வெள்ளி, 24 நவம்பர், 2023

கதம்பம் - நான் வியந்து ரசித்த பெண்மணி - இறுகப் பற்று...

 



அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.  


நேற்று வெளியிட்ட கதம்பம் பதிவினை  படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.


LIFE IS ABOUT BALANCE… BE KIND, BUT DON’T LET PEOPLE ABUSE YOU; TRUST, BUT DON’T BE DECEIVED; BE CONTENT, BUT NEVER STOP FROM IMPROVING YOURSELF.


******


நான் வியந்து ரசித்த பெண்மணி - 21 நவம்பர் 2023:



எழுத்தாளர் சிவசங்கரி மேடம்! இரண்டு நாட்களாக இவரின் நேர்க்காணல்கள் பலவற்றை இணையத்தில் தொடர்ந்து பார்த்ததிலிருந்து என்னுள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி விட்டார் என்று சொல்லலாம்! தான் கடந்து வந்த பாதைகளைப் பற்றி வெளிப்படையாகவும், உண்மையாகவும், நேர்மையாகவும் பகிர்ந்து கொண்டிருந்தார்.


முதலில் தன்னுடைய வயதை எல்லோரிடமும் தயக்கமில்லாமல் பெருமையுடன் சொல்லிக் கொள்வதில் துவங்கி, தான் கடந்து வந்த கற்களும் முட்களும் நிறைந்த பாதையை எண்ணி கவலை கொள்ளாமல் கடவுள் தன்னை நல்லவிதமாக வைத்திருக்கிறார் என்றும் ‘நான் நிறைவான வாழ்க்கையைத் தான் வாழ்ந்திருக்கிறேன்’ என்றும் நேர்மறையான எண்ணங்களோடு பகிர்ந்து கொண்டிருந்தார்.


இந்தியா முழுவதும் குறுக்கும் நெடுக்குமாக பயணித்து ஒவ்வொரு மொழியிலும் உள்ள சிறந்த எழுத்தாளர்களையும் அவர்களின் எழுத்துகளையும் ஒன்றிணைத்த பெரும் பணிக்காக தன்னுடைய வாழ்நாளில் 16 வருடங்களை கழித்திருக்கிறார். ஐந்து ரூபாயைக் கூட தன் பாக்கெட்டிலிருந்து எடுத்து செலவழிக்க யோசிக்கும் இந்நாளில் இந்த பெரும்பணிக்காக யாரிடமும் அவர் எந்த உதவியும் எதிர்பார்க்கவில்லை என்பது வியப்பின் உச்சம்!


தனக்கு நிகழ்ந்த அனுபவத்தின் தாக்கத்தால் விபத்து போல் தான் எழுதத் துவங்கியிருக்கிறாராம். போகப் போக களப்பணியில் இறங்கி சமூகம் சார்ந்த கதைகளும், பல விழிப்புணர்வு நாவல்களும் எழுதியிருக்கிறார். பெண்களின் சுயமுன்னேற்றம், சமுதாயத்தில் நிகழும் அநீதிகள் என்று இவரின் எழுத்துக்களில் பேசப்பட்டிருக்கிறது! எனக்குப் பிடித்த புத்தகங்களில் இவரின் சிறந்த படைப்பான ‘பாலங்கள்’ நிச்சயம் இடம்பெறும். மூன்று தலைமுறையைச் சேர்ந்த பெண்களின் கதை இதில் விரிவாக சொல்லப்பட்டிருக்கும்.


ஒரு எழுத்தாளர் என்பதைத் தாண்டி இந்த சமுதாயத்தில் நல்லதொரு மனுஷியாக, தேசபக்தி கொண்டவராக, சமுதாயத்தின் மீது மிகுந்த அக்கறை கொண்டவராக, தன்னிறைவு கொண்டவராக, மனதளவிலும் உடலளவிலும்  பக்குவப்பட்ட மனுஷியாக பார்க்க முடிந்தது!


மரத்திலிருந்து உதிரும் பழுத்த இலை போல் மரத்துக்கும் வலிக்காமல், பூமிக்கும் பாரமாக இல்லாமல் தன்னுடைய இறுதி இருக்கணும் என்று எண்ணி காத்திருக்கிறேன் என்று சொல்ல எத்தனை பேருக்கு துணிச்சல் வரும்!


வாய்ப்பு கிடைக்குமானால் இவரை நிச்சயம் சந்திக்கணும்!


