சனி, 25 நவம்பர், 2023

கதம்பம் - பச்சை படைத்தல் - கோவை நாள்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.  


நேற்று வெளியிட்ட கதம்பம் பதிவினை  படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.



******


பச்சை படைத்தல் - 23 நவம்பர் 2023:



Kindleல் வாசிக்கத் துவங்கியிருக்கும் சிவசங்கரி மேம் அவர்களின் 'சூர்ய வம்சம் நினைவலைகள்' புத்தகத்தின் முதல் சேப்டரில் அவர் பகிர்ந்து கொண்டுள்ள முன்னோர்களைப் பற்றிய சுவாரஸ்யமான விஷயங்களில் 'பச்சை படைத்தல்' என்ற சொல்லைப் படித்ததும் எங்கேயோ கேட்ட நினைவு!


ஆடி வெள்ளியில் தவறாமல் அம்மா கடைபிடிப்பாளே! அம்மிக் குழவியை  அலம்பி மஞ்சள் பூசி குங்குமப் பொட்டு வைத்து நிறுத்தி வைப்பாள்! குழவியின் இருபுறமும் வேப்பிலை கொத்துகளை வைத்து அதை  மாரியம்மனாக வழிபடுவாள்!


நைவேத்தியமாக 'துள்ளுமாவு' பண்ணுவாள்! ஊறவைத்த அரிசியை கல்லுரலில் போட்டு உலக்கையால் இடித்து ஒன்றும் பாதியுமாக செய்து கொண்டு இடித்த வெல்லத்தை சேர்த்து பிசறி விடுவாள்! மேலே ஓரிரண்டு வேப்பிலைகளையும் போட்டு வைப்பாள்!


இந்த சம்பிரதாயத்தை எப்போதிலிருந்து அம்மா கடைபிடித்தாள் என்று தெரியலை! அப்பா வழியில் வந்ததா! ஏதேனும் ஒரு சந்தர்ப்பத்தில் தன்னைக் காத்து வந்த தெய்வத்திற்காக செய்து வந்தாளா! எதுவும் தெரியவில்லை! பச்சை படைத்தல் என்ற சொல்லும் கோவையின் ரேஸ்கோர்ஸ் ஹவுசிங் யூனிட்டின் சிறிய அடுக்களையில் அம்மா செய்த அது தொடர்பான காட்சிகளும் தான் மனதில் உள்ளது!


ஒரு சமயத்தில் தம்பிக்கும் எனக்கும் கடுமையாக அம்மை வார்த்திருந்தது! அப்போது எனக்கு ஆறு அல்லது ஏழு வயதிருக்கலாம்! ஏறக்குறைய ஒரு மாதம் வரையிலுமே பள்ளிக்கே நாங்கள் செல்லவில்லை! மூன்று தண்ணி விட்ட பின் மாரியம்மனுக்கு மாவிளக்கும் போட்டாள் அம்மா! நெடுநாட்களுக்குப் பின் பள்ளிக்குச் சென்றும் யூனிஃபார்ம் போட்டுக் கொண்டது எரிகிறது என்று அழுது கொண்டு வீட்டுக்கு வந்திருக்கிறேன்!


நாம் ஒவ்வொருவருமே நம் முன்னோர்களைப் பற்றியும் நம் சம்பிரதாயங்களைப் பற்றியும் நிச்சயம் தெரிந்து கொள்ள வேண்டும்! பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று நினைத்தால் அந்த மனிதர்களை மீண்டும் பார்க்க முடியாமலும் போகலாம்! இல்லையா!


&*&*&*&**&*&*


கோவை நாள்... - 24 நவம்பர் 2023:



அப்பா! இங்கே கொஞ்சம் பாரேன்! நம்ம ஜன்னல்ல இருந்து பார்த்தா அந்த பெரிய டவர் எப்பவும் தெரியும் தானே! நேத்துக் கூட நான் வேடிக்கை பார்த்தேனே!  காலைல இப்போ எழுந்து பார்க்கிறேன்! இங்க இருந்த டவரை இப்போக் காணுமேப்பா??


அதுவாடா செல்லம்!! ராத்திரியோட ராத்திரியா யாராவது இடத்தை மாத்தியிருப்பா!! (அப்பா சொன்னால் முழுதாக நம்புவேன்...:))


எப்படிப்பா அவ்வளவு பெரிய டவரைத்  தூக்க முடியும்??


