செவ்வாய், 7 நவம்பர், 2023

கதம்பம் - அப்பா செல்லம் - தீபாவளி ஷாப்பிங்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.  


நேற்று வெளியிட்ட கதம்பம் பதிவினை 
டித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.


LIFE IS A CONSTANT CONFLICT BETWEEN AFFECTION AND EGO; AFFECTION ALWAYS WANTS TO SAY SORRY WHILE EGO WANTS TO HEAR SORRY.


******


அப்பா செல்லம்:



தோழி ஒருவரிடம் சற்று நேரம் பேசிக் கொண்டிருந்த போது.....


'நான் அப்பா செல்லம்! அப்பா எங்களுக்காக எவ்வளவோ பண்ணியிருக்கா! எங்க கூட்டிண்டு போனாலும் அப்பா சட்டைய பிடிச்சிண்டு தான் சுத்துவேன்! பெரிய பொண்ணா ஆனப்புறம் கூட அப்பா தான் நகம் வெட்டி விடணும்! பேனாவுக்கு இங்க் போட்டுத் தரணும்! அப்பா எது பண்ணாலும் perfect ஆக இருக்கும்!' என்று சின்னஞ்சிறு சிறுமி போல் அப்பாவைப் பற்றி கண்கள் விரிய தோழியிடம் சொல்லிக் கொண்டிருந்தேன்!


உண்மையில் அப்பா செய்து தந்த சின்னச் சின்ன விஷயங்கள் மனதில் பதிந்து விட்டதைப் போல 'அப்பா எனக்காக இவ்வளவு சொத்து சேர்த்து வெச்சிருக்கார்! இத்தன பவுன் வாங்கி குடுத்தார்! என்றெல்லாம் சொல்லிக் கொள்வதில் என்னைப் பொருத்தவரை நிச்சயம் உள்ளார்ந்த மகிழ்ச்சி என்பது இருக்காது என்றே தோன்றுகிறது!


பணம் காசால் மட்டுமே இவ்வுலகில் எல்லாவற்றையும் வாங்கிட முடியாது! அன்பு, பாசம், நேசம், தியாகம், திருப்தி என்று எவ்வளவோ உணர்வுகளால் பின்னிப் பிணைந்த இந்த வாழ்க்கைப் படகை சரிவர இயக்கிச் செல்கின்ற உந்து சக்தியாக இருப்பவர்கள் பெற்றோர்!


இயந்திரமயமான உலகில் ஒவ்வொரு அப்பாவும் அம்மாவும் தங்கள் குடும்பத்துக்காகவும் குழந்தைகளுக்காகவும் நிச்சயம்  நேரம் ஒதுக்க வேண்டும்! குழந்தைகளின் மனநிலையை புரிந்து கொண்டு அவர்களுக்கு ஏற்றாற் போல் சென்று வாழ்க்கைப் பாடங்களை அன்பால் உணர்த்த வேண்டும்!


நமக்கு கிடைத்த அன்பை பகிர்ந்து கொள்வோம் நம் குழந்தைகளிடம்! அடுத்த தலைமுறைக்கும் கடத்திச் செல்வோம் நாம் கற்றுணர்ந்த பக்தியையும், பண்பையும்! நாளைய தலைமுறை நலமுடன் வாழ நல்லதோர் பாதையை உருவாக்கிக் கொடுப்போம்!


&*&*&*&**&*&*


தீபாவளி ஷாப்பிங்:


போட்டது போட்ட படி கிளம்ப மாட்டேங்கிற! எல்லா வேலையும் முடிச்சுட்டு தான் வருவேன்னு சொன்னா லேட்டாயிடும் தான்! என்னவோ பண்ணுங்க! நீங்க ரெண்டு பேரும் ரெடியானதும் சொல்லுங்க!


இது வழக்கமாக என்னவர் சொல்லும் டயலாக் தான்..🙂


இத்தனை வருட புரிதலில் எந்த ஒரு விஷயத்துக்கும் 'அவர் என்ன சொல்வார்! எப்படி ரியாக்ட் பண்ணுவார்! எப்படி எடுத்துப்பார்!' என்று தெரியாதா! என்ன..🙂


இப்படித்தான் சரஸ்வதி பூஜையன்றும் நிகழ்ந்தது!  விறுவிறுவென்று பூஜையை முடித்துக் கொண்டு சாப்பிட்டதும் தீபாவளி ஷாப்பிங்குக்கு  கிளம்பிட்டோம்!


