வெள்ளி, 22 டிசம்பர், 2023

கடந்து வந்த பாதை - 2023


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.  


இதற்கு முன்னர் வெளியிட்ட கதம்பம் பதிவினை  படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.



*******



சட்டுனு வந்து சட்டுனு போன மாதிரின்னு சொல்வாங்களே! அது போல இந்த வருடம் ஆரம்பித்ததும் தெரியலை! இதோ இன்னும் சில நாளில் நிறைவு பெறவும் போகிறது! சரி! இந்த வருடம் என்ன தான் செய்தேன் என்று யோசனை செய்து பார்த்ததில் சில விஷயங்கள் மட்டும் நினைவுக்கு வந்தது!!?


ஆமாங்க! மறதியால் நிறைய விஷயங்கள் என் நினைவடுக்குகளிலிருந்து vanish போட்டது போல காணாமல் போய்விடுகின்றன..🙂 சரி! இருப்பதை வைத்து ஏதாவது எழுதலாமே என செயலில் இறங்கி விட்டேன்..🙂 படிச்சுட்டு கருத்து சொல்ல வேண்டியது உங்க கடமை சொல்லிட்டேன்..🙂


இந்த வருடம் புதிதாக ஒரு விஷயம் செய்தேன் என்றால் நிறைய பயமும், நிறைய குழப்பங்களுடன் ஏப்ரல் மாதத்தில் மகளும் நானும் என்னவருடன் டெல்லிக்கு மேற்கொண்ட முதல் விமானப் பயணம்! அந்த அருமையான பயண அனுபவத்திற்கு பின்னர் இதற்காகவா இத்தனை பயந்தோம்!! என்று பிறகு என்னை நினைத்து நானே சிரித்துக் கொண்டேன்..🙂 


முதன்முதலில் மகளை ப்ளே ஸ்கூலில் சேர்த்து விட்டு வந்து என்னவருக்கு ஃபோன் செய்தது போல், இந்த வருடத்தின் மே மாதத்தில் அவளை கல்லூரியில் சேர்த்து விட்டு வந்தும் அவருக்கு ஃபோன் செய்து சொன்னேன்! அன்று அவரால் உடனே நம்பக் கூட  முடியலை..🙂 நாட்கள் அதிவேகமாக கடந்து செல்கிறது! அவளை இடுப்பில் சுமந்து கொண்டு சென்ற நாட்களின் காட்சிகளே இன்னும் மறையலை..🙂


64 மாணவ மணிகள் கொண்ட அவளின் துறையில் அவள் தான் முதல் அட்மிஷன்! இந்த வருடம் அந்த கல்லூரியில் செய்த 5வது அட்மிஷன்! உண்மையில் அவள் விருப்பப்பட்ட துறையில் அவளை சேர்த்து விட முடிந்ததில் எதையோ சாதித்து விட்ட உணர்வு கிடைத்தது என்று சொல்லலாம்! இனி அவளின் வாழ்க்கை அவள் கையில்!


மகள் கல்லூரியில் சேர்ந்து விட்டதிலிருந்து அவளைப் பார்க்கும் போது நாங்கள் இருவரும் வாழ்வின் அடுத்த கட்டத்துக்கு சென்று விட்ட உணர்வைத் தருகிறது! எங்கள் கடமைகளும் பொறுப்புகளும் கண்முன்னே தெரிகின்றன! வரும் நாட்களைப் பற்றிய ஓரளவு அனுமானமும், ஒரு நிதானமும் கிடைக்கின்றது!


எழுத்தை பொறுத்தவரை அவ்வப்போது என் மனதில் தோன்றும் எண்ணங்களையும், கிடைக்கின்ற அனுபவங்களையும் வைத்து எனக்கு தெரிந்த விதத்தில் பகிர்ந்து கொண்டு வருகிறேன்! சில சிறுகதைகளும் முயற்சி செய்கிறேன்! அவற்றை இன்னும் மெருகேற்ற வேண்டும்!


இரண்டு வருடங்களுக்கு முன்பு எழுதிய ‘அவரும் நானும்’ தொடர் மெமரீஸ்ல வந்த போது அப்போது வாசிக்காதவர்களுக்காக இப்போது வாட்ஸப்பில் பகிர்ந்து கொண்டு வருகிறேன்! அதை மீண்டும் வாசிக்கும் போது அதைப் போன்ற ஒரு தொடரை எழுதிட மனம் துடிக்கின்றது! விரைவில் ஏதேனும் ஒரு தொடர் மூலம் என்னை பிணைத்துக் கொள்ள வேண்டும்!


வாசிப்பில் சரித்திரக் கதையில் காலச்சக்கரம் நரசிம்மா சாரின் கூடலழகி இரண்டு பாகங்களும், அரசியல் த்ரில்லரான தேவ ரகசியமும், சமீபத்தில் வாசித்த எழுத்தாளர் சிவசங்கரி மேடமின் சூர்யவம்ச நினைவலைகள் இரண்டு பாகங்களும் சொல்லலாம்! வாசிப்புப் பழக்கம் எங்கள் மூவருக்குமே உண்டு! இதோ இப்போது மகள் காலச்சக்கரம் சாரின் ‘அத்திமலை தேவன்’ ஐந்து பாகங்களையும் இரண்டாம் முறையாக வாசித்து கொண்டிருக்கிறாள்!


