடிப்பதும், மனைவி கணவனுடன் தொடர்ந்து சண்டை போடுவதும் தொடர்ந்தபடியே இருந்தது. காதலிக்கும் சமயத்தில் இருந்தது போலவே திருமணத்திற்குப் பிறகும் இருப்பதில் நிறைய சிக்கல்கள் இருக்கின்றன. ஒரு கட்டுக்குள் இருவரும் வந்த பிறகு நிறைய விட்டுக் கொடுக்க வேண்டியிருக்கிறது - வாழ்க்கை எனும் பயணத்தில் இருவருமே பரஸ்பரம் அன்பு செலுத்துவது மட்டுமல்ல, வாழ்க்கைப் படகைச் செலுத்த இருவரின் ஒத்துழைப்பும் நிச்சயம் தேவை. இல்லை எனில் இது போல சிக்கல்கள் தான். கடைசியில் வீட்டினர் சேர்ந்து, காவல் நிலையத்தில் பேசி, பிரச்சனையை முடிக்கிறேன் பேர்வழி என இருவரையும் பிரித்து வைத்து விட்டார்கள்.
இது போல ஒன்றல்ல, இரண்டல்ல, நிறைய கேள்விப்பட முடிகிறது! காதல் திருமணம் என்றாலே பிரச்சனை தான் என்று சொல்வதற்காக இதைச் சொல்லவில்லை. எல்லாவற்றிலும் Exceptions are always there! இந்த ஜோடி இப்படிச் செய்ததால் எல்லா காதல் திருமணங்களும் பிரச்சனைகளில் முடிகிறது என்று நான் கருதவில்லை. இப்படியும் சில திருமணங்கள் பிரச்சனைகளுக்கு உள்ளாகின்றன. பரஸ்பரம் விட்டுக்கொடுத்துப் போகாமல் ஒரு திருமணம் - காதல் திருமணமாக இருந்தாலும் சரி, பெற்றோர்கள் பார்த்து, முடித்து வைக்கும் திருமணமாக இருந்தாலும் சரி - Successful ஆக இருப்பதில்லை. இரட்டை மாட்டு வண்டியில் இரண்டு மாடுகளும் ஒரே விதத்தில் செயல்படவில்லை என்றால் வண்டி குடை சாய்ந்து விடும். திருமண பந்தமும் அப்படியே! அது சரி அது என்ன இந்த எண்ணங்களுக்குத் தலைப்பு “Husband தான் போயாச்சு….” என்று வைத்திருக்கிறீர்களே என்று நீங்கள் யோசிக்கலாம்! அந்த விஷயத்திற்கு வருகிறேன். சம்பந்தப்பட்ட பெண் அவ்வை சண்முகி படத்தில் வரும் இந்தப் பாடலுக்கு நடனமாடி, பாட்டுடன் சமீபத்தில் தனது WhatsApp Status ஆக, வைத்திருந்தார்!
******
இந்த வாரத்தின் விளம்பரம் : உடலுறுப்பு தானம்
உடலுறுப்பு தானம் குறித்த வெளிநாட்டு விளம்பரம் ஒன்று - மனதைத் தொடும் விதமாக - சொல்லாமல் சொல்லும் இந்த விளம்பரம் - பாருங்களேன்.
******
பழைய நினைப்புடா பேராண்டி : கறை நல்லது
2012-ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் வெளியிட்ட பதிவு - கறை நல்லது - இன்றைய பழைய நினைப்புடா பேராண்டி பதிவாக! அந்தப் பதிவிலிருந்து சில வரிகள் இங்கே.
வண்டி தாமதமாக சென்று கொண்டிருந்தது. எந்த தொந்தரவும் இல்லாது புத்தகங்கள் படிக்க நினைத்திருந்த எனக்கு விதி வங்காளி – அவரது பெயரை சௌகரியத்துக்காக சக்ரபோர்த்தி [Chakraborty] என வைத்துக் கொள்ளலாமா? – ரூபத்தில் வந்து சிரித்தது எனக்கு அப்போது தெரியவில்லை.
