செவ்வாய், 12 ஜனவரி, 2010

"ஹே, மா!"

பொதுவாக எல்லோருக்கும் தங்களது தாய்மொழி மீது அபரிமிதமான பற்று இருக்கும். மலையாளிகள், பெங்காலிகள் எங்கிருந்தாலும் தங்களது தாய்மொழியில் பேசுவதையே விரும்புகிறார்கள். ஆனால் தமிழர்களில் பெரும்பாலானோர் இதற்கு விதிவிலக்கு. அவர்கள் ஆங்கிலத்திலோ அல்லது எங்கு இருக்கிறார்களோ அந்த ஊர் பாஷையிலே பேசுகிறார்கள்.

ஒரு பெங்காலி இன்னொரு பெங்காலியை பார்த்தால் போதும், உடனே "KI KABOR? BALAWACHI?" என்று பெங்காலியிலும், மலையாளிகள் "எந்தா சுகந்தன்னே?" என்று மலையாளத்திலும் பேச ஆரம்பித்து விடுகிறார்கள். அவர்களுடன் வேற்று மொழி பேசுபவர்கள் இருந்தாலும், மற்றவர்களுக்குப் புரியாதே என்றாலும் கவலையே இல்லை அவர்களுக்கு. தமிழர்கள் இந்த விஷயத்தில் இதற்கு தலைகீழ்.

தில்லியில் நான்கு தமிழ் பேசும் நண்பர்கள் கூடிப் பேசினால், அவர்களுக்குள் சம்பாஷனைகள் பெரும்பாலும் ஹிந்தி பாஷையில் தான். அவர்களுள் ஒருவர் தமிழில் பேசினாலும் மற்றவர்கள் அவருக்கு ஹிந்தியில் தான் பதில் சொல்கிறார்கள்.

தில்லியிலேயே பிறந்து வளர்ந்த தமிழர்கள் என்றால் கூட பரவாயில்லை என ஒத்துக்கொள்ளலாம். அவர்களுக்கு தமிழ் மேல் அப்படி ஒன்றும் பற்று இருக்காது. ரவி என்று எனக்கு ஒரு நண்பர். சென்னையில் தமிழ் படித்து, பேசி வளர்ந்தவர். எனக்குப் பின் தில்லிக்கு வேலை காரணமாக வந்தவர். வந்தபின்தான் ஹிந்தி பாஷையே கற்றவர். ஆனாலும் அவருக்கு தமிழை விட ஹிந்தியின் மேல் அப்படி ஒரு காதல்.

நண்பர்கள் கூடி தமிழில் பேசும்போது அவர் ஹிந்தியிலேயே பேசுவார். நாங்கள் தமிழில் கேட்கும் எல்லா கேள்விகளுக்கும் ஹிந்தியிலேயே பதில் சொல்வார். நாங்கள் எவ்வளவோ சொல்லிப் பார்த்தும் அவர் இப்போதும் அப்படியே இருக்கிறார். அதைப் பற்றி அவரிடமே கேட்டால் அதற்கும் பதில் ஹிந்தியிலேயே சொல்வார். சரி கல்யாணம் ஆன பிறகு மனைவியிடமாவது தமிழில் பேசுவார் என்ற எதிர்பார்ப்புடன் இருந்தோம். ஆனால் அந்த ஆசையிலும் மண்தான் விழுந்தது..

கல்யாணத்திற்கு விசுவின் மணல் கயிறு "கிட்டுமணி" போல பதினாறு கண்டிஷன் எல்லாம் அவர் போடவில்லை. ஒரே ஒரு கண்டிஷன்தான் போட்டார். அது பெண்ணுக்கு ஹிந்தி பேசத் தெரிந்திருக்க வேண்டும். கல்யாணம் பண்ணிக்கிட்டு வந்த பின் அவரது மனைவி தாய்ப் பற்றோடு தமிழில் பேசினாலும் அவருக்கும் ஹிந்தியிலேயே பதில் சொல்கிறவரை என்னவென்று சொல்வது?

கடைசி கடைசியாக எங்களுக்கு ஒரு யுத்தி தோன்றியது. ஒரு நாள் நண்பர்கள் கூடிப் பேசும்போது, யாராவது அவருக்குத் தெரியாமல் திடீரென அவரது முதுகில் ஓங்கி ஒரு குத்து விடுவது என்றும் மனுஷர் அப்போது வலியில் "அம்மா" என்று கத்தித்தானே ஆக வேண்டும் என்று தீர்மானித்து ஒரு குறிப்பிட்ட நாளில் அதை நிறைவேற்றியும் விட்டோம். ஆனால் அந்த வேளையிலும் அவரிடமிருந்து வந்த சத்தமோ - "ஹே மா!". என்னே அவரது மொழிப்பற்று!

6 கருத்துகள்:

  1. who is that Hema?
    May be he is keen in learning Hindi..fluently..
    (My comment is in English.. how is that?!)

    பதிலளிநீக்கு
  2. காதுக்கு பக்கத்தில இருக்கிற முடிய புடிச்சு இழுத்துப் பாருங்க. என்ன சொல்றார்னு பார்ப்போம். :-))

    பதிலளிநீக்கு
  3. பாஷை, சம்பாஷணை, கண்டிஷன், யுக்தி, மனுஷர்... இவையெல்லாம் தமிழ் இல்லை தோழர்! :) இல்ல... தமிழ் பத்தி ஆர்வத்தோடு, ஆதங்கத்தோடு எழுதியிருக்கிற இந்தப் பதிவுல இந்த அந்நிய மொழிகளைக் கலந்திருக்கவேணாமேனு தோணுச்சு. மத்தபடி நல்ல பதிவு!

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....