வியாழன், 2 ஜனவரி, 2020

கோட்டாத்து ஆச்சி விஜயம் – பத்மநாபன்




அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம்.  இன்றைய நாளினை நல்லதொரு வாசகத்துடன் ஆரம்பிக்கலாமா?

உயிர் கொடுக்கும் அளவுக்கு உறவுகள் வேண்டாம். எங்கேயும் நம்மை விட்டுக் கொடுக்காத உறவுகள் இருந்தால் போதும்.

உறவுகள் பற்றிய வாசகம் போலவே, இன்றைய பதிவும் உறவுகள் பற்றியதே.  சற்றே இடைவெளிக்குப் பிறகு பத்மநாபன் அண்ணாச்சியின் கைவண்ணத்தில் ஒரு பதிவு. வாருங்கள் பத்மநாபன் அண்ணாச்சியின் பதிவினை ரசிக்கலாம்…



கோட்டாத்து ஆச்சி விஜயம்



படம்: இணையத்திலிருந்து... 

யாருக்குத்தான் வெளியூர்லேயிருந்து எப்பவாவது ஊருக்கு வரும் ஆச்சிமார்களை பிடிக்காது. எங்க ஊருல பாட்டி, ஆத்தா, ஆச்சி இப்படித்தான் பாட்டியைக் கூப்பிடுவோம். எங்க வீட்டில ஆச்சிதான். இப்படி என் ஆச்சியைப் பத்தி சொன்னால் உங்களுக்கும் உங்கள் ஆச்சி, தாத்தா நினைவிற்கு  வந்து சந்தோஷத்தைத் தந்தால் எனக்கும் சந்தோஷந்தானே!

எங்க அம்மைக்கு அம்மைதான் இந்த கோட்டாத்து ஆச்சி. எங்க தாத்தா உயிரோடு இருந்தபோது வரை காதில் சிவப்புக்கல் கம்மல் ஜொலிக்க ஒன்பது  கெஜம் கைத்தறிப் புடவை கட்டி அதுக்கேத்த ரவுக்கை போட்டு கம்பீரமாக ராசாக்கமங்கலத்துக்கு விஜயம் செய்யும் கோட்டாத்து ஆச்சி இன்னும் நினைவில் இருக்கிறார். கடைசி வரை உப்பு கப்பு தப்பு போன்ற 'ப்பு' சொற்களை சாதுர்யமாக தவிர்த்து வந்தார்.  அந்த கரைஞ்ஞானை கொஞ்சம் எடுத்துத் தா. குழம்புல போடட்டும் என்பார். உப்புக்குத்தான் கரைஞ்ஞான்  என்று பெயர் வைத்திருந்தார். அந்த லோட்டாவில தண்ணி கொண்டா என்பார். கப் என்று சொல்ல மாட்டாராம். இந்த மாதிரி உப்பு கப்பு தப்பு என்ற சொற்களை சாதுர்யமாக தவிர்ப்பார். அதற்கு ஒரே காரணம் எங்கள் தாத்தா பெயரில் சுப்பு இருப்பதால்தான்.

எங்கள் வீட்டில் ஒரு பேத்திக்கு அந்த தாத்தாவின் பெயர் வைத்ததால் அவளை பெயர் சொல்லியே கூப்பிட மாட்டார். இந்த சமயத்தில ஒண்ணு சொல்லணும். அந்தக் காலத்தில மூதாதையர் பெயரை ஆசையாய் வைத்தார்கள். எங்கள் வீட்டில் அப்பாவழி தாத்தா பாட்டி பெயர், அம்மாவழி தாத்தா பாட்டி பெயர்  அப்பாவழி தாத்தாவின் அப்பா பெயர் என்று எல்லோரையும் திருப்திப்படுத்த குழந்தைகள் மனம்போல் இருந்தார்கள். அதுவும் எங்கள் வீட்டில் எங்கள் அப்பாவழி பூட்டன் பெயர் இரண்டாவது ரவுண்டு வந்ததுன்னா பார்த்துக் கொள்ளுங்கள். எங்கள் தாத்தாவிற்கு அவருடைய தந்தையின் பெயரை பேரனுக்கு வைக்க பெரும் ஆசை.  ஆனால் எல்லாமே பேத்திகளாகவே பிறக்கவே பொறுக்க மாட்டாமல் நாலாவது பேத்திக்கு பத்மா என்று பெயர் வைத்தார். ஆனாலும் எனது தந்தை அவரது தந்தையின் ஆசையை நிறைவேற்றியே தீர்வதென்று முயற்சி செய்து ஆறாவதாக என்னைப் பெற்றார். எனவே எனது பூட்டன் பெயர் ரண்டாவது ரவுண்டு வந்து நான் பத்மநாபன் ஆனேன். அப்படி இப்படின்னு எப்படியோ சுயபுராணம் இடையில நுழைஞ்சுருக்கேடே, என்னத்தச் செய்ய.