தில்லியில் ஆரம்பித்தது அவர் தொல்லை. அலுவலகத்திலிருந்து வீட்டுக்கு லேட்டா வந்த கணவனிடம் வாசலிலேயே நிறுத்தி வைத்து கேள்விகளால் துளைக்கும் மனைவி மாதிரி, கேள்விக் கணைகளைத் தொடுத்துக் கொண்டே வந்தார். ’வண்டி எப்ப சென்னை போய் சேரும்?, சென்னையிலிருந்து கட்படி [காட்பாடி-யைத் தான் இப்படிச் சொல்கிறார் என்பது புரிய இந்த மரமண்டைக்கு கொஞ்சம் நேரம் பிடித்தது தனிக் கதை!] போக என்ன வண்டி கிடைக்கும், ராத்திரி முழுக்க இருக்கும் வண்டிகள் என்னென்ன?, உங்க ஊர் ஏன் இப்படி குப்பையா இருக்கு? [என்னவோ அவர்களுடைய கொல்கத்தா ரொம்ப சுத்தம் மாதிரி!], இந்த ரயில்வே டைம்டேபிள்-ல வண்டி போகும் விவரங்கள் எப்படிப் பார்க்கிறது? என பல கேள்விகள்.
நானும் பொறுமையா அவரது எல்லாக் கேள்விகளுக்கும் பதில் சொல்லிக் கொண்டே வந்தேன். என்னிடம் கேள்வி கேட்ட நேரம் போக, மீதி நேரமெல்லாம், அவரது அலைபேசியில், எல்லா வங்காளிகளின் வழமை போல, சக்ரபோர்த்தியும் சத்தமாக வங்காள மொழியில் பேசியபடி வந்தார். சிலச் சில வார்த்தைகள் புரிவதால் அவரது மனைவியிடம் திட்டு வாங்கி சமாளிக்கிறார் என்பது மட்டும் புரிந்தது!
முழு பதிவினையும் மேலே உள்ள சுட்டி வழி படித்துப் பாருங்களேன் - இது வரை நீங்கள் அந்தப் பதிவினை படித்திருந்தாலும், படிக்காவிட்டாலும்! 😀
******
இந்த வாரத்தின் சிறுகதை : கைம்மாறு
சொல்வனம் தளத்தில் சமீபத்தில் வாசித்த ஒரு சிறுகதை தான் கைம்மாறு. எழுதியவர் பெயர் சசி. கதையிலிருந்து சில வரிகள் கீழே…
அங்கிருந்த போது, எல்லா சனிக்கிழமை மாலையிலும் அம்பாள் ஹோட்டலில் என் ஸ்டாண்டர்ட் டிபன்; மைசூர் போண்டா செட், முறுகல் ரவாதோசை. அப்புறம், சர்க்கரை குறைவாக ஒரு ஸ்ட்ராங்க் ஃபில்டர் காபி.
ஒரு தட்டையான ஸ்டீல் ப்ளேட்டில் வாழை இலைத் துண்டில் சட்டினி சாம்பார் சகிதம் சுடச்சுட இரண்டு உருண்டையான போண்டாக்கள். மேல்புறம் மொருமொருப்பாக, உள்பக்கம் மிருதுவாக.. ஆங்காங்கே கடிபடும் முழுமிளகு, தேங்காய் செதில்கள். இதை ரசித்துச் சாப்பிட்டு முடித்து விரல்களை ருசிக்க ஆரம்பிக்க, முறுகல் ரவாதோசை வந்துவிடும். அதற்கு கெட்டி தேங்காய் சட்னி, தக்காளி தொக்கு, சாம்பார். இதெல்லாம் பாதி கூடத் தொட்டுக்கத் தேவைப்படாது. முறுகல் ரவா தோசையை அப்படியே விண்டு சாப்பிடலாம். அது முடித்து வாஷ்பேசினில் கையைக் கழுவிவிட்டு திரும்பினால் சூடு பறக்கும் டபரா தம்ளர் காபியுடன் சிரித்த முகத்துடன் மாதேஷ் நிற்பான். மீண்டும் அடுத்த சனிக்கிழமை. ரிப்பீட்டு. இப்படியே சலிக்காமல் போனது நான் அங்கிருந்த ஒன்பது மாதங்கள்.
அப்போது மாதேஷுக்கு மிஞ்சிப் போனால் இருபது வயதிருக்கும். சிரித்த முகம். எப்போதும் குளித்து பூஜை முடித்து வந்தவன் போல திருநீறு அணிந்து இருப்பான். பில்லுடன் டிப்ஸ் சேர்த்துக் கொடுக்க முனைந்தால் நாசூக்காக மறுத்து விடுவான். ஒரு நாள் அப்படிக் காசு கொடுக்க முயற்சித்தபோது “சார், நீங்க உங்கக் காசை கொடுத்து சாப்பிடறீங்க. அதை நான் கொண்டு வந்து தந்து நீங்க ரசிச்சு சாப்பிடுறத பாக்கிற சந்தோஷத்துக்கு நிகர் வேற எதுவுமில்ல சார். நாலு பேருக்கு சோறு போடற வசதியோ நிலைமையோ எனக்கில்ல. ஆனால் சம்பளத்தையும் வாங்கிட்டு அதையே செய்யுற பாக்கியம், இந்த வேலையைத் தவிர வேற எந்த வேலையிலயும் கிடைக்காது சார்” என்றான்.
