புதன், 27 ஜனவரி, 2010

"டொக், டொக். டொக், டொக்" (ஒரு பக்கக் கதை)


"டொக், டொக், டொக், டொக்" என்று சத்தமாக சொல்லிக் கொண்டிருந்தார் வாசல் திண்ணையில் உட்கார்ந்திருந்த எழுபத்தைந்தை கடந்துவிட்டிருந்த கணபதி.

அதிகாலை நாலு மணிக்கே அவருக்கு முழிப்பு வந்து விட்டது. கல்யாணி இருந்திருந்தால் ஒரு கப் காப்பியாவது கொடுத்திருப்பாள். ஆறு மணியாகியும் காப்பி வரும் அறிகுறிகள் எதையும் காணோம். சமையலறையில் ஆள் நடமாடும் சலனமோ, பாத்திரங்கள் உருளும் சத்தமோ எதுவுமில்லை. "மருமகள் ஜானகி தூங்கிக்கொண்டு இருக்கா போலிருக்கு!" என்று ரோட்டை வெறித்தபடி இருந்தார்.

அவரும் கல்யாணியும் பார்த்துப் பார்த்து கட்டி ஆண்டு அனுபவித்த வீடு. அவள் காலமான பிறகு உடல் ஒடுங்கி அவரின் நடமாட்டம் குறைந்து விட்டது. காலையில் காவிரிக்கரைக்குச் சென்று காலைக் கடன்களை முடித்து குளித்து வந்தால் நாள் முழுவதும் வாசல் திண்ணையில்தான் வாசம். சாப்பிடுவது கூட அங்கேயே.

வீட்டின் உள்ளே தண்ணீர் விழுகின்ற சலனம். "சரி எப்படியும் பத்து-பதினைந்து நிமிடங்களில் காப்பி வந்து விடும்..." மனக் கணக்கு போட்டவாறே உள்ளே பார்த்தபடி "டொக், டொக், டொக், டொக்" என்று சொல்லிக் கொண் டிருந்தார் கணபதி. "வந்துண்டு தானே இருக்கேன், அதுக்குள்ளே என்ன சத்தம்?" என்றவாறே வந்து அவரெதிரே ஜானகி வைத்த காப்பியை எடுத்து பொறுமையாக குடித்தார். இளஞ்சூட்டில் இருந்த காப்பி அவருக்கு ருசிக்கவில்லை.

பதினோரு மணிக்கு அவருடைய தட்டில் சாதம், குழம்பு, பொரியல் என்று எல்லாவற்றையும் போட்டுக் கொண்டு வந்து அவரெதிரே வைத்துவிட்டு வேற ஏதாவது வேண்டுமா என்று கூட கேட்காமல் உள்ளே சென்றுவிட்ட மருமகளைப் பார்த்ததும், கல்யாணி இருந்தவரை பார்த்துப் பார்த்து அவள் கையால் தனக்கு பரிமாறிய காட்சிகள் ஏனோ அவர் மனதில் வந்து போனது. இனிமேல் சாயங்காலம் ஒரு காப்பி, இரவு ஏதோ ஒரு பலகாரம். அவ்வளவு தான். அதற்கு மேல் எதுவும் கிடையாது.

இரவு நாலு இட்லியைத் தட்டில் போட்டு அவர் முன்னாள் வைத்து விட்டு பக்கத்து வீட்டு பங்கஜத்துடன் பேசப் போய்விட்டாள் ஜானகி.

"உன் மாமனார் ஏன் 'டொக், டொக் '-ன்னு அடிக்கடி சொல்லிண்டே இருக்கார்?" என்று பேச்சோடு பேச்சாகக் கேட்ட பங்கஜத்திடம்...

"ஏன்னு தெரியல, மாமியார் போனதிலிருந்தே இப்படித்தான் அப்பப்ப "டொக், டொக்,டொக், டொக்" ன்னு சொல்லிண்டே இருக்கு. அவருக்கு பைத்தியம் பிடுச்சுடுத்தோ என்னவோ யாரு கண்டா? என்று ஜானகி சொன்னது கணபதி காதில் விழாமலில்லை.

காலையில் காப்பி வைக்கும்போது ஒரு "டொக்", மதிய சாப்பாட்டின்போது ஒரு "டொக்", சாயங்கால காப்பிக்கு ஒரு "டொக்", இரவு பலகாரம் வைக்கும் போது ஒரு "டொக்" என்ற சத்தத்துடன் கடனே என்று வைத்துவிட்டு போகிற மருமகளை நினைத்து மனதுக்குள் சிரித்தபடியே "டொக், டொக், டொக், டொக்!" என்று மீண்டும் சத்தமாக சொல்ல
ஆரம்பித்தார் கணபதி.