சரி அது கிடக்கட்டும். நாம கோட்டாத்து ஆச்சியை பாப்போம். எங்க ஆச்சி கணவர் பெயரைத்தான் சொல்ல மாட்டார். ஆனால் வீட்டில் ஆட்சியெல்லாம் ஆச்சிதான். ஆச்சியின் முன்னால் தாத்தா பிள்ளைப்பூச்சி. தாத்தா ரொம்ப சாது. அவருண்டு தன் காரியமுண்டு. ஒரு கட்டு பீடியிருந்தால் அவர் பொழுது இனிதே கழிந்து விடும். அவருக்கு வீட்டில் யாராவது உட்கார்ந்து காலாட்டினால் பிடிக்காது. "காலாட்டாத மக்கா!  காலாட்டி வீட்டில வாலாட்டி தங்காது" என்று கூறிக்கொண்டே ஊரை ரவுண்டு அடிக்க கிளம்பி விடுவார். அப்போது நான் பொடியன். அவர் பக்கத்தில ஒரு உயரமான செயர்லேயோ ஸ்டூலிலேயோ ஏறி உட்கார்ந்திருப்பேன்.  கால் தரையில் தொடாம தொங்கிட்டிருக்கும். அதனால காலு ரண்டும் சொன்னாக் கேக்காம முன்னயும் பின்னயும் ஆடும். தாத்தா ஒருதடவை காலாட்டாதே மக்காம்பாரு. இந்தக் குசும்பு புடுச்ச கால் ரண்டும் ரண்டு நிமிஷம் ஆடாம இருக்கும். திரும்பயும் வேலையக் காட்ட ஆரம்பிச்சிரும். தாத்தாவும் காலாட்டாதேம்பாரு. இந்த 'மக்கா' காணாமப் போயிருக்கும். இந்தக் காலுக்கு தாத்தாவுக்கு காலாட்டுவது புடிக்காதுன்னு தெரியுமா! மூணாவது தடவை, ஏலே! காலாட்டாதேன்னு சொல்லக்கிடடிருக்கேம்லா. கேக்க மாட்டியாம்பாரு. அப்புறம் நான் ஏன் அவரு பக்கம் இருக்கப் போறேன்.

கோட்டாத்து ஆச்சிதான் நிலபுலன்களை எல்லாம் ஒற்றையாளாய் நின்று கவனித்தார். யாரைப்பற்றியும் கவலைப்படாமல் கந்தனை உடனழைத்துக் கொண்டு வயலுக்கு கிளம்பி விடுவார். நான் லீவுக்கு கோட்டாத்து ஆச்சி வீட்டிற்கு  போகும் போது நானும் மாமா பையனும் பக்கத்தில் இருந்த  பயோனியர் கிருஷ்ணா டாக்கீஸ்ல சினிமா பார்க்க சளைக்காமல் காசு தருவார். கோட்டாத்து ஆச்சி என்றதும் முதலில் ஞாபகம்  வருவது அந்த வீடு.  கூடவே ஒரு மூக்கறுபட்ட பிச்சைக்காரரும் நினைவுக்கு வருவார். இப்போது அவரை நினைக்கும் போது பரிதாப உணர்வு தோன்றினாலும் சிறுவயதில் அவரைப் பார்த்து பயந்திருக்கிறேன்.

