வியாழன், 2 ஏப்ரல், 2020

வேதமடி நீ எனக்கு – மகரிஷி


அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம்.  இந்த நாளை, பூமி பற்றி அதர்வண வேதத்தில் வரும் ஒரு ஸ்லாகத்தின் அர்த்தத்துடன் ஆரம்பிக்கலாம்.

நீ பெரியவள், நீ பெரிய வசதியுள்ளவள். உனது குலுக்கலும் கலக்கலும் நடுக்கமும் மகத்தானவை. நாங்கள் எழும்போதும் உட்காரும் போதும், நிற்கும்போதும், தாங்கும்போதும், தரையில் கால்கள் தடுமாறாமல் இருக்க வேண்டும். நிலமே உன்னிடத்தில் இருப்போர், நோய்கள் விலகி, துன்பங்கள் விலகி , தீர்க்க ஆயுளுடன் இருக்க நாங்கள் பணிசெய்வோம்! தாயே! தரணி மாதாவே! நீ என்னை க்ஷேமமாக வைத்திரு. செல்வத்திலும் புகழிலும் நிலைக்க வை. [பூமி (12-1, 18, 28, 62, 63)]


****

கொரோனா தந்த இந்த வீட்டுச் சிறை நாட்கள் எல்லோரையும் கொஞ்சம் படுத்திக் கொண்டிருக்கிறது. பலரும் இணைய வழி, அலைபேசி வழி எதையாவது அனுப்பிய வண்ணமே இருக்கிறார்கள் – சில வாட்ஸப் குழுக்களில் சண்டை வேறு நடக்கிறது – இதை அனுப்பலாம், இதை அனுப்பக்கூடாது என தொடரும் யுத்தம் – வீட்டுக்கு வீடு என்பது போல குழுவுக்குக் குழு யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.  நல்ல பயனுக்காக ஆரம்பிக்கப்பட்ட வாட்ஸப் குழுக்கள் தட்டுத் தடுமாறிக் கொண்டிருக்கின்றன – ஒவ்வொரு நாளும் காணொளிகளும், தகவல்களும், மீம்ஸ்களும் மழைபோல பொழிந்து கொண்டே இருக்கின்றன.  அதுவும் ஒரே காணொளி எல்லா குழுக்களிலும் வருகிறது – அதுவும் சில குழுக்களில் ஒரே காணொளி வெவ்வேறு பயன்பாட்டாளரால் மீண்டும் அதே குழுவில் வருகின்ற போது எரிச்சல் மட்டுமே மிச்சமாகிறது.  இரண்டு நாட்களாக அலைபேசியைப் பயன்படுத்துவதை நான் மிகவும் குறைந்திருக்கிறேன்.  புத்தகங்களை படிக்க ஆரம்பித்து இருக்கிறேன் – கிண்டில் வழியேயும், புத்தகமாகவும்.  அப்படிப் படித்த ஒரு புத்தகத்தினைப் பற்றி இன்றைக்கு பார்க்கலாம்!



சமீபத்தில் சென்னையில் புத்தகக் கண்காட்சி நடைபெற்ற சமயத்தில் தில்லி நண்பர் ஒருவர் சென்னை சென்றிருந்தார் – அலுவல் சம்பந்தமாக! அவர் புத்தகக் கண்காட்சிக்குச் சென்றபோது அங்கேயிருந்து அலைபேசியில் அழைத்து புத்தகங்கள் ஏதும் வாங்கிக் கொண்டு வரவேண்டுமா எனக் கேட்டிருந்தார்.  நான் சொன்ன புத்தகங்கள் கிடைக்காததால் வாங்கவில்லை. அவராகவே ஒரு புத்தகம் வாங்கிக் கொண்டு வந்திருந்தார். அவர் படித்து முடித்ததும் என்னிடம் படிக்கத் தந்தார் – அவர் தந்து சில நாட்கள் ஆனபோதும் ஏனோ படிக்கவே தோன்றவில்லை.  அவர் வாங்கிக் கொண்டு அந்த புத்தகம் எழுத்தாளர் மகரிஷி அவர்களின் “வேதமடி நீ எனக்கு” என்ற தலைப்பு கொண்ட புத்தகம்.  மகரிஷி என்றதும் எனக்கு வேதாத்ரி மகரிஷி நினைவுக்கு வந்தார். அவர் எழுதிய புத்தகம் இல்லை இது. இந்தப் புத்தகத்தினை எழுதிய மகரிஷி தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணியாற்றிய திரு பாலசுப்ரமணியன் என்ற இயற்பெயரைக் கொண்டவர்.  இது வரை நான் இவரது புத்தகங்களைப் படித்ததில்லை.  அவரைப் பற்றி இணையத்தில் தேடும்போது இப்படியான அறிமுகம் கிடைத்தது:

தமிழ் இலக்கிய உலகில் தமிழ் வாசகர்களிடையே நன்கு அறிமுகமான பெயர் மகரிஷி. மனித வாழ்வை மேம்படுத்தும் தமிழ்ப் புதினங்களை ஐம்பதாண்டுகளாக வாசகர்களுக்குத் தந்து கொண்டிருக்கும் எழுத்துச் சித்தரான இவர் இலக்கிய உலகில் தனக்கென ஒரு இடத்தைத் தக்க வைத்துக் கொண்டவர். மனித வாழ்க்கையை படம் பிடித்துக் காட்டும் நாவல்கள் மட்டுமின்றி சிறுகதைகள், கட்டுரைகள் எழுதி தனிமுத்திரை பதித்தவர். மரபுவழிச் சிந்தனாவாதியான இவரின் பல படைப்புகள் கல்லூரிகளில் பாடமாகவும், பல்கலைக் கழகங்களில் ஆய்வுப் பட்டங்களுக்கு கருப்பொருளாகவும் அமையப் பெற்றவையாகும். “வேதமடி நீ எனக்கு என்ற இந்த வாழ்வியல் புதினம், திரு. மகரிஷி அவர்களின் 70வது. படைப்பு ஆகும். இந்த நூல் தமிழ்வாசகர்களுக்கு ஒரு நல்ல விருந்து.

சரி அலைபேசியை அப்புறம் வைத்து விட்டு இந்தப் புத்தகத்தினை படித்து விடலாம் என எடுத்த போது முன்னுரையிலும் தெரிந்தது – இப்புத்தகம் திரு மகரிஷி அவர்கள் எழுதிய 70-ஆவது புத்தகம் என! நிறைய வாசித்தவர்களான ஜீவி ஐயா போன்றவர்கள் என்னை மன்னிக்க… என்னைப் போன்றவர்கள் படித்த புத்தகங்கள் மிகக் குறைவே. அதுவும் பிடித்த சில எழுத்தாளர்களை மட்டுமே வாசிக்கிறவர்கள்.  அதர்வண வேதத்தின் பெருமைகளையும், மந்திர சக்தியால் பல நல்ல விஷயங்களைச் செய்ய முடியும் என்பதையும் சிறப்பான கதை மூலம் சொல்லிச் செல்கிறார் ஆசிரியர்.  மந்திர சக்தி எங்கே தவறாக பயன்படுத்தப் படுமோ என்ற பயத்திலேயே பல விஷயங்களை அடுத்த தலைமுறைக்குக் கடத்தாமல் விட்டு விட்டார்களோ என்ற ஐயமும் எனக்கு ஏற்பட்டது.   ஒரு சிலர் இந்த மந்திரங்களைப் பயன்படுத்தி பில்லி, சூனியம் போன்ற கெடுதல்களையும், அடுத்தவர்களுக்குத் தீங்கு விளைவிக்கும் செயல்களையும் செய்வதையும் கதையிலேயே சொல்கிறார் ஆசிரியர். 