17 கருத்துகள்:

  1. நெஞ்சை நெகிழவைத்த கதை. பாராட்டுகள்.

    ரேகா ராகவன்.

    பதிலளிநீக்கு
  2. மிக நன்றாக உள்ளது...

    இது கன்னி முயற்சி என்பதே தெரியவில்லை... ஏதோ ஒரு தேர்ந்த எழுத்தாளர் எழுதியதை போலவே உள்ளது...

    மென்மேலும் இது போன்ற படைப்புகளை தருவதற்கு வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  3. ம்.. :(

    வீட்டில் அவரிடம் மற்றவர்கள் பேசும் வார்த்தையும் டொக். டொக்க்கு டொக்கிலேயே பதில் சொல்றார் போல மனுசன்..

    பதிலளிநீக்கு
  4. நல்ல கதை வாழ்த்துக்கள்; தொடர்ந்து அவ்வபோது சிறுகதை எழுதுங்கள்

    பதிலளிநீக்கு
  5. உங்களுக்கு நன்கு கதை விடத்தான் தெரியும் என்று எண்ணியிருந்தேன். நன்றாக கதையும் எழுதுகிறீர்கள்.

    கதையை படித்ததும் மனதிற்குள் பல இனம் புரியாத உணர்ச்சிகள். எதிர்காலத்தை நினைத்து பயமா! இல்லை, அந்தப் பெரியவரை எண்ணி வருத்தமா! புரியவில்லை.

    அந்தப் பெரியவர் ஒருவேளை தொலை தந்தி சேவையில் பணியாற்றி ஓய்வு பெற்று இருந்திருப்பாரோ? இறந்துபோன மனைவிக்கு அவ்வப்போது செய்தி அனுப்பிக்கொண்டு இருப்பார் போலும்.

    பதிலளிநீக்கு
  6. i like this story its good but i dont know to write comments like previous sorry but really a nice story?

    பதிலளிநீக்கு
  7. ரொம்ப நல்லா வந்திருக்கு.. வயசானா இந்த கஷ்டம் வேற இருக்கா.. தேவுடா

    பதிலளிநீக்கு
  8. நல்ல கதை ,நெஞ்சை டச் பண்ணிருச்சு
    வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  9. மனைவியின் மரணத்திற்குப் பிறகு பெரும்பாலான வீடுகளில் நடந்தேறும் நிகழ்வை மிக அருமையாக தோலுரித்துக் காட்டியிருக்கிறது, இந்தச் சிறுகதை. அருமை!

    பதிலளிநீக்கு
  10. "நாம், ஏதோ இவை நடப்பதே தெரியாததுபோல் ஒரு மாயையில் மிதப்பகதாக எனக்கு தோன்றுகிறது. முதியோர் இல்லங்கள் நாளுக்குநாள் பெருகிவரும் நிலையில் , இந்த நிலைமைக்கு, நமது விருப்பமில்லாமல், நாமும் ஒரு காரணமாகி விடக்கூடாது என்பதே யாவரின் விருப்பமாய் இருக்கவேண்டும் , என்று ஆசைப்படுகிறேன்."

    நிஜங்களை, யதார்த்தங்களை, படம் பிடித்துக் காட்டுவதில் வல்லமை தெரிகிறது. வாழ்க , வளர்க.

    மந்தவெளி நடராஜன்.

    பதிலளிநீக்கு
  11. முதல் கதை என்று நம்ப முடியவில்லை. அருமையாக இருந்தது. மனதைத் தொடும் முடிவு.

    பதிலளிநீக்கு
  12. டொக்..டொக்.. என்ற சத்தம் கேட்டதும் சாப்பாட்டுக்கு ஏதோ ‘மோர்ஸ்’ குறீஈடோ என்று நினைத்தேன்.பாவம் நம்ம கணப்தி சாரின் இயலாமையின் வெளிப்பாடு அது என்று அறிந்ததும் என் கண்கள் குளமாயின.

    பதிலளிநீக்கு
  13. டொக்..டொக். டொக்..தந்திக் குறியீடு மாதிரி .. அந்திமக்காலத்தை நோக்கி விரைந்து நகரும் காலக்கணக்கீடு..

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....