கதையை முழுமையாகப் படிக்க ஏதுவாக அதன் சுட்டி கீழே!
கைம்மாறு – சொல்வனம் | இதழ் 376 | 11 அக் 2026
******
இந்த வாரத்தின் கதைமாந்தர் - அவசர மாமி :
நவராத்ரி ஒன்பது நாட்கள் வேகவேகமாக ஓடிவிட்டது போல இருக்கிறது! நாட்கள் அவசர அவசரமாகக் கடந்து ஓடிவிடுவதற்குச் சொல்லவா வேண்டும்! ஏதோ இப்போது தான் ஆண்டு ஆரம்பித்தது போல இருக்கிறது - அதற்குள் பத்து மாதங்கள் கடந்து விட்டன! நாட்கள் வேகவேகமாக நகர்வது போலவே சில மனிதர்களும் இருக்கிறார்கள். நவராத்திரி சமயத்தில் ஒரு பெண்மணி எங்கள் வீட்டுக்கு வருவார் - அழைப்பின் பேரில் தான்! ஆனால் வீட்டுக்குள் வந்து உட்கார்ந்ததும், கொலுவையோ, பொம்மைகளையோ பார்க்காமல், அடுத்தது, அடுத்தது என அவசரப் பட ஆரம்பித்து விடுவார். நாம் நலம் விசாரிப்பதற்குள், கைகளை நெற்றிக்குக் கொண்டு போய் சைகை காண்பித்துவிடுவார்! அதாவது குங்கும, சந்தனம் கொடுத்து, வெற்றிலைப் பாக்கு தாம்பூலம் தர வேண்டும் என்பதற்கான சங்கேத மொழி அது! வாங்கிக் கொண்டு உடனே அகன்று விட வேண்டும் - அவ்வளவு பிஸியாம் அவர்! ஆனால் அவர் வீட்டிற்குச் சென்றால், நாம் அதிக நேரம் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கும் அவசர மாமி அவர்! கதை மாந்தர்கள் எப்படியெல்லாம் நமக்கென்று வந்து சேர்ந்துவிடுகிறார்கள் என்று எனக்குத் தோன்றும்!
******
இந்த வாரத்தின் உலகம்: எங்கே போகிறோம்?
நம் தேசத்தில் மட்டுமல்ல, எல்லா நாடுகளிலும் விதம்விதமாக பிரச்சனைகளை எதிர்கொள்ளும் நேரமாக இருக்கிறது. இதன் பின்னே பெரிய அரசியல் இருக்கிறது என்பதை ஒருவரும் புரிந்து கொள்வதில்லை. ஆதாயத்திற்காக எதையும் செய்யத் துணிந்து விடுகிறார்கள் அரசியல்வா(வியா)திகள். எங்கே பார்த்தாலும் போதை தலைவிரித்து ஆடுகிறது! நாங்கள் காலை நேரத்தில் நடைப்பயிற்சி செய்யும் இடங்களில் சாலையோரங்கள், புதிதாக Plot போட்ட நிலங்கள் என எங்கே பார்த்தாலும் சாராயக் குப்பிகள், சிகரெட்டுகள், போதை வஸ்துகள் என நிறையவே பார்க்க முடிகிறது. இன்றைய இளைஞர்கள் நாளைய பாரதத்தின் தூண்களாக இருக்க வேண்டியவர்கள் - ஆனால் சோசியல் மீடியா வழி அவர்களில் பலரும் மடை மாற்றப்பட்டு அழிவை நோக்கிச் சென்று கொண்டிருப்பதைப் பார்க்கும்போது மனதில் வலி! தனது அழிவு மட்டுமல்லாது தான் சார்ந்திருக்கும் நாட்டினையும் அழிவின் பாதையில் அழைத்துச் செல்லும்படி பலரும் இருப்பதைப் பார்க்க முடிகிறது! எங்கே போகிறோம் என்ற சிந்தனை தான் இப்படியான விஷயங்களைப் பார்க்கும்போதும், படிக்கும்போதும்! ஒன்றும் செய்துவிட முடியாது என்பது வேதனையான உண்மை.
******
இந்த வாரத்தின் ரசித்த கவிதை - நிழல் :
இந்த வாரத்தின் ரசித்த கவிதையாக கவிஞர் மகுடேஸ்வரன் அவர்களின் கவிதை ஒன்று… உங்கள் பார்வைக்கும் வாசிப்பிற்கும்!