மங்கம்மா பாட்டி என்ற மூதாட்டி – தான் தனது அக்காவிடமிருந்து கற்ற மந்திர சக்தி கொண்டு நல்ல செயல்களை மட்டுமே செய்கிறார் – அதுவும் எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல் செய்கிறார் – மந்திர சக்தியை தனது சொந்த வாழ்க்கையை உயர்த்திக் கொள்ள அவர் ஒரு போதும் பயன்படுத்துவதில்லை! அதில் அவருக்கு ஈடுபாடும் இல்லை.  அவரும் அவருடைய மகள் வழி பேத்தி மட்டுமே அவர்கள் குடும்பத்தில்.  மகளும் மருமகனும் ஒரு விபத்தில் இறக்க சிறு குழந்தையாக இருந்த பேத்தியை கஷ்டப்பட்டு வளர்க்கிறார்.  திருமணங்களில் பக்ஷணங்கள் செய்து கொடுப்பதில் வரும் வருமானத்தில் தான் ஓடுகிறது வாழ்க்கை.  பன்னிரெண்டாம் வகுப்பு வரை படித்து வீட்டில் சும்மா இருந்த பேத்தியான கோமு, மில் வேலைக்குச் செல்கிறார்.

அங்கே கோமு என்ன பிரச்சனைகளைச் சந்திக்கிறார், மில் முதலாளிக்கு யாரோ செய்த பில்லி சூனியத்தால் கால்கள் செயலிழந்து போயிருக்க, தனது பாட்டி மூலம் அவரது கால்களைச் சரியாக்குகிறார், அதன் பின்னர் மில்லில் இவருக்குக் கிடைக்கும் பதவி உயர்வு, மில்லில் இருக்கும் வில்லன் ஆன தர்மாவின் உபத்திரவங்கள், மில் முதலாளியின் அப்பா செய்த தவறுகள், முதலாளிக்கு கோமு மீது உண்டான காதல், வேதங்கள் கற்றுக் கொள்ளும் கோமு, வேதங்கள் வழி நல்ல விஷயங்களைச் செய்யும் மங்கம்மா பாட்டி என பல விஷயங்களை கதையில் வருகின்றது.  இதற்கிடையே மங்கம்மா பாட்டியின் இளமைக் கால கதையும் தெரிய வருகிறது – மன்னார்குடியிலிருந்து ஒரு இரவில் தனது அக்கா மற்றும் பெண்ணுடன் யாருக்கும் தெரியாமல் வெளியேறியது, அதற்கு என்ன காரணம், சொந்தமான ஜனகன் எனும் கதாபாத்திரம், அவருடைய பிரச்சனைகள், மந்திர சக்திகள் மூலம் அதனை அவர் எதிர்கொள்ளும் விதம் என பலவும் கதையில் வருகிறது. 

கோமு மீது ஜனகனுக்கும் ஆசை, முதலாளி கேஷவ்-க்கும் ஆசை.  ஜனகனின் பிரச்சனைகள், தர்மாவினால் கோமுவுக்கும், கம்பெனி முதலாளிகளுக்கும் உண்டான பிரச்சனைகள், அவற்றை தீர்க்க முடிந்ததா என்பதையும் கடைசியில் கோமு யாரைத் திருமணம் செய்து கொண்டார் போன்ற பல முடிச்சுகளை கதையில் கொஞ்சம் கொஞ்சமாக விடுவித்துக் கொண்டே வருகிறார் ஆசிரியர்.  நடுவில் வேதம் பற்றியும் நிறைய விஷயங்களை வாசகர்களுக்குச் சொல்லிக் கொண்டு வருகிறார்.  சில பகுதிகள் சற்றே நீளமாகப் போவது போல இருந்தாலும், ஸ்வாரஸ்யத்திற்குக் குறைவில்லை.  240 பக்கங்கள் கொண்ட இந்தப் புத்தகத்தின் விலை 150/- ரூபாய். செண்பகா பதிப்பகத்தின் வெளியீடு.  இவரது கதைகள் திரைப்படமாகவும் எடுக்கப்பட்டு இருக்கிறது என்கிற தகவலை விக்கி மூலமாகவே தெரிந்து கொண்டேன் – அப்படி எடுக்கப்பட்ட படங்கள் – பத்ரகாளி, வட்டத்துக்குள் சதுரம், நதியைத் தேடி வந்த கடல், புவனா ஒரு கேள்விக்குறி – போன்றவை.  படங்களைக் கேள்விப்பட்டிருந்தாலும், எழுத்தாளரைத் தெரிந்து கொள்ளாமல் இருந்திருக்கிறேன் என்பதில் வெட்கப்படுகிறேன்!