பின்னால் நினைவுக்கு வருவது  வீடு இருந்த சுமடு தாங்கித் தெருவும் அதை அடுத்த கல்மடைத் தெருவும். பின்னர் கொஞ்சம் தள்ளி இருந்த பறைக்காமடை ஸ்கூலும் பறக்கைங்கால் கால்வாயும், கூடவே பச்சை நிறத்தில் பரந்து கிடந்த நீராழிக்குளமும் நினைவிற்கு வரும். பெயர்களைப் பார்த்தாலே  தெரியும்.  விவசாயம் சார்ந்த பகுதி என்று. அதுவும் அந்த சுமடுதாங்கி தெரு முக்குல இருந்த ஆளுயர சுமைதாங்கிக் கற்கள் அந்தக் காலத்தில் எவ்வளவு முக்கிய பணியாற்றியிருக்கிறது.

வயலில் கதிரறுத்து பெரிய பெரிய கட்டுகளாக்கி அந்த கொத்துக் கதிர்களையே கயிறாய் முறுக்கி அந்த கட்டுகளை இறுக்கக் கட்டி தலையில் தூக்கி வைத்ததும் ஒரு வேகமெடுப்பார்கள் பாருங்கள்!  பிரமிப்பாய் இருக்கும். அந்த வேகத்தோடு உஸ்ஸூ உஸ்ஸூ என்று மூச்சிறைக்கும் சத்தம் கேட்டே தெருவில் நடப்போர் விரைந்து வழி விடுவர்.   வயலில் இருந்து ஒன்று ஒன்றரை கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் இந்த  சுமைதாங்கிக் கல்லில் லாவகமாய் கதிர்க்கட்டை சாய்த்து வைத்து ஒரு சில நிமிடம் ஓய்வெடுப்பர்.  பின்னர் யார் தயவும் இல்லாமல் அந்த பெரும் கதிர்கட்டை லாவகமாய் தலையில் வாங்கி மீண்டும் வேகமெடுக்கும் நடை ஓட்டம் அறுத்தடி களத்தில்தான் நிற்கும்.

எங்களூரில் இதுமாதிரி நிரந்தரக் சுமைதாங்கிக் கல்லுக்குப் பதிலாக அறுவடைகாலங்களில்  தென்னந்தடிகளால் தற்காலிக சுமைதாங்கி அமைத்திருப்பர்.  எனக்கு இன்னும் ஞாபகம் இருக்கிறது. அப்போதெல்லாம் நில உரிமையாளரும் விவசாயக் கூலியும் ஒன்றாக வயலில் இறங்கி வேலை செய்வார்கள். ஒருமுறை அறுவடை சமயம் பக்கத்தில் கதிரறுத்து கட்டுப் போட்டுக் கொண்டிருந்த தாணப்பண்ணனைப் பார்த்து சொள்ளமாடன் கேட்டான், "ஓய்! பண்ணையாரே! ஒரு பந்தயம் வச்சுக்கிடுவமாவோய்! வழியில சொமதாங்கில கட்டை வைக்காம களத்தில கொண்டு இறக்கணும், சரியா ஓய்! நான் செயிச்சா சாயங்காலம் நம்ம பனைமூட்டுக்கடையில பத்து முறுகல் தோசையும் வடையும் வாங்கி கொடுத்துரும். நான் தோத்தா நம்ம கணக்கு." இவரும், "சரிலே! பாத்துப்புடுவோம்" ன்னு சொல்ல இருவரும் தலையில் ஏற்றி விட்டக் கதிர்கட்டுகளுடன் உஸ்ஸூ உஸ்ஸூ என்று வேகநடை ஓட்டம் செய்த சப்தம் இன்னும் காதுகளில் ஒலிக்கிறது. சாயங்காலம் இருவரும் ஒன்றாய் இருந்து முறுகல் தின்றார்கள். யார் கணக்கு என்று எனக்கு தெரியாது.  கதை எங்கையோ போயிற்றோ? சரி! நாம கோட்டாத்துக்கு வருவோம்.

