வியாழன், 9 ஏப்ரல், 2020

கிண்டில் வாசிப்பு – மிஸ்டர் கிச்சா – க்ரேஸி மோகன்




அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் துவங்கலாம்.

தேடிச் சென்று எவரிடத்திலும் தன் மதிப்பை உணர்த்த வேண்டிய அவசியமில்லை. தெருவில் கூவி விற்குமளவிற்கு தங்கத்தின் தரமும் ஒரு போதும் குறைந்ததில்லை.
 
***

மிஸ்டர் கிச்சா – க்ரேஸி மோகன்



க்ரேஸி மோகன் – இவரை ரசிக்காதவர் யார்? இவரது நாடகங்கள், திரைப்படங்களுக்காக இவர் எழுதிய வசனங்கள், இவரது வெண்பாக்கள் என அனைத்துமே ரசிக்கக் கூடியவை.  இந்த கட்டாய ஓய்வில் படிக்க இவரது ஒரு புத்தகம் கிடைத்தால் – வரிக்கு வரி சிரிப்பு தான்.  வீட்டில் தனியாக இருப்பதில் ஒரு வசதி! சப்தமாக சிரித்துக் கொள்ளலாம்! யாரும் எதுவும் கேட்கப் போவதில்லை! வெளியே யாருக்கும் கேட்காது என்ற தைர்யத்தில் சப்தமாக சிரிக்கலாம்! கேட்டால் – பாவம் தனியாக இருந்து எதோ ஆயிடுச்சு போல என நினைத்துக் கொண்டாலும் ஆச்சர்யப் படுவதற்கில்லை!  இந்தப் புத்தகத்தினை வாசித்த போது இப்படித்தான் வரிக்கு வரி சிரித்துக் கொண்டிருந்தேன்.  இந்தப் புத்தகத்தின் கட்டுரைகளில் நாயகன் கிச்சா… கூடவே எச்சுமிப்பாட்டி! இரண்டு பேரும் சேர்ந்து நம்மை அதிகமாக கிச்சு கிச்சு மூட்டுகிறார்கள். மொத்தம் 16 கட்டுரைகள்.  வரிக்கு வரி சிரிப்பு கேரண்டி!  புத்தகத்திலிருந்து சில வரிகள் மட்டும் உங்கள் பார்வைக்கு!

கிச்சாவின் அகராதியில் மருந்து என்றால் சிவகாசி வெடிமருந்து ஒன்று தான். அதே போல, கிச்சாவுக்கு தெரிந்த ஒரே மாத்திரை தீபாவளிக்குக் குழந்தைகள் கொளுத்தும் பாம்பு மாத்திரை தான்.

தெர்மாமீட்டரையே பார்த்திராத கிச்சா, பழநி முருகனுக்கு வேண்டிக்கொண்டு இரு கன்னத்திலும் வேல்குத்திக் கொள்வது போல, டாக்டர் கொடுத்த தெர்மாமீட்டரை அகலவாட்டில் எசக்கேடாக வாய்க்குள் நுழைத்துக் கொண்டு, திரும்பி வந்த எங்களைப்பார்த்து, ‘இதற்கு அப்புறம் என்ன செய்வது” என்ற மாதிரி விழித்தான்.

“ரிஃப்ளெக்ஸ் ஆக்ஷன் பார்ப்பதற்காக ஓர் அலுமினிய உருளையால் அவனது கணுக்கால், பாதம், முட்டி என்று தட்டிப் பார்த்தார். அது தெரியாத கிச்சா அவர் உள்ளே போனதும், என்னைப் பார்த்து, “எதுக்குடா என்னை அடிக்கிறார்? எம் பேர்ல கோபமா” என்று பரிதாபமாகக் கேட்டான்.

ஏற்கனவே பச்சிலை, மருதாணி, மூலிகைகளை அரைத்து எச்சுமிப்பாட்டி தயாரித்துத் தந்த களிம்பை முகத்தில் அப்பிக் கொண்டு எல்லைப் பிடாரி போல இருந்த கிச்சாவைப் பார்த்துப் பயந்து போய் புதிய பாட்ஸ்மேன் வரலாமா என்று தீவிரமாக யோசித்து முடிப்பதற்குள் பேய் மழை வந்து ஆட்டம் நின்றது.