புத்தகம் வாசிக்க நினைப்பவர்கள், இந்தப் புத்தகத்தினை இணையம் வழியேயும் வாங்கிப் படிக்கலாம்.  நண்பர்களே, இந்த நாளின் பதிவு பற்றிய உங்கள் கருத்துகளை பின்னூட்டத்தில் சொல்லுங்களேன். விரைவில் வேறு ஒரு பதிவுடன் மீண்டும் [சி]ந்திப்போம்...

நட்புடன்

வெங்கட்
புது தில்லி

48 கருத்துகள்:

  1. நல்ல சிந்தனையோடு
    சிறந்த அறிமுகம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சிந்தனை உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி யாழ்பாவணன்.

      நீக்கு
  2. மகரிஷியின் கதைகள் எனக்கு ரொம்பவும் பிடிக்கும்.  நான் அவரின் அதுவரையில் காஞ்சனா என்கிற கதைதான் முதலில் படித்தேன்.   திரைப்படமாக வந்த புவனா ஒரு கேள்விக்குறி, வட்டத்துக்குள் சதுரம் போன்றவை அவர் கதைகளே.  மகரிஷியின் கதைகள் ஒரு தொகுப்பாக எங்காவது கிடைக்கிறதா என்று தேடிக்கொண்டிருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இனிய காலை வணக்கம் ஸ்ரீராம்.

      அதுவரையில் காஞ்சனா - தேடிப் பார்க்கிறேன்.

      நான் படித்த அவரது கதை - ஒரே ஒரு கதை வேதமடி நீ எனக்கு மட்டுமே. மற்ற கதைகள் வாசிக்க வேண்டும் எனத் தோன்றுகிறது.

      நீக்கு
    2. விபத்தில் சிக்கி உயிரிழக்கும் காஞ்சனா எனும் பெண்ணின் மூளை வேறொரு பெண்ணுக்கு பொருத்தப்படுகிறது.  அதன்பின்னர் அந்தப்பெண் காஞ்சனாவாகவே இயங்கி, காஞ்சனாவின் வேலைகளை முடிக்கிறாள்.  அவளுக்காகக் காத்திருக்கும் அவள் காதலனிடம் அவள் சொல்வதுதான் கதையின் தலைப்பு.  தன்னை உணர்ந்து தானாக மாறும் வரையில் அவள் காஞ்சனாவாகவே (அதுவரையில் காஞ்சனா) இருப்பாள். சீக்கிரம் மாறிவிடுவேன் என்று உறுதி அளிப்பாள்.  

      நீக்கு
    3. இன்னும் ஓரிரு புத்தகங்கள் படித்திருக்கிறேன்.  தலைப்பு நினைவில்லை.

      நீக்கு
    4. கதை சுருக்கம் - தந்ததற்கு நன்றி ஸ்ரீராம். இணையத்தில் கிடைக்கிறதா எனப் பார்க்க வேண்டும். கதை சுருக்கம் ஸ்வாரஸ்யமாக இருக்கிறது.

      நீக்கு
    5. தலைப்பு - நினைவு வந்தால் சொல்லுங்கள் ஸ்ரீராம்.

      நீக்கு
  3. அன்பு வெங்கட்,
    இனிய காலை வணக்கம்.
    மகரிஷி சேலத்தில் இருந்தார்.
    அவரது ஒரு நதி கடலைத்தேடி படம் ஜெயலலிதா
    நடித்த கடைசிபடம் என்று நினைவு.
    படம் வெளிவந்ததா என்றும் தெரியாது.
    அந்த நாட்களில் நல்ல பிரபலம். கதைகள் தொடராக வந்திருக்கின்றன.
    இந்தக் கதை சற்றே நீளம் என்று நினைக்கிறேன்.
    நல்லபடியாக விமரிசனம் செய்திருக்கிறீர்கள்.

    அயர்வில்லாமல் படிக்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இனிய காலை வணக்கம் வல்லிம்மா....

      ஆமாம் சேலத்தில் இருந்தார் என அவரைப் பற்றி படித்தேன். இந்தக் கதை நீங்கள் சொல்வது போல சற்றே நீளம் தான். கொஞ்சம் இழுக்கிறாரோ என்றும் தோன்றியது.