அது என்ன நிழல் என்று
நினைவில்லை.
மாமர நிழலின் குளிர்ச்சி அதற்கு.
சுற்றிலும்
மஞ்சள் பூக்கள் இறைந்திருந்தன.
தொலைவிலுள்ள
ஓர் ஊருக்குச் சென்று
யாருமறியாத வாழ்வொன்றை
வாழ்வோமா என்று கேட்டேன்.
அப்படிச் சென்று வாழ்கின்ற
அக்கம்பக்கத்தார் கதைகளைச் சொன்னேன்.
நீர்கோத்த விழிகளோடு
நீ நெகிழ்ந்திருந்தாய்.
விசைத்தறி வேலைக்கு
ஆளெடுக்கிறார்கள்
நான் பணிக்குச் சென்று
பொருளீட்டுவேன்
நீ அகம்காத்து அருள்வாய் என்றேன்.
‘என்னென்னவோ சொல்கிறாய்...
உனைக் காதலுறுதல் தவிர
யாதொன்றும் அறியேன்’ என்று அழுதாய்.
என் சட்டையைப் பற்றி இழுத்து
நெருங்கி நின்றாய்.
விடிந்தும் விடியாத பொழுதொன்றில்
பேருந்தில் ஏறிவிட்டோம்.
அப்போது பேருந்தில்
“இந்நேரம் அந்த ஞாபகம்
உண்டாக நீயும் காரணம்...
கண்ணார நாமும் காணலாம்
செவ்வாழைப் பந்தல் தோரணம்...”
என்னும் வரிகள் ஒலித்தன.
உன் கம்மலை அடகு வைத்து
ஓரறை வீட்டுக்கு
முன்பணம் கொடுத்தோம்.
விளிம்பில் நீலமும் சிவப்பும்
கலந்த புதுப்பாய்
மண்ணெண்ணெய் அடுப்பு
சமையற் கலயங்கள்
கண்ணாடி சீப்பு ஆகியவற்றோடு
நம் இல்லறம் தொடங்கிற்று.
அவ்விரவு நினைவிருக்கிறதா ?
நீ அழுதபடியே இருந்தாய்.
நானுன்னை
மார்பில் சாய்த்துத் தூங்கச் செய்தேன்.
அதுதான்
நீயழுத கடைசியிரவு.
அதன்பின் வந்த ஒவ்வொரு நாளும்
புத்தம் புதிது.
நெஞ்சுக்குள் இனித்த தெள்ளமுது.
இதோ
வாழ்வின் இறுதிக்கே
வந்துவிட்டோம்.
நம் பிள்ளைகள்
தம் பிழைப்பை நோக்கிச் சென்றுவிட்டனர்.
நாம் வந்த ஒற்றயடிப் பாதை
நெடுஞ்சாலை ஆகிவிட்டது.
உன் முகச்சுருக்கங்களிலும்
முடிவெள்ளைகளிலும்
என் உயிரைத் தேடுகிறேன்.
நீயதை எங்கேயோ
மறைத்து வைத்திருக்கிறாய்.
உன்னைச் சுமப்பது
என் உயிரைச் சுமப்பது
வேறொன்றுமறியேன்.
- கவிஞர் மகுடேசுவரன்
******
இந்த வாரத்தின் காஃபி வித் கிட்டு பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டம் வாயிலாக சொல்லுங்களேன். மீண்டும் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…
நட்புடன்
வெங்கட் நாகராஜ்
திருவரங்கம்
27 அக்டோபர் 2026


காலை வணக்கம் வெங்கட். எத்தனை அருமையாக எல்லா செய்திகளையும் பதிகிறீர்கள். உங்கள் கொல்கத்தா நண்பர் உங்கள் காதைப் பேசியே அறுத்தது நினைவிருக்கிறது. மஹா பொறுமைசாலி நீங்கள்.
பதிலளிநீக்குமகுடேச்வரன் கவிதை மிக மிக அற்புதம். இதெலாம்சொல்ல எனக்குத் தகுதி இல்லை. ரசிக்கத்தான் முடியும்.ஒரு வாழ்க்கையையே இந்த வரிகளில் பூர்த்தி செய்து விட்டார். உணர்ச்சி பூர்வமான சொற்கள். நன்றி மா. வெங்கட்.
பதிலளிநீக்குசுகாதாரம் நம் ஊரை விட்டுப் போய் நிறைய காலம் ஆகிவிட்டது. யார்க்கும் அதைப் பற்றிக் கவலை இல்லை. போதை மருந்து விற்பதை நான் சென்னைக்கு வந்த போது பார்த்தேன். சென்னையின் பிரதம பணக்காரப் பள்ளியின் அருகே உற்சாக விற்பனை.