பறக்கைங்கால் தாண்டியதுமே நாஞ்சில் நாட்டு வயல்வெளியின் பசுமை தெரிய ஆரம்பித்து விடும். நான் சிறுவனாய் இருக்கும் போது கன்னியாகுமரிக்கு ரயில்வேலைன் போட ஏகப்பட்ட வயல்களின் மீது மலை மலையாய் மண் நிரப்பி வேலை நடந்தது. அந்த  லாரிகள் தங்கள் பின்புறத்தைத் தூக்கி மண்ணைக் கொட்டுவதை ஆ.... என்று வேடிக்கைப் பார்க்க நானும் மாமா பையனும் அந்த வேனா வெயிலில் அரை நிக்கரும் உடுப்புமா நின்னுருக்கோம். அவன் எங்க போனாலும் அவன் கொடுக்கப் புடிச்சுக்கிட்டு போறதுதான் என் வேலை.

ஆச்சியை மறந்துட்டு இந்தப் பய எங்கேயோ போயிட்டானேன்னு  நினைச்சிட்டேளோ! மறப்பேனா! பேரப்புள்ளைகளிடம் பாசமாய் இருக்கும் கோட்டாத்து ஆச்சி எங்கள் வீட்டிற்கு வந்தால் வீடே கொண்டாட்டமாய்த்தான் இருக்கும். அந்த கனத்த உடம்பைத் தூக்கிக் கொண்டு கூடவே பேரப்புள்ளைகளுக்காக கனத்த பைநிறைய ஏதாவது கொண்டு வரும் கோட்டாத்து ஆச்சியைப் பார்த்தால் உற்சாகம் தொற்றிக் கொள்ளும்.

அவர் வீட்டில் இருந்தால் எங்கள் எல்லோருக்கும் அவர் கையால்தான் சாப்பாடு. அதுவும் பழையசோறும் தயிரும் கூடவே மாங்காய் ஊறுகாயும் இருந்தால் அவர் கையில் எப்படி அமிர்தமாய் மாறும் என்று தெரியாது. நடுநாயகமாக அவர் உட்காந்திருக்க அவரைச் சுற்றி நாங்கள் அரை டஜனும் காத்திருக்க ஒரு பெரிய எவர்சில்வர் சருவத்தில்   பழையசோற்றில் தயிரை சரியாய் கொட்டி கரைஞ்ஞானைப் போட்டு பெரிய பெரிய உருண்டைகளாய் ஒவ்வொருவர் கையிலும் வைத்து அதன் உச்சியில் மாங்காயோ இல்லை கொத்தமல்லித் துவையலையோ கிரீடமாம் வைத்து   தரும் அழகே தனி. ஆனாலும் என்னுடைய குட்டிக்கையில் இவ்வளவு பெரிய உருண்டை சோறை வைக்கிறாரே என்று தோன்றும். ஆனால் ஒரு சுற்று முடிந்து நமக்கு அடுத்த ரவுண்டு வரும் வரை அந்த உருண்டை சரியாக இருக்கும். ஆச்சியின் எந்தப் பக்கம் யார் இருப்பது என்று இடம் பிடிப்பதற்கு ஒரு குட்டிச்சண்டை நடப்பது சுவாரசியமாக இருக்கும்.

ஓரிரு நாட்கள் இருந்து விட்டு அவர் கோட்டாத்துக்கு திரும்பும்போது நானும் எனது ஏதாவது ஒரு அக்காவும் பஸ் ஏற்றி விட உடன் செல்வோம். அப்போது எங்கள் ஊரில் அரசு பஸ்கள் மிகக்குறைவு. ஆனால் இரண்டு தனியார் பஸ் கம்பெனிகள் பஸ் விட்டிருந்தன. ஒன்று கணபதி பஸ் சர்வீஸ். இன்னொன்று சீதாபதி பஸ் சர்வீஸ் என்று நினைக்கிறேன். ஆச்சிக்கு கணபதி பஸ்தான் வசதி. அதுதான் கோட்டாறு வழியாகச் செல்லும். ஆனால் என்ன பிரச்சனை என்றால் பஸ்ஸின் படிக்கட்டுகள் கொஞ்சம் உயரமாக இருக்கும். கோட்டாத்து ஆச்சி வேறு கொஞ்சம் கனத்த சரீரம். பஸ் வந்ததும் ஆச்சி படிக்கட்டில் இரண்டு கைப்பிடிகளையும் பிடித்துக் கொள்ள நானும் அக்காவும் ஆச்சியின் பின்பறத்தில் கையால் முட்டுக் கொடுத்து முழு பலத்தையும் பிரயோகித்து தூக்கி விடுவோம். அப்போதெல்லாம் பஸ் நடத்துனரும் ஓட்டுனரும் மற்ற பயணியரும் பொறுமை காப்பார்கள். இப்போ வயசானவர், மாற்றுத்திறனாளி என்று யாருன்னும் கிடையாது. கொஞ்சம் காலந்தாழ்ந்தாலும் சில நடத்துனர் நாய் மாதிரி குரைக்கிறார், சில ஓட்டுனர் ஒப்பாரி வைக்கிறார். அவர்களுக்கு என்ன நெருக்கடியோ!

