நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் ஆரம்பிக்கலாம்.
ஐம்பது
சாதாரண மனிதர்களின் வேலையை ஒரே ஒரு இயந்திரம் செய்துவிடலாம்; ஆனால் சிறப்பான அசாதாரண
மனிதர் ஒருவரின் வேலையை எந்த இயந்திரமும் செய்ய இயலாது – ஹெபர்ட்.
வேட்டி
தினம் - மீள் - 6 ஜனவரி 2020:
இன்றைக்கு வேட்டி தினம் – சென்ற வருடம் இப்படி முகநூலில்
எழுதி இருந்தேன் என நினைவூட்டினார் முகநூலின் மார்க்! அப்படி என்ன எழுதினேன்?
இன்று சர்வதேச வேட்டி தினமாம். சில வருடங்களாகத்
தான் இந்த மாதிரி கொண்டாடுகிறோம். நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றவும், இளைஞர்களிடம்
நம் பாரம்பரியத்தை கட்டிக் காப்பாற்றவும் என நல்ல எண்ணத்தோடு கொண்டாடுவதால் யாருக்கும்
இது இடையூறாகத் தோன்றவில்லை என்பது நல்ல விஷயம்.
வேட்டி என்றதும் என் முதல் ஹீரோவான என்
அப்பாவின் நினைவு வந்தது. அப்பா பாங்காக வேட்டிக் கட்டிக் கொள்வார். அதை அவரே துவைத்து,
அளவாக சொட்டு நீலம் போட்டு அதை உதறி நிழலில் உலர்த்தி எடுத்து வைப்பார். எதையும் சீராக
செய்யும் இந்தக் குணம் அப்பாவிடமிருந்து எனக்கும் ஒட்டிக் கொண்டது. அப்பாவைப் போலவே
என் இன்னொரு ஹீரோவான என்னவரும் அழகாக பாந்தமாக வேட்டி உடுத்திக் கொள்வார். அவரின் உயரத்திற்கு
அது கம்பீரமான தோற்றத்தைத் தரும். இங்கு நான் அவரின் வேட்டிகளை சுத்தமாக துவைத்து அளவாக
நீலம் போட்டு உதறி உலர்த்தி எடுத்து வைப்பேன்.
பல மணிநேரங்கள் வேட்டியில் இருந்தாலும்
அப்பாவுக்கும் சரி, என்னவருக்கும் சரி அது இடையூறாக இருந்ததில்லை. அவிழுமோ என்ற எண்ணமும்
தோன்றியதில்லை. அந்தளவுக்கு இருவருமே நேர்த்தியாக உடுத்திக் கொள்வர். ஒருசிலர் பழுப்பாகவும்,
சுருக்கங்களுடன், கறைகளுடன் முக்கால் காலுக்கு வேட்டி உடுத்தியிருப்பார்கள். ஒருசிலருக்கோ
இறுக்கி கட்ட இயலாமல் அவர்களுக்கும், சுற்றி இருப்பவர்களுக்கும் சங்கடத்தை தருமளவு
உடுத்தியிருப்பார்கள். அதற்கும் தான் இப்போது "வெல்க்ரோ" வேட்டிகள் வந்துள்ளனவே.
ஆகவே 'கந்தையானாலும் கசக்கி கட்டு' என்ற வாக்குக்கு ஏற்ப கந்தலே ஆனாலும் சுத்தமாக துவைத்து
நேர்த்தியாக உடுத்தி நம் பாரம்பரியத்தையும், கலாச்சாரத்தையும் போற்றுவோம்!!!
வேட்டி தின வாழ்த்துகள்!!
வாரச்
சந்தை – 6 ஜனவரி 2020:
எங்க ஏரியாவில் புதிதாக துவக்கியிருக்கும் வாரச்சந்தை.
திருச்சியைச் சுற்றி இருக்கும் கிராமங்களிலிருந்து வந்து வியாபாரம் செய்யும் வியாபாரிகள்.
காய்கறிகள், பழங்கள், மளிகைப் பொருட்கள் என இரண்டு தெரு
முழுவதும் கொட்டிக் கிடக்கின்றன. கிலோ கணக்கிலும் வாங்கலாம். கூறு கட்டி வைத்திருப்பதையும்
வாங்கலாம்.
சந்தையை சுற்றிய அலுப்புத் தீர ஒருபுறம் சூடாக போடும்
மிளகாய் பஜ்ஜிகள். மறுபுறம் சூடாக வறுத்த வேர்க்கடலை என ருசித்து வீடு திரும்பலாம்.
காய்கறிகள் ஃப்ரெஷ்ஷாகவும் அதே சமயம் மலிவாகவும் உள்ளது.
ரோஷ்ணி
கார்னர் – 7 ஜனவரி 2020
ஏறக்குறைய பத்து நாட்களுக்கு மேல் விடுமுறை முடிந்து இன்றிலிருந்து
தான் மகளுக்கு பள்ளி துவங்கியது. விடுமுறையிலும் பிள்ளைகளை நிம்மதியாக இருக்க விடாமல்
எழுத்துப்பணி. இதற்கு விடுமுறையே விடாமல் இருந்திருக்கலாம் என்று தோன்றியது.
