இந்த வார செய்தி:
இந்த மாதத்தின் இரண்டாம்
சனிக்கிழமை அன்று “தில்லிகை” அமைப்பின் பன்னிரெண்டாவது கூட்டம் தில்லி
தமிழ்ச் சங்கத்தின் பாரதி கலையரங்கில் நடைபெற்றது. அதில் முதல் நிகழ்வாக திருமதி
கீதா இளங்கோவன் இயக்கிய ஆவணப்படமான “மாதவிடாய்” திரையிடப்பட்டது.
இப்படம் பற்றி இணையத்தில் சில வலைப்பதிவாளர்கள் ஏற்கனவே எழுதிய போது படத்தினை
பார்க்க ஆவலாகயிருந்தேன். அது இப்போது நிறைவேறியது.
”மாதா மாதம் இரத்தப் போக்கு ஏலாலம்படி ஏலோ” என்ற
பாடல் பின்னணியில் ஒலிக்க, பெண்கள் மாதவிடாய் காலங்களில் சந்திக்கும்
பிரச்சனைகள் பற்றி எல்லோரும் புரிந்துகொள்ள ஆவணப்படமாக எடுத்திருக்கிறார். படம்
பற்றி சொல்லும்போதே ”ஆண்களுக்கான பெண்கள் படம்” என்று தான்
சொல்கிறார்கள்.
தமிழக சட்டமன்ற உறுப்பினர்
பாலபாரதி, டாக்டர் தமிழிசை சௌந்தர்ராஜன், திலகவதி IPS போன்றவர்களிடம் மாதவிடாய்
பிரச்சனைகள் பற்றிய கருத்துகளைக் கேட்பது மட்டுமல்லாது, பள்ளிகள், பேருந்து நிலையங்கள்,
கல்லூரிகள் போன்று பொதுமக்கள் புழங்குமிடங்களில் மாதவிடாய் காலங்களில் பெண்கள்
படும் அவஸ்தைகள் பற்றி நமக்குச் சொல்லிப்போகிறது 38 நிமிடங்கள் ஓடும் இந்த
ஆவணப்படம்.
ஒரு
கிராமத்தில் இதற்காகவே தனியாக ஒரு அறை கட்டி வைத்திருப்பது – அதில் எந்த விதமான
சௌகரியங்களும் – மின்சாரம், கழிப்பறை – போன்ற எந்த விதமான சௌரியங்களும் இல்லாத
இடத்தில் தங்க வைப்பது பற்றி படிக்கும்போது எனது அம்மா தனது சின்ன வயதில் இப்படிப்
பட்ட இடத்தில் பட்ட கஷ்டங்களைப் பகிர்ந்து கொண்டது நினைவுக்கு வந்தது.
ஆவணப் படம் பார்த்த பிறகு, ”பெண்மை” என்ற
தலைப்பில் முனைவர் உமாபாரதி, ”பெண்மை வாழ்க என்று கூத்திடுவோமடா” என்ற
தலைப்பில் முனைவர் கே. நாச்சிமுத்து மற்றும் ”இன்றைய சூழலில்
பெண்மை” என்ற
தலைப்பில் பண்பாட்டு அமைச்சகத்தில் பணிபுரியும் திருமதி சத்யா அசோகன் ஆகியோர்
பேசினார்கள். பிறகு கலந்துரையாடலும் நடந்தது.
ஒவ்வொரு மாதமும் இரண்டாம்
சனிக்கிழமை மதியம் 03.00 மணிக்கு நடக்கும் தில்லிகை இலக்கியக் கூட்டம் என் போன்ற
தில்லிவாசிகளுக்கு நல்ல ஒரு வாய்ப்பு. இந்த மாதக் கூட்டத்தில் பார்த்த ஆவணப்படம் நிச்சயம் எல்லா ஆண்கள் மட்டுமல்லாது பெண்களும்
பார்க்கவேண்டிய ஒன்று. வாய்ப்பு
கிடைக்கும்போது நிச்சயம் அனைவரும் பாருங்கள்.