சிறு வயதில் நாங்கள் ஆச்சி வீட்டிற்குப் போக கணபதி பஸ்ஸுக்காக அந்த பெரிய பன்றிவாகை மரத்தடியில் காத்திருந்த காலங்களை இப்போது நினைத்தாலும் சுகமாக இருக்கிறது. இந்தக் காலத்துக் குழந்தைகள் இழந்தது இந்த இனிய தருணங்களை என்பது வருத்தமே.

இன்றைய பதிவு உங்களுக்கும்  உங்கள் ஆச்சி, பாட்டன் பூட்டன் நினைவுகளைத் தந்திருக்கும் என நம்புகிறேன். உங்கள் கருத்துகளையும் மீட்டெடுத்த நினைவுகளையும் பின்னூட்ட்த்திலோ, அல்லது தனிப் பதிவாக தந்தால் மகிழ்ச்சி.  மீண்டும்  ச(சி)ந்திப்போம்…

பத்மநாபன்…

30 கருத்துகள்:

  1. சுவாரஸ்யமான நினைவு வெள்ளம்.  வெள்ளம் அருகிலிருக்கும் மரம், செடி கோடி அனைத்தையும் அணைத்துச் செல்வதுபோல சொல்ல வடன்ஹா விஷயங்களுடன் மற்ற விஷயங்களையும் கலந்து அழகாய்ச் சொல்லி இருக்கிறார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பத்மநாபன் அண்ணாச்சியின் பதிவு உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி ஸ்ரீராம். அவர் திறமைக்கு இன்னும் நிறைய எழுத வேண்டும் - ஆனால் நேரம் இல்லை என்று அவ்வப்போது மட்டுமே எழுதுகிறார் என்பதில் எனக்கும் வருத்தம் உண்டு.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  2. பதில்கள்
    1. உங்கள் நினைவுகளை மீட்டெடுக்க இப்பதிவு உதவியதில் மகிழ்ச்சி தனபாலன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  3. //எங்கள் வீட்டில் அப்பாவழி தாத்தா பாட்டி பெயர், அம்மாவழி தாத்தா பாட்டி பெயர் அப்பாவழி தாத்தாவின் அப்பா பெயர் என்று எல்லோரையும் திருப்திப்படுத்த குழந்தைகள் மனம்போல் இருந்தார்கள். அதுவும் எங்கள் வீட்டில் எங்கள் அப்பாவழி பூட்டன் பெயர் இரண்டாவது ரவுண்டு வந்ததுன்னா பார்த்துக் கொள்ளுங்கள்.//

    இந்த வரிகளை படித்தவுடன் எங்கள் வீடு நினைவுக்கு வந்தது. எனக்கு அம்மாவின் அம்மா பேர்.

    //ஆளுயர சுமைதாங்கிக் கற்கள் அந்தக் காலத்தில் எவ்வளவு முக்கிய பணியாற்றியிருக்கிறது.//
    சுமைதாங்கி நினைவுகள் அருமை.

    //பெரிய பெரிய உருண்டைகளாய் ஒவ்வொருவர் கையிலும் வைத்து அதன் உச்சியில் மாங்காயோ இல்லை கொத்தமல்லித் துவையலையோ கிரீடமாம் வைத்து தரும் அழகே தனி.//

    பொங்கலுக்கு பின் சுண்டைகுழம்பு சாப்பிட மறுக்கும் குழந்தைகளுக்கு என் அம்மா கையில் உருட்டி போடுவார்கள். சாத உருண்டைமேல் சுண்டைக்கறி கீரீடமாய் போன இடம் தெரியாது பெரிய பாத்திரத்தில் உள்ள சாதம், குழம்பு.