ஹா..ஹா..ஹா. அப்பா சிரித்துக் கொண்டே பின்பு சொல்வார்! இன்னும் கொஞ்ச நாழி கழிச்சு வெயில் வரும் போது பாரு! அந்த டவர் அங்கேயே தான் இருக்கும்! இப்போ பனியால மறைஞ்சிருக்குடா!


சரி! இன்னிக்கு ஸ்கூல் லீவ் தானே?? அப்பா ஆஃபீஸ் கிளம்பினப்புறம் செய்ய உனக்கொரு வேலை தரேன்!


இந்த தேங்காய் எண்ணெய் பாட்டில் இருக்கு பாரு! எண்ணெயெல்லாம் ஒறைஞ்சு போயிடுத்து! தோ பாரு! கீழே கவுத்தாலும் வரல! இதை கீழ எடுத்துண்டு போய் வெயில் வரும் போது வெச்சு அது நன்னா இளகினதும் எடுத்துண்டு வரணும்! செய்வியா?


ஓகேப்பா!


கோவையின் சில்லென்ற சூழலில் மார்கழி மூடுபனியில் வீட்டின் எதிரே இருக்கும் டெலிஃபோன் எக்ஸ்சேஞ்சின் டவர் சுத்தமாக மறைந்து போயிருக்கும்! இத்தனைக்கும் அந்த டவருக்கும் எங்களுக்கும் அதிக தூரம் கூட இல்லை! இரண்டு எட்டில் டெலிஃபோன் எக்ஸ்சேஞ்சுக்கு போயிடலாம்!


அந்த எக்ஸ்சேஞ்ச் ஆஃபீஸின் மாடியில் கண்ணாடி ஜன்னல்களின் வெளியே பெரிய பெரிய தேன்கூடுகள் கூட இருக்கும்! எப்போது தேன்கூடு கலைந்து தேனீக்கள் படையெடுத்து வருமோ என்ற பதட்டம் எப்போதும் என்னிடம் உண்டு...:)


இப்படி எத்தனையோ பசுமையான நினைவுகளும், மகிழ்வானத் தருணங்களும், நெகிழ்ச்சியான நிகழ்வுகளும், வாழ்க்கை குறித்த பலவிதமான புரிதல்களும் தந்து என்னை வடிவமைத்த எங்க ஊரு கோவைக்கு இன்று பிறந்தநாள்!


என் வாழ்வின் முதல் இருபது வருடங்களை சில்லென்ற கோவையில் வாழ்ந்திருக்கிறேன் என்பதில் மிகுந்த மகிழ்ச்சியும், பெருமையும் என்றும் என் மனதில் உண்டு!


******


இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


ஆதி வெங்கட்


பின் குறிப்பு:  எனது முகநூல் பக்கத்தில் எழுதிய இற்றைகள், வலைப்பூவில் எனக்கான சேமிப்பாகவும் முகநூலில் வாசிக்காதவர்கள் வசதிக்காக இங்கே ஒரு பகிர்வாகவும்…

18 கருத்துகள்:

  1. நினைவுகள் சுகமானவை.  அம்மா கொண்டாடும் பச்சை படைத்தல் கேள்விப்பட்டதில்லை.  புதிய தகவல்.  அவ்வப்போது சிவசங்கரியின் சூரிய வம்சம் என் அக் இருக்கா இருக்கா என்று கேட்டுக்கொண்டேயிருப்பார்.  அப்படி என்ன இருக்கிறது அந்த நூலில் என்று பார்க்க வேண்டும் என்று நினைத்துக் கொள்வேன்.  கூகுளில் பி டி எப் கிடைக்கிறதா என்று பார்க்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அம்மா தான் செய்து வந்தாள்! இங்கு புகுந்த வீட்டில் வழக்கமில்லை!

      சூர்யவம்சம் சிவசங்கரி மேடத்தின் வாழ்க்கை வரலாறு என்று சொல்லலாம்! முதல் பகுதியை மின்னூலாக வாசித்துக் கொண்டிருக்கிறேன். சுவாரஸ்யமாக தான் செல்கிறது!

      தங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம் சார்.

      நீக்கு
  2. நினைவலைகள் நன்று. பச்சையிட்ட என்ற வார்த்தை வைணவத்தில் உண்டு.