      நீக்கு
  4. வணக்கம் சகோதரரே

    முதலில் வேத வாசகம் சிறப்பு. நம்மை தாங்கும் பூமி மாதாவை நாம் என்றும் போற்றி துதிக்க வேண்டும்.

    தாங்கள் கூறிய எழுத்தாளர் மகரிஷி அவர்களின் புவனா ஒரு கேள்வி குறி கதை முன்பு படித்திருக்கிறேன். இவரின் படைப்புகளும், பிற எழுத்தாளர்களின் நிறைய கதைகளும் மாலைமதியில் வெளிவந்தது. பத்ரகாளி திரைப்படமும் நன்றாக இருக்கும். பார்த்திருக்கிறேன்.

    ஒவ்வொருவருக்கும் ஒரு பாணி.. அதன்படி இவரது எழுத்துகளை அப்போதெல்லாம் விரும்பி படித்துள்ளேன். முன்பு ஒரு புத்தகத்தை ஆரம்பித்து விட்டால் அதை முடிக்காமல் கீழே வைக்க மாட்டேன். பிறகுதான் குடும்ப சூழல் காரணமாக அப்படியெல்லாம் படிப்பதற்கு இடங்கொடுக்காமல் போய் விட்டது.

    இந்த பதிவில் தாங்கள் கூறிய மகரிஷி யின் கதை சுருக்கமும் நன்றாக இருக்கிறது. படிக்கும் ஆசை வருகிறது. கால நேரங்கள் ஒத்து வர வேண்டும். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இனிய காலை வணக்கம் கமலா ஹரிஹரன் ஜி.

      வேத வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

      ஒவ்வொரு ஆசிரியருக்கும் ஒவ்வொரு பாணி. உண்மை தான். இவரது புத்தகங்களை நான் படித்ததில்லை. முதலாவதாக படித்ததே இது தான்.

      இவரது மற்ற ஆக்கங்களையும் படிக்க வேண்டும். நீங்கள் சொல்வது போல கால நேரங்கள் ஒத்து வரும்போது படிக்கலாம்.

      நீக்கு
  5. பதில்கள்
    1. உங்களுக்கும் இந்தப் பதிவு பிடித்ததில் மகிழ்ச்சி தனபாலன்.

      நீக்கு
  6. வாட்சப்பில் நிறைய க்ராப்தான் crap வருகிறது. முக்கியமான விஷயங்களும் வருவதால் பல குழுக்களிலிருந்து வெளியேறாமல் இருக்கிறேன்.

    நான் மகரிஷி அவர்கள் எழுதிய நாவலை, மாலைமதி போன்றவற்றில்தான் படித்த நினைவு.

    கொரோனா வைரஸ்தான் பாவம்..உங்களை இந்த மாதிரி புத்தக விமர்சனமெல்லாம் எழுத வைக்கிறதே..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இனிய காலை வணக்கம் நெல்லைத் தமிழன்.

      வாட்சப்பில் நிறைய Crap தான் வருகிறது என்பது நூற்றுக்கு நூறு உண்மை.

      மாலைமதி - இன்னும் வெளிவருகிறதா எனத் தெரியவில்லை. கல்லூரி காலங்களில் படித்ததோடு சரி. தில்லி வந்த பிறகு நான் பார்த்ததே இல்லை.

      கோரோனா வைரஸ் பாவம் - ஹாஹா... புத்தக விமர்சனம்/வாசிப்பனுபவம் முன்பும் எழுதி இருக்கிறேன் நெல்லைத் தமிழன். வாசிப்பனுபவம்/படித்ததில் பிடித்தது என நிறைய பதிவுகள் இப்பக்கத்தில் உண்டு!

      நீக்கு
  7. நிலமே உன்னிடத்தில் இருப்போர், நோய்கள் விலகி, துன்பங்கள் விலகி , தீர்க்க ஆயுளுடன் இருக்க நாங்கள் பணிசெய்வோம்! தாயே! தரணி மாதாவே! நீ என்னை க்ஷேமமாக வைத்திரு. செல்வத்திலும் புகழிலும் நிலைக்க வை..

