வியாழன், 23 நவம்பர், 2023

கதம்பம் - அன்பு சூழ் உலகு - எனர்ஜி டானிக்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.  


நேற்று வெளியிட்ட கதம்பம் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.


PATIENCE, PERSISTENCE AND PERSPIRATION MAKE AN UNBEATABLE COMBINATION FOR SUCCESS - NAPOLEON HILL.


******


அன்பு சூழ் உலகு - 14 நவம்பர் 2023:


சார்! தீபாவளிக்கு வந்திருக்காங்களா??


இல்லங்க! இப்போ தான வந்துட்டு போனாரு! லீவ் கிடைக்காது!


உங்களுக்கு கஷ்டமா இருக்காதா?


பழகிப் போச்சுங்க! இத்தனை வருஷத்துல மூணு இல்லன்னா நாலு தீபாவளிக்கு எங்க கூட இருந்துருப்பார்!


தீபாவளியன்று பேசிய தோழி ஒருவர் என்னிடம் கேட்டுக் கொண்டிருந்தார்!


தீபாவளி, பொங்கல் என்று பண்டிகைக்காக எல்லாம் என்னவரால் விடுமுறை எடுத்துக் கொண்டு இங்கு வர முடிவதில்லை! எங்களுக்கும் அது பழகிப் போய்விட்டது!


ஆனால்! இவ்வளவு பண்ணியிருக்கோமே! நாம மட்டும் சாப்பிட்டா எப்படி! அவருக்கு குடுக்க முடியலையே! கொரியர் அனுப்பினாலும் ஒழுங்கா போகுமான்னு தெரியலையே! என்ற எண்ணங்கள் மனதில் தோன்றிக் கொண்டேயிருந்தது!


எதேச்சையாக தீபாவளியன்று இரவு நெருங்கிய நட்பிடமிருந்து கால் வந்தது!


'நீ அவன் கிட்ட ஒண்ணும் சொல்லாத! நான் ஸ்ரீரங்கத்துக்கு வந்திருக்கேன்! நாளைக்கு இத்தனை மணிக்கு இந்த இடத்துல இருப்பேன்! அவனுக்கு தீபாவளி பட்சணம் குடுக்கணும்னா பேக் பண்ணி குடு! எடுத்துண்டு போறேன்! என்று'..!


எதிர்பாராமல் கிடைத்த வாய்ப்பு! மிகவும் மகிழ்வாக இருந்தது! உடனே அவர் ஒரு வாரமாவது வைத்து சாப்பிடட்டும் என்று கறிவேப்பிலை தேன்குழலும், மிக்ஸரும் ஜிப்லாக் கவர்களில் போட்டு பேக் செய்து வைத்தேன்! இனிப்புகள் எல்லாம்  ஃப்ரிட்ஜிலேயே வைத்திருப்பதால் பயணத்தில் கெட வாய்ப்புள்ளது என்பதால் பேக் செய்யவில்லை!


நேற்று காலை எடுத்துச் சென்று கொடுத்து விட்டு வந்தோம்! அது இன்று டெல்லிக்கு பயணப்பட்டு என்னவருக்கு சர்ப்ரைசாக கிடைக்கப் பெற்று விட்டது! நண்பர், 'ஸ்ரீரங்கத்திலிருந்து உனக்கு பார்சல்டா'! என்று சொன்ன போதும் நம்பவில்லையாம்...🙂


இத்தன பிளானிங் நடந்துருக்கா! யாரும் என்கிட்ட சொல்லலை! என்று மாலை பேசிய போது பகிர்ந்து கொண்டார்..🙂 கறிவேப்பிலை தேன்குழல் வாய்ல போட்டு பார்த்தேன்! நல்லாருக்கு! என்றார்.


இம்முறை தீபாவளி பட்சணங்கள் உடனே அவருக்கு கிடைக்கப் பெற்றது மிகவும் மகிழ்வைத் தந்தது!


&*&*&*&**&*&*


எனர்ஜி டானிக் - 18 நவம்பர் 2023:


அழகெல்லாம் முருகனே!

அருளெல்லாம் முருகனே!

தெளிவெல்லாம் முருகனே!

தெய்வமும் முருகனே!

தெய்வமும் முருக்னே!


Spotifyல் முருகனின் அழகை சூலமங்கலம் சகோதரிகளின் குரலில் ரசித்தவாறு இன்றைய என் மொட்டைமாடி நடைப்பயிற்சியை சுறுசுறுப்புடன் துவங்கினேன்.


அதிகாலையில் டாணென்று  வந்துவிடும் விழிப்பில் எழுந்து கொண்டால் சுறுசுறுப்புடன் அதேசமயம் சற்றே நிதானத்துடன் இயங்கலாம்! சில உடற்பயிற்சிகளை செய்து விட்டு வாசலை பெருக்கி கோலமிட்டு பையில் கிடக்கும் பால் பாக்கெட்டுகளையும் எடுத்து கழுவி காய்ச்சி வைத்து விட்டு கிளம்பி விடலாம்!