சில வருடங்களுக்கு முன்பு வரை தீபாவளிக்கு இன்னும் ஒரு மாத காலம் இருக்கிறது எனும் போதே  திருச்சியின் NSB ரோடு முழுவதுமே  கூட்ட நெரிசலாக இருக்கும். ஒருவேளை நாம் அந்தக் கூட்டத்தில் மாட்டிக் கொண்டு விட்டால் நம்மால் கழுத்தைக் கூட திருப்ப முடியாது..🙂 ஒருமுறை அப்படி மாட்டிக் கொண்டு ஷாப்பிங் செய்த அனுபவத்தைப் பற்றி என் வலைப்பூவில்(ப்ளாக்) கூட எழுதியிருக்கிறேன்...🙂


ஆனால் இப்போதெல்லாம் பெருகி விட்ட ஆன்லைன் ஷாப்பிங்கும், இன்னும் பல ஜவுளி கடல்களும் வந்துவிட்டதால் கூட்ட நெரிசல் பெரிதாக இல்லை என்றே சொல்லலாம்! சற்றே நிதானத்துடன் கடைகளை பார்வையிட்டவாறே நகர்ந்து கொண்டிருந்தோம்!


அம்மா! இந்த தோடு அழகா இருக்குல்ல!


மகள் எங்கே சென்றாலும் காதணிகள் தவறாது வாங்கிக் கொள்வாள். நிறைய கலெக்‌ஷன்ஸ் வைத்திருக்கிறாள்! அப்பா வேறு எந்த ஊருக்குச் சென்றாலும் வீடியோ காலில் காண்பித்தாவது வாங்கி வருவார்!


Each Forty rupees! என்றார் கடைக்காரத் தம்பி!


ஜார்கண்டை சேர்ந்தவராம்! என்னவர் அந்த தம்பியிடம் சற்று பேச்சுக் கொடுத்துக் கொண்டிருந்தார்! மூன்று தோடுகளை எடுத்துக் கொண்டு 120ரூபாயை கொடுத்ததும் 20ஐ திருப்பித் தந்தார்!


அடுத்து கல்லூரிக்கு ட்ரஸ்ஸுக்கு மேட்ச்சாக அணிந்து செல்ல சில துப்பட்டாக்களை ஒருவரிடம் எடுத்ததும் each pachaas(50) ரூப்யே என்றார்!


தம்பி! இந்த வளையல் எவ்வளவுப்பா! One twenty!


உள்ளே பிளாஸ்டிக் மாதிரி இருக்கே தம்பி! இந்த விலை சொல்றியேப்பா!


பதிலில்லை அந்த தம்பியிடம்! புரியவில்லை போலிருக்கு! அப்போது தான் தெரிந்தது!


வளையல் வாங்கின தம்பியும் ஜார்கண்டை சேர்ந்தவர் தானாம்! பத்தாவது முடிச்சிருக்கேன்! படிப்பு வரல! இங்க வந்துட்டேன்! இந்தக் கடை என்னோடது தான்! செலவெல்லாம் போக மாசம் 30,000 நிக்குது! தீபாவளி முடிஞ்சப்புறம் ஒரு மாசம் ஊருக்கு போயிட்டு வருவேன்! என்றார்!


இப்படி வழியில் தென்பட்ட அத்தனை வியாபாரிகளுமே வட இந்தியர்கள் தான்! நாம் எங்கே சென்று கொண்டிருக்கிறோம்! என்ன இல்லை! நம்ம ஊரில்! உழைக்க சோம்பல் படுகிறோமா? அரசியல் பேசிக் கொண்டும், ரீல்ஸ் பண்ணிக் கொண்டும் பொழுதை கழிக்கிறோமா? கிடைக்கும் வாய்ப்புகளை தவற விடுகிறோமா? என்ற கேள்விகள் தான் எழுந்தது!


******


இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


ஆதி வெங்கட்


பின் குறிப்பு:  எனது முகநூல் பக்கத்தில் எழுதிய இற்றைகள், வலைப்பூவில் எனக்கான சேமிப்பாகவும் முகநூலில் வாசிக்காதவர்கள் வசதிக்காக இங்கே ஒரு பகிர்வாகவும்…

16 கருத்துகள்:

  1. பணத்தால் அல்ல, பாசத்தால் மனதில் நிற்கும் உறவுகள்.  எல்லோருக்குமே மனதில் தோன்றுவது அப்பா போல வராது.  அம்மாதான் அன்பின் தெய்வம்.  உங்களுக்கு ஒரு கேள்வி.  நீங்கள் அப்பாவைக் கொண்டாடுவது போல ரோஷ்ணி அப்பாவைக் கொண்டாடும்போது / கொண்டாடினால் 'அம்மான்னா சும்மாவா' என்று உங்களுக்கு லேசான பொறாமை வருமா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. லேசான பொறாமை வரத் தான் செய்யும்..:) ஆனால் நான் என் அப்பாவைக் கொண்டாடுவது போல என்னவரை யாரிடமும் விட்டுக் கொடுக்காமல் உயர்த்திப் பேசுவது போல அவளும் இருக்கணும் என்று தான் நினைக்கிறேன்.

      தங்களின் வருகைக்கும், கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம் சார்.