என்னுடைய பள்ளி விடுமுறையில் நானும் கேள்வித்தாளுக்கு
விடையெழுதி சென்றிருக்கிறேன். ஆனால் சட்டென்று இரண்டு நாளில் முடிந்து விடும். ஆனால்
இவளோ ஒவ்வொரு பிரிவு பாடத்திற்கும் பத்து தாள்களுக்கு மிகாமல் எழுதியிருக்கிறாள்!!!
இன்றைய கல்விமுறை இது தான்.
சரி! எதற்கு இந்த பதிவு???? ஒவ்வொரு செயல்திட்டத்திற்கும்
ஒவ்வொரு டிசைன் வரைந்திருக்கிறாள். பாருங்களேன்.
சும்மா
இரண்டு க்ளிக்ஸ் – 8 ஜனவரி 2020:
பச்சைப் பூச்சியும் சிலந்தியும்!
புகை அரக்கன்
– 9 ஜனவரி 2020:
இதுவும் ஒரு மீள் பதிவு தான் – அப்பாவின் நினைவில் எழுதிய
பதிவு.
அப்பா!!!
மகள்களுக்கு அப்பா என்றாலே தனிப்ரியம் தான். அவர் தான்
அவர்களின் முதல் ஹீரோ.. நானும் அதற்கு விதிவிலக்கல்ல. நகம் வெட்டி விட, பேனாவுக்கு
இங்க் போட என்று எல்லாவற்றுக்கும் அப்பா வேண்டும். எங்கள் பள்ளிச் சீருடைகளை எங்கள்
வேலைகளை நாங்களே செய்யப் பழகும் வரை அப்பாவே துவைத்து தந்திருக்கிறார். செய்யும் வேலையில்
நேர்த்தி, சுத்தம் இவை நான் அப்பாவிடம் கற்றுக் கொண்ட பாடங்கள். பாடப்புத்தகங்களுக்கு
அட்டைப் போட்டு, மைதா பசையில் ஒட்டி, டிரங்க் பெட்டிக்கு அடியில் வைத்து என பாங்காக
செய்து தருவார். ஒரு வருடமானாலும் அந்த அட்டைகள் பிரியாது. அலுவலக கேண்ட்டீனில் தன்
டிபன் பாக்ஸில் எங்களுக்காக சுடச்சுட வாங்கி வந்த மெது பக்கோடாவும், பஜ்ஜியும் இன்னும்
மறக்கவில்லை.
அப்பாவுக்கு அடிக்கத் தெரியாது. என் சேட்டையால் ஒருமுறை
ரேடியோ கீழே விழுந்த போது மண்டையில் ஒரு கொட்டு கிடைத்தது. அதற்கும் மேல் தண்டிக்கத்
தெரியாது. அம்மா அதற்கு எதிர்ப்பதம்..:) அடித்து விட்டுத் தான் என்ன நடந்தது என்று
கேட்பாள்..:) எங்களுக்காக மெனக்கெடுதலும், எங்களைப் பற்றி பெருமை பேசவும் அப்பாவைத்
தவிர யாரால் முடியும்!! கடைநிலை ஊழியராக அரசுப் பணியில் சேர்ந்து கஷ்டப்பட்டு முன்னேறி,
தன் உடன்பிறந்தவர்களுக்கும், எங்களுக்கும் வாழ்வில் முன்னேற்றத்தை ஏற்படுத்தித் தந்தவர். இப்படிப்பட்ட அப்பா, எங்களை விட மேலாக ஒரு வஸ்துவின்
மேல் உயிரை வைத்து விடுவாரா என்று தோன்றும்! எவ்வளவு சொல்லியும் அதை விட அவரால் முடியவில்லை..:(
அது என்னவென்றா கேட்கிறீர்கள்?? புகைப்பழக்கம் தான் அது.
அப்பா இவ்வுலகை விட்டு மறைந்து இன்றோடு பதினோரு வருடங்கள்
கடந்து விட்டது. தன்னுடைய புகைப்பழக்கத்தால் தான் நோய் தாக்கி மறைந்தார். இறுதி நாட்களிலும்
கூட மருத்துவமனையில் அதையே தான் கேட்டு கெஞ்சிக் கொண்டிருந்தார். புகை நமக்கு பகை!
புகைப்பிடித்தல் உடல்நலனுக்கு கேடு விளைவிக்கும்!! என்று ஆயிரம் வாசகங்கள் சொன்னாலும்,
ஒருவரின் மனக்கட்டுப்பாடு மட்டுமே அவரை மீண்டு வரச் செய்யும். புகைக்கு செலவிடும் பணத்தை உடலுக்கு ஆரோக்கியம்
தரும் உணவுகளை உண்டால் உங்கள் வாழ்க்கை உங்கள் கையில். இல்லை காலன் கைகளில் தான். இது
விழிப்புணர்வுக்காக மட்டுமே எழுதிய பகிர்வு. எவ்வளவு ஆறுதல் சொன்னாலும் 'போன அப்பா'
திரும்பி வரப் போவதில்லை. யாரேனும் ஒருவராவது இன்றிலிருந்து இப்பழக்கத்தை விட்டால்
மிகவும் மகிழ்வேன்.