&*&*&*&**&*&*


இறுகப் பற்று... - 22 நவம்பர் 2023:


அன்றாட வேலைகளின் ஊடே சட்டென்று ஒரு பிடிப்பு! அதுவும் எப்போதும் வலது கையின் மணிக்கட்டில் தான் வருகிறது! அந்த நேரத்தில் அந்தக் கையால் எதுவுமே செய்ய முடியாது! ஒரு பென்சிலைக் கூட எடுக்கவும் முடியாது! பிடிக்கவும் முடியாது! பின்பு அரைமணியில் எல்லாம்  சரியாகி விடும்!


உங்களுக்கும் இந்த அனுபவம் உள்ளதா??


இன்று காலையில் இந்த அனுபவம் எனக்கு ஏற்பட்டது! குடியிருப்புத் தோழி ஒருவருடன் பேசி விட்டு வந்து வாசல் கதவை மூடுவதற்குள் பிடித்துக் கொண்டு விட்டது!! வலியில் அந்த நேரம்  துடித்துப் போய் விடுமளவு இருக்கும்! இதை தசைப்பிடிப்பு என்று சொல்வார்கள்!


பல வருடங்களாகவே அவ்வப்போது எனக்கு இந்த தசைப்பிடிப்பு  அனுபவம் உண்டு என்பதால் ஐந்து நிமிடம் அமர்ந்து தைலம் தடவிக் கொண்டு ஐஸ் ஒத்தடம் கொடுத்துவிட்டு மற்றொரு கையால் என் வழக்கமான வேலைகளை செய்யத் துவங்கி விட்டேன்!


ஒரு சமயத்தில் இரண்டு விதமான  வேலைகளைச் செய்தல், இரண்டு கைகளையும் உபயோகித்தல் போன்றவை எனக்கு பழக்கமாதலால் இந்த நேரத்தில் கடினமாகத் தெரிவதில்லை! மாலைநேரம் டீ போட்டுக் கொண்டே பாத்திரம் தேய்ப்பது, தோசை வார்த்துக் கொண்டே மற்றொரு வேலையை கவனிப்பது இப்படிச் சொல்லலாம்!


இன்று மற்றொரு கையால் தான் காலை உணவாக முறுகலாக சிறுதானிய அடை வார்த்து சாப்பிட்டேன்! ஒவ்வொரு வேலைக்கும் மற்றவரை சார்ந்திருக்காமல் முடியும் போதெல்லாம் நாமே செய்து கொள்வது என்பது எப்போதுமே உதவியாக இருக்கும்!


******


இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


ஆதி வெங்கட்


பின் குறிப்பு:  எனது முகநூல் பக்கத்தில் எழுதிய இற்றைகள், வலைப்பூவில் எனக்கான சேமிப்பாகவும் முகநூலில் வாசிக்காதவர்கள் வசதிக்காக இங்கே ஒரு பகிர்வாகவும்…




20 கருத்துகள்:

  1. தஞ்சையில் நாங்கள் குடியிருந்த வீட்டின் உரிமையாளரின் தங்கை (ஸ்பன்பைப்) மருமகள் திருமதி சிவசங்கரி.   இரண்டு வீடுகளும் அருகருகே என்பதால் அவர் எங்கள் வீட்டு உரிமையாளர் வீட்டுக்கு வந்திருந்தபோது பார்த்திருக்கிறேன்.  என் அக்கா சிவசங்கரியின் பெரிய விசிறி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படியா சார்! அருமை! சிவசங்கரி மேடம் என் மாமனார் வழியில் நெருங்கின உறவு என்று இங்கு சொல்கிறார்கள். உறுதியாக தெரியலை! விசாரித்து தெரிந்து கொள்ளணும்!

      தங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம் சார்.

      நீக்கு
    2. அப்போ நீங்க ஸ்பன்பைப் உரிமையாளர், மற்றும் தஞ்சை டாக்டர் அனந்தராமன் அவர்களுக்கெல்லாம் (அவர் மனைவி பெயர் ராஜலக்ஷ்மி..  அவர்கள் வீட்டோடு ஒரு சமையல்கார மாமி இருப்பார்.  தங்கம் என்று பெயர்) உறவா?  தஞ்சாவூர் வ வு சி நகரில் வீடு.

      நீக்கு
    3. இவர்கள் எல்லாம் யாரென்று எனக்குத் தெரியலை சார். மாமனார் மாமியாரிடம் கேட்டுப் பார்க்கிறேன்.