    இன்றைய ஸ்லோகம் கண்டு மகிழ்ச்சி...

    வாழ்க வையகம்.. வாழ்க வளமுடன்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இன்றைய ஸ்லோகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி துரை செல்வராஜூ ஐயா.

      நலமே விளையட்டும்.

      நீக்கு
  8. கொரோனா பரவும் இக்காலத்தில் பூமித் தாயை வணங்கி போற்றும் வேத ஸ்லோகத்தை எடுத்துரைத்தது சரியே. ஓடிக்கொண்டே இருந்த உங்களுக்கு ஓடாமல் ஒரு கால் கட்டு. சாப்பாடு எப்படி? 

    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓடிக் கொண்டே இருந்த உங்களுக்கு ஓடாமல் ஒரு கால் கட்டு - :)))

      சாப்பாடு எப்படி? - எப்போதும் போல ஸ்வயம் பாகம்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜெயக்குமார் சந்திரசேகரன் ஐயா.

      நீக்கு
  9. கொரோனா கொடுத்த கட்டாய ஓய்வில் வாசிப்பு அனுபத்தை அதிகமாகவே நீட்டிக்கலாம்.
    மகரிஷி அந்த கால எழுத்தாளர். அவரின் குடும்ப நாவல்கள் சிறப்பாக இருக்கும். அவரின் நாவல்களை லைப்ரரியில் தேடி எடுத்து வந்து படித்ததுண்டு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசிப்பு அனுபவம் - ஆமாம் மனோம்மா... இந்த நாட்களில் நிறைய வாசித்துக் கொண்டிருக்கிறேன்.

      உங்கள் அனுபவங்களையும் சொன்னதில் மகிழ்ச்சி.

      நீக்கு
  10. பதில்கள்
    1. பதிவு உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  11. மகரி ஹூ என்றுக்கேட்கக்கூடியவன்நான்

    பதிலளிநீக்கு
  12. மஹாபாரதத்தில் திரோபதி என்னும் மாபெரும் சக்தியை திரோணருக்கு எதிராக துருவதர் அதர்வணவேதம் கொண்டு உருவாக்கினார் என்று சொல்வார்கள். இப்புத்தகம் உள்ள கிண்டில் சுட்டியையும் புத்தக அரிமுகங்களில் வழங்கினால் நலமாக இருக்கும் ஐய்யா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்தப் புத்தகம் Paper Back தான் அரவிந்த். கிண்டிலில் இருப்பதாகத் தெரியவில்லை.

      கிண்டில் புத்தகம் பற்றி எழுதினால் நிச்சயம் சுட்டி தருகிறேன்.

      நீக்கு
  13. விமர்சனம் அருமை.
    கொரோனாவிலிருந்து மக்களை இறைவன் காக்கட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விமர்சனம்/வாசிப்பனுபவம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கில்லர்ஜி.

      இறைவன் அனைவரையும் காக்கட்டும்.

      நீக்கு
  14. //இரண்டு நாட்களாக அலைபேசியைப் பயன்படுத்துவதை நான் மிகவும் குறைந்திருக்கிறேன். //

    ஹா ஹா ஹா நீங்கள் மட்டுமில்லை, இப்போ ஆரைக் கேட்டாலும் நியூஸ் பார்ப்பதை விட்டுவிட்டேன் என்கின்றனர்.. அலுத்தே விட்டது, மனதும் கஸ்டமாகிறது.... மிகவும் கூடித்தான் குறையப்போகிறது கொரொனா.. எங்கள் நாடு இப்போ ஏறுவரிசையில் நிற்கிறது...

    டெல்லியில் இன்னமும் வேர்க் பண்ணுகிறார்களோ.. அங்கு மூடவில்லையோ அனைத்தையும்... உங்களுக்கு உணவு வாங்க பிரச்சனை இல்லையே...

    இந்நேரம் தான் நல்ல தருணம், கதைப்புத்தகங்கள் படிக்க...