    அருமையான ஆச்சியின் நினைவுகள். (இடையில் எத்தனை நினைவு பகிர்வுகள்)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆச்சி/பாட்டி நினைவுகள் ஒவ்வொருக்குள்ளும் - இந்தப் பதிவு உங்கள் நினைவுகளையும் மீட்டெடுக்க உதவியதில் மகிழ்ச்சி கோமதிம்மா...

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  4. எங்கள் ஆத்தாவை (தந்தையின் அம்மா) நினைவுபடுத்திய பதிவு. இவ்வகையில் நான் அதிகம் கொடுத்துவைத்தவன் என்பேன். அவர்களின் அன்பும், கண்டிப்பும், அரவணைப்பும்...எழுதிக்கொண்டே இருக்கலாம். அவரைப் பற்றி தனியாக ஒரு பதிவு எழுத நெடுநாளாக எண்ணியுள்ளேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா... உங்கள் ஆத்தா அவர்களைப் பற்றிய உங்கள் பதிவினை படிக்க நானும் ஆவலுடன் காத்திருக்கிறேன் விரைவில் எழுதுங்கள் முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  5. பத்மநாபன் அண்ணாச்சி எழுத்து சித்திரமாக திரைக்கதை போல் எழுதுகிறார்.  படிக்கும் போது சீன் by சீன் காணமுடிகிறது. சில இடங்களில் பிளாஷ் பாக் வேறே. இதில் கரைஞாண் ஆகிய நாகர்கோயில் தமிழ் சுவைஊட்டுகிறது. என்னை போன்ற திருவோந்த்ரம் வாசிகளுக்கு நாரொயில் சென்று வந்த உணர்வு கிடைக்கிறது.  Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பத்மநாபன் அண்ணாச்சியின் எழுத்து உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி ஜெயக்குமார் சந்திரசேகரன் ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  6. அன்பு வெங்கட், இன்றைய பதிவுக்கு நன்றி.
    பத்மனாபன் அவர்களுக்கும் மிக நன்றி.
    நாரோயில்...இனிமை. மொழி பலம், கருத்து பலம்,
    பாசம் இணைந்தோடும் பதிவு.
    எங்கள் பாட்டியும் பாரியாக இருப்பார் இருந்தாலும் தாத்தாவையும் அழைத்துக் கொண்டு.
    பெரிய பானையில் முறுக்குகள் ,தட்டை,மைசூர்பாட்கு என்று கொண்டு வந்து இறக்குவார்.
    அம்மாவின் அம்மா, அப்பாவின் அம்மா இருவருமே அது போலத்தான்.
    பாட்டியின் உப்பு சுப்பு கப்பு சுவாரஸ்யம்.
    எங்க தாத்தாவுக்கும் காலாட்டக் கூடாது.

    இப்ப இருக்கிற பிள்ளைகளை நாம் மிரட்ட முடியுமா என்ன:)
    அணு அணுவாக ரசித்தேன். மிக மிக நன்றி மா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்ப இருக்கும் பிள்ளைகளை நாம் மிரட்ட முடியுமா என்ன :) ஹாஹா நிச்சயம் முடியாது வல்லிம்மா... மிரட்ட வேண்டியதும் இல்லை என்றே தோன்றுகிறது. பத்மநாபன் அண்ணாச்சியின் பகிர்வு உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி வல்லிம்மா...

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  7. For most of us, happened the same. But he expressed his feelings in perfect. The ability to convert thoughts into words comes with writing skills. As a reader, I enjoyed the narrations.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அண்ணாச்சியின் பதிவு உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கயல் இராமசாமி மேடம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  8. பத்மநபன் அவர்களின் எழுத்தைக் காலையலேயே படித்துவிட்டேன். ரொம்ப ரசனையா எழுதறார்.