      நீக்கு
  2. இந்த பிடிப்பு என்னை ரொம்ப பாடாய் படுத்தும் ஒரு விஷயம்.  திடீர் திடீரென வயிற்றில், அடிவயிற்றில், முதுகில் என்று இழுத்துப் பிடித்துக் கொண்டு மிகவும் துடித்துப் போகவைக்கும்.  என்ன எழுந்து நடந்தாலும், சரி செய்து கொள்ள முயன்றாலும் பதினைந்து நிமிடங்கள் வாட்டி விடும்.  இருமும்போது அதன் பக்க விளைவாய் ஏற்படும் இது.  இப்போது இருமலின் பக்க விளைவு முன்னேறி பதினைந்திலிருந்து முப்ப்பது வினாடிகள் வரை பிளாக்கவுட் என்பது போல வந்திருக்கிறது!  இழுத்துப் பிடிபபது குறைந்திருக்கிறது.  மருத்துவர் இது மாதிரி இழுத்துப் பிடிபபதற்கு கால்சியம், மினரல்ஸ் எல்லாம் எடுத்துக் கொள்ளச் சொல்லி, ஓ ஆர் எஸ் அவ்வப்போது எடுத்துக் கொள்ளச் சொன்னார்.  இளநீர் குடிக்கச் சொன்னார்.  இளநீர் குடித்து இருமல் அதிகமானதும் இளநீரை  நிறுத்தி விட்டேன்!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடடா! இருமும் போது பிடித்துக் கொள்வது மிகுந்த கடினமாயிற்றே! ஒரு நரம்பு மற்றொரு நரம்பின் மீது வருவதால் தான் இப்படி பிடித்துக் கொள்கிறது என்றும் கேள்வி! எதுவானாலும் அந்த நேரம் படுத்தி விடுகிறது!

      தங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம் சார்.

      நீக்கு
  3. சிவசங்கரி ஒரு காலத்தில் ஓஹோ என இருந்த எழுத்தாளர். அவருடைய மூன்று கதைகள் (தொடர்கள்) மிகவும் சிறப்பானவை. ஒரு மனிதனின் கதை, பாலங்கள் மெள்ள மெள்ள. இது தவிர நண்டு தொடரும் நன்றாக இருக்கும். அவருடைய மாஸ்டர் பீஸான சின்ன நூல்கண்டா ஏன்னைச் சிறைபிடிப்பது, படித்ததில்லை. ஆனால் ஒரு மனிதனின் கதை தொடருக்கு ஒவ்வொரு வாசகரும், அடுத்த வாரம் எப்போ வரும் எனக் காத்திருந்தனர். பெங்களூர் இந்திரா நகரில் ஒரு பெண் படுகொலை செய்யப்பட்டபோது, இந்தத் தொடரின் தீவிர வாசகி என்று பத்திரிகையில் எழுதியிருந்தார்கள். பத்திரிகை மூலமாக இந்திரா காந்தியை அவர் அலுவலகத்தில் சந்தித்துப் பேட்டி எடுக்கும் வாய்ப்பைப் பெற்றவர். அவர் விருப்பம்போல் அவருக்கு முடிவு நேரட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாலங்கள், நெருஞ்சி முள் இரண்டும் வாசித்திருக்கிறேன். அவரின் நேர்க்காணலில் தான் ஒரு மனிதனின் கதை பற்றி தெரிந்து கொண்டேன். அது தான் தியாகு என்ற தொடராக வந்தது என்றும் ரகுவரன் அதில் சிறப்பாக நடித்திருப்பார் என்றும் சொன்னார். வாசிக்க வேண்டும்.

      தங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லை சார்.

      நீக்கு
  4. முன்பெல்லாம் கழுத்து தசைப் பிடிப்பினால் அப்படியே பத்து நிமிடங்கள் படுத்துவிட வேண்டியிருக்கும். வலியைவிட வேறு பெரிய பிரச்சனையின் அறிகுறி என்றே தோன்றும். கடந்த சில வருடங்களாக வரவில்லை. குதிகால் பிரச்சனை 2018ல் ஆரம்பித்து, பிறகு மேனேஜபிளாக இருந்து (ஒரு வருடம் கஷ்டப்பட்ட பிறகு), இப்போது ஒரு வாரமாக மீண்டும் தலைதூக்கியிருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கு அவ்வப்போது கழுத்து சுளுக்கு ஏற்படும்! அது சிலசமயம் கைகளுக்கும் கூட பரவும். எல்லாமே நரம்புகளால் ஏற்படும் வலிகள் தான். உண்மை தான்! வலிகளை விட இது எதனால் என்று மனதில் ஏற்படும் குழப்பம் தான் மிகவும் அவஸ்தையானது!