பள்ளிக்கூட நாட்களில் ஏப்ரல் ஒண்ணாம் தேதி வந்து விட்டால் போதும் என்னமோ அறுவடைக்கு அரிவாளோடு தயாராகும் விவசாயி போல வீட்டு ஏப்ரல் ஃபூல் ஏவுகணைகளோடு கிளம்பும் கிச்சா, தவழும் குழந்தையில் ஆரம்பித்து தள்ளாடும் தொண்டுக் கிழங்கள் வரை தராதரம் பார்க்காமல் கண்ணில் பட்ட இலக்குகளைக் குறிபார்த்து, அதில் கைக்கு எட்டும் தூரத்தில் இருப்பவர்களின் முதுகில் ஆவேசமாக இங்க்கை உதறித் தெளித்து அவர்களது டெரிலின் சட்டையைத் தெப்பமாக்குவான்.

குழந்தை பிறக்காத குறையைக் கூறி ஒப்பாரி வைத்து கிச்சா காதில் ரகசியமாக அழுத தம்பதியின் தலைவேதனை தாங்காமல் “தீர்க்க கர்ப்பிணி பவ” என கிச்சா ஆசிர்வதிக்க, வேண்டிக்கொண்ட அந்தப் பெண்மணி, அந்தக் கணமே அங்கே வாந்தியெடுக்க, கிச்சாஜியின் மகிமையைக் கண்டு கும்பல் ஆரவாரம் செய்தது.

குரோதத்தோடு பார்த்த அந்த தக்காளி லேடி, ஒரு தனியறைக்குக் கிச்சாவை அழைத்துச் சென்று இன்டர்வ்யூவைக் காட்டமாக ஆரம்பித்தாள்.  எத்தியோப்பியாவின் தலைநகரம், எலி வாலின் நீளம், ஆப்பிரிக்கக் காட்டில் பறக்கும் ஈயின் கனம், அர்ஜென்டைனா அதிபருக்கு எத்தனை தங்கை-தம்பிகள் போன்ற கேள்விகளை அதிரடியாகக் கேட்டு கிச்சாவை திக்குமுக்காடச் செய்தாள்.

தனது வலதுகை மணிக்கட்டில் தூளி போல தொங்கும் ராட்சஸ சைஸ் ரிஸ்ட் வாட்ச் நேரம், தேதி, லக்னம், அமாவாசை, பௌர்ணமி, தட்சிணாயனம், உத்தராயனம் என்று மண்டையைப் போடும் காலம் தவிர, மற்ற எல்லாவற்றையும் காட்டும் என்று கிச்சா கூறியது, எனது வெந்த வயிற்றில் வத்தக்குழம்பைப் பாய்ச்சியது போல இருந்தது!

பெருமாள் கோயில் புளியோதரை பிரசாதத்தைத் தான் தின்பதோடு நில்லாமல் ஆபிஸில் உள்ள அனைவருக்கும் டேபிள் மீது ஏறி நின்று விநியோகித்து, சாப்பிட்ட எண்ணெய்ப் பிசுபிசுப்போடு கூடிய கையைச் சுவரில் தேய்க்கும் பழக்கத்தையும் உண்டாக்கி ஒரே வாரத்தில் ஒரு மொஸைக் தரை கம்பெனியை புளியோதரை கம்பெனி ஆக்கினான் கிச்சா.

பெத்த பிள்ளையைப் பாலூட்டிச் சீராட்டி வளர்க்கும் தாயின் கரிசனத்தோடு ஏழு, எட்டு அடிக்கு விரல் நகம் வளர்க்கும் விவஸ்தைக் கெட்டத்தனம், முத்தமிட்டபடி வாரக்கணக்கில் போஸ் கொடுக்கும் போக்கிரித்தனம், பார்சல் பேப்பரைக் கிழியாமல் பிய்த்துப் பிரித்து எடுப்பது போல பூமாதேவி பொறுமையோடு ஆப்பிள் தோலை உரிக்கும் திறமை போன்ற வேலை வெட்டி இல்லாத மனிதர்களின் சாதனை முயற்சிகள் என அந்தப் புத்தகத்தில் போட்டிருந்தவை கிச்சாவுக்கு ஊக்கம் அளித்து உசுப்பேத்தி விட்டன.