இந்த வார முகப்புத்தக இற்றை:
எல்லோருடைய வாழ்க்கையும்
ஒரு மெழுகுவர்த்தி போலதான். தூரத்தில் இருந்து பார்த்தால் ஒளி மட்டும் தெரியும்.
அருகில் சென்று பாருங்கள் அவர்கள் உருகி கண்ணீர் வடிப்பது தெரியும்.
இந்த
வார குறுஞ்செய்தி:
THE BEST LESSON OF
LIFE – ‘DON’T GET FRUSTRATED DOING CONTINUOUS WORK WITHOUT ANY RESULTS;
SOMETIMES THE LAST KEY OF THE BUNCH OPENS THE LOCK’.
ரசித்த
புகைப்படம்:
இந்த மூன்று குழந்தைகளையும் பார்க்கும்போது
உங்கள் சிறுவயதில் நீங்கள் செய்த குறும்புகளை நிச்சயம் உங்கள் மனக்கண்ணில் முன்னே
நிறுத்தி இருக்குமெனெ நம்புகிறேன். நான் பிடித்துத் தொங்கிய மாமரக் கிளைகள் எனக்கு
நினைவுக்கு வந்தது!
ரசித்த
பாடல்:
தீபம் படத்தில் கே.ஜே. யேசுதாஸ் மற்றும் எஸ்.
ஜானகி குரலில் ”பூவிழி வாசலில் யாரடி வந்தது கிளியே கிளியே”
என்ற பாடல் நான் ரசித்த,
ரசிக்கும் பாடல்களில் ஒன்று. இதோ உங்கள் ரசிப்பிற்காய் இங்கே காணொளியாய்....
ரசித்த காணொளி:
தமிழ் சினிமா தெரிந்த எல்லோருக்கும் எல்லிஸ்
டங்கனையும் தெரிந்திருக்கும். அவர் எடுத்த
ஒரு குறும்படம் – சுமார் பதினான்கு நிமிடங்கள் ஓடக்கூடியது – இதோ இன்று உங்கள்
பார்வைக்கு.... மதுரை வீரன், ஜல்லிக்கட்டு
என பல விஷயங்களைத் தொட்டுச் செல்கிறது இப்படம். சற்றே நேரமெடுத்து ரசியுங்கள்
நண்பர்களே.....
படித்ததில் பிடித்தது:
நண்பர் பால கணேஷ் அவர்கள் தனது வலைப்பூவில் எழுதிய சரிதா
பதிவுகளைத் தொகுத்து ”சரிதாயணம்
@ சிரிதாயணம்”
என்ற புத்தகமாக வெளியிட்டு
இருக்கிறார். சமீபத்திய தமிழகப் பயணத்தின் போது எழுத்தாளர் பால கணேஷ் தனது
கையொப்பமிட்டு சரிதாயணம் புத்தகத்தை எனக்குத் தந்ததில் மட்டற்ற மகிழ்ச்சி. இந்தப்
புத்தகம் வாங்கிப் படிப்பவர்கள் நிச்சயம் சிரித்து மகிழ்வார்கள் என்பதில்
சந்தேகமில்லை. கூடுதலாக அவரது வரலாற்றுப் புனைவான சிரித்திரபுரமும்
இப்புத்தகத்தில் படிக்கக் கிடைக்கும். புத்தகத்தினை வாங்கி தாங்களும் படித்து,
தங்களது நண்பர்களுக்கும் பரிசாக வழங்கலாம். புத்தகம் கிடைக்குமிடம் “ழகரம்
புத்தகச் சோலை, 8/36, ஜோதி ராமலிங்கம் தெரு, மேற்கு மாம்பலம், சென்னை – 33. புத்தகத்தின் விலை அப்படி ஒன்றும் அதிகமில்லை
நண்பர்களே – ரூபாய் 60 மட்டுமே. சிரிப்பதற்கு இவ்வளவு பணம் செலவு செய்வதில்
தப்பில்லை!
மீண்டும் ஃப்ரூட் சாலட்-உடன் அடுத்த வெள்ளியன்று சந்திக்கும் வரை…
நட்புடன்
வெங்கட்.
புது தில்லி.