என்ன நண்பர்களே, இந்த நாளின் கதம்பம் பதிவு உங்களுக்குப்
பிடித்திருந்ததா? பதிவு பற்றிய உங்கள் கருத்துகளைப் பின்னூட்டத்தில் தெரிவிக்கலாமே!
மீண்டும் சந்திப்போம்… சிந்திப்போம்…
நட்புடன்
ஆதி வெங்கட்.
வேட்டி தினமா? எனக்கு வேட்டி கட்ட சரியாய் வராது. அடிக்கடி சரியாய் இருக்கிறதா என்று சோதித்துக் கொள்வேன்!
பதிலளிநீக்கு//எனக்கு வேட்டி கட்ட சரியாய் வராது.// சிலருக்கு வேட்டி கட்டுவது சரியாக வருவதில்லை ஸ்ரீராம்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
வாரச்சந்தை ஆர்வத்தைத் தூண்டுகிறது. ரோஷ்ணியின் கற்பனைவளம் பாராட்டப்படவேண்டியது.
பதிலளிநீக்குவாரச் சந்தை - நல்ல விஷயம் தான் ஸ்ரீராம். அப்படியான சில சந்தைகள் தில்லியிலும் உண்டு.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
அம்மா... அடித்துவிட்டுதான் என்ன நடந்தது என்றே கேட்பார்...
பதிலளிநீக்குஹா... ஹா... ஹா... அப்பாவின் நினைவுகள் நெகிழ்ச்சி.
//அம்மா அடித்துவிட்டுதான் என்ன நடந்தது என்றே கேட்பார்// பல வீடுகளில் இப்படி உண்டு ஸ்ரீராம்... ஹாஹா.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
கதம்பம் வழக்கம் போலவே அருமை சகோ
பதிலளிநீக்குகதம்பம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கில்லர்ஜி.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
திருவரங்கத்தைப் படத்தில் காண மகிழ்ச்சி வந்தது. கதம்பம் அருமை. முகநூலிலும் படித்தேன். ரோஷ்ணியின் கைவண்ணம் அருமை. அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துகள்.
பதிலளிநீக்குதிருவரங்கத்தினை படத்தில் தான் நானும் காண்கிறேன் கீதாம்மா. நீங்கள் அம்பேரிக்காவிலிருந்து எப்போது திரும்புகிறீர்கள்?
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
Next month
நீக்குஓகே கீதாம்மா...
நீக்குதங்களது மீள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
நல்ல பதிவு. வேக்ஷ்டி கட்டுவது என்பது ஒரு கலை. எல்லோருக்கும் வராது.வழக்கம் போல் ரோஷ்னியின் கைவண்னம் சூப்பர். புகை மற்றும் புகையிலை இரண்டையும் தவிற்பது ஆரோக்கியமாக இருப்பதிற்கு உதவி செய்யும்
பதிலளிநீக்குஆமாம் இராமசாமி ஜி... பலருக்கும் வேஷ்டி கட்டிக் கொள்வது கடினம் தான்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
இன்றைய கதம்பம் மிகவும் சிறப்பு...
பதிலளிநீக்குஇன்றைய கதம்பம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி தனபாலன்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
Tobacco, a highly addictive drug. Most people want to quit. But so hard to quit because withdrawal symptoms are many. So they start using again to stop symptoms. Roshini work shows her interest in studies. Very responsible child. Nice parenting.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கயல் இராமசாமி மேடம்.
நீக்குமுகநூலில் படித்தவைகள்.
பதிலளிநீக்குரோஷ்ணியின் கை வண்ணத்திற்கு வாழ்த்துக்கள்.
அப்பாவின் நினைவுகளுடன் விழிப்புணர்வு பதிவையும் தந்து இருக்கிறார் ஆதி.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...
நீக்கு1970 முதல் 2011 வரை 41 வருடங்கள் புகை பிடித்தவன் நான். கேரளத்தில் 70 களில் புகை பிடிக்காதவர்கள் மிக சுருக்கம். மற்றுமொரு பழக்கம் மது. ஆனால் நான் அந்தப் பழக்கத்தை தொடக்கத்திலேயே விட்டு விட்டேன். 9 வருடங்களாக புகை பிடிக்கவில்லை..
பதிலளிநீக்குஒன்பது வருடங்களாக புகைபிடிப்பதில்லை. நல்ல விஷயம் ஜெயக்குமார் சந்திரசேகரன் ஐயா.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
வாரச் சந்தை நன்று.விழிப்பு தினம் ஒருவர் விழித்தாலும் மகிழ்ச்சியே.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி.
நீக்கு