    நானும் அதை நினைக்கிறேன், அதைவிட என்னிடம் ஏராளமான தையல் வேலைகள் நிரம்பியிருக்குது... வெர்க் போகும்போதெல்லாம் நினைப்பேன், எப்போ லீவு கிடைக்கும்.. இதை எல்லாம் முடிக்கலாம் என, ஆனா இப்போ லீவில ஒண்ணுமே செய்ய மனம் வருகுதில்லை.. ஜாலியாகப் பொழுதைக் கழிக்கவே மனம் விரும்புது.

    வேதமடி நீ எனக்கு.. பெயரே படிக்கத் தூண்டுது, பார்க்கலாம்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் பலரும் நியூஸ் பார்ப்பதில்லை. பல நாடுகளும் இப்போது தவித்துக் கொண்டிருக்கிறது அதிரா.

      அலுவலகத்திற்கு கடந்த ஐந்து நாட்களாகச் செல்லவில்லை. அவ்வப்போது இணைய வழி வேலை செய்வதோடு சரி. சில அத்தியாவசிய அலுவலகங்கள் இன்னும் வேலை செய்கின்றன. உணவு பிரச்சனை இல்லை அதிரா. நானே சமைத்துக் கொள்வதால் பிரச்சனை இல்லை. அவ்வப்போது காய்கறி, தேவையான பொருட்களை வாங்க மட்டுமே வெளியே செல்கிறேன். தங்கள் விசாரிப்பிற்கு நன்றி.

      தையல் வேலைகள் - நல்லதொரு பொழுதுபோக்கு. இந்த நாட்களை பயனுள்ளதாக மாற்றிக் கொள்வோம்.

      நீக்கு
  15. மகரிஷி சேலத்தில் மின்சார போர்டில் வேலையில் இருந்தார். Salem Erode Electricity System என்ற பெயரில் அந்த நிருவனம் இருந்தது. நான் அப்பொழுது சேலத்தில் உயர் நிலைப் பள்ளியில் 10-வது வகுப்பு வாசித்துக் கொண்டிருந்தேன். ஒரு நாள் அவரது அலுவலகத்தில் சந்தித்துப் பேசியும் இருக்கிறேன். இந்த 'வேதமடி நீ எனக்கு' குமுதத்தின் மாலைமதி மாத இதழில் வெளிவந்த கதை.
    அப்பொழுது மாலைமதியின் விலை. 1ரூ.

    கதையை அருமையாக உங்கள் வார்த்தைகளில் கோர்வையாகச் சொல்லியிருக்கிறீர்கள். அந்தக் காலத்து மகரிஷியின் புகைப்படம் என்னிடம் இருக்கிறது. எப்படி உங்களுக்கு அனுப்புவது என்று தெரியவில்லை. EB Editors & Readers வாட்ஸாப் குழுமத்திற்கு அனுப்பியிருக்கிறேன். பார்த்துக் கொள்ளுங்கள், வெங்கட்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மாலைமதியின் அப்போதைய விலை 1 ரூ! இப்போதும் வருகிறதா எனத் தெரியவில்லை. வந்தால் என்ன விலை என்பதும் தெரிந்து கொள்ள ஆசை! இத்தனை வருடங்களில் எவ்வளவு உயர்ந்திருக்கிறது எனத் தெரிந்து கொள்ளலாமே!

      புகைப்படம் அங்கே பார்த்தேன் ஜீவி ஐயா. படம் அனுப்பி வைத்ததற்கு நன்றி.

      நீக்கு
  16. 'கிருமி சம்ஹார சூக்தம்' என்று அதர்வன வேதத்தில் ஒரு மந்திரப் பகுதி உண்டு. மந்திரம் ஒலிக்க சமீபத்தில் வாட்ஸாப் குழுமம் ஒன்றில் பகிர்ந்து கொண்டிருந்தார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கிருமி சம்ஹார சூக்தம் - ஆமாம் எனக்கும் வாட்ஸப் வழி வந்தது ஜீவி ஐயா.

      நீக்கு
  17. மகரிஷி!? இந்த பேரை இப்பதான் கேள்விப்படுகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹா... எனக்கும் புதியவர் தான் ராஜி. இப்போது தான் தேடினேன் அவர் எழுத்துகளைப் பற்றி.