பேந்தப் பேந்த முழித்துக் கொண்டிருந்த கிச்சாவின் விழி இரப்பைகளைத் தன் விரல்களால் நீவி பெரிதாகப் பிரித்து தன் முகத்தை அருகில் கொண்டு போய் வைத்துக் கொண்டாள். ‘டயக்னைஸ் செய்கிறேன் பேர்வழி’ என்று கிச்சாவை ‘கண்ணோடு கண் நோக்கி’ காட்டமாக சைட் அடித்தாள். அவள் செய்தது டயக்னாஸிஸ் பரிசோதனை என்று புரியாத கிச்சா பயந்து போய் ‘மாமி! அப்படிப் பார்க்காதீங்கோ. சத்தியமா காத்தாடி என்னோடது தான். பாலு டீல் போட்டுட்டான்’ என்று பேத்த ஆரம்பித்தான்.

நுழையும்போது நமஸ்கரித்து வரவேற்கும் ஏர்ஹோஸ்டஸை சகபயணி என்று நினைத்த எச்சுமிப் பாட்டி, ‘மொதல்ல நீ போய் உக்காருடி, உனக்கு இடம் கிடைக்காம போயிடப் போறது…’ என்று கூறிவிட்டு, ‘கிச்சா, இவளை நம்ம சீமாச்சுக்குப் பார்த்தா என்ன? என்ன கோத்திரம்டி நீ’ என்று கேட்டு அவளைக் குழப்பினாள்.

தோசை – சவுத் இண்டியன் ஆம்லெட் விதவுட் எக்! இப்படி ஒரு விளக்கம் கிரேஸியால் தான் தரமுடியும்! கிழக்கு பதிப்பகம் வெளியிட்ட இந்தப் புத்தகம் அமேசான் கிண்டில் பக்கத்தில் கிடைக்கிறது.  விலை ரூபாய் 84/- மட்டும் (இந்தப் புத்தகத்தினை தரவிறக்கம் செய்தபோது இலவசமாகக் கிடைத்தது! உங்களுக்கும் கிடைக்கலாம்!) புத்தகத்தினை கீழே உள்ள சுட்டி மூலம் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்!


இந்த நாளின் கிண்டில் வாசிப்பு பதிவு உங்கள் அனைவருக்கும் பிடித்திருக்கும் என நம்புகிறேன். உங்கள் எண்ணங்களையும் கருத்துகளையும் பின்னூட்டம் வழியே பகிர்ந்து கொண்டால் மகிழ்ச்சி. மீண்டும் வேறொரு பதிவின் வழி சந்திக்கும் வரை…

நட்புடன்

வெங்கட்
புது தில்லி

30 கருத்துகள்:

  1. கிரேஸுநின் எழுத்துகள் எவர் க்ரீன். இப்பவும் ரசித்தேன்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எப்போதும் ரசிக்கக் கூடியவை அவரின் எழுத்துகள். நீங்களும் ரசித்தில் மகிழ்ச்சி ஸ்ரீராம்.

      நீக்கு
  2. கிரேஸ் மோகனின் நகைச்சுவையை யாருக்குத்தான் பிடிக்காது ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை தான் கில்லர்ஜி. அவருடைய நகைச்சுவை பலருக்கும் பிடித்தது.

      நீக்கு
  3. கிரேஸியின் நகைசுவை எத்தனை தடவை படித்தாலும் போர் அடிக்காது. மிகவும் அற்புதமான நகைசுவை எழுத்தாளர்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் இராமசாமி ஜி. அவரது வசனத்தில் வெளிவந்த படங்களும் அவரது வசனத்திற்காகவே பலமுறை பார்க்கிறவர்கள் உண்டு.

      நீக்கு
  4. சூப்பர் , நானும் download செஞ்சு வச்சுருக்கேன் ,,,இனி தான் வாசிக்கணும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா... நீங்களும் தரவிறக்கம் செய்து வைத்திருப்பதில் மகிழ்ச்சி. முடிந்த போது படியுங்கள் அனுப்ரேம் ஜி.

      நீக்கு
  5. தரவிறக்கம் செய்து விட்டேன்... ரசிப்பேன்...

    இவரும் கமலும் இணைந்த படங்கள் அனைத்தும் என்றும் ரசிக்கலாம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா... தரவிறக்கம் செய்து விட்டீர்களா? மகிழ்ச்சி தனபாலன்.

      ஆமாம் இவரும் கமலும் இணைந்து பணியாற்றிய படங்கள் ரசிக்கக் கூடியவையே.

      நீக்கு
  6. தர்மா மீட்டரை குறுக்கு வாட்டில் வைத்த பகுதியை படிக்கும்போதே கதையை படிக்கும் ஆவல் உண்டானது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கதை அல்ல - கட்டுரைகள் ராஜி.