    கி.ரா போல மண்வாசனையோட எழுதுவதால் அனைவரும் ரசிக்க முடியும். அவரிடம் மட்டும் தொடர்ந்து 20 வாரங்கள் எழுதும்படியான பல்வேறு அனுபவங்கள் இருந்தால் ஆனந்த விகடன் அவருக்கு வாய்ப்பு வழங்கும் என்பதில் எனக்குச் சந்தேகமே இல்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவர் திறமை மீது எனக்கும் நம்பிக்கை உண்டு நெல்லைத் தமிழன். தொடர்ந்து எழுத அவரிடம் நிறைய விஷயங்கள் உண்டு. எழுதுவார் என நம்பிக்கை.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  9. நல்ல ரசனையான பதிவு. நினைவலைகள் அருமை. எனக்கும் எங்க பாட்டி (அம்மாவின் அம்மாதான்) கைகளால் பழைய சாதம் சாப்பிட்ட நினைவுகள் எல்லாம் வந்தன. எங்க பாட்டியும் முதல் நாள் ரசத்தையும் குழம்பையும் சேர்த்துப் பழையது சுடவைக்கவென்று வைத்திருக்கும் குமுட்டியில் சுட வைத்து எங்களுக்குப் போடுவார். இது பற்றி நானும் முன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்னால் எழுதி இருக்கேன். அதிலே இந்தக் கடைசிக் கட்டி மாம்பழத்துக்கு நாங்கல்லாம் அடிச்சுப்போம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கடைசிக் கட்டி மாம்பழம்! - அதில் தான் என்னவொரு சுவை. உங்களுக்கும் உங்கள் நினைவுகளை மீட்டெடுக்க இப்பதிவு உதவியதில் மகிழ்ச்சி கீதாம்மா....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  10. குமரித்தமிழ் கொஞ்சி விளையாடுகிறது. நீல.பத்மநாபனும் (இவர் தானோ?) நாஞ்சில் நாடனும் நினைவில் வருகின்றனர். இணையத்திலும் இப்போது இந்த நாரோயில் மொழி பிரபலமாகிக் கொண்டு வருகிறது. சிவ சாய் என ஒருவர், ராஜேஷ் சங்கரப்பிள்ளை என ஒரு பள்ளி ஆசிரியர், பேச்சிநாதன் என்பவர் ஆகியோர் பிளந்து கட்டுகின்றனர்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீல பத்மநாபன் இவர் அல்ல! இவர் வேறு.

      ராஜேஷ் சங்கரன்பிள்ளை இவரது நெருங்கிய உறவினர் கீதாம்மா... இந்தப் பதிவினை பத்மநாபன் அவர்கள் தனது முகநூலில் பகிர்ந்து கொண்டபோது அவருடைய கருத்தும் தெரிவித்து இருக்கிறார்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  11. பதில்கள்
    1. இனிமையான நினைவுகள் தான் கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  12. At last REP u posted a long script like all our Grandmother, but in the end is it PADMANABHAN or PADbaNABHAN, pl edit. U have not made a call to me. RAP. TNY

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா... பத்மநாபன் அண்ணாச்சியின் பதிவில் அனந்தபத்மநாபன் வருகை. மகிழ்ச்சி பத்து... முதல் வருகை மகிழ்ச்சி தந்தது. தொடரட்டும் வருகை...

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  13. மூக்கமாச்சியை எனக்கு நன்றாகத் தெரியும். மிக்க அன்பானவர். கம்பீரமானவர். அவர்கள் வீட்டில் ருஜியான தோசை சாப்பிட்டது இன்னும் நினைவில் நிற்கின்ற்து. நீ மூக்கமாச்சியைப் பற்றி எழுதியது எனக்கு ரெம்ப சந்தோஷம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் முதல் வருகை பகதிபெருமாள் அவர்களே... மிக்க மகிழ்ச்சி. தொடர்ந்து வாசிக்க வேண்டுகிறேன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
    2. உங்கள் பெயரையும் இங்கே குறிப்பிட்டதில் மகிழ்ச்சி. தொடர்ந்து வாசிக்க வேண்டுகிறேன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  14. இனிய நினைவுகள். அம்மம்மாவின் நினைவு வந்ததுஎங்களுடன் தான் இருந்தார். இப்பொழுது நானும் அம்மம்மாவாகிவிட்டேன் :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //இப்போது நானும் அம்மம்மாவாகிவிட்டேன் :)// மகிழ்ச்சி - வாழ்த்துகளும்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....