      நீக்கு
  18. அருமையான வாசகம் வெங்கட்ஜி!

    மகரிஷி கதை வாசித்த நினைவு. வெகு வருஷங்களுக்கு முன். நிழலான நினைவுகள். மீண்டும் வாசிக்க வேண்டும். ஒரு வித்தியாசமான கதை வாசித்த நினைவு மூளை மாற்றி அறுவை சிகிச்சை....அந்த மூளை பொருத்தப்பட்ட பெண் இறந்த பெண்ணைப் போலவே எல்லாமும் செய்வாள் என்று...வரும் என்று நினைக்கிறேன். இந்த வேதமடி நீ எனக்கு எதிலும் தொடராக வந்ததோ...நீங்கள் சொல்லியிருப்பதைப் பார்த்தப்ப ஒன்றிரண்டு பகுதிகள் கொஞ்சம் வாசித்த நினைவு...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மூளை மாற்றி அறுவை சிகிச்சை - ஸ்ரீராம் ஒரு பின்னூட்டத்தில் எழுதி இருக்கும் கதை எனத் தோன்றுகிறது - அது வரையில் காஞ்சனா என்று மேலே சொல்லி இருக்கிறார் கீதாஜி.

      வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

      நீக்கு
  19. சாய்ந்தாடு அம்மா சாய்ந்தாடு மகரிஷியின் கதை.
    எனக்கு வேதாத்திரி மகரிஷி தெரியும் முன் தெரிந்தவர் மகரிஷிதான் 73, 74ம் வருடங்களில் மலைமதி மாத புத்தகம் வாங்குவேன் அதில் இவர் கதைகள் படித்து இருக்கிறேன்.
    உங்கள் விமர்சனம் நன்றாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சாய்ந்தாடு அம்மா சாய்ந்தாடு - இதுவும் கேள்விப்பட்டதில்லை கோமதிம்மா...

      வேதாத்ரி மகரிஷி என்றாலே எனக்கு உங்கள் நினைவு வரும் மா...

      மாலைமதி - அப்பா அலுவலகத்திலிருந்து க்ளப் மூலம் புத்தகங்கள் வரும் - அப்படி வந்தால் படிப்பதோடு சரி. நூலகத்தில் இந்த புத்தகங்களை எல்லாம் படிக்க எங்களுக்கு அனுமதித்ததில்லை.

      நீக்கு
  20. நூல் விமர்சனம் அருமையாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனது வாசிப்பனுபவம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி சொக்கன் சுப்ரமணியன்.

      நீக்கு
  21. நல்ல புத்தக அறிமுகம் .
    எனது கையில் பெருமாள் முருகனின் கழிமுகம். இதற்கு முன் மலையாள நாவல் கயிறு மூன்று பாகம் :) தமிழில் தகழி சிவசங்கரன் பிள்ளை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்களிடம் இருப்பதாகச் சொல்லி இருக்கும் புத்தகங்கள் - நன்று. கயிறு, கழிமுகம் இரண்டுமே வாசித்ததில்லை.

      தங்களது வருகைக்கும் கருத்த்துப் பகிர்வுக்கும் நன்றி மாதேவி.

      நீக்கு
  22. இந்தப் பதிவையே இப்போத் தான் பார்க்கிறேன். நல்லதொரு விமரிசனம். எதையோ தேடியதில் இது கிடைத்தது. இரண்டு நாவல்களுமே படித்திருக்கிறேன். புவனா ஒரு கேள்விக்குறியில் கதையில் இருந்ததை விடத் திரைப்படத்தில் மாற்றி இருப்பார்கள். ரஜினிக்காக வில்லன் கதாபாத்திரத்தை நல்லவனாகவும், நல்லவனான நாகராஜன் பாத்திரத்தை வில்லத்தனமாயும் காட்டி இருப்பார்கள். சிவகுமார் தான் "நாகராஜன்" ஆக நடிச்ச நினைவு. அதற்குப் பின்னர் ரஜினியோடு சேர்ந்து நடிக்க மறுத்துவிட்டார் என்றும் சொல்வார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நாவல் பற்றிய மேலதிகத் தகவல்களுக்கு நன்றி கீதாம்மா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....