      நீக்கு
  2. ஆரம்ப நிலை வடநாட்டு வேலைக்காரர்கள் ஆபத்தில்லாதவர்களாக, அதிகம் ஆசைப் படாதவர்களாக இருக்கிறார்கள்.  கொஞ்சம் காலூன்றி விட்டால் வியாபாரத்தில் பேராசை தலை தூக்க ஆரம்பித்து விடும்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இருக்கலாம் சார். இப்போது நியாயமாக நடந்து கொள்கிறார்கள் என்றாலும் நாளடைவில் மாறலாம். நமக்கான வேலைவாய்ப்புகளும் பறிபோகலாம்.

      தங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம் சார்.

      நீக்கு
  3. வடநாட்டைச் சேர்ந்தவர்கள்தாம் தமிழகத்தில் அதிகம் உடலுழைப்பைக் கொடுப்பவர்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை தான் சார். இங்கிருப்பவர்கள் அலட்சியமாக தான் இருக்கிறார்கள். வேதனையாக தான் உள்ளது!

      தங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லை சார்.

      நீக்கு
  4. /// பணம் காசால் மட்டுமே இவ்வுலகில் எல்லாவற்றையும் வாங்கிட முடியாது///

    உண்மை.. உண்மை..

    சிறப்பான பதிவு..
    வாழ்க நலம்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜு சார்.

      நீக்கு
  5. தந்தையைப் பற்றிய குறிப்புகள் எனது மனதை கனக்க வைத்தது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்பா என்றொரு உன்னதமான உறவு. இப்பொழுது நினைத்தாலும் அவரின் அருகாமையை நினைத்து ஏங்கி கண்கள் குளமாகி விடும்.

      தங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி சார்.

      நீக்கு
  6. நாடு மோசமாக - மிகவும் மோசமாக சென்று கொண்டிருக்கிறது...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன் சகோ.

      நீக்கு
  7. உறுதியாகச் சொல்வேன் பணம் காசால் மட்டும் எந்த உறவையும் எதையும் வாங்கிட முடியாது. பாசமும் bonding என்று சொல்வோமே அதுவும் தான் முக்கியம். குறிப்பாகப் பெற்றோருக்கும் குழந்தைகளுக்கும் இடையே.

    ஆமாம் இப்போது தெற்கு வடக்காகிறதோ என்று எண்ணும் வகையில் இங்கும் வடக்கு மக்கள் அதிகம்தான். அவர்கள் உழைப்பாளிகள். நீங்கள் சொல்லியிருப்பதை டிட்டோ செய்கிறேன்.

    //என்ன இல்லை! நம்ம ஊரில்! உழைக்க சோம்பல் படுகிறோமா? அரசியல் பேசிக் கொண்டும், ரீல்ஸ் பண்ணிக் கொண்டும் பொழுதை கழிக்கிறோமா? கிடைக்கும் வாய்ப்புகளை தவற விடுகிறோமா? என்ற கேள்விகள் தான் எழுந்தது!//

    உங்கள் கேள்விக்கான விடைகளே நீங்களே சொல்லிட்டீங்க ஆதி. அதேதான். சோம்பேறித்தனம். உழைக்க அதீதமாகக் கூலி கேட்பது, வெட்டி அரசியல், வெட்டி பொழுது போக்கு சினிமா, இப்போது சமீபத்துல வெளியான சினிமாக்கு என்ன ஒரு அதகளம் இந்த யுவ யுவதிகள். அதேதான்....கேட்டால் வேலை கிடைக்கலை என்பார்கள்!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை தான். பாசமும் bondingம் தான் உறவுகளை பலப்படுத்தும் காரணங்கள்.

      உழைக்க சோம்பல்பட்டுக் கொண்டு வேலைவாய்ப்பை இழக்கிறார்கள் என்பது வேதனையாக தான் உள்ளது!

      தங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா சேச்சி.

      நீக்கு
  8. நானும் அப்பா செல்லம் . என் அப்பாவுடன் வெகு காலம் இருக்கமுடியவில்லை என்று வருத்தம். 16 ஆண்டுகள் தான் அப்பாவுடன். என் கணவரும் அப்பா போல தான். என்னைபார்த்து கொண்டார்.


    //பணம் காசால் மட்டுமே இவ்வுலகில் எல்லாவற்றையும் வாங்கிட முடியாது! அன்பு, பாசம், நேசம், தியாகம், திருப்தி என்று எவ்வளவோ உணர்வுகளால் பின்னிப் பிணைந்த இந்த வாழ்க்கைப் படகை சரிவர இயக்கிச் செல்கின்ற உந்து சக்தியாக இருப்பவர்கள் பெற்றோர்!//

    ஆமாம், அன்பான உறவுகள்கள் தான் நம்மை இயக்கும் உந்து சக்தி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்களும் அப்பா செல்லம் என்பதில் மகிழ்ச்சிம்மா. என்னவரும் எனக்கு அப்பா போல தான்! என்னை பத்திரமாக பார்த்துக் கொள்வார்.

      தங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....