நடைப்பயிற்சி முடிந்து வீட்டிற்கு வந்ததும் இணையத்தை சற்றே எட்டிப் பார்த்ததில் 90 வயதான ஜெயகாந்தி அம்மாள் இன்றைய என் எனர்ஜி டானிக்காக தோற்றமளித்தார். எழுத்தாளர் ராஜேஷ்குமார் சார் அவர்கள் தன்னுடைய முகநூல் பக்கத்தில் அவரது மூத்த வாசகியான ஜெயகாந்தி அம்மாள் தன் மகனுடன்  நியூஜெர்சியில் வசித்து வருகிறார் என்றும் அவர் தான் கிண்டிலில் வாசித்துக் கொண்டிருக்கும் சாரின் புத்தகங்களைப் பற்றியும் அழகாக பேசியிருந்த விடியோவை பகிர்ந்திருந்தார்.


வாசிப்புக்கு வயது ஒரு தடையில்லை என்பதை இந்த பாட்டியிடமிருந்து நாம் தெரிந்து கொள்ளலாம்! வலிகளோ, வேதனைகளோ எல்லோருக்கும் உண்டானது தான்! நாம் அதை பார்க்கும் கோணம் தான் வேறு!  


சில நாட்களுக்கு முன்னர் எழுத்தாளர் சிவசங்கரி மேடம் பேசிய ஒரு வீடியோவையும் பார்க்க முடிந்தது! 'எனக்கு 80 வயசாறது! நிச்சயமாக முதுமை ஒரு சாபம் அல்ல! வரம்! நாம் அதை எப்படி பார்க்கிறோம்! எப்படி கையாளறோம்! அப்படின்னு தான் பார்க்கணும்! தனியா வாழலாம்! தனிச்சு போய் தான் இருந்துடக்கூடாது!' என்று அழகாக பேசியிருந்தார்!


நமக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் இவர்களிடமிருந்து எல்லாம் நமக்கான வாழ்வின் நெறிகளையும், பக்குவத்தையும் நிச்சயமாகத் தெரிந்து கொள்ளலாம்!


நல்லதே நினைப்போம்!

நல்லதே நடக்கும்!


படக்குறிப்பு- நடைப்பயிற்சியில் பார்த்து ரசித்த அழகி இவள்!


******


இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


ஆதி வெங்கட்


பின் குறிப்பு:  எனது முகநூல் பக்கத்தில் எழுதிய இற்றைகள், வலைப்பூவில் எனக்கான சேமிப்பாகவும் முகநூலில் வாசிக்காதவர்கள் வசதிக்காக இங்கே ஒரு பகிர்வாகவும்…

12 கருத்துகள்:

  1. தீபாவளி பலகாரங்கள் டெல்லி வரை சென்று அவரை அடைந்தது பற்றி முகநூலிலேயே படித்து மகிழ்ந்தேன்.  

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் சார். இம்முறை அந்த வாய்ப்பு கிடைத்தது குறித்து மிக்க மகிழ்ச்சி.

      தங்களின் வருகைக்கும், கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம் சார்.

      நீக்கு
  2. என் பாட்டி - அம்மாவின் அம்மா- 104 வயது வரை வாழ்ந்தார்.  99 அல்லது 98 வயது வரை தன் பணிகளை தானே செய்தார்.  மனைவியை இழந்த மூத்த மகனுக்கும் சேர்த்து சமைத்தார்.  அவர் தினமும் செய்தித்தாள் படித்து விடுவார்.  அவ்வப்போது சிறு புத்தகங்ளும் படித்துக் கொண்டிருந்தார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓ! அருமை! நம்பிக்கையைத் தரும் மனிதர்கள்! வாசிப்புக்கு வயது ஒரு தடையே இல்லை என்பது ஊர்ஜிதமாகிறது.

      தங்களின் வருகைக்கும், கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம் சார்.

      நீக்கு
  3. பலகாரங்கள் கொரியர்.... நல்ல விஷயம். மனைவி ஆசைப்பட்டாளே என 17,000 செலவில் பையனுக,கு கொரியரில் அனுப்பியவைகளில் பாதி போய்ச்சேரவில்லை, கொரியர் ஆபீஸிலேயே சிலவற்றைத் திருப்பிவிட்டார்கள், சில யூரோப் ஆபீஸில் கிடந்துவிட்டன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. 17000 !!! அடடா! அவ்வளவு செலவழித்தும் சரியாய் போய்ச் சேரவில்லை என்பது வருத்தத்தை தான் தரும்.

      தங்களின் வருகைக்கும், கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லை சார்.

      நீக்கு
  4. Keeping oneself busy, நல்ல விஷயங்கள் மாத்திரம் பேசுவது முதுமையை ஹேண்டில் செய்யும் வழி எனத் தோன்றுகிறது.பார்ப்பது என்பதைவிடப் படிப்பது நன்று

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் சார். வாசிப்பில் மனதை ரிலாக்ஸ் செய்து கொள்ளலாம்.

      தங்களின் வருகைக்கும், கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லை சார்.

      நீக்கு
  5. அழகான பாடலோடு மொட்டைமாடி அனுபவம் அருமை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும், கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன் சகோ.

      நீக்கு
  6. தீபாவளி பட்சணம் டெல்லிவரை போய் சேர்ந்தது கூடவே உங்களினதும் மகளினதும் அன்பும் மகிழ்ச்சியும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும், கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றிங்க மாதேவி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....