பதிலளிநீக்குஅவசர மாமி ஆஹா!!! மேர்கொண்டு சொல்லவில்லை.
பதிலளிநீக்குகாதல் திருமணம், பேசி முடித்து வைத்த திருமணம் இரண்டிலுமே பிரச்னைகள் உண்டுதான். அவரவர் சகிப்புத்தன்மையையும் மனப்பாங்கையும் பொறுத்தது.
பதிலளிநீக்குஉடலுறுப்பு தான விளம்பரம் பார்த்தது போல இருக்கிறது. நெகிழ்வு.
நான் இந்தப் பழைய பதிவினை இப்போதுதான் படித்தேன், ரசித்தேன், சிரித்தேன்.
அவசர மாமி எனக்கு வேறு சிலரை நினைவு படுத்துகிறார்!
மகுடேஸ்வரன் கவிதையை ரசித்தேன்.
''அங்கிருந்த போது, எல்லா சனிக்கிழமை மாலையிலும் அம்பாள் ஹோட்டலில் என் ஸ்டாண்டர்ட் டிபன்; மைசூர் போண்டா செட், முறுகல் ரவாதோசை. அப்புறம், சர்க்கரை குறைவாக ஒரு ஸ்ட்ராங்க் ஃபில்டர் காபி.'' பசிக்கிறதே:) மீண்டும் பார்க்கலாம்.
பதிலளிநீக்குபரஸ்பரம் பிரிந்தது வருத்தம்தான். அவர்களிடையே உள்ள பிரச்சனைகள் அவர்களுக்குத்தான் தெரியும். பொதுவாக காதலிப்பவர்கள், மனதைப் பார்த்துக் காதலித்தால் பிரச்சனை இல்லை. குடும்பம் என்று வந்துவிட்டால், சண்டை வருவது தவிர்க்க இயலாது, உடனேயே சமாதானமாவதும் தவிர்க்க முடியாது, இல்லைனா வண்டி குடைசாய்ந்துவிடும்.
பதிலளிநீக்குஅதீதமாகச் சென்று, பிரிவது..... ஐயோ பாவம்
//அவசர மாமி// சொல்வது தவறுதான். இப்போல்லாம் அடுத்த வீட்டுக்குச் சென்று தாம்பூலம் வாங்கிக்கொள்வது ஒரு கடமையாகிவிட்டது. நீ வா, நான் வருகிறேன் என்பது போல. அப்படி காலில் வெந்நீர் கொட்டிக்கொண்டு அவசர அவசரமாக தாம்பூலக் கடமையை நிறைவேற்றுவதில் ஏதேனும் பயன் இருக்கிறதா? மனிதர்களுக்கு உணர்வைப் பகிரும் எண்ணம், மற்றவர்களுடன் பேசிக் களிக்கும் எண்ணம் குறைந்து, தொலைக்காட்சி, மொபைலில் வாழ்க்கையை வாழ்வது அதிகமாகிவிட்டது
பதிலளிநீக்குபழைய நினைப்பு... இன்று போய்ப் பார்க்கவேண்டும்.
பதிலளிநீக்குகைம்மாறு - கதையின் உணவுப் பகுதியை வெளியிட்டிருப்பதால், உங்களுக்கு பசி நேரம் என்று நினைக்கிறேன். எனக்கும் பசியை வரவழைத்துவிட்டீர்கள்
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குபதிவு அருமை. இன்றைய வாசகமும் அருமை.
தங்கள் எண்ணங்கள் பகுதி சிறப்பு.
/கடைசியில் வீட்டினர் சேர்ந்து, காவல் நிலையத்தில் பேசி, பிரச்சனையை முடிக்கிறேன் பேர்வழி என இருவரையும் பிரித்து வைத்து விட்டார்கள். /
இப்படியும் சில கணவன் மனைவி இருவரிடையே நிரந்தர பிரிவுகள் வந்து விடுகின்றன.
விட்டுக் கொடுத்து இருவரும் பேசி கலந்து பிரச்சனையை சரி செய்து கொள்வது சிறந்த வழி. ஆனால், யார் விட்டுத் தருவது என்ற ஈகோ அவர்களை மூன்றாம் மனிதர்களை நாடச் செய்து விடுகிறது.
/Husband தான் போயாச்சு….”/
பாட்டுடன் நடனமாடி வரும் அப் பெண்ணை நினைக்கையில் வருத்தமாக உள்ளது. என்ன செய்வது.? பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.