குடும்பச் சூழலும் நம்முடைய  மனநிலையும் தான் எல்லாவற்றையும் தீர்மானம் செய்கிறது எனச் சொல்லலாம்! இந்த வருடத்தில் பெரிதான மாற்றங்கள் ஏதுமின்றி வாழ்க்கை அதன் பாதையில் கடந்து செல்கிறது! வரிசையாக ஏதேனும் ஒரு உடல் உபாதை என்னை பிஸியாகவே வைத்திருக்கிறது என்றாலும் அதனுடன் நானும் என் இயல்பு மாறாமல் பயணித்துக் கொண்டிருக்கிறேன்!


அன்றாடம் கடைபிடித்து வரும் உணவுப் பழக்கமும், நடைப்பயிற்சியும், உடற்பயிற்சியும் என்னை சுறுசுறுப்புடன் இயங்க வைக்கிறது! உன்னால முடியாது! என்று யாரேனும் சொல்லி விட்டால் அதை எப்படியாவது செய்து முடிக்க வேண்டும் என்று உந்துதலும், ஆர்வமும் என்னை துடிப்புடன்  கொண்டு செல்கிறது!


பிறக்கப் போகும் புத்தாண்டில் நல்ல உடல்நலத்துடனும், மன வலிமையுடனும் இயங்க வேண்டும்! நேர்மறை எண்ணங்களுடன் பயணிக்க வேண்டும்! நட்புகளான உங்கள் எல்லாருக்கும் எல்லாம் கிடைத்து நலமோடு வாழ பிரார்த்தித்துக் கொள்கிறேன்!


******


இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


ஆதி வெங்கட்



பின் குறிப்பு:  எனது முகநூல் பக்கத்தில் எழுதிய இற்றைகள், வலைப்பூவில் எனக்கான சேமிப்பாகவும் முகநூலில் வாசிக்காதவர்கள் வசதிக்காக இங்கே ஒரு பகிர்வாகவும்…

9 கருத்துகள்:

  1. வெற்றிகரமாக முடித்த விஷயங்களுக்கும், இனி செய்யப்போகும் சாதனைகளுக்கும் வாழ்த்துகளும், பாராட்டுகளும்.

    பதிலளிநீக்கு
  2. வாழ்த்துகளும், பாராட்டுகளும்..
    என்றும் உரியன..

    வாழ்க நலம்..

    பதிலளிநீக்கு
  3. உங்கள் படைப்புக்கள் புதிய வருடத்திலும் தொடர வாழத்துக்கள்

    பதிலளிநீக்கு
  4. ஒவ்வொரு வருடமும் புது சவால்களைக் கொண்டுவரும். அதனையும் சந்தித்து வெற்றிகரமாகக் கடந்துவருவோம். புது ஆண்டும் அதே போல அமையட்டும்.

    வெங்கட் அவர்களின் பதிவுகள் ரொம்ப மாதங்களாக வராதது ஒன்றுதான் குறை.

    பதிலளிநீக்கு
  5. வரும் ஆண்டு இன்னும் சிறப்பாய்‌அமைய நல்வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  6. ஆதி, வாழ்த்துகள், பாராட்டுகள் நீங்கள் இந்த வருடம் செய்து முடித்தவற்றிற்கு, இனி வரும் வருடத்திலும் இன்னும் நிறைய பதிவுகள் எழுதவும், உங்கள் வெற்றிகள் தொடரவும் மனமார்ந்த வாழ்த்துகள்!

    கீதா

    பதிலளிநீக்கு
  7. அருமையான பதிவு ஆதி.

    //பிறக்கப் போகும் புத்தாண்டில் நல்ல உடல்நலத்துடனும், மன வலிமையுடனும் இயங்க வேண்டும்! நேர்மறை எண்ணங்களுடன் பயணிக்க வேண்டும்! நட்புகளான உங்கள் எல்லாருக்கும் எல்லாம் கிடைத்து நலமோடு வாழ பிரார்த்தித்துக் கொள்கிறேன்!//

    நானும் உங்களுடன் சேர்ந்து பிரார்த்திக்கிறேன். எல்லோரும் நலமோடு வாழவேண்டும் இறைவன் அருளால்.

    பதிலளிநீக்கு
  8. வணக்கம் சகோதரி

    நலமா? தங்களுக்கும், தங்கள் குடும்பத்திற்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

    பதிவு அருமை.23 ன் நல்ல நினைவுகள். காலம் அது பாட்டுக்கு நம் நினைவுகளை சுமந்தபடி, நகர்ந்து கொண்டேதான் உள்ளது. வந்த புத்தாண்டு நீங்கள் சொல்வது போல் அனைவருக்கும் நல்லதையே தர வேண்டுமென நானும் ஆண்டவனை பிரார்த்திக்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  9. நல்ல பதிவு! இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....