    கோவை இன்னமும் அதே க்ளைபேட்டில் இருக்கிறதா? பெங்களூர் ரொம்பவே மாறிவிட்டது கடந்த இருபதாண்டில். மார்ச்-மே எனக்கு ஏசி வேண்டியிருக்கிறது, அவ்வப்போது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எல்லா இடத்திலும் காலநிலை மாறி வருவதால் கோவையிலும் மாறியிருக்கலாம்! ஆனாலும் திருச்சியைப் போன்று சுட்டெரிக்கும் வெயிலாக இருக்காது என்று நம்புகிறேன்..:)

      தங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லை சார்.

      நீக்கு
  3. பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன் சார்.

      நீக்கு
  4. தொடக்க வாசகம் அருமை. அதைவிட அருமை உங்கள் கோவை நினவுகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு குறித்த தங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமசாமி ஜி.

      நீக்கு
  5. நினைவுகள் அருமை.
    பச்சை படைத்தல் அம்மாவின் நினைவுகள் அருமை.
    கோவையில் இப்போது பழைய குளுமை இல்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இருக்கலாம் அம்மா. எல்லா இடத்திலும் மாறிவிட்டது! என் நினைவுகளில் மட்டுமாவது குளுமையாக இருக்கட்டும்!

      தங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.

      நீக்கு
  6. பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  7. சிறப்பான தகவல்..

    இங்கே செம்பில் நீர் வைத்து வேப்பிலையுடன் தேங்காய் முகமாக வைத்து வழிபடுகின்ற வழக்கம் உண்டு..

    இனிய பதிவு..
    வாழ்க நலம்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அம்மனை வழிபடுகிற விதம் மட்டுமே வேறுபடுகிறது! மற்றபடி ஒவ்வொருவரும் தன்னை காக்கும் தெய்வத்தை விடாமல் வழிபட்டு தான் வருகின்றனர்.

      தங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜு சார்.

      நீக்கு
  8. பச்சை சார்த்தல் கேட்டதில்லை பார்த்ததும் இல்லை ஆதி. ஆனால் அந்த பச்சரிசி இடித்து வெல்லம் கலந்தது அம்மனுக்குப் பிரசாதமாகச் செய்தவர்கள் வீட்டில் கொடுத்துச் சாப்பிட்டதுண்டு. மாவிளக்குக்கும் அப்படித்தானே செய்வாங்க.

    கோயம்புத்தூரில் இப்போது பனி மூடுகிறதா என்றால் இல்லை. இந்த வருடம் டிசம்பர் வந்தாச்சு இப்பவும் பெங்களூர் கடந்த வருடக் குளிர் இல்லை இந்த வருடம். இந்த வருடம் கொஞ்சம் காலநிலை இடக்கு மடக்காகத்தான் இருக்கு. தில்லியில் திடீரென்று 9 டிகிரிக்கு போனது என்று சொன்னாங்க.

    நீங்கள் சொல்வது போல் கால்நிலை மாறினாலும் எனக்கும் பெங்களூரில் கடந்த 4 வருடங்களாக இருந்த குளிரும், கோயம்புத்தூர் குளிரும் நினைவில் வந்து செல்கிறதுதான்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மாவிளக்கு மாவு போல இது உதிரியாகவும் இருக்காது! நைஸான மாவாகவும் இருக்காது! ஈரத்துடன் ஒன்றும் பாதியுமாக பிசறி வைத்தாற் போல இருக்கும்!

      எல்லா இடத்திலுமே காலநிலை மாறி வருகிறது! கோவையிலும் நிச்சயம் மாறியிருக்கும் தான்! ஆனால் என் நினைவுகளில் உள்ள கோவை என்றுமே சில்லிட்டு கொண்டு தான் இருக்கும்!

      தங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா சேச்சி.

      நீக்கு
  9. பச்சை படைத்தல் கேள்விப் பட்டது இல்லை.

    இளமைக்கால நினைவுகள் என்றுமே அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த வழிபாட்டை என் அம்மா தான் செய்து வந்தாள்! புகுந்த வீட்டில் செய்ததில்லை!

      இளமைக்காலம் தான் நினைத்து பார்த்து மகிழக்கூடியது!

      தங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றிங்க மாதேவி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....