      முடிந்தால் படித்துப் பாருங்கள்!

      நீக்கு
  7. கிரேசி மோகனின் நகைச்சுவை ரொம்பப் பிடிக்கும். வார்த்தைகளில் விளையாடுவார் அவர்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வார்த்தை விளையாட்டு அவருக்கு கை வந்த கலை தான் நெல்லைத் தமிழன்.

      நீக்கு
  8. க்ரேஸி மோகன் சிறந்த நடிகர், சிறந்த நகைச்சுவை எழுத்தாளர்.
    மிகவும் பிடிக்கும் கவலை மறந்து சிரிக்கலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் கோமதிம்மா... கவலைகள் மறந்து சிரிக்க, இது மாதிரி நல்லதொரு புத்தகம் கிடைத்தால் நல்லதே.

      நீக்கு
  9. க்ரேசி மோகனுடைய நகைச்சுவை செம ரொம்ப பிடிக்கும். ரொம்ப ரசிப்பதுண்டு. இதையும் வாசித்து ரசித்தேன் ஜி. சிரிச்சு முடிலயல். அதுவும் எச்சுமிப் பாட்டி ஹா ஹாஅ ஹா..

    வார்த்தைகளில் சாகசம் செய்யும் கில்லாடி!! எப்போதும் ரசிக்கலாம்.. அவரது நகைச்சுவை பற்றி சொல்லவும் வேண்டுமோ!!! அட்டகாசமாக இருக்கும் என்னவென்றால் நாடகம் அல்லது அவரது வசனம் உள்ள சினிமா பார்க்கும் போது ஒரு டயலாக்கிற்குச் சிரித்து முடிப்பதற்குள் அடுத்த டயலாக் வந்து விழும் அதைக் கேட்டுச் சிரிப்பதற்குள் அடுத்து என்று தொடர் சரம். எனவே நான் மொபைலிலும் பார்த்துக் கொள்வேன்..சுட்டிக்குப் போகிறேன். ஃப்ரீயா கிடைக்குதான்னு பார்க்கிறேன் ஜி...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எச்சுமிப் பாட்டி அதகளம் செய்து விடுகிறார் தான் கீதாஜி.

      வார்த்தைகளில் சாகசம் - உண்மை. எப்போதுமே ரசிக்கக் கூடிய எழுத்து க்ரேஸியுடையது. இப்போதும் அமேசான் தளத்தில் கிடைத்தால் தரவிறக்கம் செய்து வாசித்து விடுங்கள் கீதாஜி.

      நீக்கு
  10. மிஸ்டர் கிச்சா அவசியம் படித்தே ஆகவேண்டும் என்ற ஆர்வத்தைத் தங்களின் விமர்சனம் ஏற்படுத்திவிட்டது
    நன்றி ஐயா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தரவிறக்கம் செய்து முடிந்தால் படியுங்கள் கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  11. ஃப்ரீதான் ஜி எடுத்து வைத்துள்ளேன். ஆனால் டவுன்லோட் செய்ய முடியாது இல்லையா? ஆஃப் லைனில் வாசிக்க?

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஃப் லைனில் வாசிக்க முடியாது என்றே நினைக்கிறேன். கிண்டில் என்றால் ஆஃப் லைனிலும் படிக்கலாம். அலைபேசியில் ஆஃப் லைனில் படிக்க முடியுமா எனத் தெரியவில்லை கீதாஜி.

      நீக்கு
  12. படிக்க வேண்டிய
    'சிரிப்பான' புத்தகம் என்பதை எடுத்துக் காட்டி, விளக்கினீர்கள்!

    வாய்ப்பிருந்தால் படிக்க ஆவல்!

    பதிலளிநீக்கு
  13. தரவிறக்கம் செய்து, முடிந்த போது படியுங்கள் முஹம்மது நிஜாமுத்தீன்.

    தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  14. எனக்கு இலவசமாகவே கிடைத்துவிட்டது ஐய்யா. நிச்சயம் படிக்கிரேன். நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா மகிழ்ச்சி அரவிந்த். முடிந்த போது படித்து ரசியுங்கள்.

      நீக்கு
  15. அவரின் நாடகங்களை பார்த்திருக்கிறேன். இந்த புத்தகத்தை படித்ததில்லை. படிக்க பார்க்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முடிந்தால் இந்த மின்புத்தகத்தினை தரவிறக்கம் செய்து வாசியுங்கள் சொக்கன் சுப்ரமணியன்.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....