      தங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லை சார்.

      நீக்கு
  5. நான் மனக் கஷ்டங்களில் கடந்த ஐந்து வருடங்களாக இருக்குப்பேன். ஒரு நாள் என் மகள், உங்களுக்கு என்ன குறைச்சல்? You know you are one among top 2% of Indians (எல்லா மத்திய தரக்கார்ர்களும் அப்படித்தான்) என்றாள். கண்ணதாசனின், உனக்கும் கீழே உள்ளவர் எஓடி, நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு பாடல் நினைவுக்கு வந்தது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை தான். மனதில் கவலை கொள்ளும் போது என்னவர் கூட என்னிடம் எப்போதுமே சொல்வதுண்டு! நமக்கு கீழே இருப்பவரை பார்! என்று..

      தங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லை சார்.

      நீக்கு
  6. எழுத்தாளர் சிவசங்கரி அவர்களின் நேர்காணலை நானும் கேட்டேன். முன்பு விகடன் வாங்கும் போது அவர்கள் தொடர்கதைகளை போட்டி போட்டுக் கொண்டு படிப்போம்.

    "ஏன்" கதை போலவே என் அத்தைமகளின் முடிவு. சிவசங்கரியின் கதை போலவே இருக்கே! என்று எல்லோரும் சொன்னார்கள்.
    என் மாமா பெண் 1970 ஆண்டு இறந்தார். சிவசங்கரி ஏன் கதையை 1973ல் எழுதினார்.

    அவருடைய தன்னம்பிக்கை கட்டுரைகளை மனம் சஞ்சல படும் போது வாசிப்பேன்.

    நானும் கைவலியில் கஷ்டபட்டேன் சரியாகி விட்டது. இப்போது இடுப்பு, முட்டி வலிகள் அதையும் உடற்பயிற்சிகள், முத்திரைகள் செய்து பொக்கி வருகிறேன்.

    //ஒவ்வொரு வேலைக்கும் மற்றவரை சார்ந்திருக்காமல் முடியும் போதெல்லாம் நாமே செய்து கொள்வது என்பது எப்போதுமே உதவியாக இருக்கும்!//

    நானும் அப்படித்தான் நினைப்பேன். முடிந்தவரை நானே பார்த்தும் வருகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் அம்மா. தன்னம்பிக்கை தரும் கதைகள்!

      உடற்பயிற்சிகளும் முத்திரைகளும் செய்து வருவது மிகச் சிறப்பானது அம்மா.

      தங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.

      நீக்கு
  7. பதில்கள்
    1. அந்தப் படம் நன்றாக இருக்குமென்று தான் சொல்கிறார்கள். நான் இன்னும் பார்க்கவில்லை!

      தங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன் சார்.

      நீக்கு
  8. சிவசங்கரி அவர்களின் பாலங்கள் வாசித்ததுண்டு. அது போல கதையின் தலைப்பு பெயர் மறந்துவிட்டது ஆனால் கதை நினைவிருக்கு. கணவன் கோமாவில் இருப்பார்...மனைவியின் உணர்வுகள் பழைய நினைவுகள் என்று...அக்கதை தொடராக எதிலோ வந்தது. வீட்டில் இதழ்கள் எதுக்கும் அனுமதி கிடையாது என்பதால் எங்கோ அதில் ஒரு சில பகுதிகள் வாசித்த நினைவு.

    அது போலவே இந்தச் சின்ன நூல்கண்டா சிறைப்பிடிப்பது என்ற தொடரும்...கொஞ்சம் வாசித்த நினைவு.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் பாலங்களும் நெருஞ்சி முள்ளும் தான் வாசித்திருக்கிறேன்.

      தசைகளை இறுகப் பற்றுவதால் இப்படி பெயரிட்டேன்.

      தங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா சேச்சி.

      நீக்கு
  9. இறுகப்பற்று படத்தைப் பற்றியோ என்று நினைத்தேன்!!!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தசைகளை இறுகப் பற்றுவதால் இப்படி பெயரிட்டேன்.

      தங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா சேச்சி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....